மொட்டை மாடியில் புத்தக அறிமுகம், வெளியீடு, ஏற்புரை, கலந்துரையாடல். கொஞ்ச நாளாயிற்று இதெல்லாம் பார்த்து. அதனால் கிழக்கு பதிப்பக அலுவலகத்திற்கு ஒரு விசிட்.
முதலில் நியூஸ் ரீல். மாலன் கட்டுரைத் தொகுப்பு ‘என் ஜன்னலுக்கு வெளியே’, பத்திரிகையாளர் ஜென்ராம் வெளியிட, சிங்கப்பூர் ஒலி எஃப். எம். பொன். மகாலிங்கம் பெற்றுக்கொள்ள, ஜென்ராம் புத்தகம் பற்றிப் பேச, பத்ரி சில கருத்துக்கள் சொல்ல, மாலன் ஏற்புரை வழங்க, மக்கள் எல்லோரும் கலந்து கலந்து உரையாட(ற்ற), ஓவர்.
சில இடங்களில் அலர்ஜி டாபிக் என்பதாலும், சில இடங்களில் வீட்டிலிருந்து செல்பேசியில் அழைப்புகள் வந்ததாலும் நான் உள்ளே-வெளியே என்று இருந்தேன். ஆனாலும் கவனித்த வரையில் எனக்குப் பிடித்திருந்தது. காரணம் இருவர்: மாலன், பத்ரி. மாலனுக்கு அனுபவம் பேசியது. பத்ரி தொழில்நுட்பத்தில் தாக்கியதோடல்லாது பொதுவாகவே அவருக்கே உரிய நிதானத்துடன் பேசினார்.
ஜென்ராம் தனக்குத் திறனாய்வில் நம்பிக்கை இல்லை என்று பூர்வபீடிகை போட்டுவிட்டுத் தெளிவாகத் திறனாய்ந்தார். குறிப்புகள், மேற்கோள்கள் தெளிவாக வைத்திருந்தாலும், அவர் இயல்பான பேச்சாளர் கிடையாது என்பது சில நிமிடங்களில் தெளிவானது. நல்ல கருத்துகள் சில இருந்தாலும் பேச்சில் கட்டமைப்பு ஏதும் இல்லாத காரணத்தாலும், ஒரு கருத்தைவிட்டு இன்னொரு கருத்துக்குப் போகுமுன் எக்கச்சக்க மெளன இடைவெளி விட்டதாலும் அவரது பேச்சு கவனத்தில் நிற்காமலே போனது….
பல வருடங்களாகத் தொலைந்து போயிருந்த சுவடு ஷங்கர் நேற்று கிடைத்தான். நேற்றைய மொட்டை மாடி புத்தக வெளியீடு குறித்த ஷங்கரின் பதிவு இங்கே.