சுகம் பிரம்மாஸ்மி – 1

இது ஒரு வெகுநாள் திட்டம். எழுத நேரம் கூடாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகவே சிந்தித்துக்கொண்டிருந்தேன். அவ்வப்போது பத்ரியிடம் மட்டும் பேசுவதுண்டு. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களாக நான் நினைப்பவர்களுள் முதன்மையான ஒருவரைப் பற்றி எழுதிப் பார்க்கவேண்டும். திரைகள், தடைகள் எதையும் அனுமதிக்காமல் மிகவும் நிர்வாணமாகச் சிந்தித்து, தோன்றியது தோன்றியபடி. இதில் என் புத்திசாலித்தனம் வரக்கூடாது. சாமர்த்தியங்கள் தெரியக்கூடாது. உணர்ச்சி மிகலாகாது. கற்பனை சேரக்கூடாது.

இன்னும் உண்டு. அது பெரிய பட்டியல். ஆரம்பிக்கச் சமயமில்லாமல்தான் தள்ளிப்போட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நேர்ந்த விபத்து ஒரு வகையில் இதற்கு உதவியாக இருப்பது பற்றி சந்தோஷமே.  நேற்றிரவு உறங்கலாம் என்று படுத்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாகத் தூக்கம் வராமல், அப்படி இப்படி நகரக்கூட முடியாமல் அவஸ்தை மிகுந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்துவிட்டது.

இது ஒரு கட்டுரையல்ல. பல பகுதிகள் வரலாம். ஒரு சில பகுதிகளுடன் நின்று போனாலும் வியப்பதற்கில்லை. எழுத வேண்டும் என்ற ஒன்றைத்தவிர வேறு எந்தத் திட்டமும் இல்லாமல் தொடங்குகிறேன். பொதுவாக என்னுடைய எழுத்து முறை இதுவல்ல. நிச்சயமாக அல்ல. எழுதப்போகிற விஷயம் எதுவானாலும் முதல் சொல்லில் இருந்து இறுதி வாக்கியம் வரை தீர்மானிக்காமல் எழுத அமரமாட்டேன். புத்தகம் என்றால் அத்தியாயம் பிரித்து, சினாப்சிஸ் எழுதாமல் தொடங்கும் வழக்கமில்லை. பத்திரிகைத் தொடர்களைக் கூட ஒரு தோராயத் திட்டம் வகுத்துக்கொண்ட பிறகுதான் ஆரம்பிப்பேன். எப்போதும், எல்லாவற்றுக்கும் என்னிடம் இருக்கும் ஒன்லைன்.

முதல் முறையாக அப்படியேதும் இல்லாமல் இதனை எழுதுகிறேன். எந்தத் திட்டத்துக்குள்ளும் பொருந்தி வராத ஒருவனைப் பற்றி எழுதுகிறேன் என்று ஒரு ஓரத்தில் தோன்றுகிறது. இருக்கலாம். ஆனால் இதுநாள் வரை என்னுடைய எல்லாத் திட்டங்களிலும் அவன் ஒரு மறைமுக பார்ட்னராக இருந்திருக்கிறான். பல சமயம் சொதப்பி, சில சமயம் வெற்றி பெறவைத்த க்ரெடிட்டை நான் அவனுக்குத் தந்திருக்கிறேன். உள்ளுக்குள் ஓயாது ஒலிக்கும் ஒரு குரலுக்கு வெகுகாலமாகக் கடவுளின் குரல் என்று பெயரளித்து வந்திருக்கிறேன். அந்தக் குரல் எச்சரிக்கும் போதெல்லாம் ஒரு சிறு அச்சம் சூழும். அது உற்சாகப்படுத்தும்போது துள்ளிக்குதிப்பேன். நான் துவளும்போது அது ஆறுதல் சொல்லும். தவறு செய்யும்போது பெரும்பாலும் ஆதரிக்கும். இப்படித் தவறுகளைக் கூட ஆதரிப்பவன் எப்படிக் கடவுளாக இருப்பான் என்று புத்தி கேட்கும். ஒரு தவறை, தவறென்று தெரிந்து செய்யுமளவு நான் கெட்டிக்காரனாக இருக்கிறபடியால் கடவுளாகப்பட்டவன் சில பிரத்தியேக சலுகைகள் தருவதில் பிழையில்லை என்றும் தோன்றும்.

ஆக, செய்பவனாகிய நான், செய்ய வைக்கும் குரலின் சொந்தக்காரனாகிய கடவுள், அவனது செய்கையிலும் பிழை கண்டுபிடிக்கக்கூடிய என் புத்தி என மூன்றாகத்தான் இதுநாள் வரை இருந்துவந்திருக்கிறேன்.

இன்று நேற்றல்ல. நினைவுக்கு எட்டிய தினங்களாக. எனவேதான் நினைத்தேன், எழுத்தில் அவனை உரித்துப் பார்க்கலாம் என்று.

*

என்னுடைய கடவுளுக்கு என்னைவிட நான்கு வயது குறைவு. அதாவது என்னுடைய நான்காவது வயதில்தான் அவன் எனக்கு அறிமுகமானான் என்று நினைக்கிறேன். அப்போது நாங்கள் காஞ்சீபுரத்தில் வசித்து வந்தோம். ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்த சின்ன காஞ்சீபுரம். வீட்டுக்கு எதிரே வரதராஜப் பெருமாள் கோயில். நெடிதுயர்ந்த கோபுரமும் நீண்ட மதில் சுவரும். எப்போதும் டூரிஸ்ட் பேருந்துகள் வந்து கூட்டம் கூட்டமாக மக்களை இறக்கிவிட்டுப் போகும். கோயிந்தோ, கோயிந்தோ என்று வாசலில் யாராவது வேண்டுதல் நிமித்தம் உருண்டபடி பிச்சை கேட்டுச் செல்வார்கள். மடிசார் உடுத்திய பெண்கள் தேவைக்கு அதிகமாக ஜாக்கிரதை உணர்ச்சியை வெளிப்படுத்தியவாறு விறுவிறுவென்று எங்கிருந்தோ புறப்பட்டு எங்கோ சென்று மறைவார்கள். கோயிலுக்கு உள்ளே உள்ள குளத்தின் அடியில் அத்தி வரதர் சன்னிதி இருக்கிறது. நாற்பது வருடங்களுக்கொரு முறை அந்தச் சன்னிதி திறந்து அவர் வெளியே வருவார் என்கிற தகவல் ஓர் அதிசய உணர்வை எப்போதும் மனத்துக்குள் தூண்டியபடி இருக்கும்.

கோயிலுக்கு எதிர்ப்புறம் சற்றுத்தள்ளி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் மடம். அருகிலேயே வேறு சில மடங்களும் உண்டு. எப்போதும் வேதம் ஒலிக்கும். மாறன் தமிழ் செய்த வேதம்.

அப்பா என்னை அங்கே கொண்டு விட்டுவிட்டு வந்தார். கீரைப் பாத்திபோல் ஒரு வரிசையில் அமர்ந்த என் சமவயதுப் பிள்ளைகள் அங்கே பிரபந்தம் பயின்றுகொண்டிருந்தார்கள். நானும் படிக்க ஆரம்பித்தேன். அதிகாலை குளித்துவிட்டு நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டு இடுப்பில் இரண்டாக மடித்துச் சுற்றிய நான்கு முழ வேட்டியுடன் வீதி கடந்து எதிர் மடத்துக்கு நான் போன காட்சி நினைவிருக்கிறது. வேட்டி கட்டிக்கொள்ளும் சந்தோஷத்துக்காகவே பிரபந்த வகுப்பை விரும்பத் தொடங்கினேன். முடிந்ததும் கிடைக்கும் பிரசாதம் இன்னொரு காரணம். இடையில் சுமார் ஆயிரம் பாசுரங்கள் என்னையறியாமல் மனப்பாடமாயின.

அவையெல்லாம் என்ன, எதற்காகப் படிக்கிறேன், எப்படி அது மனத்தில் ஏறி உட்கார்கிறது, என்ன செய்யப்போகிறது என்று எதுவும் தெரியாது அப்போது. பிரபந்தப் பாசுரங்கள் மூலம்தான் கடவுள் எனக்கு முதல் முதலில் அறிமுகமானான். வைணவக் குடும்பங்களில் இறையச்சம் என்பது கிடையாது. சிநேகபாவம்தான் பிரதானம். ஆனால் இறைவன் மிக முக்கியம். கை கூப்பு, விழுந்து சேவி, கண்ணுல ஒத்திக்கோ என்று சொல்லிச் சொல்லி ஒரு சிறு இடைவெளி உருவாக்கப்படும் என்றாலும் பெரும்பாலும் கடவுளை மிக நெருக்கமான ஒரு நண்பனாகவே உணரப் பயிற்றுவிப்பார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகை தினங்களில் குளித்துவிட்டு மடிசார் உடுத்தி ஆசாரமாக வீட்டில் பட்சணங்கள் செய்வார்கள். வாசனை இழுத்து உள்ளே நுழைந்தால் உடனடியாக அனுமதி மறுக்கப்படும். தப்பு. பெரிய தப்பு. பூஜை முடித்து, நைவேத்தியம் ஆகும்வரை [அமுது செய்வித்தல் என்பார்கள்] நினைக்கவே கூடாது என்று சொல்லப்படும். அந்தக் கட்டாயக் காத்திருப்பு கூட, ஒரு பில்ட் அப் தான் என்று பிறகு புரிந்தது. பூஜை முடிவதற்கு முன்னால் அம்மாவே ஓர் அப்பத்தை எடுத்துக் கொடுத்துவிடுவாள். குழந்தை சாப்ட்டா, பெருமாளே சாப்ட்ட மாதிரி என்று அதற்கொரு விளக்கத்தையும் தரத் தவறுவதில்லை. எனக்கு அறிமுகப்படுத்திவைக்கப்பட்ட கடவுள் எளிதில் எதையும் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியவராகவே தெரிந்தார்.

குளிருக்கு பயந்து குளிக்காமல் திருமண் மட்டும் இட்டுக்கொண்டு சந்தைக்குச் [பாசுர வகுப்புக்கு சந்தை கிளாஸ் என்று பெயர்] சென்றால் அது ஒரு பிழையாகப் பார்க்கப்பட்டதில்லை. பாசுரங்களைத் தவறாகச் சொன்னாலும் பொங்கல் கிடைப்பதில் பிரச்னை இருந்ததில்லை. கடவுள் தொடர்பான விஷயங்களில் நமக்கான சலுகைகளை நாமே எடுத்துக்கொள்ள முடியும் என்று பலவிதங்களில் புரியவைத்தார்கள். அப்படியா என்று மனத்துக்குள் கேட்டுக்கொண்டபோது, ‘ஆமாம், நான் உன் நண்பன், உன்னை கவனித்துக்கொள்வதற்காகவே இருக்கிறேன். உன் பிழைகள் எதுவும் எனக்கு ஒரு பொருட்டல்ல. நீ என்னை நம்பவேண்டியது ஒன்றுதான் முக்கியம். மற்ற எதுவுமல்ல’ என்று உள்ளுக்குள்ளிருந்து அவன் குரல் கொடுத்தான்.

அந்தக் குரலை மிகவும் நம்பினேன். அது கடவுளின் குரல்தான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை அப்போது.

அந்த வயதில் எனக்கு அறிமுகமான கடவுள், வெகு நிச்சயமாக ஒரு பிராமணக் கடவுள். என்னைப் போலவே சிறு வயதில் சிறு திருட்டுகள் செய்தவன். என்னைப் போலவே சிறுபொய் பேசியவன். என்னைப் போலவே குறும்புகள் மிகுந்தவன். என்னைப் போலவே அம்மா செல்லம். என்னைப் போலவே நல்லவன். என்னைப் போலவே கெட்டிக்காரன். என்னைப் போலவே எளிதில் யாரையும் கவரக்கூடியவன். என்னைப் போலவே ப்யூர் வெஜிடேரியன். முட்டை போட்ட கேக்கைக் கூடச் சாப்பிடமாட்டான்.  எனவே அவனும் என்னைப் போலவே தென்கலை ஐயங்கார் வீட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தாக வேண்டும்.

மிக வலுவான, தடித்துப்போன மதம் மற்றும் ஜாதித்தோல் உடுத்தித்தான் என் கடவுள் எனக்கு முதல் முதலில் அறிமுகமானான். நான் ஆறாம் வகுப்புக்குச் செல்லும் வரை கடவுள் என்பவன் ஓர் ஐயங்கார் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அங்கே இனாயத்துல்லா என் நண்பனானபோது [டாக்டர் இனாயத்துல்லா இப்போதும் என் நண்பர். சவூதி அரேபியாவில் வசிக்கிறார்.] முதல் முதலில் இது விஷயத்தில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.

அடக்கடவுளே, நீ ஒரு முஸ்லிமாமே?

[தொடரும்]
Share

12 comments

  • ஆரம்பமே மிகச்சுவையாக வந்திருக்கறது.. 🙂
    அடுத்தடுத்த பதிவுகளுக்காய் காத்திருக்கிறேன்..
    ஒரு சின்ன வேண்டு கோள், bed rest முடிவதற்கு முன், இதனை முடித்து விடவும்.
    நீங்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துகள்!

  • ஆரம்பம் ஒரு அசத்தல், நான் கடவுளை DD ல் ராமாயணத்தில் ஹிந்தியில் பேசியதை கண்ட போது ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவித்தது நினைவுக்கு வருகிறது, என் கடவுள் எப்படி எனக்கு புரியாத மொழியில் பேசமுடியும், என்று,

    தொடருங்கள்

  • உங்களுக்கு கால்கட்டு போட்டதில், எங்களுக்கு ஒரு அருமையான தொடர் வாய்க்கபெற்றது. இவ்வரிசையில் வந்த முதல் இடுகையே அமர்க்களம். நானும் காஞ்சிபுரத்து ஆள் தான். என் அத்தையின் வீடு ஒரு காலத்தில் அங்கு இருந்தது.

    எனது சில “சிறுவயது சிந்தனைகள்” இடுகைகளை நீங்கள் கட்டாயம் வாசித்தாக வேண்டும். டயமில்லை என்று இப்போது சொல்ல முடியாது 🙂

    http://balaji_ammu.blogspot.com/2004/10/iv_26.html
    http://balaji_ammu.blogspot.com/2005/01/6.html
    http://balaji_ammu.blogspot.com/2004/11/blog-post_20.html

    தேவையான ரெஸ்ட் எடுக்கவும்.

    அன்புடன்
    பாலா

  • படிப்பதற்கு மி்கவும் நன்றாக இருக்கிறது. ‘சுகம் பிரம்மாஸ்மி’
    என்ற தலைப்புதான் புரியவில்லை.

  • அய்யய்யோ,

    பாலமுருகன் சொல்றமாதிரி சீக்கிரமாக்வெல்லாம் முடிக்காதீங்கோ. நான் இப்படி சொல்றதுன்னால நீங்க சீக்கிரம் குண்மடையக்கோடாதுங்கறதில்லை. நீங்க சீக்கிரம் குணமடையுங்க.

    ஆனா, உங்க பேனாவை அதன் போக்கில போக விடுங்க சாமி.

    நாங்கெல்லாம் எப்ப படிக்கறது.

  • மாரியப்பன்:

    தலைப்பு நான் வைக்கவில்லை. அது பற்றி யோசிக்கவும் இல்லை. இதனை எழுதிக்கொண்டிருக்கும்போது வீட்டுக்கு வந்த முகில் நாலு வரி படித்துவிட்டுச் சொன்ன தலைப்பு இது. எழுதி முடிக்கும் வரை – இதற்குப் பொருத்தமான ஒரு தலைப்பு எனக்கே தோன்றும்வரை இதுவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

  • ஓ அப்படியா!நீங்கள் குணமடைய வாழ்த்துகள்…..

  • PaRa,

    Y’d i came to book fair and searced you, but now only i came 2 know abt ur illness. Come back like Phoenix.

    -Love all…Karthik.

  • //டாக்டர் இனாயத்துல்லா இப்போதும் என் நண்பர். சவூதி அரேபியாவில் வசிக்கிறார்.//

    எங்கே????

  • anmigam padikka venduma ena migavum yosithen. neram pokka paditha aga vendiya kattayam. neram ponathe theriyavillai. miga arumai 🙂

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி