என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.

என்னுடைய வாழ்வார்கள் கட்டுரைக்கு எதிர்வினையாக நண்பர் ஜடாயு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவரது அனுமதியுடன் அதனைக் கீழே பிரசுரிக்கிறேன். கடிதத்துக்கு என்னுடைய பதில், அதற்குக் கீழே.

அன்புள்ள பாரா,

கிருஷ்ண ஜயந்தி பற்றி ரொம்ப ரசமாக எழுதியிருக்கிறீர்கள்.  படிக்க நன்றாக இருக்கிறது.

கடைசியில் இப்படி சொல்கிறீர்கள்:
எனக்கு மாவா மாதிரி பெரியாழ்வாருக்கு கிருஷ்ணன் இருந்திருக்கிறான்.

ஸோ, பெரியாஷ்வாருக்கு கிருஷ்ணன்  மாவா .  இந்தக் கட்டுரையின் சாராம்சம் அது தான் போலிருக்கிறது.  அதுக்குத் தான் இவ்வளவு பீடிகையுமா?  religion is the opium of the masses என்று இன்னொருவர் சொன்னது போலவே இருக்கிறதே.

திவ்வியப் பிரபந்தமும் திருப்பாவையும் புனித நூல்களல்ல.  அவை சும்மா மொழி அழகுக்காகப் படித்து அனுபவிக்க வேண்டிய சமாசாரங்கள், யார் வேண்டுமானாலும் படிக்கலாம், அப்புறம் தூக்கிப் போட்டு விடலாம்.  (ஆனால் பரிசுத்த விவிலிய வேதாகமம் அப்படியல்ல, வாழ்க்கைக்கே வழிகாட்டும்…ம்ம்? ).  அவற்றின் சாரமான தெய்வீகமும்,  அந்த தெய்வீகத்தால் நிறைந்த வாழ்வியலும், அந்த வாழ்வியலின் அடிப்படையில் எழுந்த சமயமும், கலாசாரமும், பண்பாடும் எல்லாம்  நகைப்புக்குரியவை, பிற்போக்குத் தனமானவை – இப்படிப்  பேசுவதும், எழுதுவதும் தான் தமிழ் எழுத்துலக, அறிவு ஜீவி சூழலில் ஃபேஷன் போலும்… அல்லது  நீண்டகால கலாசார பரிகாசம் மற்றும் அதனால் விளையும் கலாசாரத் திரிப்பின்/அழிப்பின் ஒரு அங்கம்?

ஒரு பண்டிகையை இயல்பாக உள்ளபடி கொண்டாடினேன் என்று சொல்வதற்குக் கூடவா இப்படி ஒரு தயக்கம், மழுப்பல்?

“வண்ணமாடங்கள் சூழ்திருக்கோட்டியூர் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்.. ” என்று தொடங்கி “கண்ணன் முற்றும் கலந்தனராயிற்றே” என்றல்லவா பேசுகிறார் ஆழ்வார்!  ஏன், அந்த கோகுல கிருஷ்ணனுக்காக, அவன் வடிவாக இருக்கும் உங்கள் வீட்டுக் கிருஷ்ணனுக்காக, உங்கள் அந்தராத்மாவில் நீங்களாகவே இருக்கும் அந்த கிருஷ்ணனுக்காக கிருஷ்ண ஜயந்தி கொண்டாடினேன் என்றால் குறைந்தா போய்விடுவீர்கள்?

அன்புடன்,
ஜடாயு

இனி என் பதில்:

அன்புள்ள திரு ஜடாயு,

வேதனை கலந்த உங்கள் கோபம் புரிகிறது. ஆனால் நான் செய்வதற்கொன்றுமில்லை. மதம் – சடங்கு, சம்பிரதாயங்கள் – தத்துவம் – கடவுள் என்கிற நான்கு விஷயங்களாலும் மிக அதிகம் அலைக்கழிக்கப்பட்டவன் நான். வேகம் நிறைந்த என்னுடைய இளம் வயதுகளை, குறைந்தபட்சம் ஒருதலைக் காதலில்கூட செலவிட முடியாமல் இந்த நான்கும் பாடாய்ப் படுத்தியிருக்கின்றன. நிறைய சினிமா பார்த்திருக்கலாம். நண்பர்களுடன் சுற்றியிருக்கலாம். சைட் அடித்திருக்கலாம். உல்லாசங்களைத் தேடித்தேடி அனுபவித்திருக்கலாம். குறைந்தபட்சம் என்னுடைய கல்வியையாவது ஒழுங்காகத் தொடர்ந்து, முடித்திருக்கலாம்.

எதுவுமில்லாமல் வருடங்களை மத நூல்களிலும் மடங்களிலும் சில சாமியார்களிடமும் தொலைத்தேன். அது ஒரு பெரிய கதை. முழுக்க இங்கே அவசியமில்லை. ஆனால் உங்கள் வினாவுக்கு பதிலாகக் கொஞ்சம் மட்டும்.

நான் ஓர் ஆத்திகவாதி. இதில் சந்தேகமில்லை. எனக்குக் கடவுள் இருக்கிறார். ஆனால் என் கடவுளுக்கு உருவம் கிடையாது. அவர் கையில் புல்லாங்குழலோ, சூலமோ, வேலோ, வாளோ கிடையாது. அவருக்குக் கையேகூடக் கிடையாது. இந்த என் கடவுளை நான் மிகத் தாமதமாக என்னுடைய 25வது வயதுக்குப் பிறகு கண்டேன். பரவசமேதுமின்றி, ஹாய் வாடா மாப்ள என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்று நல்ல ருசியுள்ள காப்பி ஒன்றை வாங்கி ஊற்றி மேலுக்கு ஒரு கை சுடச்சுட மாவா போட்டு விருந்தளித்தேன். அவரும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இன்றுவரை அவ்வப்போது என்னிடம்தான் மாவா வாங்கிப் போடுகிறார்.

முன்னதாக நான் சந்தியாவந்தனம் செய்து செங்கதிர்ச் சூரியனைக் கைகூப்பித் தொழுது, பின்னும் அமர்ந்து சகஸ்ரநாம பாராயணம் செய்து, சாளக்கிராம பூஜைகள் புரிந்து சுடச்சுட சாதமும் வெங்காய சாம்பாரும் ரசமும் பீன்ஸ் பொறியலும் இன்னபிறவும் வைத்து நைவேத்தியம் செய்த சமயங்களில் அவர் அவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாக நினைவில்லை.

ஒரு பண்டிகையை விடமாட்டேன் அப்போதெல்லாம். என் சிரத்தைக்கு நிகரே சொல்ல முடியாது. வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் என் மானசீகத்தில் எம்பெருமானை எழுந்தருளப்பண்ணி இதைக்கொடு, அதைக்கொடு என்று அவனை பேஜார் செய்திருக்கிறேன்.

என்னைவிட ராமகிருஷ்ண பரமஹம்சர் எந்த வகையில் உசத்தி? மொட்டை மாடியில் தனியே அமர்ந்து மிக உக்கிரமாக தியானம் செய்து நெக்குருகி அழுது, கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்துவிட்டேன். ம்ஹும். அவன் இரக்கமேலொன்றுமிலாதான்.

சரி நமது பக்குவம் போதாது போலிருக்கிறது என்று எண்ணி மேல் படிப்புக்காக மைலாப்பூரில் மஞ்சக்குடி ராஜகோபால சாஸ்திரிகள் என்கிற பண்டிதரிடம் கொஞ்சம் சமஸ்கிருதப் பாடம் கேட்கப் போனேன். கையோடு அப்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்த பாலகிருஷ்ண சாஸ்திரிகளிடம் ராமாயண கிளாஸுக்கும் போவது வழக்கம். இந்த வகுப்புகளின் விளைவாக என்னுடைய பூஜை புனஸ்காரங்கள் கனபரிமாணமடைந்தன. ஏகப்பட்ட சுலோகங்களைக் கற்றுத் தேர்ந்து மனத்துக்குள் மணிக்கணக்கில் ஓட்டிக்கொண்டே இருப்பேன். விடிந்து எழுந்து டாய்லெட் போவதில் தொடங்கி, படுத்துத் தூங்கும் இரவுப் பொழுதுவரை செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சாஸ்திரோக்தமாகச் செய்யும் பழக்கம் உண்டானது. அலுவலகத்தில் மதிய உணவுக்காக டிபன் பாக்ஸைத் திறந்து வைத்து, மோர் சாதத்துக்குப் பரிசேஷணம் செய்து கிண்டலுக்கு உள்ளானது முதல், கால் கழுவும் போது பூணூலைக் காதில் சுற்றி மாட்டி, கழற்றும்போது மூக்குக் கண்ணாடி கீழே விழுந்து உடைந்ததுவரை ஏகப்பட்ட பிரச்னைகளை எனக்குச் சடங்குகள் கொண்டுவந்து சேர்த்தன.

தவிரவும் முழுச் சோம்பேறியான எனக்கு இந்தச் சடங்குகள் விரைவில் அலுப்பை உண்டாக்கவே, என் கடவுளை இந்த வகையில் கண்டடைவது கஷ்டம் என்று தோன்றியது. மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தில் அப்போது சுவாமி யதாத்மானந்தா என்றொருவர் இருந்தார். [இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.] இளம் வயதுத் துறவி. மடத்தின் நூலகத்தை அவர்தான் கவனித்துக்கொண்டிருந்தார். அந்நாளில் ஆன்மிகத்தைப் பொருத்தவரை – குறிப்பாக பக்தி யோகத்தைப் பொருத்த அளவில் – பரமஹம்சரே என்னுடைய சூப்பர் ஸ்டாராக இருந்தபடியால், மடத்துக்குச் சென்று சுவாமி யதாத்மானந்தாவைச் சந்தித்து என் பிரச்னையைச் சொல்லி, எனக்கு நல்ல வழி காட்டும்படிக் கேட்டுக்கொண்டேன்.

தினசரி மடத்துக்குச் செல்வேன். அவருக்கு உதவியாக புத்தகங்களை அடுக்கி வைத்து, தூசு தட்டிக் கொஞ்சம் கைங்கர்யம் செய்துவிட்டுத் திரும்புவேன். பதிலுக்கு அவர் எனக்குச் சில புத்தகங்களைக் கொடுத்தார். நல்ல புத்தி சொன்னார். மடத்தில் என்னை பிரம்மச்சாரியாகச் சேர்த்துக்கொள்ள ஆவன செய்வாரா என்று கேட்டேன். பார்க்கலாம் என்றார். உட்கார்ந்து ஒழுங்காக தியானம் பழகச் சொன்னார்.

தினமும் தியானம் செய்தேன். மொத்தமாக நூறு மணி நேரங்கள் தியானத்தில் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதில் நூறு வினாடிகள்கூட மனம் பொருந்தவில்லை. நமது பிற பொறுப்புகள் அனைத்தும் ஒன்று பிசகாமல் நினைவுக்கு வருகிற தருணம் என்பது தியானத்தில் இருக்கும் சமயம்தான். இதிலெனக்குச் சந்தேகமே இல்லை. தற்செயலாக எப்படியோ ரஜனீஷ் கிடைத்து லேசாகப் படிக்கத் தொடங்கவும், என் தியான முறையே தப்பு என்று அவர் சொன்னார். ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.

எண்ணத்தை எப்படி அடக்கமுடியும் என்பதைக் காட்டிலும் எதற்கு அடக்கவேண்டும் என்று அவர் முதலில் கேட்டார். உள்ளுக்குள்ளிருந்து பீறிடும் எதையும் அடக்குவது தவறு. நம்மால் சிறுநீரை அடக்க முடியுமா? காமத்தை அடக்கமுடியுமா? பசியை முடியுமா? எத்தனை நேரம் முடியும்? அப்படி அடக்குவதுதான் எத்தனை வலி தரக்கூடியது? அதே மாதிரிதான் எண்ணங்களும். எதற்கு அடக்கவேண்டும்? அடக்காதே. ஓடவிட்டு வேடிக்கை பார் என்கிற அவரது தியான முறை, ராமகிருஷ்ண மடம் சொன்ன தியான முறைக்கு முற்றிலும் எதிராக இருந்தது.

அந்த ஆள் ஒரு பேஜார். வார்த்தைக்கு வார்த்தை விவேகானந்தரையும் காந்தியையும்தான் அவர் கெட்ட உதாரணத்துக்கு எடுப்பார். ஏன் விவேகானந்தர் இளம் வயதில் இறந்தார்? ஏன் அவர் தலையில் எப்போதும் முண்டாசு? காந்தியின் பிரச்னை என்ன? காந்தியின் ஆன்மிகம்தான் அவரது பிரச்னை. சங்கராசாரியார்களின் பிரச்னை என்ன? ஆன்மிகம் நிறுவனமயமாகும்போது ஏற்படும் சிக்கல்கள் யாவை? மதத்துக்கும் ஆன்மிகத்துக்கும் ஏன் தொடர்பு வந்தது? எதனால் அடிக்கடி அங்கே மட்டும் பிழைகள் ஏற்படுகின்றன? குற்றங்கள் புரியப்படுகின்றன?

ரஜனீஷா? படிக்காதே. அவன் கெட்டவன். அயோக்கிய ராஸ்கோலு என்று சாதுக்கள் சொன்னார்கள். ராமகிருஷ்ண மடத்திலும் சரி, அந்தக் காலகட்டத்தில் நான் தொடர்பு வைத்திருந்த வேறு சில பக்திப் பழங்களான தனி நபர்களும் சரி, வேறு சில மத நிறுவனங்களும் சரி. சொல்லிவைத்தமாதிரி ரஜனீஷ் தப்பு என்றுதான் சொன்னார்கள். ஏன் தப்பு, எதனால் தப்பு என்று யாரும் சொல்லவில்லை. பின்னாளில் அவரைத் திரும்பத் திரும்பப் படித்து, அவரிடம் எனக்குத் தென்பட்ட தவறுகளைத் தனியே எடுத்து வைத்துக்கொண்டேன். யாரிடம் தவறில்லை? விவேகானந்தருக்கு ஹுக்கா. அரவிந்தருக்கு கஞ்சா. ரஜனீஷுக்கு செக்ஸ் கதைகள் – எனக்கு மாவா போல.

ஆன்மிகம் இங்கே இல்லை. கடவுளும் இங்கே இல்லை. தத்துவங்களும் மதமும் சடங்கு சம்பிரதாயமும் எண்ணமும் எண்ணமற்ற நிலையும் கடந்த ஒரு வேகம் மிகுந்த வெளி இவற்றுக்கெல்லாம் அப்பால் இருப்பதாக எனக்கு உறுதியாகத் தோன்றியது. நிச்சயமாக என் கடவுள் அங்கேதான் எங்கேனும் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

மடத் தொடர்புகளை அன்றோடு அறுத்தெறிந்துவிட்டு மேலும் படிக்கத் தொடங்கினேன். முன்னதாக என்னுடைய நித்யகர்மானுஷ்டானங்கள் அனைத்தும் விடைபெற்றிருந்தன. ஏழாயிரம் ரூபா செலவு பண்ணி உனக்குப் பூணூல் போட்டிருக்கேண்டா. அதுக்காகவாவது சந்தியாவந்தனம் பண்ணேன் என்பார் என் அப்பா. ஏழாயிரம் கோடியே ஆனாலும் இனி இல்லை என்று தோன்றிவிட்டது.

படிக்கப் படிக்க, சில விஷயங்கள் சுமாராகப் புரியத் தொடங்கின. கல்வி என்பது ஓர் ஒழுங்குமுறைக்கு வருவதற்கு முன்னர் தனி மனித ஒழுக்கங்களை வரையறுக்கவும் குற்றங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கவும் சில நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மதம் அவற்றிலொன்று. சாமி கண்ணைக் குத்தும் என்கிற நமது எளிய பூச்சாண்டித்தனத்தின் மேஜிக்கல் ரியலிச வடிவம்தான் பின்னாளில் பாவத்தின் சம்பளம் இன்னது என்று கிறிஸ்தவத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இஸ்லாத்தின் இறையச்சமானது.

சின்னச்சின்னத் தப்புகளுக்கெல்லாம் கண்ணைக் குத்திக்கொண்டே இருக்குமானால் சாமிக்கு வேறு வேலையே இருக்கமுடியாது என்பது புரியும்போது குற்றங்கள் புரிவதில் குற்ற உணர்ச்சி குறைந்துபோகிறது. குற்றங்களுக்கு சாமியையே சாட்சியாக வைத்துவிடும்போது குற்றங்கள் நிறுவனமயமாகிவிடுகின்றன. அப்போது கடவுள் தொழில் பார்ட்னராகிவிடுகிறான். காளி நரபலி கேட்கத் தொடங்கிவிடுகிறாள்.

சந்தேகமில்லாமல் என்னளவில் மதம் ஒரு போதை வஸ்துதான். ஒப்பீட்டளவில் எனது மாவா ஒன்றுமே இல்லை. மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மதத்தின் ஆக்கிரமிப்பைக் குறைத்துக்கொண்டு வந்திருந்தோமேயானால் இன்றைய பெரும்பாலான குற்றங்கள் இல்லாது போயிருக்கும் என்பது என் தீர்மானமான நம்பிக்கை. சடங்கு சம்பிரதாயங்களில் குற்றமேதுமில்லை. ஆபத்துமில்லை. அது அவரவர் விருப்பம். ஆனால் சடங்குகளும் மதமும் ஒருங்கிணைந்து இறைவன் என்னும் வியப்புக்குரிய, விள்ள இயலாத குறியீட்டைச் சுற்றிக் கோட்டை கட்டும்போது சிக்கல் உண்டாகிவிடுகின்றது.

எனது கடவுளை நான் கண்டறிய எனக்கு என் மதமோ சாதியோ உதவி செய்ததில்லை. என் சாதிக்கு ஓர் அர்த்தமே இருந்ததில்லை – என்றைக்குமே. அது என் எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட்டில் அகால மரணமடைந்த ஒரு வைரஸ் அல்லது அமீபா. இந்த இரண்டும் என்னளவில் முக்கியத்துவம் இழந்தபோது தத்துவங்களில் கொஞ்சநாள் உழன்றுகொண்டிருந்தேன். இருக்கிறான், ஆனால் தெரியமாட்டான்; நான் பார்த்தேன், ஆனால் உனக்குக் காட்டமுடியாது என்னும் பூச்சாண்டி எனக்கு அங்கும் ஒத்துவரவில்லை. கீதை உள்ளிட்ட அனைத்தையும் ஒரு கதை நூலாக மட்டுமே என்னால் பார்க்க முடியும். மறைபொருள், உள்ளே ஏகப்பட்ட ரகசியங்கள் புதைந்துகிடக்கின்றன என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்களை விடியல் வெளியீட்டுத் தமிழ் மொழிபெயர்ப்புகளில் படித்தபோது சே என்றாகிவிட்டது.

அத்தனை வரிகளும் – ஆயிரமாயிரம் வரிகளும் வெறும் புலம்பல். பிச்சைக்காரத்தனம். ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அதையெல்லாம் தனது கடவுளாக்கிக் கையேந்தித் தொழுது, உயிர்ப்பிச்சை கேட்டுப் புலம்பிய கீதங்கள். இதில் மிகையே இல்லை. விடியல் வெளியீடு இப்போதும் கிடைக்கிறது. தயவுசெய்து வாங்கிப் படித்துப் பாருங்கள். நாகரிகம் வளராத காலத்து மனிதனின் பயங்களும் அதன் மிகை வடிவங்களும் பயமென்ற கொடிய உணர்விலிருந்து மீள்வதற்கு அவன் கையாண்ட பிரார்த்தனைகளும்தானே தவிர அவற்றில் பெரும்பாலும் வேறில்லை.

பின்னும் ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடாக வந்த உபநிடத விளக்க நூல்களைப் படித்தபோது எம்.ஆர். காப்மேயர் தொடங்கி இன்றைய சோம. வள்ளியப்பன், சிபி கே. சாலமன் வரையிலான சுய முன்னேற்ற நூலாசிரியர்களின் அந்நாளைய எடிஷன்களாகவே அவை எனக்குத் தென்பட்டன. புற முன்னேற்றம்  – அக முன்னேற்றம். இரண்டுக்குமான உபாயங்கள். இரண்டிலும் டீஃபால்ட்டாக உண்டு இறையென்னும் சரடு.

ஒரு விஷயம். பக்தி என்பது அறிவைக் களைந்த ஓர் உணர்வு. காதல் மாதிரி எனலாமா? தவறில்லை. நமக்குப் பெரும்பாலும் உணர்வு தளத்தில் நீச்சலடிப்பது உவப்பான விஷயமாக இருப்பதால் சகலத்திலும் அதைக் கொண்டுவந்து ஒரு டீஸ்பூன் கலந்துவிடுவது சௌகரியமாகிவிடுகின்றது. இங்கே Emotional Intellegenceக்கு இடமில்லை. வெறும் Emotionதான்.

ராமகிருஷ்ணருக்கு மட்டும் கடவுள் காட்சி கொடுத்துவிட்டார் என்றால் அது அவருடைய பிரச்னை. எனில் கடவுள் இருப்பது நிஜம்தானா? என்றால் அது கடவுளுடைய பிரச்னை [If god exist, it is his problem].

ரொம்ப உள்ளே போகவே வேண்டாம் என்று ரொம்பப் பின்னால்தான் எனக்குப் புரிந்தது. எனக்குக் கடவுள் வேண்டும். நிச்சயம் வேண்டும். அவர் இருக்கிறாரா இல்லையா என்பதல்ல முக்கியம். எனக்கு வேண்டுமென்பதுதான் இங்கே முதன்மை பெறுகிறது. நான் பேசிக்கொள்ளவும் நான் சிரித்து விளையாடவும் நான் பாவமன்னிப்பு கோரவும் நான் தோள் சாய்ந்து அழவும் நான் திட்டவும் நான் கொஞ்சவும் கெஞ்சவும் ஒரு கடவுள். சடங்குகள் கோராத, மதத்தின் சாயத்தை விரும்பாத, என்னைப் போலவே எளிமையான, என்னைப் போலவே குழப்பங்களும் தெளிவுகளும் கொண்ட, என்னைப் போலவே பாதி நல்லவனாகவும் பாதி அயோக்கியனாகவுமான ஒரு ஜீவன்தான் எனது கடவுளாக இருக்கமுடியும்.

என் கடவுளுக்குப் புல்லாங்குழலோ, வில்லோ, வாளோ, சூலமோ கொடுக்க எனக்கென்ன அருகதை? நாளைக்கே ஒரு நாயோ, பன்றியோ, பூனையோ அதை எப்படித் தத்தம் கடவுளாக ஏற்கும்? ஒரு நாயின் கடவுள் இன்னொரு பெரிய நாயாகத்தான் இருக்க முடியும். ஓர் எலிக்குட்டியின் கடவுள் எப்படி மல்லாண்ட திண் தோள் மணிவண்ணனாக இருக்க முடியும்? பெருச்சாளி வடிவத்தில் வேண்டுமானால் இருக்கலாம்!

பகவத்கீதையின் சாரமாக பப்ளிக் டாய்லெட் நீங்கலாக எல்லா இடங்களிலும் ஒரு போஸ்டர் இன்றைக்கு ஒட்டப்பட்டிருக்கிறது. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய் அதை நீ பெறுவதற்கு? எது இன்று உன்னுடையதோ அது நாளை இன்னொருவருடையது. மற்றொரு நாள் வேறொருவருடையது.

என்ன அபத்தம் இது? இதுவா கீதையின் சாரம்? இப்படிக் குழப்பி அடிப்பதன் பெயரா தத்துவம்? அப்புறம் அது எதற்கு?

எனக்கு கீதை சொன்ன தத்துவமும் அது காட்டிய கடவுளும் ஒன்றேதான். இரண்டே சொல்லில் அதனை முடித்துவிடலாம்.

வேலையப் பாருடா.

என் வேலையை நான் ஒழுங்காகப் பார்க்க எனக்கு மதமோ சடங்குகளோ அநாவசியம். எனவே என் வாழ்வில் அவற்றுக்கு எவ்வித முக்கியத்துவமும் கிடையாது.

சுருக்கமான பதிலாகத்தான் எழுத நினைத்தேன். நீண்டு, ஒரு கட்டுரையாகிவிட்டது. மன்னியுங்கள்.

Share

31 thoughts on “என் மதம், என் கடவுள் : ஜடாயு கடிதத்தை முன்வைத்து.”

 1. Para,

  Really happy to read this post. U have expressed the same thoughts for which i’ve been bullied by fellow people for past few years. Let us have God in the form which is comfortable to us.

 2. Dear Pa.Ra, what do you want to communicate?? Do you think that you have read everything and understood everything and compared with Tamil lit’s and you finally conclude that all the Sanskrit mantras and slogas are waste.

  I don;t know to whom you want to satisfy and wrote this answer to one of your visitor Jatayu.

  You can write better than this and sensibly too..

  Rajaraman

 3. I had a WONDEFUL time reading this post.

  “ராமகிருஷ்ணருக்கு மட்டும் கடவுள் காட்சி கொடுத்துவிட்டார் என்றால் அது அவருடைய பிரச்னை. எனில் கடவுள் இருப்பது நிஜம்தானா? என்றால் அது கடவுளுடைய பிரச்னை [If god exist, it is his problem].” — 100% true.

  And the best thing about this post is the way it flows, from the beginning to the very end and the way your ideas are expressed.

  The lines I enjoyed the most.

  “சின்னச்சின்னத் தப்புகளுக்கெல்லாம் கண்ணைக் குத்திக்கொண்டே இருக்குமானால் சாமிக்கு வேறு வேலையே இருக்கமுடியாது என்பது புரியும்போது குற்றங்கள் புரிவதில் குற்ற உணர்ச்சி குறைந்துபோகிறது. குற்றங்களுக்கு சாமியையே சாட்சியாக வைத்துவிடும்போது குற்றங்கள் நிறுவனமயமாகிவிடுகின்றன. அப்போது கடவுள் தொழில் பார்ட்னராகிவிடுகிறான். காளி நரபலி கேட்கத் தொடங்கிவிடுகிறாள்.”

  &

  “இறையென்னும் சரடு.”

  Just too good.

  “சுருக்கமான பதிலாகத்தான் எழுத நினைத்தேன். நீண்டு, ஒரு கட்டுரையாகிவிட்டது. மன்னியுங்கள்.”

  Many thanks to Jadaayu !!! உசுப்பேத்தி விட்டமைக்கு உளமார்ந்த நன்றி 🙂

 4. R.Sankaranarayanan

  பாரா,
  தொடர்ந்து உங்கள் வலைப்பதிப்புகளைப் படித்துவருகிறேன். இந்தக் கட்டுரை என்னை மிகவும் பாதித்துவிட்டது. கடவுள், மதங்கள் குறித்து நீங்கள் சொல்வதையெல்லாம் ஏற்கிறேனோ இல்லையோ, இத்தனை சிக்கல்கள் உள்ள ஒரு விச்யத்தை நீங்கள் எவ்வளவு எளிமையாக, உணர்ச்சிவசப்படாமல் உங்கள் தரப்பை எடுத்த் வைக்கின்றீர்கள் என்பது பிரமிப்பாக உள்ளது. அவரவர்களது நம்பிக்கைகள் அவரவர்களுக்கு உரியது. விமர்சனம் செய்யாமல் அனைத்தையும் மதித்து , நமது நம்பிக்கையின்படி நடந்துகொள்வதில் என்ன கஷ்டம் வந்துவிடும்? அதைத்தான் நீங்கள் சொல்லவருகின்றீர்கள் என்று எண்ணுகிறேன்.

  மொத்தத்தில் என்னை மிகவும் சிந்திக்கவைத்த கட்டுரை இது. உங்களுக்கு என் நன்றிகள்.

  ஆர்.சங்கரநாராயணன்,
  தூத்துக்குடி

 5. சுழியம்

  வேதங்கள் வெறும் பிச்சைக்காரனின் புலம்பல் என்று நீங்கள் சொல்லியிருப்பது வேதங்கள் குறித்த உங்களுடைய கூர்மையான புரிதலை காட்டுகிறது. இந்து மதத்தின் புராண, வேத, இதிகாசங்களை நன்கு கற்றுக்கொண்ட ஒருவரின் குரல் இது என்று உங்கள் எழுத்து சொல்லுவது கவனிக்கத்தக்க ஒன்று.

  நீங்கள் சுட்டியிருக்கும் ஜடாயுவின் வலைப்பதிவிற்கு சென்று படித்துப் பார்த்தேன். அவருக்கு வேதங்கள் குறித்து உங்களைப் போல தெளிவான புரிதல் இல்லை.

  இந்து கடவுள்கள்மேல் எந்தவித பக்தியும் இல்லாத வெள்ளைக்கார துரைகள் பலபேர் இந்த வேதங்களைப் படித்துவிட்டு இவை மனித குலத்தின் மகத்தான பொக்கிஷம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஜடாயுவைப் போல அவர்களும் வேதங்களை நேரிடையாகவே படித்து புரிந்துகொண்டிருக்கிறார்கள் போலும்.

  நல்லவேளையாக விடியல் வெளியீடுகளைப் படித்து தெளியுங்கள் என்று அவருக்கும், அவரைப் போல வேதங்களை தவறாகப் புரிந்துகொண்டுவிட்டவர்களுக்கும் அறிவுரை சொல்ல நீங்கள் இருக்கிறீர்கள்.

  சங்க இலக்கியங்களின் முழு பரிமாணத்தையும் கோனார் நோட்ஸ் படித்தே கரைத்து குடித்த தமிழர்களாகிய எங்களுக்கு, வேதங்களை கரைத்து குடிக்க விடியல் வெளியீடு ஒன்று இருக்கிறது என்று சொல்லி வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளீர்கள்.

  கடோபநிஷதமும் காப்மேயரும் சொல்வது சுய(நல)முன்னேற்றம் என்கிற ஒன்றே என்று தெளிவாகச் சொன்ன நீங்களே விடியல் வெளியீட்டைப் போன்ற, முடிந்தால் அதைவிட சுருக்கமான ஒரு பதிப்பை “ராகவன் நோட்ஸ்” என்று கொண்டுவர தேவையான ஞானமடைந்தவர் என்பதற்கு, இதுவே முன்னறிவிப்பு.

  “வேலையைப் பாருடா” என்னும் வேத சாரத்தை எந்தவித பிரதிபலனும் இன்றி இந்த மனித குலத்திற்கே கொடுத்துள்ளீர்கள். கோபுரத்தில் ஏறி நின்று கூவிய ராமானுஜர்கூட உங்களுக்கு இணையாக மாட்டார். இது “ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் என்னைவிட எந்தவிதத்தில் உயர்ந்தவர்” என்று நீங்கள் கேள்வி கேட்டிருப்பதில் இருந்து தெள்ளென விளங்குகிறது.

  இந்த இன்ஸ்டண்ட் ஞானம் ஏற்பட்டவர்கள் எல்லாரும் ரஜனீஷின் மீதுதான் பழியைப் போடுகிறார்கள். இந்த ரஜனீஷ் மரணத்தை வென்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை. சிறிய வயதிலேயே செத்துப் போன விவேகானந்தரைவிட இருபது வருடங்கள் அதிகமாக அவர் உயிரோடு இருந்திருக்கிறார். மிகப் பெரிய சாதனை இது.

  ராமகிருஷ்ணரை பின்பற்ற நீங்கள் முயற்சி செய்தபோது நூறுவினாடிகள்கூட நீடிக்காத தியான அனுபவம்தான் கிட்டியது. ஆனால், ரஜனீஷை பின்பற்றுவதால் பல மணி நேரங்கள் நீடிக்கும் மாவா அனுபவம் கிட்டியிருக்கிறது.

  இதில் எது பெரியது என்பது எமோஷனல் இண்டெலிஜன்ஸில் உள்ள இண்டெல்லிஜென்ஸை விலக்கிவிட்டு பார்க்கும் ஞானிகளுக்கு மட்டுமே புரியும்.

  ராமகிருஷ்ணரைவிட ரஜனீஷ் மிக உபயோகமானவர். என்ன வேண்டுமானாலும் செய்துகொண்டுவிட்டு ரஜனீஷை காரணம் காட்டிவிடலாம். மாவா போடுவதற்கு ராமகிருஷ்ணரோ வேத ரிஷிகளோ எந்த புனித நோக்கங்களையும் கொடுக்கமாட்டார்கள்.

  மேலும், புனித நோக்கங்கள் என்பது புனிதர்களிடம் மட்டும் உண்டாவது. கடவுளோடு சேர்ந்து மாவா போடவேண்டும் என்ற புனித நோக்கம் உங்களிடம் உண்டாயிருக்கிறது.

  கடவுளை வரவேற்று, அழகு பார்த்து, உணவும் நீரும் அருந்த சொல்லி, நேர்மறை எண்ணங்களை செயல்படுத்தும் சக்தியை கேட்டு, அவற்றை செயல்படுத்த இறைவன் உதவுவான் என்று தன்னம்பிக்கையை தரும் பக்தியைவிட,

  அந்த கடவுளை ஏழைகளிடமும், வலிமையற்றவர்களிடமும், வாயில்லா ஜீவராசிகளிடமும் காணச் சொல்லும் வேதங்கள் காட்டும் வெற்று சடங்குகளைவிட,

  கடவுளோடு மாவா போடும் சடங்கு உண்மையில் புனிதர்கள் மட்டுமே செயல்படுத்தக்கூடியது.

  உண்மையில் நீங்கள் இதுவரை வந்த ஆன்மீகப் பேரொளிகள் அனைத்திலும் பெரிய ஒளி. இந்து வேதங்களின் சாரமாக இதுவரை சொல்லப்பட்டு வந்த நான்கு மகா வாக்கியங்களைவிட உங்களுடைய “வேலையை பாருடா” மிக உயர்ந்தது. பஞ்சாங்கத்தைப் பிழிந்து மழை நீரை கண்டுபிடித்த நீங்கள் சொல்லிய இந்த “மகாவாக்கியத்தை” தவிர மற்ற மகாவாக்கியங்களோ, வேதங்களோ இருக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.

  உங்களின் தேஜஸுக்கு முன்னால் ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றவர்களின் ஆன்மிக அனுபவங்கள் தூசி. அவர்கள் யாராவது உங்களைப் போல ஏதேனும் ஒரு மகாவாக்கியத்தை கண்டுபிடித்துள்ளார்களா?

  பாவம் அவர்கள். இப்போது அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு பிரிவுகளாகவே இலக்கிய உலகம் பார்க்கும் – பா ராகவனின் கட்டுரைக்கு முன்பு, பா ராகவனின் கட்டுரைக்கு பின்பு.

  நீங்கள் சொல்லியிருக்கிற மகாவாக்கியம் இந்த உலகில் இதுவரை மறைபொருளாகவே இருந்தது. அறியாமலேயே பல பெரியோர்கள் இதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.

  யோசித்துப் பார்த்தால் இந்த நாட்டின் அரசியல்வாதிகளும், நாட்டின் மக்கள்தொகையை குறைத்து தாங்களும் தங்கள் குழுவினரும் மற்றவர்களும் சுவனத்திற்கு போகவேண்டும் என்று பாடுபடுவர்களும், உழைக்கும் வர்க்கத்தினரின் துயரத்தை குறைக்க கள்ள சாராயம் காய்ச்சுபவர்களும், ஹூடு-டுட்ஸி, ஆரியர்-திராவிடர் என்று போதித்து கோடிக்கணக்கான கொலைகளையும், கற்பழிப்புகளையும் தூண்டிய போதகர்களும், சாகக் கிடக்கும் தாயின் உயிரை காப்பாற்ற கடன் வாங்கிய பணத்தை பத்திரமாக எடுத்துக்கொள்ளும் ஜேப்படிக்காரர்களும் இந்த ஆன்மீக உண்மையின் நடைமுறை விளக்கங்கள். இதை அவர்களிடமே நான் நேரடியாக கேட்டு, அதை எல்லாம் அறிந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு சொல்ல விரும்பினேன்.

  அவர்களிடம்போய் இந்த அளவு உயர்வானவராக நீங்கள் ஆனதற்கு காரணம் என்ன என்று கேட்டபோது அவர்கள் அனைவரும் உங்களைப்போலவே கீழேகண்ட பதிலை சொன்னார்கள்:

  வேலையை பாருடா.

 6. பாரா,

  அடி தூள்! நானே என்னை கண்ணாடியில் பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது. ஆனால் எழுதச் சொன்னால் இவ்வளவு கோர்வையாக என்னால் எழுதியிருக்க முடியாது. இப்படி ஒரு கட்டுரையை எழுதுவீர்கள் என்றால் வாரத்திற்கு ஒரு முறை உங்களை திட்ட நான் தயாராக இருக்கிறேன். 🙂

 7. நல்ல பதில்.

  ஜாதியை பற்றி சொல்லாமல் ஜாதி தொட்டு உள்ளீர்கள்.

  வேலை பார்க்கும் இடத்தில் ஜாதி பார்த்து கும்மாளம் அடிப்பது, தன் ஜாதி ஆட்கள் உதவி செய்வார்கள் என்று நினைத்து பழகுவது போன்றது தான் கோவிலும், பக்தியும். நம்ம கடவுள். நம்ம ஆளு. பாக்யராஜ் படம் ஒரு உதாரணம்.

  அன்பன்
  ரமேஷ்

 8. Pa.Ra, You have written this piece very well. Everyone has God of their own. When I read, Velaiyai Paaruda, it reminded me of what Va.Srinivasan shared with me as J Krishnamurti said. When answering the question of “What is the purpose of life?”, J Krishnamurti said, “The job on hand”.

  – PK Sivakumar

 9. ரஜனீஷ் ரசிகன்

  அவன்: எனக்கு முன்னாடி ஒரு பிரச்சினை இருந்தது.

  இவன்: என்ன பிரச்சினை?

  அவன்: எந்த பெண்ணை பார்த்தாலும் என்னை அறியாமலேயே மூன்று முறை குட்டி கரணம் போடுவேன். அப்படி செய்வதை நினைத்து எனக்கு பயங்கர குற்ற உணர்வு ஏற்படும்.

  இவன்: அடடா. சரி எப்படி சரி செய்தாய்?

  அவன்: ரஜனீஷ் படித்தேன்.

  இவன்: வெரிகுட். இப்ப குட்டி கரணம் போடுவது நின்றுவிட்டதா?

  அவன்: இப்போதும் குட்டி கரணம் போடுகிறேன். ஆனால், எனக்கு குற்ற உணர்வே ஏற்படுவதில்லை.

  அவன் + இவன்: ஓஷோ ஓஷோ ஓஷோ

 10. அன்புள்ள பாரா.

  மிக அற்புதமான கட்டுரை நிறையபேர் தங்களை கண்ணாடியில் பார்த்துக்கொண்டது போல் உணர்ந்திருப்பார்கள். எனது புரிதலை இங்கே சொல்ல நினைக்கிறேன், விஷ்ணுவின் பத்து அவதாரங்களை எடுத்துக்கொண்டால் அதன் ஆரம்பம் முதல் அது ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு பண்பை கொண்டிருக்கிறது அதுதான் நாம் கடவுளை புரிந்துகொள்ள உதவுகிறது கண்ணன் அவதாரத்திற்கு முன்பு வரும் ராம அவதாரம் வரையிலான பண்புகள் சாராசரி இன்றைய மனிதன் பின்பற்றக்கூடியதாக இல்லாமல் இருப்பதையும் அது கொஞ்சம் கொஞ்சமாக எளிமை பெற்று கடைசியில் கண்ணன் அவதாரத்தில் நாலுபேருக்கு நல்லது செய்யவேண்டுமானால் சில குறுக்கு வழியிலும் செல்லலாம் என்பதையும் காட்டி இன்றைய மனித வாழ்வின் வசதிக்கேற்றபடி கடவுள் நம்பிக்கையை மறுசீரமைப்பு செய்திருப்பதை அறியமுடியும் அது நீங்கள் சொல்வதுபோல் வேலையை பாருடா என்கிறதின் விரிவுதான்,

  அது இயல்பாகவே ஒவ்வொரு காலத்திற்குமாக கடவுள் நம்பிக்கையின்பால் உள்ள பிடிப்பை தளராமல் செய்திட வேண்டியதின் அவசியத்தால் எளிமை படுத்தப்பட்டுள்ளது, அது கடவுள் நம்பிக்கை என்கிற ஒன்று உயிர்வாழ வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்யப்பட்ட விதி தளர்த்தல் போல் உள்ளது.

  ஒருவேளை ஓஷோ கண்ணன் அவதாரத்திற்கு அடுத்த அவதார பண்பை வெளியிட்டிருக்கலாமோ?

  தங்களின் கட்டுரை அற்புதமான நடையிலும் கருத்துக்களிலும் மிளிர்கிறது பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம்.

  நன்றி

 11. பாரா,
  இங்க பார்ர்ராண்ணு சொல்ல வச்சுட்டீங்க. பல நண்பர்களும் மிஷனரிகளையும், பிற மத அமைப்புகளையும் குறை சொல்லிக்கொண்டே அவர்களின் வழிகளிலேயே செல்ல நினைப்பது வருத்ததிற்குரியது.

  நீங்கள் பெற்றிருக்கும் விடுதலை மதிப்புக்குரியது . மதங்கள் வழிகாட்டும் பலகைகளே அன்றி சென்றடையும் இலக்குகள் அல்ல என ஆண்டனி டி மெலோ அழகாகச் சொல்வார்.

  அந்த பலகைகளை விட்டு விலகி அவை காட்டும் வழிகளில் கொஞ்சம் நடந்தால் போதும் கடவுளை அடைந்து விடலாம்.

  நட்ட கல்லும் பேசுமோ நாதன் ‘உள்’ளிருக்கையில்?

 12. நல்ல அனுபவமும் விளக்கமும் காலைநேரத்தில் கிட்டியது. சுகம். நன்றி. (மறுமொழிகளும் சுவை:-))

 13. இருக்கு அல்லது இல்லைன்னு , சாதரண மனுஷன குழப்பி அடிக்குறதே கடவுள் பத்தி பேசுற எல்லாரும் செய்யும் தத்துவ பித்தலாட்டமா ஆகிப்போச்சு இப்போ. உனக்கு மட்டும் தெரிஞ்ச கடவுள் ஏன் எனக்கு தெரியலைன்னு ? கேட்டா, கண்ணை மூடி கபாலத்துக்கு குண்டலினிய கொண்டு வா’ன்னு இன்னும் குழப்பி விட்டுறானுங்க.
  ஏன்டா! நான் குண்டலினிய கொண்டு வந்தா தான் கடவுள் தெரிவாருன்னா அப்போவே அவரு ஏதோ ஒரு வரையறைக்குள்ள சிக்கிகுராறு அல்லது என்னை சிக்க வைக்க முயற்சி பண்றாரு. அது ஒரு விடுதலை இல்லை, இன்னொரு தளை .

  எலி உதாரணம் அருமை , சத்தியமா கீதையோ குரானோ பைபிளோ தெரியாத எந்த எலிக்கும் இன்னொரு பெரிய எலி தானே கடவுள். நாம எப்படி மனுஷ உருவம் கொடுக்குரோமோ, அப்படியே அதும் எலி உருவம் கொடுத்து தானே வணங்கும்.

  உங்களுடைய எல்லா கருத்துகளேயும் நான் ஏத்துக்குறேன்
  ஆனா இந்த வேலைய பாருடா’கிறது தான் கொஞ்சம் இடிக்குது

  என்ன வேலை ? ஏன் செய்யணும் அந்த வேலையை ?
  இது தானே இப்போ பிரச்சனையே .

  இது தெரிஞ்சிட்டா வாழ்க்கைங்கிற (மகிழ்ச்சி தரக்குடிய ) வேலையை ரொம்ப சந்தோசமா செய்யலாமே .

  – நாடோடி

 14. Udayakumar Sree

  “ஆதி மனிதன் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அதையெல்லாம் தனது கடவுளாக்கிக் கையேந்தித் தொழுது, உயிர்ப்பிச்சை கேட்டுப் புலம்பிய கீதங்கள்” – கோட்பாடுகளை தழுவாமல் தான் கண்ட கடவுள் இதுவேயாம் என்று சிலர் மட்டும் எழுதி வைக்க, நீங்கள் கண்டது கடவுள் அல்ல, உங்கள் பயத்தின் வெளிப்பாடு என்று சுட்டிக்காட்டும் வரிகள். எனக்குள்ளும் என்னுடைய 14வது வயதில் தோன்றிய அதே எண்ணம்.

 15. இவ்வளவு நீண்ட பதில் அவசியமா என்று தெரியவில்லை. உங்களின் மற்ற பதிவுகளை வரி விடாமல் பசுவின் மடியில் பால் கறப்பது போல ராவாக வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். இந்தப் பதிவு ஏனோ 1970களின் தமிழில் இருப்பது போல எனக்கு படுகிறது. இடையிடையே பேஜார் மாதிரியான வார்த்தைகள் இருந்திருக்கா விட்டால் என் டவுசர் ஒட்டுமொத்தமாக கிழிந்திருக்கும் 🙂

 16. கமலாவது தன் ஐம்பதாவது வயதுக்கு மேல்தான் அப்படி ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னார், நீங்க நாப்பதுலயே சொல்லீட்டீங்க. கடவுள் இல்லைன்னு சொன்ன வாத்தியார் மருத்துவமனையில் தேசிகனிடம் திவ்வியபிரபந்தம் படிக்கச்சொன்னாராம். தமிழ் சுவையை பருகத்தான் அவர் படிக்கச் சொன்னார்ன்னு நம்பறவங்களும் இருக்கத்தானே செய்றாங்க. நாத்திகன்னு சொல்லீட்டு திரிஞ்ச சாருவுக்கு ஆப்ரேஷனுக்கு அப்புறம் மலை கூட மாலவனாய் தெரியுது.

  இன்னும் வயசு பெரிசாச்சுன்னா மாவா மாதவனாய் மாறிவிடும்!

 17. Ungal ‘alagila Vilayatil’ ithuvum onra Raghavan sir? Your search are in exact lines with mine, I have got Deekshai from Ramakrishna Mutt from Gitanandaji. I have read almost all books of Swami Vivekananda. I got the pleasure of reading and used to feel that my confidence level increased. i needed something more, the ambience of the mutt always gives peace to my mind. But still something is lacking..what is that? My altime search is ‘who am i’ (not the jackie chan film). I went to ashrams, read so many books from buddha to osho, from j.krishnamurthu to zen, tao..More and more book knowledge nothing in practice, but the outcome of the book knowledge was I also wrote one book on spirituality (am sure you would have not read)..

  If we follow anything mundane, whatever it may me, either rituals or reading a book, it would not be of any use. There is certainly some base in any religion, but we have forgotten the purpose and ponder over every other thing. I stopped going to Tirupati and other such crowded temples. Finally i also came to a conclusion as work is for you – love for me. God exists in those hearts which is filled with unadultered love. I take care not to hurt anyone by my words, actions, over powering anger, manifesting the finer aspects of human qualities within me. i have lots of friends who admire and adore me and i reciprocate the same..this world is a resting place for all of us for a while and there are so many groupisms here…life is just to live…and we have to live..with a tenderness give and live – life would be too wonderful. anbudan uma

  ps : everyone in my office is becoming a great fan of your blog, especially my friend Padmaja..

 18. அன்பின்நிறை பாரா

  உங்களது பல புத்தகங்களை நான் வாசித்து வாங்கியும் இருக்கிறேன்.

  இந்த பதிவு மிக அருமை! சூப்பர்! உங்கள் எண்ணங்களை மிக அழகாக எளிமையாக எடுத்து வைத்துள்ளீர்கள்!

  “எனது கடவுளை நான் கண்டறிய எனக்கு என் மதமோ சாதியோ உதவி செய்ததில்லை. என் சாதிக்கு ஓர் அர்த்தமே இருந்ததில்லை – என்றைக்குமே. அது என் எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிகேட்டில் அகால மரணமடைந்த ஒரு வைரஸ் அல்லது அமீபா…..” – இது சூப்பர்!

  நண்பர் காசி சொன்னதைப் போலவே பின்னூட்டங்களும் மிக அருமை!

  மயிலாடுதுறை சிவா…

 19. அன்புள்ள பாரா, நேற்று இந்தப் பெட்டியில் இட்டது வரவில்லை. எப்படி என்று எனக்கு விளங்கவில்லை. எனது கணிணீ அறிவு அவ்வளவுதான். இப்போது மறுபடியும் நம்பிக்கையோடு உள்ளிடுகிறேன்.

  நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கிறேன், அதுவும் நீங்கள் ஜடாயுவுக்கு எழுதிய பதிலை. நேர்மையும், நயமும் கூடிய எழுத்து உமது. சாதியை சர்ட்டிஃபிகேட்டோசு செத்துப் போன வைரஸ் என்று சொல்வதற்கு எவ்வளவு துணிச்சலும் நேர்மையும் வேண்டும்?!

  மதங்களைப் பற்றி வெறும் கருத்தாக நீங்கள் இப்படிச் சொல்லி இருந்தால் அது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் உங்கள் அனுபவத்தை முன்வைத்து பேசுகிறீர்கள்.

  கிட்டத்தட்ட கடவுளைப் பொறுத்தவரை உங்கள் அனுபவமும் எனதும் ஒன்றுதான். கிட்டத்தட்ட. அல்லாஹ் ஒருவன்தான் என்பது முஸ்லிம்களின் ந்ம்பிக்கை என்றாலும், நூறு முஸ்லிம்களை எடுத்துக் கொண்டால் நூறு அல்லாஹ்க்கள் இருப்பதுதான் நிஜம். (இதற்காக எனக்கு ஃபத்வா வந்தாலும் வரலாம்).அவரவர்க்கு அவரவர் மதம் போல, அவரவர்க்கு அவரவர் கடவுள். A rat can imagine God to be a giant Rat என்று சொல்வார்கள். மனிதனுடைய எல்லைகளை அழகாக எடுத்துக் காட்டும் உதாரணம் அது. கண்டவர் விண்டதில்லை என்று சொன்னதும் அதனால்தானே.

  சடங்குகள் மதத்தோடு கலப்பதால்தான் பிரச்சனையே வருகிற்து என்று நீங்கள் சொல்வது ஒரு புதிய கோணமாகவும் அதே சமயம் உண்மையாகவும் உள்ளது.

  உம் எழுத்தில்தான் போகிற போக்கில் எவ்வளவு கிண்டல், எவ்வளவு எள்ளல்?! வேலையைப் பாருடா என்பதாக பகவத் கீதையின் சாரத்தை இப்படி வேறு யாராலும் சொல்ல முடியாது. அதுவும் மிகச்சரியாக.

  ரொம்ப நாளைக்குப் பிறகு நான் படித்த, உங்கள் நண்பர் நான் என்று என்னைப் பெருமையோடு மறுபடியும் சொல்லிக் கொள்ள வைக்கிற கட்டுரை.

  ரொம்ப சந்தோஷத்துடன்
  ரூமி

 20. உங்கள் நடையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். பல இடங்களில் என்னையும் அடையாளப் படுத்திக் கொள்ள முடிந்தது. இரண்டு இடங்கள் இடறியது. 1. மாவா 2. அதீத உணர்ச்சி வசப்படுதல். :-)) அதெல்லாம் போகப் போக சரியாயிடும்.

 21. உங்கள் பதிலில் மொழி லாவகம் இருக்கிறது.வாசக கூட்டத்திற்கு எதைத் தர எப்படித் தர வேண்டுமோ அதை தருகிற திறன் இருக்கிறது.விவேகம் இல்லை, பக்குவம் இல்லை.
  கசப்பான அனுபவங்களை மட்டுமே அளவுகோற்களாக
  கொண்டு பலவற்றை மதிப்பிட்டிருக்கிறீர்கள்.

  வேதங்களை மொழிபெயர்ப்பில், அதுவும் தமிழில் வெளிவந்த மிக மோசமான மொழிபெயர்ப்பில் படித்துவிட்டு
  இப்படி flippant ஆக போகிற போக்கில் சொல்லிவிட்டுப்
  போகும் முன் பாரதி என்பவன் இந்த வேதங்களின் மேன்மை
  குறித்து எழுதியிருக்கிறானே, அவன் மூடனா இல்லை ஒரு மொழிபெயர்ப்பை படித்து விட்டு இப்படி தடாலடியாக சொல்கிறேனே அது சரிதானா என்ற கேள்வி உங்களிடம்
  எழவில்லை என்பது அறியாமையின் விளைவல்ல,வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டோம்
  எனவே எப்படியும் எழுதலாம் என்ற அகந்தையின் விளைவு.
  அந்த அகந்தைதான் கோப்மெயர் எழுதியதையும், உபநிடதங்களையும் இப்படி ஒப்பிடச் சொல்கிறது.
  இது நிச்சயம் NRIகள் சிலருக்கு பிடித்திருக்கலாம்.
  சில ஆண்டுகள் கழித்து நீங்கள் எழுதியதை நீங்களே
  படித்துப் பார்த்தால் வேறுவிதமான புரிதல் உங்களுக்கு
  கிடைக்கலாம்.

 22. Thank God, you did not write that ‘Just Do It’ is the essence of upanishads, bhavad geeta and teachings of Jiddu Krishnamurti.Perhaps that is what you intended but never came to writing it so brazenly.You may even think that the
  tick mark which is a trade mark of a famos brand sums
  all that is worth knowing in the world.Your sensex,index,future markets,forward contracts are based on system of production and exchange. Even those who swear by them know that they are so imperfect that corrections are needed very often.
  When the crisis becomes unmanageable govts. step in to restore credibility.But the ideas expoused by the seers and philosophers in Upanishads does not have this credibility crisis.Of course they talk of a different crisis.Persons who are immersed in worldly pleasures and spend life in
  chasing power, wealth and glory may not understand this.
  Remember what Jesus said about the needle’s eye and wealth.

 23. Dear Sir,

  ”’Really happy to read this post. U have expressed the same thoughts for which i’ve been bullied by fellow people for past few years. Let us have God in the form which is comfortable to us.””

  – I Endorsed the above statement fully .

  let us Teach or not-spoil our childrens like our parents done .

  LET US DO OUR WORK. “WORK IS GOD”

  Your friend

 24. இன்று தான் படிக்க நேர்ந்தது.

  அருமையான நடையில் மிக சுவாரஸ்யமாக இருந்தது . கேள்வி கேட்டு உங்களிடமிருந்து இதை பெற வைத்த ஜடாயு-வுக்கும் நன்றி!

 25. என்ன ஒரு எழுத்து!!
  தன் நிலையை மற்றவர்களும் உணரும் மாதிரி சொல்லியிருப்பது,அருமை பா ரா.
  ஜடாயுவுக்கும் மிக்க நன்றி.

 26. நண்பர் பாரா,
  உங்கள் அனுபவங்களைப் படித்த போது சில எண்ணங்கள் எழுந்தன.
  சடங்குகள் தழுவிய மதம் உங்களை சிறுவயதில் மிகவும் ஆட்கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் இந்தப் பத்தியால் ஏற்படுகிறது..

  ஆனால் ஒன்று தெளிவு..உங்கள் நடை..ஆரம்ப காலக் கல்கியில் ஆரம்பித்த அந்த வித்தியாசமான ஆற்றொழுக்கு நடையின் பிரமிப்பு இதிலும் இருக்கிறது;இன்னும் சொல்லப்போனால் அது கருத்தை உள்ளழுத்திப் பொலிகிறது.

  இறைத்தன்மை பற்றிய விசாரங்களில் இவ்வளவு எழுதும் போது,திருமுறைகள்,சித்தாந்தம் ஆகியவை பற்றிய உங்கள் பார்வையை அறிய ஆவல் ஏற்படுகிறது…

  கொஞ்சம் நுழைந்து பார்த்து எழுதுங்களேன்…

  இன்னொரு யோசனை..இது போன்ற கட்டுரைகளை ஏதாவது ஒரு குறிச்சொல்லின் கீழ் பதிவு செய்தால் படிப்பவருக்கு ஏதுவாக இருக்கும்..

 27. PaaRaa,

  Really, your article is eye opener. This kind of subject to be discussed and understand the values which is going to give it to our society – even individual life.

  Of course, so called Religion – Caste – Myth all should be based on humnanitarian, if it’s fails to attain that, then no point in continue and spoil us as well as society.

  Pl. continue to share this kind of message.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *