சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா?
2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை?
3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா?
4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா?
5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா?
6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவேன். எழுத்தாளர்களை அங்கே சந்திக்க முடியுமா? வாசகர்களை மதித்து பேசுவார்களா?
7. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? [உண்மையிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்று நினைப்பதை மட்டும் சொல்லுங்கள்]

– சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து இங்கே நான் எழுதத் தொடங்கிய நாளாக எனக்கு வரும் பல மின்னஞ்சல்களில் மேற்படி வினாக்கள் அநேகமாக இருக்கின்றன. அனைத்தும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு மின்னஞ்சலிலும் இவற்றில் ஏதேனும் சில, குறைந்தது ஒன்று. மொத்தமாக இங்கே பதிலளித்துவிடுகிறேன்.

1. புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்கலாமா? கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பீர்களா? – வி. விக்னேஸ்வரன், சென்னை.

கிழக்கு அரங்கில் எப்போதும் இருப்பது சாத்தியமில்லை. கண்டிப்பாக தினசரி இரண்டு மணி நேரமாவது இருப்பேன். பெரும்பாலும் மாலை வேளைகளில் – ஆறு மணிக்குப் பிறகு. அதிகமும் சுற்றிக்கொண்டுதான் இருப்பேன். மாலை நான்கு மணிக்கு அரங்குக்கு வெளியே போடப்பட்டிருக்கும் விழாப் பந்தலில் நாம் சந்திக்கலாம், உரையாடலாம்.

2. இந்தக் கண்காட்சியில் வாங்குவதற்கென நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? – கார்த்திக் ராமானுஜம், சென்னை.

புத்தகத் தேர்வுகள் தனிப்பட்ட நபரின் ரசனை சார்ந்த விஷயம். சிபாரிசுகள் இதில் பயனளிக்காது. என்னளவில் யார் சிபாரிசு செய்த புத்தகத்தையும் நான் நம்பி வாங்கியதில்லை. எனக்கே தோன்றினாலொழிய. இதன்மூலம் எனக்குச் சில இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும் நான் இன்றளவும் இப்படித்தான் இருக்கிறேன்.

இருப்பினும் பலபேர் இக்கேள்வியைக் கேட்பது எனக்குப் பெரிதும் வியப்பளிக்கிறது. வாசிப்புலகில் புதிதாக நுழைவோர் அவசியம் படித்தாக வேண்டியவை எனச்சில புத்தகங்கள் உண்டு. அவற்றை நான் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். அதிலும்கூட இத்தகைய சிபாரிசுகள் நபருக்கு நபர் மாறுபடக்கூடும். நண்பர்கள் பலருக்கு அவர்களுடைய ரசனை, ஆர்வம், தேவை கருதி அவ்வப்போது இப்படிப் பரிந்துரை செய்திருக்கிறேன். சிலருக்கு அது பலனளித்திருக்கிறது. சிலருக்குப் பலனளிக்கவில்லை.

எனினும் என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் எனக்கு உவப்பானவையாக இருக்கும் ஒரு நூறு புத்தகங்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அளிக்கலாம். முன்பொரு சமயம் [2004ல்] தமிழோவியத்தில் இப்படி ஒரு பட்டியல் வெளியிட்டேன். அதைச் சற்றே செம்மைப்படுத்தி – சற்றே அப்டேட் செய்து தனிப்பதிவாகப் பிரசுரிக்கிறேன்.

3. பிளாட்பாரக் கடைகளில் புத்தகம் தேடி வாங்கியதுண்டா? – எஸ். சதீஷ், ஈரோடு.

சில சமயங்களில். என்னால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்கிடையில் தேட முடியாது. எனக்காகச் சில நண்பர்கள் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். பல அபூர்வமான நூல்கள் அகப்படும் இடம் அது என்பதில் சந்தேகமில்லை. என் நண்பன் ஆர். வெங்கடேஷ் திருவல்லிக்கேணி பிளாட்பாரக் கடைகள் அனைத்தையும் ஆழ உழுதவன். எனக்குச் சற்றுப் பொறுமை மட்டு.

4. கண்காட்சியில் கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைக்க வழியுண்டா? [பெயரை நான் வெளியிட விரும்பவில்லை]

மன்னிக்கவும். உங்களால் ஒரு ஜட்டி, பனியன் அல்லது கைக்குட்டையை பேரம் பேசி விலை குறைத்து வாங்க முடியுமா? ஒரு பீடி, சிகரெட், ஹோட்டலில் இரண்டு இட்லி, சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டை விலை குறைத்து என்றேனும் கேட்டிருப்பீர்களா? புத்தகம் என்று வரும்போது மட்டும் எதற்காக இந்தப் பிச்சைக்காரத்தனம்? புத்தகங்களுக்குச் செய்கிற செலவை சந்தோஷமாகச் செய்பவர்கள் மட்டுமே என் கட்சி.

5. கண்காட்சி குறித்து தினமும் எழுதுவீர்களா? – மணிவண்ணன் [ஊர் விவரம் தெரியவில்லை]

எழுதலாம் என்று எண்ணம். சில தினங்கள் முடியாமல் போகலாம். பெரும்பாலும் எழுதுவேன். அன்றன்றைய பணிகளைப் பொருத்த விஷயம் அது. நான் எழுதாவிட்டாலும் தினசரி ரிப்போர்ட்டை அவசியம் பிரசன்னா எழுதுவார் [என்று நினைக்கிறேன்.]

6. புத்தகக் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் இருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவேன். எழுத்தாளர்களை அங்கே சந்திக்க முடியுமா? வாசகர்களை மதித்து பேசுவார்களா? – சந்தோஷ், திண்டுக்கல்

ஞாயிற்றுக்கிழமை எல்லா எழுத்தாளர்களும் கண்காட்சியில் இருப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம் தர இயலாது. ஆனால் நீங்கள் சந்திக்கக்கூடிய எந்த ஒரு எழுத்தாளரும் வாசகர்களை மதிக்காது போகமாட்டார். எல்லா எழுத்தாளர்களுமே இணக்கமானவர்கள்தாம், அன்பானவர்கள்தாம். நீங்கள் சந்திக்கும் நேரம், சந்தர்ப்ப சூழல் சரியாக அமையவேண்டும்.

7. கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவை? [உண்மையிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்று நினைப்பதை மட்டும் சொல்லுங்கள்] – விக்டர் ஆரோக்கியராஜ், கோயமுத்தூர்

2008ல் கிழக்கு வெளியிட்ட புத்தகங்களின் எண்ணிக்கை மிக அதிகம். உங்கள் வினாவுக்காக ஒரு நிமிடம் யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தவை இவை. நூற்றுக்கணக்கான புத்தகங்களுள் தனித்து, நினைவில் மேலோங்கி வரக்கூடிய அம்சங்கள் ஏதோ சில இந்தப் புத்தகங்களில் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வேறு வேறு காரணங்களால் என்னைக் கவர்ந்தன. நிச்சயம் உங்களையும் கவரும்.

* கிறிஸ்தவம்: ஒரு முழுமையான வரலாறு – சேவியர்
* சித்திரம் பேசுதடி : திரைக்கதை – இயக்குநர் மிஷ்கின்
* செங்கிஸ்கான் – முகில்
* அடியாள் – ஜோதி நரசிம்மன்
* கோபுலு: கோடுகளால் ஒரு வாழ்க்கை – எஸ். சந்திரமௌலி
* சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் – யுவகிருஷ்ணா
* பிரபாகரன் : ஒரு வாழ்க்கை – செல்லமுத்து குப்புசாமி
* சூஃபி வழி: ஓர் எளிய அறிமுகம் – நாகூர் ரூமி
* சுபாஷ் சந்திரா – என். சொக்கன்
* இந்திரா – ஆர். முத்துக்குமார்
* கீரைகள் – டாக்டர் அருண் சின்னையா [நலம் வெளியீடு] * மால்கம் எக்ஸ் – மருதன்

இவற்றுள் கீரைகள் புத்தகம் பற்றித் தனியே சில வரிகள் எழுதத்தோன்றுகிறது. எடுத்ததை வைக்க முடியாமல் நான் எந்த ஒரு மருத்துவ நூலையும் இதுவரை வாசித்ததில்லை. இத்தனைக்கும் இது பக்க அளவு சற்றே கூடுதலான புத்தகம். ஆயினும் ஒன்றரை மணி நேரத்தில் படித்து முடித்து, வியந்தேன். இந்நூலில் உள்ள பல தகவல்கள் வியப்பூட்டின. எத்தனை விதமான கீரைகள், எத்தனை மருத்துவ குணங்கள்! ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுதும் இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் கீரைகளை தினமொன்றாகத் திரும்பத் திரும்பச் சாப்பிட்டு வருவானேயானால், எந்த நோயுமே அவனை அண்டாது என்று தோன்றுகிறது. பெரும்பாலும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரைகள்.

நவீன அடுக்குமாடி வாழ்வில் நாம் இழந்த பலவற்றுள் வீட்டுத்தோட்டம் என்பது மிகவும் முக்கியமானது. நான் 1985ம் ஆண்டு குரோம்பேட்டைக்குக் குடிபோன புதிதில் வீட்டு வாசலில் இருந்த அங்கவஸ்திர நீள இடத்தில் பாத்தி கட்டி என் அம்மா பொன்னாங்கண்ணிக்கீரை விதைத்தது நினைவுக்கு வருகிறது. அதன் அருமை தெரியாமல் அன்றைக்கு அம்மாவை நிறைய கோபித்துக்கொண்டிருக்கிறேன்.

குருட்டாம்போக்கில் இன்ன கீரைக்கு இன்ன குணம் என்று பட்டியலிடாமல், ஒவ்வொரு கீரை இனத்தின் குண இயல்புகளையும் விளக்கி, எதனால் இதைச் சாப்பிட்டால் இது சாத்தியம் என்று மருத்துவ ரீதியில் இந்நூல் விளக்குகிறது.

எழுத்து சுவாரசியம் என்கிற ஒரு விஷயத்தை அறவே கொண்டுவரமுடியாத துறை இது என்பது இதுநாள்வரை என் தீவிரமான நம்பிக்கையாக இருந்தது. அதை உடைத்து எறிந்திருக்கிறார், டாக்டருடன் பேசி இந்நூலை எழுதியிருக்கும்ஆர். பார்த்தசாரதி. உண்மையிலேயே நினைத்து நினைத்து வியக்கிறேன்.

கீரைகள் புத்தகம் பற்றி மேலும் அறிய இங்கே செல்லலாம்.

Share

30 comments

  • //மன்னிக்கவும். உங்களால் ஒரு ஜட்டி, பனியன் அல்லது கைக்குட்டையை பேரம் பேசி விலை குறைத்து வாங்க முடியுமா? ஒரு பீடி, சிகரெட், ஹோட்டலில் இரண்டு இட்லி, சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டை விலை குறைத்து என்றேனும் கேட்டிருப்பீர்களா? புத்தகம் என்று வரும்போது மட்டும் எதற்காக இந்தப் பிச்சைக்காரத்தனம்? புத்தகங்களுக்குச் செய்கிற செலவை சந்தோஷமாகச் செய்பவர்கள் மட்டுமே என் கட்சி.//

    நீங்கள் கூறிய பனியன் போன்ற பொருட்கள் எல்லாம் கண்காட்சியில் விலை குறைத்து தானே விற்கிறார்கள்

    வழக்கமாக கடையில் கிடைக்கும் அதே விலையில் கண்காட்சியிலும் விற்கப்படுவது தமிழ் புத்தகங்கள் தான்

    கண்காட்சியில் ஆங்கில புத்தகங்களுக்கு 10 முதல் 20 சதம் வரை தள்ளுபடி உண்டு
    கண்காட்சியில் மருத்துவ, பொறியியல் புத்தகங்களுக்கு 20 முதல் 30 சதம் வரை தள்ளுபடி உண்டு

    அதே கண்காட்சியில் ஆக்ஸ்போர்டு பதிப்பகமும், ஓரியண்ட் லாங்க்மேனும் அளிக்கும் தள்ளுபடியை விகடனும், கிழக்கும், ஏன் அளிப்பதில்லை. மன்னிக்க வேண்டும். உங்கள் உதாரணமே தவறு என்பது என் கருத்து

    புத்தக கண்காட்சி என்ற வந்த பின், பதிப்பகங்களே நேரடியாக கடை வைத்தும் தள்ளுபடி அளிக்காதது தமிழ் வாசகனின் சாபப்கேடு என்பது என் கருத்து

  • //வழக்கமாக கடையில் கிடைக்கும் அதே விலையில் கண்காட்சியிலும் விற்கப்படுவது தமிழ் புத்தகங்கள் தான்//

    நிச்சயம் இல்லை. அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி என்பது கண்காட்சி விதி. யாரும் இதனை எப்போதும் மீறமாட்டார்கள்.

    //புத்தக கண்காட்சி என்ற வந்த பின், பதிப்பகங்களே நேரடியாக கடை வைத்தும் தள்ளுபடி அளிக்காதது தமிழ் வாசகனின் சாபப்கேடு//

    ஒவ்வொரு பதிப்பாளரும் அவரவர் விருப்பம், வசதி சார்ந்து நிர்ணயிக்கப்பட்ட 10 சதக் கழிவுக்கு மேலே சற்றுக் கூடுதலாகக் கழிவு அளிப்பதுண்டு. கிழக்கிலும்கூட இத்தகைய சலுகைகள் அவ்வப்போது கிட்டும். பண்டல் ஆஃபர் என்று போடுவார்கள். சில புத்தகங்களை மொத்தமாக வாங்கும்போது 10%க்கும் அதிகமான தள்ளுபடி அதில் இருக்கும்.

    ஆனால் நான் கூற வந்தது இவை எதுவுமே அல்ல. தள்ளுபடி இருந்தால்தான் புத்தகம் வாங்குவேன் என்கிற மனோபாவத்தைத்தான் நான் குற்றம் சாட்டுகிறேன். ஆடித்தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடி போல நிஜ விலையில் பத்து சதம் கூட்டி, 20% தள்ளுபடி என்று பொய்யாக அறிவிக்கும் கலாசாரம் புத்தகத் துறையிலும் வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

    முற்றிலும் மாறுபடுகிறேன். மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

  • சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தக விற்பனைக்கு இணையாக கேண்டீனில் போண்டாவும் விற்கப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அங்கே கேண்டீனில் நீங்களும் சூடாக மைசூர் போண்டா சாப்பிட்டதுண்டா?

  • //ஒவ்வொரு பதிப்பாளரும் அவரவர் விருப்பம், வசதி சார்ந்து நிர்ணயிக்கப்பட்ட 10 சதக் கழிவுக்கு மேலே சற்றுக் கூடுதலாகக் கழிவு அளிப்பதுண்டு//
    விகடன் தனது புக்கிளப் உறுப்பினர்களுக்கு 15% தள்ளுபடி வழங்குவதுண்டு (பாரா! இந்த மறுமொழியை நிராகரிக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு!)

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

  • //ஆனால் நான் கூற வந்தது இவை எதுவுமே அல்ல. தள்ளுபடி இருந்தால்தான் புத்தகம் வாங்குவேன் என்கிற மனோபாவத்தைத்தான் நான் குற்றம் சாட்டுகிறேன். ஆடித்தள்ளுபடி, தீபாவளித் தள்ளுபடி போல நிஜ விலையில் பத்து சதம் கூட்டி, 20% தள்ளுபடி என்று பொய்யாக அறிவிக்கும் கலாசாரம் புத்தகத் துறையிலும் வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

    முற்றிலும் மாறுபடுகிறேன். மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.//

    பாரா சார்.

    நான் உங்களை (தமிழ் பதிப்பகத்தினரை) ஆரெம்கேவியுடன் ஒப்பிட வில்லை

    நான் உங்களை (தமிழ் பதிப்பகத்தினரை) ஒப்பிட்டது ஓரியண்ட் லாங்க்மேன், ஜேபி, போன்றவர்களுடன் தான்

    நீங்க தான் துணிக்கடை என்று ஒரு பக்கம் மட்டுமே உங்கள் கவனத்தை வைத்துள்ளீர்கள்

  • //வளித் தள்ளுபடி போல நிஜ விலையில் பத்து சதம் கூட்டி, 20% தள்ளுபடி என்று பொய்யாக அறிவிக்கும் கலாசாரம் புத்தகத் துறையிலும் வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா?//

    எல்சிவியர் ஆகட்டும் ஓரியண்ட் லாங்மேன் ஆகட்டும் அவர்கள் யாரும் அட்டை விலைப்படி தான் தருகிறார்கள்

    எனவே விலையை கூட்டி மறுபடி குறைப்பது என்ற பேச்சு இங்கு எழவில்லை

    மன்னிக்க வேண்டும் பாரா சார். நீங்கள் ஆரெம்கேவி போத்தீஸ் வரை போக வேண்டாம்

    எல்சிவியர், லாங்க், மெக்கிராஹில் வைத்து விவாதிப்போம்

  • \\ எல்சிவியர், லாங்க், மெக்கிராஹில் \\

    இந்த கம்பெனிகள் தங்கள் புத்தகங்களுக்கு நிர்ணயிக்கும் விலைக்கும் கிழக்கப்பதிப்பகத்தின் விலை நிர்ணயத்திற்கும் வேறுபாடு உண்டல்லவா?

    அது தவிர நீங்கள் மேற்கோள் காட்டும் நிறுவனங்கள் அல்லது பதிப்பகங்கள் தங்களுடைய ஆங்கில ( அதிகமாக பாட சம்பந்தமான ) புத்தகங்களுக்கு மட்டுமே அதிக தள்ளுபடி தருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • தமிழ்ப்பதிப்பகங்களில் யார் 20% சதவீதத்திற்கு மேல் தள்ளுபடி தருகிறார்கள்?

    தெரிந்தால் கூறவும்.. இதுவரை எனக்கு தெரிந்து யாருமிருப்பதாக தெரியவில்லை

  • //தமிழ்ப்பதிப்பகங்களில் யார் 20% சதவீதத்திற்கு மேல் தள்ளுபடி தருகிறார்கள்?

    தெரிந்தால் கூறவும்.. இதுவரை எனக்கு தெரிந்து யாருமிருப்பதாக தெரியவில்லை//

    அதிஷா சார்,

    எனது மறுமொழியை மீண்டும் வாசியுங்கள்

    என் கேள்விகளும் ஆதங்கமும் கிழக்கை மட்டும் நோக்கி அல்ல. அனைத்து தமிழ் பதிப்பகங்களையும் நோக்கித்தான்

    வழக்கமாக கடையில் கிடைக்கும் அதே விலையில் கண்காட்சியிலும் விற்கப்படுவது தமிழ் புத்தகங்கள் தான்

    புத்தக கண்காட்சி என்ற வந்த பின், பதிப்பகங்களே நேரடியாக கடை வைத்தும் தள்ளுபடி அளிக்காதது தமிழ் வாசகனின் சாபப்கேடு என்பது என் கருத்து

    //இந்த கம்பெனிகள் தங்கள் புத்தகங்களுக்கு நிர்ணயிக்கும் விலைக்கும் கிழக்கப்பதிப்பகத்தின் விலை நிர்ணயத்திற்கும் வேறுபாடு உண்டல்லவா?//

    இருக்கலாம் 🙂 🙂 அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் 🙂 🙂

    உதாரணத்திற்கு என் ஆங்கில புத்தகம் ஒன்றையே எடுத்துக்கொள்ளுங்கள் (அடுத்தவர்களை உதாரணம் காட்டினால் வம்பு சார்)

    11 செமி x 22 செமி x 466 பக்கங்கள்
    இதன் அட்டைவிலை ரூபாய் 100
    கண்காட்சியில் இதன் விலை ரூபாய் 70

    மற்றொரு புத்தகம்
    A4 x 674 பக்கம்
    அட்டை விலை 425
    கண்காட்சியில் விலை ரூபாய் 300

    இதனுடன் நீங்கள் தமிழ் பதிப்பகங்கள் (கிழக்கு மட்டுமல்ல, விகடன், குமுதம், நக்கீரன், மணிமேகலை போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்) நிர்ணயிக்கும் விலையை (பக்கங்கள் மற்றும் தாள் அளவு) ஒப்பிட்டு பார்க்கலாம் (கண்டிப்பாக ஆங்கில புத்தகங்களின் தாள் தரம் தமிழ் புத்தகங்களின் தாள் தரத்தை விட குறைந்தது அல்ல)

    ஆதாய உரிமை 10 சதம் என்பது அனைவருக்கும் பொது தான் என்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்

    அடுத்து பாடப்புத்தகங்களை விட இந்த புத்தகங்கள் அதிக எண்ணிக்கையில் (அதிக பிரதிகள்) விற்கப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக நான் இரண்டாவது குறிப்பிட்ட புத்தகம் ஒவ்வொரு பதிப்பும் 1000 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படுகிறது

    //தமிழ்ப்பதிப்பகங்களில் யார் 20% சதவீதத்திற்கு மேல் தள்ளுபடி தருகிறார்கள்?//
    இந்த விஷயத்தில் அனைத்து தமிழ் பதிப்பகங்களையும் சேர்த்து தான் நான் பார்க்கிறேன்

    //தெரிந்தால் கூறவும்.. இதுவரை எனக்கு தெரிந்து யாருமிருப்பதாக தெரியவில்லை//
    அனைவரும் அளிக்க வேண்டும் என்பதை என் கோரிக்கை

  • //\\ எல்சிவியர், லாங்க், மெக்கிராஹில் \\

    இந்த கம்பெனிகள் தங்கள் புத்தகங்களுக்கு நிர்ணயிக்கும் விலைக்கும் கிழக்கப்பதிப்பகத்தின் விலை நிர்ணயத்திற்கும் வேறுபாடு உண்டல்லவா?//

    தாளின் அளவு, பக்கங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் ஆங்கில புத்தகங்களுக்கும் தமிழ் புத்தகங்களுக்கும் இடையில் விலை நிர்ணயத்தில் உள்ள வேறு பாடு உங்களை பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம்

  • //புத்தகம் என்று வரும்போது மட்டும் எதற்காக இந்தப் பிச்சைக்காரத்தனம்? //

    பிச்சைக்காரத்தனம் என்ற சொல்லைத் தவிர்த்திருந்தால் கண்ணியமாக இருந்திருக்கும். புத்தகங்களை நேசித்து, பல மைல் கடந்து ஒன்றுக்குப் பல புத்தகங்கள் வாங்க வருவோரை இப்படிச் சொல்வது சரியா? சரியான வருமானம் இல்லாமல் காசு சேர்த்து, இயன்ற அளவு குறைந்த விலையில் புத்தகம் வாங்க விரும்புவோர் ஓரிருவராவது இருப்பார் தானே?

    புத்தகம் வெளியிடுவதும் மற்றதைப் போல் ஒரு தொழில் தான் என்ற உங்கள் கருத்து புரிகிறது. ஆனால், ஒரு முதலீட்டாளரின் நோக்கில் இயன்ற அளவு கூடுதலாக பொருள் ஈட்ட நினைப்பது எவ்வளவு நியாயமோ அதே அளவு இயன்ற அளவு குறைவான விலையில் பொருளை வாங்க ஒரு வாடிக்கையாளருக்கு எல்லா நியாயமும் உண்டு.

    இது பிச்சைக்காரத்தனம் என்றால் எங்கு போய் பேரம் பேசுவது புத்திசாலித்தனமாக இருக்கும்? இல்லை, காசு இருக்கவங்க மட்டும் வாங்கிப் படிச்சா போதுங்கிறீங்களா?

  • ஆங்கில புத்தகம் வெளியிடுவதும் தொழில் தான்
    தமிழ் புத்தகம் வெளியிடுவதும் தொழில் தான்

    அதே கண்காட்சியில் ஆங்கில புத்தகங்களுக்கு 30 சதம் தள்ளுபடி தரும் போது, அந்த கடைக்கு பக்கத்து கடையில் இருக்கும் தமிழ் புத்தகத்திற்கு தள்ளுபடி கேட்பது ”பிச்சைக்காரத்தனம்” என்றால் அதற்கு என் பதில்

    கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

    அவ்வளவு தான்

  • இது என்ன கெட்ட பழக்கம் என்று தெரியவில்லை. கடைகளில் சிறுபிள்ளைகள் கொசுறு கேட்பதுபோல், பலர் அதிக கழிவு கோருகிறார்கள். அதுவும் புத்தகச் சந்தையில்தான் இந்தப் போக்கை அதிகமும் பார்க்கிறேன். கன்சியூமர் பிராண்டுகள் வேண்டாம். புத்தக உதாரணத்துக்கே வருகிறேன். நீங்கள் சொல்லும் டாடாகெராஹில், ஓரியண்ட லாங்க்ஸ்வான் (பெயர் மாறிவிட்டது இப்போது), ஆக்ஸ்போர்டு எல்லாம் என்ன கவர் விலை இருக்கிறதோ அதில் இருந்துதான் 10% கழிவு தருவார்கள். வெளியே, பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ, இன்னபிற நூலகங்களுக்கோ ஒன்றுக்கு மேற்பட்ட, ஐந்து அல்லது பத்து படிகள் வாங்குவார்களாயின், கூடுதல் கழிவு கிடைக்க வாய்ப்புண்டு. மேலும் ரூ. 50,000 அல்லது ரூ. 1 லட்சத்துக்கும் மேல் நூல்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் கழிவு கிடைக்க வாய்ப்புண்டு.

    முதலில் கழிவு கொடுப்பது என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் முன்னுரிமை. அதை நீ ஏன் செய்யவில்லை, ஏன் அதிகம் கொடுக்கக் கூடாது, இன்னும் அதிகம் கொடுத்தால் என்ன என்று கேட்பது பச்சை துரோகம். உங்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள, ரசனையை மேம்படுத்திக்கொள்ள எதற்குக் கழிவு கேட்கிறீர்கள்?

    மேலும் ஆங்கில நூல்கள் மாதிரி தமிழில் விலை வைக்கப்படுவதில்லை. அப்படி விலை வைத்தால், ஒருவரும் புத்தகச் சந்தை பக்கமே வரமாட்டார்கள்.

    கழிவு அதிகம் கேட்பதன் மூலம் எத்தனை பேரின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பல தமிழ்ப் பதிப்பகங்கள் ராயல்டியே தருவதில்லை. விகடன், கிழக்கு போன்ற நிறுவனங்கள் அதை செவ்வனே தந்து வருகின்றன. கழிவு என்பது எழுத்தாளனைப் பாதிக்கும், அச்சகத்தைப் பாதிக்கும், விற்பனையாளர்களைப் பாதிக்கும், இதில் வேலை செய்யும் எண்ணற்ற தொழிலாளிகளைப் பாதிக்கும். இன்றும் ஒரு பைண்டர் ஒரு ஃபாரம் மடிக்க ரூ.85தான் வாங்குகிறார் (இது இரண்டு ஆண்டுகள் முன்புவரை ரூ.50 – 55 தான் இருந்தது).

    கழிவு கோருவது ஒரு கெட்ட பழக்கம். பதிப்பகமாகத் தம்மால் இயன்றதைக் கொடுக்க முன்வரவேண்டும். முடியவில்லை என்றால், ஒன்றும் செய்வதற்கு இல்லை. உங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸை உங்களால் என்றாவது நெகோஷியேட் பண்ண முடிந்திருக்கிறதா?

    புத்தகங்கள் அறிவில் திறவுகோல், அதையும் மற்றொரு கமாடிட்டியாகப் பார்க்க வேண்டாம்.

    நேசமுடன்
    வெங்கடேஷ்

  • டாடாகெராஹில் = டாடா மெக்ராஹில்,
    ஓரியண்ட லாங்க்ஸ்வான் = ஓரியண்ட ப்ளாக்ஸ்வான்

  • //மன்னிக்கவும். உங்களால் ஒரு ஜட்டி, பனியன் அல்லது கைக்குட்டையை பேரம் பேசி விலை குறைத்து வாங்க முடியுமா? ஒரு பீடி, சிகரெட், ஹோட்டலில் இரண்டு இட்லி, சினிமா தியேட்டரில் ஒரு டிக்கெட்டை விலை குறைத்து என்றேனும் கேட்டிருப்பீர்களா? புத்தகம் என்று வரும்போது மட்டும் எதற்காக இந்தப் பிச்சைக்காரத்தனம்? புத்தகங்களுக்குச் செய்கிற செலவை சந்தோஷமாகச் செய்பவர்கள் மட்டுமே என் கட்சி.//

    சரிதான்.. ஆனால் சடாரென்று 5 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 50 ரூபாய்க்கு விற்ற புத்தகத்தை திடீரென்று 150 என்று விலை உயர்த்தி, கனமான அட்டை போட்டு, உள்ளே அழகுபடுத்தி விற்பனைக்கு வைத்து திடீரென்று விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதைப் போல் பாவ்லா செய்து எங்களைப் போன்ற மிடில் கிளாஸ் மன்னர்களின் வயிற்றில் அடித்தது எந்த வகையில் நியாயம்..?

    எந்தப் புத்தகம் என்று கேட்காதீர்கள்.. அனைத்துமேதான்.. திடீரென்றுதான் விலையை உயர்த்தினார்கள். யார் கேட்டது கனமான அட்டையும், அழகுபடுத்தலும்.. ஏற்கெனவே குமுதம், விகடனின் உள் பக்க பேப்பர் போன்ற தோற்றத்திலும், அட்டையில் சாதாரணமான ஒரு ஓவியத்திலும் அழகாகவே இருந்த புத்தகங்கள் திடீரென்று எழுந்த வண்ணமயத்தினால் வாசகர்கள் தொலைத்தது சில லட்சங்கள்.

    இன்றைக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் விற்பனைக்கு இருக்கும் சில பழைய புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். படிப்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. அதே போன்று இருந்த புத்தகங்களைத்தான் இன்றைக்கு பளபளாவாக்கி ஜரிகை போட்டு அலங்காரப்படுத்தி விலையைக் கூட்டிவிட்டார்கள். எவ்வளவு விலை வைத்தால் என்ன ஸார்..? உள்ளே இருப்பது இரண்டிலும் ஒன்றுதானே.. எங்களுக்கு உள்ளடக்கம்தானே தேவை.. அட்டையும், பளபளவுமா தேவை..

    இது கூட்டுக் கொள்ளை..

  • //நீங்கள் சொல்லும் டாடாகெராஹில், ஓரியண்ட லாங்க்ஸ்வான் (பெயர் மாறிவிட்டது இப்போது), ஆக்ஸ்போர்டு எல்லாம் என்ன கவர் விலை இருக்கிறதோ அதில் இருந்துதான் 10% கழிவு தருவார்கள். //

    சரி

    இந்த முறை புத்தக சந்தையில் இதை நேரடியாக சரி பார்த்து ஆங்கில புத்தகங்களுக்கு கழிவு 10 சதமா அல்லது அதிகமா என்று தெரிந்து கொள்ளலாம்

  • முதலில் கழிவு கொடுப்பது என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் முன்னுரிமை. அதை நீ ஏன் செய்யவில்லை, ஏன் அதிகம் கொடுக்கக் கூடாது, இன்னும் அதிகம் கொடுத்தால் என்ன என்று கேட்பது பச்சை துரோகம். உங்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள, ரசனையை மேம்படுத்திக்கொள்ள எதற்குக் கழிவு கேட்கிறீர்கள்?

    //மேலும் ஆங்கில நூல்கள் மாதிரி தமிழில் விலை வைக்கப்படுவதில்லை.//

    இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆங்கில புத்தகங்களின் விலையையும் தமிழ் புத்தகங்களின் விலையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை தெரியும். 🙂 🙂 🙂

    // அப்படி விலை வைத்தால், ஒருவரும் புத்தகச் சந்தை பக்கமே வரமாட்டார்கள்.//
    அப்படி வைக்காமலும் கூட நம் மக்கள் வருகிறார்கள்
    அப்படி வைத்தால் இன்னமும் அதிகம் வாங்குவார்கள்

  • //முதலில் கழிவு கொடுப்பது என்பது தனிப்பட்ட நிறுவனங்களின் முன்னுரிமை.//
    இதை நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன். மறுக்கவில்லை

    //அதை நீ ஏன் செய்யவில்லை, ஏன் அதிகம் கொடுக்கக் கூடாது, இன்னும் அதிகம் கொடுத்தால் என்ன என்று கேட்பது பச்சை துரோகம்.//
    இதில் என்ன துரோகம் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. விளக்க முடிந்தால் நலம்

    ஆங்கில புத்தகங்களுக்கு வழங்குவதைத்தானே கேட்கிறோம்

    //உங்கள் அறிவை விருத்தி செய்துகொள்ள, ரசனையை மேம்படுத்திக்கொள்ள எதற்குக் கழிவு கேட்கிறீர்கள்?//
    கழிவு இருந்தால் கூட இரண்டு புத்தகம் அதிகம் வாங்கி மேலும்
    அறிவை விருத்தி செய்துகொள்ளலாம், ரசனையை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று தான்

  • //கழிவு அதிகம் கேட்பதன் மூலம் எத்தனை பேரின் வயிற்றில் அடிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?//

    தெரியவில்லை. விளக்குங்கள்

    // பல தமிழ்ப் பதிப்பகங்கள் ராயல்டியே தருவதில்லை.//
    அப்படியா

    // விகடன், கிழக்கு போன்ற நிறுவனங்கள் அதை செவ்வனே தந்து வருகின்றன.//
    நன்றி

    // கழிவு என்பது எழுத்தாளனைப் பாதிக்கும், அச்சகத்தைப் பாதிக்கும், விற்பனையாளர்களைப் பாதிக்கும், இதில் வேலை செய்யும் எண்ணற்ற தொழிலாளிகளைப் பாதிக்கும்.//

    புத்தக கண்காட்சியில் 30 சதம் தள்ளுபடியில் விற்கப்படும் ஆங்கில புத்தக எழுத்தாளர்களும், அச்சகங்களும், விற்பனையாளர்களும் பாதிக்கப்ப்டுகிறார்களா….

    // இன்றும் ஒரு பைண்டர் ஒரு ஃபாரம் மடிக்க ரூ.85தான் வாங்குகிறார் (இது இரண்டு ஆண்டுகள் முன்புவரை ரூ.50 – 55 தான் இருந்தது)//

    ஆங்கில புத்தகத்தின் பாரம் மடிக்க கம்மி விலை
    தமிழ் புத்தகத்தின் பாரம் மடிக்க அதிக விலையா

  • //கழிவு கோருவது ஒரு கெட்ட பழக்கம். பதிப்பகமாகத் தம்மால் இயன்றதைக் கொடுக்க முன்வரவேண்டும். முடியவில்லை என்றால், ஒன்றும் செய்வதற்கு இல்லை. உங்கள் பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸை உங்களால் என்றாவது நெகோஷியேட் பண்ண முடிந்திருக்கிறதா?//

    ஆனால் ஆங்கில புத்தகங்களை என்னால் 30 சதம் தள்ளுபடியில் வாங்க முடிகிறது

    //புத்தகங்கள் அறிவில் திறவுகோல், அதையும் மற்றொரு கமாடிட்டியாகப் பார்க்க வேண்டாம்.//

    நான் தமிழ் புத்தகங்களை ஆங்கில புத்தகங்களுடன் தான் ஒப்பிடுகிறேனே தவிர, அதுவும் அதே கண்காட்சியில் விற்கப்படும் ஆங்கில புத்தகங்களுடன் தான் ஓப்பிடுகிறேனே தவிர வேறு பொருட்களுடன் அல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

  • கழிவு கேட்கப்படுவதன் உண்மையான காரணத்தை இங்கு யாருமே தெரிந்து கொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. புத்தகச் சந்தைக்கு வாங்க வருபவர்கள் புத்தகம் வாங்கத்தான் வருகிறார்கள். கழிவினால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு மேலும் சில புத்தகங்களை வாங்கத்தான் எண்ணுவரேயன்றி அதை மிச்சம் பிடித்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். ஆக, கழிவு அதிகம் கொடுத்தல் இன்னும் ஒரு சில பிரதிகள் கூடுதலாக விற்பனையாகும் என்பது தான் உண்மை.

    விலை புத்தக விற்பனையை பாதிக்கும் என்பதை கிழக்கு உணர்ந்து தானே தவம், பிராடிஜி, மினிமேக்ஸ் என்றெல்லாம் ரூ 20,25க்குக் கொண்டு வந்திருக்கிறது.

    சுஜாதாவின் 40,50ரூக்கு விற்ற சில புத்தகங்களின் இன்றைய விலை 150க்கும் மேல். கனமான அட்டை, நல்ல தரமான தாள் ஆதலால் இந்த விலையேற்றம். உண்மைத் தமிழன் சொல்வது போல் இந்த அட்டை, பளபளா சமாசாரம் வாசகனுக்குத் தேவையில்லை. ஆனால் புத்தகங்கள் சற்றே நிலைபேறுத் தன்மை உடையனவாக இருக்க பதிப்பகத்தார் இம்முறையைப் பின்பற்றுகின்றனர்.

    அந்தக் காலத்தில் சாதாரண புத்தகங்கள் நயா பைசாக்களிலும் காலிகோ பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள் அணா மற்றும் ரூபாய்க்களில் விற்றதையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.ஆனால் ஒரே புத்தகத்தை இரண்டு மாதிரியாகவும் அப்போது விற்றார்கள். தேர்வு, வசதியைப் பொறுத்து வாசகனின் கையில் இருந்தது. ஆனால் இப்போது இருப்பதைத் தான் வாங்க வேண்டியிருக்கிறது.

    எளிய மத்திய தர வர்க்கத்தினரிடம் இன்னமும் புத்தகங்கள் போய்ச் சேர வேண்டுமானால் புத்தகங்களின் விலை குறைக்கப்பட வேண்டும். அல்லது கழிவுகள் அதிகம் தரப்பட வேண்டும். அதே சமயம் அதனால் எழுத்தாளரும், பதிப்பாளரும் பாதிப்பும் அடையக் கூடாது. இது நிர்வாக ரீதியாக யோசித்துச் செய்ய வேண்டிய விஷயம். ஆனால் முடியாத காரியம் ஒன்றும் அல்ல.

    நர்மதா, தமிழ்ப் புத்தகாலயம், ஐந்திணை போன்ற பதிப்பகத்தாரிடம் நேரே அலுவலகத்திற்கு சென்று சற்று பேரம் பேசி வாங்கினால் 20%- 25% கழிவு கிடைக்கும் என்பது அனுபவ உண்மை.

    அம்பி

  • புருனோ,

    —–தாளின் அளவு, பக்கங்களை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் ஆங்கில புத்தகங்களுக்கும் தமிழ் புத்தகங்களுக்கும் இடையில் விலை நிர்ணயத்தில் உள்ள வேறு பாடு உங்களை பயங்கர அதிர்ச்சிக்கு உள்ளாக்கலாம்—

    உதாரணத்துக்கு கிழக்கின் In the Line of Fire: A Memoir பெர்வேஸ் முஷாரஃப் நூலை ஒப்பிட முடியுமா? ஆங்கிலத்தில் எவ்வளவு விலை? தமிழில் எவ்வளவு?

    அதுவே அவரின் வாழ்க்கை வரலாறு எவ்வளவு விலை?

    கதை, பொருளாதாரம் போன்ற ஒத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு விலையை ஒப்பிட்டால், ஏற்றத்தாழ்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

  • //கதை, பொருளாதாரம் போன்ற ஒத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு விலையை ஒப்பிட்டால், ஏற்றத்தாழ்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும்.//

    பாபா சார்,

    எந்த புத்தகம் என்றாலும் அதற்கு வழங்கப்படும் ஆதாய தொகை 10 சதம் (சல்மான் ரூஷ்டி போன்றவர்களை தவிர்த்து)

    அப்படி இருக்க

    இந்த ஜி.எஸ்.எம் தாளில்
    இந்த அளவில்
    இவ்வளவு பக்கம் கொண்ட புத்தகம்

    தயாரிக்க ஆகும் செலவு என்பது ஆங்கில புத்தகம் என்றாலும் தமிழ் புத்தகம் என்றாலும் ஒன்று தான்.

    ஹாரி பாட்டர், ரஜினிகாந்த போன்ற புத்தகங்களின் விலை அதிகம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.
    இது போன்ற வி.ஐ.பி புத்தகங்கள் தமிழில் கூட அதிக விலை தான்.

    நான் தெளிவாக கூறிவிட்டேன். இது கிழக்கு மட்டும் சார்ந்த கேள்வி அல்ல. அனைத்து தமிழ் பதிப்பகங்களுக்கும் சேர்த்தே தான்

    //கதை, பொருளாதாரம் போன்ற ஒத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு விலையை ஒப்பிட்டால், ஏற்றத்தாழ்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியும்.//
    நான் மேலே இரு புத்தகங்களின் பக்கம், அளவு, தந்துள்ளேன். அதை நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்.

    இல்லை என்றால் மேலும் உதாரணங்களை தரத்தயார்

  • -நான் மேலே இரு புத்தகங்களின் பக்கம், அளவு, தந்துள்ளேன். அதை நீங்கள் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்கே புரியும்.—

    உங்கள் புத்தகத்தை விடுங்க. அதைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது.

    எனக்கு பெர்வீஸ் முஷாரஃபின் வாழ்க்கை குறித்து அறிய வேண்டும்.

    ஆங்கிலத்தில்:
    Search – ரூ. 1920

    இன்னொரு புத்தகம்: General Pervez Musharraf – Wisest Dictator And Saviour Of Pakistan: ALFA PUBLICATIONS – 176 pages / Rs.405.00

    கிழக்கில்:
    பர்வேஸ் முஷரஃப் (Pervez Musharraf) by Pa. Raghavan
    Pages: 158 / Price: Rs. 70

    இதே மாதிரி தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கக்கூடிய ஒரே வகையான புத்தகங்களை ஒப்பிட்டு சொன்னால் மகிழ்வேன்.

    உதாரணமாக ‘கிழக்கு பதிப்பகத்தில்’ பொருத்தமான புத்தகப் பட்டியல் (அதாவது பக்க எண்ணிக்கையிலும், உள்ளடக்கத்திலும் ஆங்கிலத்திலும் இதைப் போன்ற ஒத்த எழுத்து கிடைக்கும் என்று நான் எண்ணுபவை) கீழே:

    1. George Washington by Balu Sathya
    128 Pages / Rs. 60

    2. Obama, Paraak! by R. Muthukumar
    152 Pages / Rs. 80

    3. Oil Regai by Pa. Raghavan
    208 Pages / Rs. 90

    4. Ireland – Arasiyal Varalaaru by N. Ramakrishnan
    144 Pages / Rs. 70

    5. CMM: Five Star Tharam by Sibi K. Solomon
    152 Pages / Rs. 70

  • //உங்கள் புத்தகத்தை விடுங்க. அதைப் படிப்பதில் எனக்கு ஆர்வம் கிடையாது.

    எனக்கு பெர்வீஸ் முஷாரஃபின் வாழ்க்கை குறித்து அறிய வேண்டும்.

    ஆங்கிலத்தில்:
    Search – ரூ. 1920

    இன்னொரு புத்தகம்: General Pervez Musharraf – Wisest Dictator And Saviour Of Pakistan: ALFA PUBLICATIONS – 176 pages / Rs.405.00

    கிழக்கில்:
    பர்வேஸ் முஷரஃப் (Pervez Musharraf) by Pa. Raghavan
    Pages: 158 / Price: Rs. 70

    இதே மாதிரி தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கக்கூடிய ஒரே வகையான புத்தகங்களை ஒப்பிட்டு சொன்னால் மகிழ்வேன்.//

    பாபா

    நீங்களே ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட முடியாது என்று கூறிவிட்டு ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிட்டால் எப்படி

    1920 ரூபாய்க்கு தருவது
    Chelsea House Publishers
    132 West 31st Street, 17th Floor
    New York, NY 10001

    அவர்கள் நீயூயார்க்கில் இருக்கிறார்கள்
    அங்கு அச்சிட்டு அந்த புத்தகம் இங்கு வரும்போது விலை (ரூபாயில்)அதிகமாகத்தான் இருக்கும். உதாரணமாக அந்த புத்தகம் 1920 ரூபாய். அதில் 384 ரூபாய் charges.
    List Price என்று பர்த்தால் Rs. 1536 தான்.00

    சென்னையில் எழுதி, சென்னையில் தட்டச்சு செய்து, சென்னையில் அச்சிடப்படும் தமிழ் புத்தகத்திற்கு 10 சதம் தள்ளுபடி. சென்னையில் எழுதி, சென்னையில் தட்டச்சு செய்து, சென்னையில் அச்சிடப்படும் ஆங்கில புத்தகத்திற்கு 30 சதம் தள்ளுபடி. ஏன் இந்த முரண் என்பது தான் என் கேள்வி

    இதற்கு பதிலாக அமெரிக்காவில் பதிப்பிக்கப்படும் புத்தகத்தை உதாரணம் காட்டுவது எப்படி சரியாகும்

  • //உதாரணமாக ‘கிழக்கு பதிப்பகத்தில்’ பொருத்தமான புத்தகப் பட்டியல் (அதாவது பக்க எண்ணிக்கையிலும், உள்ளடக்கத்திலும் ஆங்கிலத்திலும் இதைப் போன்ற ஒத்த எழுத்து கிடைக்கும் என்று நான் எண்ணுபவை) கீழே:
    1. George Washington by Balu Sathya
    128 Pages / Rs. 60

    2. Obama, Paraak! by R. Muthukumar
    152 Pages / Rs. 80

    3. Oil Regai by Pa. Raghavan
    208 Pages / Rs. 90

    4. Ireland – Arasiyal Varalaaru by N. Ramakrishnan
    144 Pages / Rs. 70

    5. CMM: Five Star Tharam by Sibi K. Solomon
    152 Pages / Rs. 70 //

    ஆக தமிழ் பதிப்பகம் ஒரு பக்கத்திற்கு 40 – 50 காசு என்ற விதத்தில் புத்தகம் விற்கிறார்கள் (இந்த புத்தகம் A4ஆ அல்லது Crown/8 ஆ)

    இந்திய பதிப்பகம் எடுத்துக்கொள்வோம்
    http://www.schandgroup.com/adv_result.asp?fctype=Book&fcategory=10&fcname=Medical%20Science

    FUNDAMENTAL CONCEPTS OF APPLIED CHEMISTRY
    By: Ghosh,Jayashree
    Price: Rs 160
    Pages: 448

    Title: Genetics
    By: Aggarwal,V.K., Verma,P.S.
    Price: Rs 175
    Pages: 592
    Binding: Perfect
    Language: English

    Title: Vyapar Pranali Karyalya Sangathan (Bihar)
    By: Verma,Y.P., Chintamani,S.C.
    Price: Rs 175
    Pages: 496

    அதே நேரம் இந்தியாவில் உள்ள ஆங்கில பதிப்பகம் ஒரு பக்கத்திற்கு 30 பைசா என்ற அளவில் புத்தகம் வெளியிடுகிறார்கள்

    அதே நேரம்
    Tridip Suhrud
    ISBN : 978-81-250-3043-0
    Binding : Hardback
    Price : Rs. 525.00
    Pages : 280
    என்றும் ஆங்கில புத்தகங்கள் வருகிறது. அதை யாரும் மறுக்கவில்லை.

    எனவே இது போல் விலை அதிகமாக உள்ள ஓரிரண்டு வி.ஐ.பி. புத்தகங்களை (முக்கியமாக சுயசரிதைகளை – அத்வானி, வெங்கட்ராமன் அல்லது சில sensational கதைகளை – டயானாவின் பட்லர் எழுதியது) ஒப்பிடுவது சரிதானா

  • இதில் கிழக்கு குறித்து மட்டும் பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

    அனைத்து தமிழ் பதிப்பகங்கள் குறித்தும் பொதுவாகவே கூறுகிறேன்

  • புருனோ,

    ஏதோ ஒப்பிலக்கணம் கேட்டேன் என்பதற்காக என்னை “FUNDAMENTAL CONCEPTS OF APPLIED CHEMISTRY” படிக்க சொல்றிங்களே! இது அடுக்குமா.. முறையா… நியாயமா 🙂 😀

  • பா ரா சார்,

    உங்கள் கருத்துடன் நான் 100% ஒத்து போகிறேன். நான் கேட்டது More on a friendly node.அதுவும் அந்த கேள்வியை பபாஸ்யிடம் முதலில் கேட்டேன். Not to you directly first time. I understand the practical issues in any business and do not want a discount in that sense seriously. Also please note that I am a ardent reader and I spend close to 10k (hard earned / saved money, I understand not a great sum but that is all I can manage)year after year in only buying books (80% of that is spent on book fair). I was referring more like a Loyalty program (like Crossword and other famous book stores) returning customers. even this time, I have atleast 10 books which I have earmarked to be bought from NHM. I am ready to buy them wven if NHM is not ready to offer any discount on the books. But calling the attitude “பிச்சைக்காரத்தனம்” is not fair. I was coming more from Ambi’s viewpoint which says “கழிவு கேட்கப்படுவதன் உண்மையான காரணத்தை இங்கு யாருமே தெரிந்து கொள்ளவில்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. புத்தகச் சந்தைக்கு வாங்க வருபவர்கள் புத்தகம் வாங்கத்தான் வருகிறார்கள். கழிவினால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு மேலும் சில புத்தகங்களை வாங்கத்தான் எண்ணுவரேயன்றி அதை மிச்சம் பிடித்துக் கொண்டு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள். ஆக, கழிவு அதிகம் கொடுத்தல் இன்னும் ஒரு சில பிரதிகள் கூடுதலாக விற்பனையாகும் என்பது தான் உண்மை.”…

    பா ரா சார் sorry if I had coused any inconvenience.

    Regards
    Krishna

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!