ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 18

மேற்கு மாம்பலத்தைக் குறித்து இன்னும் சிறிது சொல்லலாம். நினைவு தெரிந்த நாளாக இந்தப் பகுதியை ‘முதியவர்களின் பேட்டை’யாகத்தான் மனத்துக்குள் உருவகம் செய்து வைத்திருக்கிறேன். அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்று எனக்குப் புரிந்ததில்லை. மாம்பலத்தின் எந்த வீதிக்குள் நுழைந்தாலும் எதிர்ப்படுபவர்கள் குறைந்தது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள். கடைகளில், கிளினிக்குகளில், கோயில்களில், மெஸ் போன்ற உணவகங்களில், காலை நடைப் பயிற்சிக்கு வரும் கூட்டத்தினரில் இளைஞர்களையோ, இளம் பெண்களையோ பார்க்க நேர்வது அபூர்வம். இந்த ஒரு பகுதியில் மட்டும் பிறக்கும்போதே ஐம்பதுக்கு மேற்பட்ட வயதில்தான் பிறப்பார்களா என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இது என்ன அபத்தம்? நான் பெண் பார்க்கப் போய், நிச்சயமாகித் திருமணம் நடந்ததே மேற்கு மாம்பலத்தில்தான். கண்டிப்பாக இளைய தலைமுறையினரும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அவர்கள் பிறந்தவுடனே வேண்டிக்கொண்டு, படித்து முடித்ததும் அமெரிக்காவுக்குப் போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன். பிறகு நடு வயதில் மீண்டும் மாம்பலத்துக்கு வந்துவிடுவார்கள். சாரதா ஸ்டோர்ஸில் அப்பளமோ, சுண்டைக்காய் வற்றலோ வாங்க வரும் நடுத்தர வயதுப் பெண்கள் அவ்வளவு சுருதி சுத்தமான அமெரிக்க உச்சரிப்புடன் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.

சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும் என் வயது நண்பர்கள் எனக்கு உண்டு. ஒருவராவது நிச்சயமாக இருப்பார்கள். ஆனால் மாம்பலத்தில் என்னைவிடக் குறைந்தது பத்து வயதாவது மூத்தவர்களைச் சந்திக்க மட்டுமே இன்றுவரை சென்றிருக்கிறேன். முன்னர் கோமல் சுவாமிநாதன். பெ.சு. மணி. பின்னர் ஜே.எஸ். ராகவன். அழகியசிங்கர். தி.க.சி அவர்கள் சென்னைக்கு வந்தால் ராஜு நாயக்கன் தெருவில் உள்ள மகன் வீட்டில் தங்குவார். அங்கே சென்று அவரைப் பார்த்துவிட்டு வருவேன். இரா. முருகன்கூட இளைஞராக இருந்தபோதெல்லாம் தி நகரில் வாழ்ந்துவிட்டு மூத்த எழுத்தாளரான பின்புதான் இந்தப் பக்கம் வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு போஸ்டல் காலனியில் புதியதாக ஒரு வீடு கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. பார்க்கவே பிரம்மாண்டமாக, அரண்மனை போன்ற தோற்றத்தில் அந்தக் கட்டடம் உருவாகிக்கொண்டிருந்தது. யாரோ திரைப்பட இயக்குநர், பிரபல இயக்குநர் அங்கே வரப் போகிறார் என்று சொன்னார்கள். எப்படியும் இளைய தலைமுறையின் பிரதிநிதியாகத்தான் இருப்பார்; அவர் மூலமாக மாம்பலத்தின் இளமை திரும்பும் என்று எண்ணியிருந்தேன். பார்த்தால் ஐம்பதைத் தாண்டிவிட்ட கே.எஸ். ரவிகுமார்தான் வந்தார்.

இருப்பவர்கள், வருபவர்கள் அனைவருமே நடு வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் ஆனவர்கள் என்பதாலோ என்னவோ. சென்னையின் பிற பகுதிகளில் உள்ளது போன்ற நவீனத்துவ அணுகுமுறை வியாபார மட்டத்தில்கூட இங்கு அதிகம் இல்லை. உதாரணமாக நான் வசிக்கும் குரோம்பேட்டையைப் புறநகர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் பாண்டிபஜாரில் உள்ள அனைத்தும் குரோம்பேட்டையில் உண்டு. அதே பிரபல நிறுவனங்களின் கிளைகள் இங்கு திறக்கப்பட்டிருப்பதுகூடப் பெரிதில்லை. பீட்சா பர்கர் கடைகள், ஐஸ் க்ரீம் பார்லர்கள், இரவு நேரத் துரித உணவுக் கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், அழகூட்டும் நிலையங்கள் இன்னும் என்னென்னவோ. ஆனால், இவ்வளவு வருடங்களில் மாம்பலத்தில் ஒரு நல்ல நவீன உணவகம் கூட என் கண்ணில் பட்டதில்லை. பாரம்பரிய டட்டா உடுப்பியை விட்டால் ஒன்றுமில்லை. தஞ்சாவூர் மெஸ், மாம்பலம் மெஸ், காமாட்சி மெஸ் போன்ற சிறு உணவகங்கள் இருக்கின்றன. அவை தோன்றிய காலத்தில் எப்படி இருந்தனவோ அப்படியே. புதிதாகத் திறக்கப்படும் உணவகங்கள்கூட (உதாரணம் முருகன் இட்லி, பாக்யா, மங்களாம்பிகா) மடிசாருக்கு மேல் சுடிதார் அணியத்தான் முயற்சி செய்கின்றன. திருவல்லிக்கேணியின் புகழ் பெற்ற ரத்னா கபே சிறிது காலத்துக்கு முன்னர் துரைசாமி சுரங்கப்பாலம் அருகே ஒரு கிளை திறந்தது. அவர்களால் ஓருசில ஆண்டுகள்கூடத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. கிராண்ட் ஸ்வீட்ஸ் உணவகமும் சொல்லிக்கொள்ளும் தரத்தில் இல்லை. புகழ்பெற்ற கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மேற்கு மாம்பலக் கிளையில்கூட பாண்டிபஜாரில் உள்ள அளவுக்கு ரகங்கள் கிடையாது.

கூர்ந்து கவனித்தால் ஒன்று புரிகிறது. மாம்பலத்தின் உணவகங்கள்தாம் இப்படியே தவிர, வாங்கிச் சென்று வீட்டில் சமைத்துக்கொள்ள உதவும் பொருள்கள் விஷயத்தில் இங்குள்ள வியாபாரிகள் காட்டும் கவனத்தை வேறெங்கும் காண முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஜெய்சங்கர் தெருவுக்கு எதிர்ப்புறம், ஆரிய கௌடா சாலையில் ப்ளூ பேர்ட் காப்பி என்றொரு காப்பிப் பொடிக் கடை இருக்கிறது. அவ்வளவு எளிதாகக் கண்ணில் தென்படாத, புராதனமான, மிகச் சிறிய கடை. ஜெய் பஜாஜ் சர்வீஸ் செண்டரை ஒட்டினாற்போல உள்ளடங்கி இருக்கும். இந்தக் கடையில் கிடைக்கும் காப்பிப் பொடியின் தரத்தை எந்தப் புகழ்பெற்ற காப்பிப் பொடி பிராண்டிலும் நான் கண்டதில்லை. இதைப் போலவே போஸ்டல் காலனி தாண்டி ஹெல்த் செண்டர் போகும் வழியில் மாலை வேளைகளில் ஒரு முதியவர் தள்ளு வண்டியில் பல விதப் பொடிகள், ஊறுகாய் ரகங்கள் வைத்து விற்பார். எத்தனையோ வருடங்களாக கவனித்திருக்கிறேன். எங்கெங்கிருந்தோ காரில் வந்து இறங்கி அவரிடம் ஒரு பருப்புப் பொடி டப்பா வாங்கிக்கொண்டு போவார்கள். தேங்காய்ப் பொடி, பூண்டு ஊறுகாய், நாரத்தங்காய் ஊறுகாய் வாங்கிச் செல்வார்கள். சுத்தமாக, அருமையாக இருக்கும். ஸ்டேஷன் ரோடில் உள்ளடங்கினாற்போல ஒரு எண்ணெய்ச் செக்கு உண்டு. மாம்பலத்துக்காரர்கள் தவிர எனக்குத் தெரிந்து தென் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து எண்ணெய் வாங்கிச் செல்பவர்கள் அநேகம் பேர். இதைப் போலவே வெல்லம், அவல், நிலக்கடலை, வெண்ணெய் என்று ஒவ்வொரு பொருளுக்கும் புகழ்பெற்ற கடை ஒன்றாவது மேற்கு மாம்பலத்தில் உண்டு. சொன்னேனே. புராதன மதிப்பீடுகளைக் காப்பாற்றுவதில் மாம்பலத்துக்காரர்களுக்கு அவ்வளவு அக்கறை உண்டு. அதனாலேயே நவீனத்துவத்துக்கு நான்கு தெரு தள்ளி வசிக்க விரும்புவார்கள்.

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு மாம்பலம் ஜிஆர்டி பள்ளியை ஒட்டிய ஒரு தெருவில் புதிதாக ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக்கொண்டிருந்தார்கள். அபூர்வமாக, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கக்கூடிய விலையிலேயே இருந்தது. எப்படியாவது அங்கே ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிவிட வேண்டும் என்று என் மனைவி திரும்பத் திரும்ப வற்புறுத்திக்கொண்டே இருந்தார். அவர் மாம்பலத்திலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஆர்வத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனக்கும் நகர மத்திக்குக் குடிபோக ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் கடன் வாங்கும் துணிவு இல்லை. (இந்த ஒரு காரணத்தால் பல இடங்களில் பல நல்ல வாய்ப்புகளைத் தவற விட்டிருக்கிறேன்.) தற்செயலாக ஆறு மாதங்களுக்கு முன்னர் அதே அடுக்குமாடி வளாகத்தில் ஒரு அபார்ட்மெண்ட் இரண்டாம் விற்பனைக்கு வருவதாகக் கேள்விப்பட்டேன். இன்றைய என் நிகர மதிப்புகளுடன் என் ஸ்தூலத்தையும் சேர்த்து விற்றால்கூட வாங்க முடியாத விலை.

பழமைவாதிகளின் பேட்டையில் நில மதிப்பு மட்டும் எப்போதும் உச்சத்தில்தான் இருக்கும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி