ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 19

முப்பது வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைப் பணியில் இருந்தபோது இரவில் சென்னை என்றொரு பத்தித் தொடருக்கு யோசனை வந்தது. (பிறகு இது பல பத்திரிகைகளில் பலநூறு விதமாக வெளிவந்து மக்களுக்கு அலுத்தே விட்டது.) சுமார் மூன்று மாத இடைவெளியில் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளை இரவு நேரங்களில் திருஞானம் என்ற புகைப்படக்காரருடன் திரும்பத் திரும்பச் சுற்றி வந்தேன். இரவுப் பொழுதுகளில் குற்றங்கள் அதிகம் நடைபெறும்; எச்சரிக்கையாக இருங்கள் என்று அலுவலகத்தில் சொன்னார்கள். எச்சரிக்கையாக இருப்பது என்றால் என்ன? யாராவது தாக்க வந்தால் தற்காத்துக்கொள்ளக் கையில் ஆயுதம் வைத்திருப்பதா? அதெல்லாம் வேண்டியிருக்காது என்று நினைத்தேன். ஏதாவது அவசரத் தேவை என்றால் திலகவதி ஐபிஎஸ்ஸுக்குத் தகவல் தெரிவித்துவிட்டால் போதும்; அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் செல்போன்கள் வந்திராத அந்தக் காலத்தில் திலகவதி ஐபிஎஸ்ஸை அகால நேரத்தில் தொடர்பு கொள்வது எப்படி? திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென்று எங்காவது ஒரு பொதுத் தொலைபேசி கிடைத்துவிடும். நடைமுறையில் அதெல்லாம் அவ்வளவு சுலப சாத்தியமில்லை. என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று கிளம்பினேன்.

முதல் முதலில் நான் சுற்றி வரத் தேர்ந்தெடுத்த இடம் பூக்கடையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையும் அதன் குறுக்கே செல்லும் நாலைந்து நீண்ட தெருக்களும். பகலில் இந்தப் பிராந்தியத்தில் நடமாட்டம் அவ்வளவு எளிதாக இராது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். அன்று சென்னை நகரில் ஒரே பெரிய வியாபாரக் கேந்திரம் என்பதால் சரக்கு வண்டிகளின் போக்குவரத்து மிக அதிகம் இருக்கும். லிங்கி செட்டி தெரு, தம்பு செட்டி தெருவில் எல்லாம் பத்தடி தூரம் கடப்பதற்குள் மூச்சு வாங்கிவிடும். ஏதாவது கொள்முதல் செய்வதன் பொருட்டு அங்கு சென்றிருந்தால், குறிப்பிட்ட கடைக்கு முன்னதாக ஒருமுறையாவது வந்திருந்தால்தான் குத்து மதிப்பாக இடத்தைக் கண்டறிய முடியும். இல்லாவிட்டால் கூட்டத்தின் மறைப்பில் போக வேண்டிய கடையைத் திரும்பத் திரும்பத் தவற விட்டுக்கொண்டே இருப்போம். எனக்கு நிகழ்ந்திருக்கிறது. சாலையில் போய்க்கொண்டிருக்கும் சரக்கு வண்டி முன்னறிவிப்பின்றி பாதி வழியில் நிற்கும். டிரைவர் இறங்கி எங்காவது சென்று விடுவார். கடை ஆள்கள் வந்து சரக்குகளை எடுத்துக்கொண்டுபோய் உள்ளே வைப்பார்கள். பின்னால் வந்துகொண்டிருக்கும் வண்டி வாகனங்கள் முட்டிக்கொண்டு நிற்க வேண்டியதுதான். சாமர்த்தியசாலிகள் மட்டும் சந்து பொந்துகளில் புகுந்து முன்னேறிவிடுவார்கள்.

போஸ் சாலையை ஒட்டிய வீதிகளில் யார் வியாபாரிகள், யார் நுகர்வோர் என்று என்னால் கண்டுபிடிக்க முடிந்ததே இல்லை. எல்லோருமே கையிலும் தோளிலும் தலையிலும் சரக்குப் பைகளோடுதான் கடந்து போவார்கள். இரும்பு சாமான்கள், மளிகை சாமான்கள், ஸ்டேஷனரி சாமான்கள், கண்ணாடி சாமான்கள் அதிக அளவில் அங்கே விற்பனையாகும். சைக்கிளின் கேரியரில் தைரியமாக மூன்றடி, நான்கடி அகல நிலைக்கண்ணாடிகளை காக்கி பேப்பரில் சுருட்டி வைத்து, கயிறு கட்டி எடுத்துப் போவார்கள். பக்கத்தில் யாராவது வந்து இடித்தால் என்னாவது என்று கவலையே படமாட்டார்கள். நமக்குத்தான் இடித்துவிடுவோமோ, கண்ணாடி உடைந்துவிடுமோ என்று பயமாக இருக்கும். அந்தப் பிராந்தியத்தில் ஓரளவு போக்குவரத்து குறைவான வீதி என்றால் ஆர்மீனியன் தெரு மட்டும்தான். மற்ற வீதிகளில் சுற்றித் திரிந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக அங்கே வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திவிட்டுப் போய்விடுவார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆர்மீனியர்கள் கட்டிய தேவாலயத்தில் வசிக்கும் இயேசுபிரானுக்கு இந்த வாகனங்களைக் காப்பாற்றுவதுதான் வேலை. அந்தச் சாலையில் செல்லும் ரிக்‌ஷாக்காரர்கள், வண்டியை விட்டு இறங்கி, தமக்கு இடைஞ்சலாகக் கருதும் வாகனங்களை வேறெங்காவது நகர்த்திச் சென்று நிறுத்திவிட்டுத் தங்கள் வண்டியை ஓட்டிப் போவார்கள். கல்யாண வீட்டில் செருப்பு இடம் நகர்ந்து இருப்பது போலத்தான். ஆர்மீனியன் தெருவில் நிறுத்திய இரு சக்கர வாகனங்களைத் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு வீர விளையாட்டு.

இதெல்லாம் பகல் பொழுதுகளில். இரவில் அந்த வீதிகள் மிகவும் சாதுவாக இருந்தன. பலரும் அச்சுறுத்தியது போலக் குற்றங்கள் எதையும் நான் காணவில்லை. வீடில்லாத கடைச் சிப்பந்திகள் அந்தந்தக் கடை வாசல்களிலேயே சாக்குக் கோணிகளை விரித்துப் படுத்திருப்பார்கள். சிலர் இடுப்பு லுங்கியை முகம் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவார்கள். அலாரம் அடித்தாற்போல அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். நாளெல்லாம் வந்து போவது போதாமல் அந்த அதிகாலை வேளையிலும் அவர்கள் சரக்கு இறக்கி வைக்க அங்கே லாரிகள் வரும்.

இப்போது உள்ளது போல வட இந்தியக் கூலித் தொழிலாளிகள் எல்லாம் அப்போது இல்லை. பெரும்பாலும் விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்தவர்களே பூக்கடைப் பகுதியில் மிகுதியாகச் சில்லறை வேலைகள் பார்த்து வந்தார்கள். வீடோ, அறையோ இல்லாமல் இப்படி பிளாட்பாரத்தில் படுத்து உறங்குவது குறித்து அவர்கள் கவலைப்படவே மாட்டார்கள். அன்றைக்கு ஒரு தொழிலாளி சொன்னது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ‘இதென்ன என் ஊரா? கூலி குடுக்கறாங்க, இருக்கேன். மாசம் ஒருக்கா ஊருக்குப் போயிடுவேன். பொண்டாட்டி, புள்ளையோட சந்தோசமா இருந்துட்டு திரும்பி வருவேன். கிடைக்கிற கூலில ரூம் வாடகையெல்லாம் குடுக்க முடியாது தம்பி.’

உதயம் திரையரங்கத்துக்கு வெளியே உள்ள பிளாட்பாரத்தில் அப்போதெல்லாம் தினமும் சுமார் நூறு பேராவது படுத்திருப்பார்கள். பகலில் அந்த பிளாட்பாரத்தில் அவர்கள் தங்கிய சுவடே இருக்காது. ஆனால் இரவில் பார்த்தால் மூட்டை முடிச்சுகளும் குமுட்டி அடுப்புகளும் பாத்திரம் பண்டங்களும் ஏராளமாக இருக்கும். எங்கெங்கோ அலைந்து திரிந்து வேலை பார்த்துவிட்டு இரவானதும் அங்கே வந்துவிடுவார்கள். செங்கல் வைத்து அடுப்பு மூட்டி சமைத்து உண்டுவிட்டு, அப்படியே திரையரங்க காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் ஊருக்கே கேட்கும்படி உரக்கத்தான் பேசுவார்கள். பிறகு அவர்கள் எப்போது படுப்பார்கள், இல்லறம் நடத்துவார்கள், எப்போது உறங்குவார்கள் என்று தெரியாது. ஆனால் அந்த பிளாட்பாரத்தில் குடித்தனம் நடத்திக் குழந்தை பெற்றோர் பலர் உண்டு. பூக்கள் வெட்டவெளியில்தான் ரகசியமாகப் பூக்கின்றன.

சேத்துப்பட்டு ரயில் நிலையத்துக்கு வெளியே உள்ள பிளாட்பாரவாசிகள், கேகே நகர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அருகே வசித்த பிளாட்பாரவாசிகள், லயோலா கல்லூரி சுற்றுச்சுவர் ஓரத்தில் வசித்தவர்கள், கத்திப்பாரா மேம்பாலக் கட்டுமானப் பணியாளர்கள், கிண்டி தொழிற்பேட்டைக்கு உள்ளே வாழ்பவர்கள், தி நகர், வடபழனி பேருந்து நிலையத்தை மையமாகக் கொண்டு பிழைத்தவர்கள், மாங்காடு கோயிலை ஒட்டிய இடங்களில் இருந்தவர்கள், காசிமேடு மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர்கள், மெரினா கடற்கரையிலேயே வசிப்பவர்கள் என்று பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட மக்களை அந்த மூன்று மாத காலத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்கள் அனைவருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை, அவர்கள் யாருமே சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள் இல்லை என்பதுதான். குற்றங்களைக் குறித்த சிந்தனைகூட அவர்களிடம் இல்லை. உழைக்கவும் சம்பாதிக்கவும் மட்டும் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்தார்கள். ஆனால் என்னைப் போலவே இரவு நேரக் குற்றவாளிகளைக் குறித்து அவர்களும் கேள்விப்பட்டிருந்தார்கள். யாராவது கடையில் புகுந்து கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று ஒவ்வொரு முதலாளிக்கும் ஒரு நிரந்தர அச்சம் இருப்பதைக் குறித்து ஒவ்வொரு தொழிலாளியும் சொன்னார். ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை என்றார்கள்.

வாழ்வில் இதுவரை ஒரே ஒரு சமயத்தில்தான் குற்றத்தை நேருக்கு நேர் பார்த்தேன். ஒரு கொலை முயற்சி. அது இரவில் நடந்ததல்ல. காலை ஆறரை மணிக்கு ஓரளவு வெளிச்சம் வந்த பிறகு நடந்தது. அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பத்தடி தொலைவில் சர்வோதயா என்றொரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரின்மீது ஒருவன் அமர்ந்திருந்தான். தற்செயலாக வாசலுக்கு வந்த என் கண்ணில் அது பட்டது. அதிகாலை நேரத்தில் பொழுது போகாமல் ஒருவன் குட்டிச் சுவரின்மீது அமர்ந்திருக்கிறானே என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கமாக ஒரு பெண் வந்தாள். அவளுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். அதுவரை குட்டிச்சுவரின்மீது அமைதியாக அமர்ந்திருந்தவன், அவளைக் கண்டதும் சுவர் மீதிருந்து கீழே குதித்தான். குதித்த வேகத்திலேயே சட்டைக்குள்ளே முதுகுப் பக்கம் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாளை வெளியே எடுத்தான். கணப் பொழுதில் அந்தப் பெண்ணின்மீது பாய்ந்து அவள் கழுத்தில் இரண்டு முறை வெட்டினான். என் கண்ணெதிரே ஒரு கொலை முயற்சி நடக்கிறது என்பதை நான் உணர்வதற்கு முன்னால் அவன் மீண்டும் குட்டிச் சுவரின்மீது தாவி ஏறி உள்ளே குதித்து, பள்ளியின் பின்புறம் வழியே ஓடி மறைந்து போனான்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் உயர்ந்து வீதியில் நாலைந்து பேர் கூடுவதற்குள் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது. என்ன, என்ன என்று பதறிக்கொண்டு வந்தவர்களுக்கு அவள் பதில் சொல்லவில்லை. திரைப்படங்களில் காட்டப்படுவது போல அரிவாள் வெட்டு விழுந்ததும் அவள் கழுத்தைப் பிடித்துக்கொண்டு கீழே விழவும் இல்லை. ரத்தம் சொட்டச் சொட்ட வேகவேகமாக நடந்து போனாள். ‘ஜிஎச்சுக்குப் போறேங்க. நானே போயிடுறேங்க’ என்று சொல்லிக்கொண்டே போனது நினைவிருக்கிறது.

பிறகு அவள் கட்டுமானப் பணியில் இருக்கும் பெண் என்றும் ஒரு கள்ளக்காதல் விவகாரத்தால் வந்த பிரச்னை என்றும் தகவல் வந்தது. வெட்டியது அவள் புருஷன்தான். இருவருமே விக்கிரவாண்டியில் இருந்து பிழைப்புத்தேடி வந்தவர்கள்.

பிழைப்பைப் பார்த்துக்கொண்டிருந்தவரை பிரச்னை இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி