ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 17

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆரிய கௌடா சாலையைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அங்குள்ள அயோத்தியா மண்டபம் மிகவும் புகழ்பெற்ற இடம். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். பிராந்தியத்துக்கு யாராவது சைவப் பெரியவர்கள், மகான்கள், துறவிகள் வருகை தந்தால் கண்டிப்பாக அயோத்தியா மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி இல்லாமல் இராது. அப்படி யாரும் வராத நாள்களில் சொற்பொழிவுகள், பாட்டுக் கச்சேரி, பஜனை என்று ஏதாவது ஒன்று எப்போதும் இருக்கும். அயோத்தியா மண்டபம் அங்கே இருப்பதாலேயே அதனைச் சார்ந்து பல வர்த்தக சாத்தியங்கள் மெல்ல மெல்ல அங்கே உருவாக ஆரம்பித்தன.

உதாரணமாக, தர்ப்பையையும் பூணூலையும் பிளாட்பாரத்தில் போட்டு விற்கும் நபர்களைச் சென்னையில் வேறெங்கும் அதிகமாகப் பார்க்க முடியாது. (சில கோயில் வாசல்களில் இருக்கும். உதாரணமாக, சிவா விஷ்ணு கோயில்.) மற்ற இடங்களில் குறிப்பிட்ட கடையைத் தேடிப் போய் வாங்க வேண்டிய பஞ்சாங்கப் புத்தகம் இந்தச் சாலையில் தடுக்கி விழுந்தால் கிடைக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் இருந்து பருப்புப் பொடி, ஊறுகாய், இஞ்சி முரப்பா விற்கும் கடைகள் வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கும். புளியோதரையின் மூலப் பொருளான புளிக்காய்ச்சல் மட்டும் இந்தச் சாலையில் ஒன்பது கடைகளில் விற்பனைக்கு உண்டு. அதிலும் குறிப்பாகச் சில கடைகளின் வாசலில் “ஆத்துப் புளிக்காய்ச்சல் கிடைக்கும்” என்று போர்டு வைத்திருப்பார்கள்.

ஊத்துக்குளி வெண்ணெய், பசு நெய், பிரசவ லேகியம், ஊதுபத்தி, சாம்பிராணி, பன்னீர், சந்தனம் போன்ற வாசனைப் பொருள்கள், தட்டை, சீடை, போளி, அதிரசம், கைமுறுக்கு போன்ற பாரம்பரிய உணவுப் பொருள்கள், கட்டை விசிறி, பூந்துடைப்பம், பல்லாங்குழி போன்ற வழக்கொழிந்து போன பொருள்கள் எது வேண்டுமென்றாலும் இந்தச் சாலையில் கிடைக்கும். நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைக் காலங்களில் பொம்மைகளும் அகல் விளக்குகளும் வீதியெங்கும் மலையாகக் குவிக்கப்பட்டிருக்கும். கோகுலாஷ்டமிக்கு ஆலிலை இரண்டு இருந்தால் விசேடம் என்பார்கள். ஆரிய கௌடா சாலையில் அன்றைக்கு ஒரு ஆலங்காடே வெட்டி வீழ்த்தப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும்.

இதனாலெல்லாம் ஆரிய கௌடா சாலையைப் பிராமணர்களின் சாலை என்று எளிதில் வகைப்படுத்திவிட முடியும். அதை நிரூபிப்பது போல, அந்தச் சாலைக்கு வந்து சேரும் பெரும்பாலான தெருக்களில் அவர்களே மிகுதியாக வசிக்கவும் செய்கிறார்கள். எப்போதிலிருந்து இது இப்படி ஆனது என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் பார்த்த நாளாக இப்படித்தான்.

மேற்கு மாம்பலத்து பிராமணர்களுள் வைணவர்கள் குறைவு. அது சைவப் பிராந்தியம். மைலாப்பூரைப் போல. திருவல்லிக்கேணியிலும் நங்கைநல்லூரிலும் வைணவர்கள் அதிகம். இப்படி இவர்களுக்குள் உட்கார்ந்து பேசி, பிராந்தியம் பிரித்துக்கொண்டிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால் இது திட்டமிட்ட தற்செயலாகத்தான் இருந்திருக்கும். திருவல்லிக்கேணிக்குப் பார்த்தசாரதி பெருமாளும் மயிலைக்குக் கபாலீசுவரரும் நங்கைநல்லூருக்கு ஆஞ்சநேயரும் இருப்பதை ஒரு காரணமாகச் சொல்லலாம். மேற்கு மாம்பலத்துக்கு அப்படியும் ஒரு காரணம் கற்பிப்பது சிரமம். அங்கே சத்தியநாராயணப் பெருமாள் கோயிலும் ராமர் கோயிலும்தான் பிரசித்தி பெற்றவை. ஆனாலும் சைவர்களே மிகுதி.

நான் பேலியோ உணவு முறைக்கு மாறிய பின்பு அதிகக் கொழுப்பு உள்ள பசு நெய் உணவின் மிக முக்கிய அங்கமானது. சென்னை நகருக்குள் தரமான பசு நெய் கிடைக்கும் இடங்கள் எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்த்து இறுதியில் ஆரிய கௌடா சாலையைப் பிடித்தேன். என்ன வேலையானாலும் எவ்வளவு முக்கியமானாலும் நெய் வாங்க வேண்டிய நாள் வந்துவிட்டால் முதல் கவனம் அதற்குத்தான். நெய் வாங்கப் போனால் நெய்யை மட்டும் வாங்கிக் கொண்டு வந்துவிட முடியுமா? எனக்கு மிகவும் பிடித்தமான பன்னீர் சோடா, பவண்டோ இரண்டும் ஆரிய கௌடா சாலையில்தான் கிடைக்கும். தவிர, பருவ காலப் பழங்கள், மாவடு, நிலக்கடலை, கூடு வைத்த மைசூர்பாகு என்று அந்தப் பக்கம் சென்றால் அள்ளிப் போட்டுக்கொண்டு வர நிறைய உண்டு.

ஒவ்வொரு முறை ஆரிய கௌடா சாலைக்குப் போகும்போதும் யோசிப்பேன். இந்த வீதிக்கு எப்படி இந்தப் பெயரை வைத்தார்கள்? பெயரிட்டு விட்டதால் குடியேற்றம் அமைந்ததா அல்லது குடியேறியவர்களுக்கு ஏற்பப் பெயரை வைத்தார்களா?

மிகவும் தற்செயலாகத்தான் கேள்விப்பட்டேன். அது ஆரிய கௌடா சாலையே அல்ல. ஆரி கௌடர் சாலை.

1934ம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலனுக்காக Madras Provincial Backward Classes League என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கத்துக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. எம்.ஏ. மாணிக்கவேல் நாயக்கர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாச்சி, எச். ஆரி கௌடர் ஆகிய நான்கு பேர் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர்கள்.

படுகர் இனத்தைச் சேர்ந்தவரான ஆரி கௌடர், சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தவர். சென்னை மாகாண கவுன்சிலின் முதல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சபைக்குச் சென்றவர். 1923 முதல் 1926 வரை; பின்னர் 1930 முதல் 1934 வரை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தார். அவரது தந்தை ராவ் பகதூர் பெல்லி கௌடர், நீலகிரி மாவட்டத்தில் பெரிய பிரமுகர். ஊட்டி மலை ரயில் பாதைத் திட்டத்தை வடிவமைத்து, கட்டுமானப் பணிகளைச் செய்து கொடுத்தது அவர்தான். அவர் அந்தக் காலத்துப் பொறியாளர்.

ஆரி கௌடருக்குச் சென்னையில் நிறைய சொத்து இருந்திருக்கிறது. தியாகராய நகரை நிர்மாணிக்க அரசாங்கம் முடிவு செய்தபோது, மாம்பலம் பகுதியில் இருந்த தனக்குச் சொந்தமான ஏராளமான நிலத்தை ஆரி கௌடர் அரசுக்கு அளித்திருக்கிறார். அதற்கு நன்றியாகத்தான் மாம்பலத்தில் ஒரு சாலைக்கு ஆரி கௌடர் சாலை என்ற பெயர் இடப்பட்டது. தற்செயலாக அங்கே பிராமணர்கள் நிறையப்பேர் குடியேற, ஆரி கௌடர் சாலையின் பெயரை ‘ஆரிய’ கௌடா சாலையாக்கிவிட்டார்கள்.

பசு நெய் மட்டுமல்ல; எனக்கு இந்தச் சாலையை மிகவும் பிடித்துப் போக இன்னொரு காரணம் உண்டு. மரங்கள். சென்னையில் இப்படி முற்றிலும் மரங்கள் அடர்ந்த சாலைகள் குறைவு. எப்போதும் குளுகுளுவென்றிருக்கும். குறுகலான சாலைதான். இரு சக்கர வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை எல்லாம் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இரு வழித்தடம்தான். வாகனங்களுக்குச் சற்றும் சளைக்காமல் நடந்து செல்வோரும் குறுக்கும் நெடுக்கும் போய் வந்தபடி இருப்பார்கள். இதில் நடுச்சாலையில் நின்று நலன் விசாரித்துக்கொண்டிருக்கும் பெரியவர்கள் நிறையப் பேர். ‘பெரியவரே ஹார்ன் அடிக்கறனே கேக்கலியா?’ என்று சத்தம் போட்டால், ‘காதுல விழல’ என்று சொல்லிவிட்டு நிதானமாக நகர்ந்து போவார்கள்.

நினைவு தெரிந்து ஒருநாள்கூட இந்தச் சாலையில் சீரான போக்குவரத்தை நான் கண்டதில்லை. எப்போதும் களேபரமாகத்தான் இருக்கும். ஆனாலும் யாரும் சீற மாட்டார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொள்ள மாட்டார்கள். முன்னால் போகும் வாகனத்தைப் பின்னால் வரும் வாகனம் இடித்தாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். சென்னை மக்கள் இவ்வளவு நல்லவர்களா என்று வியக்காதிருக்க முடியாது.

ஆனால் இதெல்லாமே சாலையின் முக்கால்வாசி துரத்தில் வரும் துரைசாமி சுரங்கப்பாதைத் திருப்பம் வரைதான். அங்கே நிலவரம் மாறிவிடும். வாகன ஓட்டிகளின் வழக்கமான முகம் வெளிப்படத் தொடங்கிவிடும். மாம்பலத்தில் பாதியின் உரிமையாளராக இருந்த ஆரி கௌடரின் ஆவிதான் அவர் பெயர் கொண்ட சாலையில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது போலிருக்கிறது

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி