ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 20

பெரியதொரு மழையைப் போல எனக்கு மகிழ்ச்சி தருவது வேறில்லை. ஆனால் பெரிய மழையை மொத்தமாக இதுவரை ஏழெட்டு முறைதான் பார்த்திருப்பேன். கிராமங்களில் இருந்து முதல் முறை வருபவர்களுக்கு நகரம் எந்தளவு பிரமிப்பையும் பரவசத்தையும் தருமோ, அதைப் போலத்தான் மழை எனக்கு.

புயல் மையம் கொண்டிருப்பதாகச் செய்தியில் சொல்லிவிட்டாலே மனத்துக்குள் மேகம் திரளத் தொடங்கிவிடும். அனைத்தையும் மறந்தவிட்டு மழையைக் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். கொட்டும் மழையில் நனைவது, ஆடிப்பாடுவது போன்றவற்றில் எல்லாம் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. வெளியே மழை பெய்துகொண்டிருக்க வேண்டும். அதன் சத்தத்தைக் கேட்டபடி இருந்தால் போதும். எப்போதும் செய்யும் பணிகள் இன்னும் துரிதமாக நடக்கும்.

வயது சரியாக நினைவில்லை. ஏழு அல்லது எட்டு இருக்கலாம். சென்னையை அப்போது ஒரு புயல் தாக்கியது. அந்த நேரத்தில் நாங்கள் சைதாப்பேட்டையில் வார இறுதியைக் கழிப்பதற்காக வந்திருந்தோம். திடீரென்று புயல், மழை என்று ஆகிவிட்டதால் பாட்டி வீட்டிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. இரண்டு நாள் பேய் மழை. வாழ்வில் நான் கண்ட முதல் பயங்கர மழை அதுதான். ஆற்றங்கரை ஓர நகரம் என்பதால் சைதாப்பேட்டை முற்றிலுமாக நாசமாகிவிட்டது. அதுவும் கரையை ஒட்டியே இருக்கும் அபித் காலனியில் ஒரு பெரியப்பா வீடும் இரண்டு அத்தை வீடுகளும் இருந்தன. அவையெல்லாம் மூழ்கிவிட்டன என்று சொன்னார்கள். பெரியப்பா, சைதாப்பேட்டையிலேயே ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். அதனால் எல்லோரும் வீடுகளைப் பூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்கள். அபித் காலனிவாசிகள் அனைவருமே அவரவர் உறவினர் வீடுகளுக்குப் போய்விட்டிருந்தார்கள். போக இடமற்றவர்களை மீட்புக் குழுவினர் படகு வைத்து அழைத்துச் சென்று மாந்தோப்புப் பள்ளிக்கூடத்தில் தங்க வைத்திருப்பதாகச் செய்தி வந்தது.

புயல் ஒரு வழியாகக் கரை கடந்து, மழை கொட்டி முடித்த பின்னர் அபித் காலனிக்கு என் அப்பாவுடன் சென்று பார்த்தேன். வாழ்நாளில் மறக்கவே முடியாத காட்சி அது. என் பெரியப்பா வீட்டின் சுற்றுச் சுவர் விழுந்திருந்தது. சமையலறையின் மேற்பகுதி ஓடுகள் இடிந்துவிட்டன. முழு வீட்டிலும் ஓரடி உயரத்துக்கு சேறு படிந்திருந்தது. பீரோ போன்ற பெரிய பொருள்கள் கீழே விழுந்து, சேற்றில் புதைந்திருந்தன. முன்னதாகப் பாத்திரம் பண்டங்கள், துணிமணி, படுக்கை எல்லாம் வெள்ளத்தில் எங்கோ அடித்துச் செல்லப்பட்டுவிட்டிருந்தன. விளக்குகள், மின் விசிறி எல்லாம் உடைந்து விழுந்து நொறுங்கியிருந்தன. வீடெங்கும் பெரிய பெரிய எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. அது திரும்பவும் எப்படி வீடானது என்று எனக்கு நினைவில்லை.

உலகின் எல்லா பகுதிகளிலும் மழை பெய்கிறது. கடல் இருக்கும் நகரங்களைப் புயல் தாக்குகிறது. சென்னை மட்டும் எப்படி ஒவ்வொரு முறையும் தவறாமல் சர்வ நாசமாகிறது என்று நெடுநாள் எனக்குப் புரிந்ததில்லை. கடந்த நூற்று முப்பது ஆண்டுகளில் சென்னையை நேரடியாகத் தாக்கிய புயல்கள் பதினான்கு மட்டுமே. பல புயல்கள் வருவது போலப் போக்குக் காட்டி ஆந்திரத்துக்குச் சென்று விடும். சமயத்தில், ஆந்திரத்தையும் ஏமாற்றிவிட்டு ஒரிசாவில் சென்று கரை கடக்கும். இங்கே புயல் என்று செய்தி சொன்னவுடனேயே ஒரிசாவில் கரை கடக்கும் என்று தைரியமாக ஆரூடம் சொல்வேன். அப்படித்தான் பெரும்பாலும் நடந்திருக்கிறது. என்னைப் போலத்தான் எல்லோரும் கணிப்பார்கள். பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாமல் மாட்டிக்கொள்ள அதுதான் காரணம்.

1994ம் ஆண்டு. அப்போது கல்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். தீபாவளி மலர் வேலைகள் முடிந்து, தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களைப் பார்க்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஒரு புயல் வந்தது. என் சிறு வயதில் சைதாப்பேட்டையில் தங்கிப் பார்த்த புயலைக் காட்டிலும் அந்தப் புயல் மிகுந்த சீற்றம் கொண்டிருந்தது. வரலாறு காணாத பேரழிவு என்பார்களே. அப்படியொரு கோரத் தாண்டவம். மின்சாரம் எப்போது எங்கே போனது என்றே தெரியாமல் இரண்டு மூன்று நாள்களுக்கு நகரம் முழு இருளில் மூழ்கிப் போனது. வானம் சற்று வெளுத்த பின்னர் ஈக்காடுதாங்கல் பக்கம் போய்ப் பார்த்தால் அது நானறிந்த இடம் போலவே இல்லை. காசி திரையரங்கைச் சுற்றிய பகுதிகளும் ஜாபர்கான்பேட்டையும் வெள்ள நீரில் பாதி மூழ்கியிருந்தன. அப்போது ஈக்காடுதாங்கலில் உயர் பாலம் கிடையாது. தரைப்பாலம்தான். வெள்ளம் என்ற ஒன்று வராத வரை கல்கி அலுவலகத்துக்கு காசி திரையரங்கம் பக்கத்துக் கட்டடம். அது வந்துவிட்டால், பக்கத்து ஊர். அங்க ஒரு மேம்பாலம் அவசியம் என்ற எண்ணமே அந்த 94 புயலுக்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டும்.

அந்த வருடம் தீபாவளிக்குப் பதினொரு படங்கள் வருவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் மழை வெள்ளத்தின் காரணமாக இறுதியில் ஆறு படங்கள் மட்டும் வெளியாயின. கமலஹாசனின் ‘நம்மவர்’ குறித்துப் பேசாதவர்கள் இல்லை. எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் நம்மவர் செய்திகள்தாம் நிறைந்திருக்கும். நான்கூட குடை பிடித்துக்கொண்டாவது நம்மவர் ப்ரீவ்யூவுக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது அப்போது முடியவில்லை என்றபோதும் வெளியான பத்து தினங்களுக்குள் எப்படியோ பார்த்துவிட்டேன். பெரிதாகக் கவரவில்லை. ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான நாட்டாமை இன்னொரு புயலே போலத் தமிழகத்தை ஓர் உலுக்கு உலுக்கியது. இப்போதெல்லாம் சிறு தூறல் போடும் நாளில் ஒரு படம் வெளியானால்கூட வசூல் அதனால் படுத்துவிட்டது என்று சொல்லிவிடுவார்கள். அன்றைக்கு அந்த வரலாறு காணாத புயலால்கூட நாட்டாமையின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

பிறகு ஜல், தானே, நீலம், வர்தா புயல்கள். புயல் வந்தால் மின்சாரம் போய்விடும் என்பது அப்போது சென்னையில் ஒரு மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. மின் கம்பங்கள் தாக்கப்பட்டு மின்சாரத் தடை ஏற்படுவது வேறு. சென்னையை நோக்கிப் புயல் வருவதாக வானிலை ஆய்வு மையம் சொன்ன உடனேயே மின்சார வாரியத்தின் முதன்மை வினியோகக் கேந்திரங்கள் மூடப்பட்டுவிடும். நல்ல எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைதான். ஆனாலும் அப்படி மின் வினியோகம் முன்னதாக நிறுத்தப்பட்ட எந்த சமயத்திலும் சென்னையைப் புயல் தாக்கியதில்லை. அந்தப் புயலெல்லாம் பாதை மாறாமல் ஆந்திரத்துக்குத்தான் செல்லும். நீலம் புயல் வந்த சமயத்தில் நான் கோடம்பாக்கம் அலுவலகத்தில் இருந்தேன். புயலும் மழையும் வலுத்து, குரோம்பேட்டைக்கு ஓரிரு நாள் போகவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மின்சாரம் போய்விட்டால் அலுவலகத்தில் எப்படித் தங்குவது என்று மிகவும் குழப்பமாக இருந்தது. ஆனால், அந்தப் புயல் சென்னையை ஒன்றும் செய்யாது என்று மின்சார வாரியம் நினைத்துவிட்டது. அல்லது குறைந்தபட்சம் கோடம்பாக்கத்தில் வினியோகத்தை நிறுத்தி வைக்க மறந்துவிட்டார்கள். புயலடித்த நேரம் முழுவதும் எனக்குத் தடையில்லாமல் மின்சாரமும் இணையமும் இருந்தது. பிராந்தியத்தில் மின்சாரமின்றி, இணையமின்றி, வேலை செய்ய முடியாமல் அவதிப்படும் யார் வேண்டுமானாலும் என் அலுவலகத்துக்கு வந்து தங்கிக்கொள்ளலாம் என்று ட்விட்டரில் ஒரு பொது அறிவிப்பே வெளியிட்டேன்.

புயலும் மழையும் சென்னையைப் பொறுத்தவரை எப்போதோ வருபவைதான். ஆனால் வந்த போதெல்லாம் தாராளமாகத் தண்ணீர் தரத் தவறியதில்லை. அதைத் தேக்கி வைக்கத்தான் வழியில்லாதிருக்கிறது. வர்தாவுக்குப் பிறகு அடையாறு, கூவம் நதிகளைக் கண்டு உண்மையிலேயே திகைத்துப் போனேன். அவ்வளவு தண்ணீரை நான் பார்த்ததேயில்லை. ஈக்காடுதாங்கல் பாலத்துக்குக் கீழே, பிரம்மபுத்திராவைப் போல அலை பொங்கி நீர் ஓடிய காட்சி இன்னும் நினைவிருக்கிறது. கட்டுமரங்கள், லாரி டயர்களை மிதக்கவிட்டு மக்கள் சந்தோஷமாகத் தீர்த்த யாத்திரை செய்தார்கள். ஆனால் எல்லாம் இரண்டொரு நாள்களுக்குத்தான். விரைவில் நதி காய்ந்துவிட்டது. சாலைகளில்தான் நெடுநாள் தண்ணீர் வற்றாதிருந்தது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter