ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 16

நுங்கம்பாக்கம் அபெக்ஸ் ப்ளாசாவின் தரையடித் தளத்தில் இருந்த லேண்ட் மார்க் புத்தக அங்காடி ஒருநாள் இழுத்து மூடப்படும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. இருந்து, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்த எவ்வளவோ நிறுவனங்கள் உலகெங்கும் உண்டு. ஒவ்வொரு தனி மனிதனும் தனது பிரத்தியேகமான மகிழ்ச்சிக்கென்று சிலவற்றைப் போற்றிப் பாதுகாத்து வைத்திருப்பதும் எதிர்பாராத நேரத்தில் அது கைவிட்டுப் போவதும் இயல்பானவைதாம். ஆனால் எல்லா இயல்பான நிகழ்வுகளையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொண்டு மறந்து விட இயலாது. எனக்கு நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க் அப்படி.

1987ம் ஆண்டு லேண்ட் மார்க் திறக்கப்பட்டது. ஒரு புத்தகக் கடை, அதனோடு தொடர்புடைய வேறு பல பொருள்களையும் காட்சிக்கும் விற்பனைக்கும் கொண்டிருக்கலாம் என்பதைச் சென்னை நகருக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தியது லேண்ட் மார்க்தான். தவிர, புத்தகம், சினிமா எல்லாமே ரசனையின் விளைவுகள். நுண் உணர்வும் கலை மனமும் கொண்டவர்கள் விரும்பி நீண்ட நேரம் செலவழிக்க ஏற்ற விதமாக ஒரு புத்தகக் கடையை அமைக்கத் திட்டமிட்டு உழைத்து அதில் வெற்றியும் கண்ட முதல் நிறுவனம் அதுதான். இன்றைக்கு மால்களில் உள்ள புத்தக அங்காடிகள் அனைத்துக்கும் முன்னோடி என்று தயங்காமல் சொல்லலாம். புத்தகங்கள், சிடிக்கள் தவிர, கலை உணர்வுடன் தயாரிக்கப்பட்ட ஸ்டேஷனரி பொருள்களும் அன்று லேண்ட் மார்க்கில் மட்டும்தான் கிடைக்கும்.

சென்னையில் ஆங்கிலப் புத்தகங்கள் வாசிப்போர் ஒரு தனி இனம். அவர்கள் இந்து பத்திரிகையின் பழைய வாசகர்கள் மற்றும் அவர்களால் பிரம்பைக் காட்டி மிரட்டி வடிவமைக்கப்பட்ட அவர்களுடைய அடுத்த தலைமுறையினர். அவர்கள் ஆர்த்தடாக்ஸ் யூதர்களைப் போல. மருந்துக்கும் மற்றதைத் தொடமாட்டார்கள். லேண்ட் மார்க், முக்கியமாக இவர்களைக் குறி வைத்தே தொடங்கப்பட்டிருக்க வேண்டும். சென்னையில் இக்குறுங்குழு பல்கிப் பெருகி நகரெங்கும் ஆங்கில வாசகர்கள் மட்டுமே ஒரு காலத்தில் நிறைந்திருப்பார்கள் என்று எண்ணியிருக்கலாம். மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களை இதற்கு முன் மாதிரியாகக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் வெளியாகும் நூல்கள் உடனுக்குடன் இங்கே விற்பனைக்கு வைக்கப்படும். புதிய வரவுகள், பிரபல புத்தகங்கள், அதிக விற்பனைப் புத்தகங்கள் என்று தனித்தனியே பாத்தி கட்டி அழகாக அடுக்கி வைப்பார்கள். 1996ம் ஆண்டு முதல் முறையாக ‘நோபல் பரிசுப் போட்டியில் உள்ள புத்தகங்கள்’ என்று தனியே ஓர் அடுக்கு வைத்தார்கள். அதன் வரவேற்பு அமோகமாக இருந்ததால் ‘புக்கர் பரிசுப் போட்டிப் புத்தகங்கள்’ என்று இன்னொரு அடுக்கு சேர்ந்தது.

அருந்ததி ராயின் காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸை லேண்ட் மார்க்கில்தான் முதலில் பார்த்தேன். நாலைந்து பக்கங்கள் படித்ததில், முழுக்கப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது. அப்போது அது புக்கர் பரிசு பெற்றிருக்கவில்லை. ஷார்ட் லிஸ்டில் இருந்ததா என்றுகூடத் தெரியாது. படித்துப் பார்த்ததில் பிடித்துவிட்டது; அவ்வளவுதான். ஆனால் அன்று அந்தப் புத்தகத்தை வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இருக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். இது நடந்து சரியாக ஒரு வாரத்தில் என் திருமணம் நடந்தது. திருமணப் பரிசாக வந்தவற்றுள் ராயின் நாவலும் ஒன்று. நான் ஆசைப்பட்ட ஒரு புத்தகத்தை நான் எதிர்பார்க்காத விதமாக எனக்குப் பரிசளித்தவர் கவிஞர் சுகுமாரன்.

லேண்ட்மார்க் தொடங்கப்பட்டுப் பலகாலம் அங்கு தமிழ் புத்தகங்கள் கண்ணில் பட்டதே இல்லை. பிறகு மனமிரங்கி தமிழுக்கு ஒரு ஓரமாக இடம் கொடுத்தார்கள். பண்டைய பிராமணக் குடும்பங்களில் வீட்டு விலக்கான பெண்களை அப்படித்தான் ஓரம் கட்டி உட்காரவைப்பார்கள். ஒரு கிழிந்த பாயும், தட்டு தம்ளரும் பக்கத்தில் இருக்கும். இதைச் சொல்லியே அங்குள்ள மேனேஜரிடம் ஓரிரு முறை சண்டை போட்டிருக்கிறேன். சில காலம் கழித்து ஒரே ஒரு புத்தக அடுக்கு என்பது ஒரு வரிசை என்று விரிவடைந்தது. அந்த வரிசையையும் தெய்வத்தின் குரலும் அர்த்தமுள்ள இந்து மதமும் ரெபிடெக்ஸ் ஆங்கில ஆசானும் ஆக்கிரமித்துக்கொண்டுவிடும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பின்புதான் அங்கே ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியாகத் தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

ஆனால் லேண்ட்மார்க் ஊழியர் யாரிடம் கேட்டாலும் தமிழ் புத்தகங்கள் அதிகம் விற்பதில்லை என்று சொல்வார்கள். ‘நீங்கள் தமிழ் புத்தகங்களும் விற்கிறீர்கள் என்பது ஊருக்குத் தெரிய சிறிது அவகாசம் வேண்டாமா’ என்று பல முறை கேட்டிருக்கிறேன். அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தமிழில் புத்தகங்கள் விற்காது; சிடிக்கள்தான் விற்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. லேண்ட்மார்க் விரிவாக்க நடவடிக்கைகளில் அது ஒரு பெரிய பாய்ச்சல். உலகத் திரைப்படங்களில் இருந்து உள்ளூர்ப் படங்கள் வரை அனைத்தையும் கொண்டு வந்து குவித்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் அங்கிருந்த ஆங்கிலப் புத்தகங்களின் அளவுக்கே திரைப்பட சிடிக்கள் நிறைந்துவிட்டன. அதைத் தனிப்பிரிவாக அமைத்து அதற்கு மட்டும் தனியே விளம்பரமெல்லாம் செய்தார்கள். வருட இறுதியில் அந்தப் பிரிவில் தள்ளுபடி விற்பனையெல்லாம் இருக்கும். 2001ம் ஆண்டு ஸ்பென்சர் ப்ளாசாவில் ஒரு கிளை தொடங்கப்பட்ட பிறகு இந்தத் தள்ளுபடி ஒரு திருவிழாவாகவே கொண்டாடப்பட்டது.

தொண்ணூறுகளின் மத்தியில் நண்பர்களைச் சந்திக்கும் மையமாக நான் லேண்ட் மார்க்கைத்தான் வைத்துக்கொண்டிருந்தேன். யாரைச் சந்திப்பதென்றாலும் லேண்ட் மார்க்குக்கு வந்துவிடுங்கள் என்று சொல்வேன். மாலை வேளைகளில் பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையில் பழரசம் அருந்திவிட்டு லேண்ட் மார்க்கினுள்ளே சென்றுவிட்டால் இரவு இழுத்து மூடும் வரை வெளியே வருவதில்லை. அங்கேயே புத்தக அடுக்குகளின் நடுவே ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து மணிக் கணக்கில் படித்துக்கொண்டிருப்பேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். தினசரி இருபது இருபத்தைந்து பக்கங்கள் வீதம் அங்கேயே அமர்ந்து படித்து முடித்துவிட்டு வாங்காமல் விட்ட புத்தகங்கள் எத்தனையோ.

பாலு மகேந்திரா வருவார். சா. கந்தசாமி வருவார். அனந்து வருவார். விவேக்சித்ரா சுந்தரம் வருவார். கிரேசி மோகன் வருவார். இவர்களையெல்லாம் அங்கே அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒருநாள் கடை மூடப்போகும் நேரத்தில் பாலகுமாரன் வந்துவிட்டார். கல்கியில் அவர் அப்போது ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தார்(என்னுயிரும் நீயல்லவோ). நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். பரஸ்பரம் நலம் விசாரித்து முடிப்பதற்குள் அவர் வந்திருக்கும் விவரம் தெரிந்து எங்கெங்கிருந்தோ யார் யாரோ அவரைப் பார்க்க வரத் தொடங்கினார்கள். ஒருவர் இருவராக ஆரம்பித்து, சில நிமிடங்களில் ஐம்பது அறுபது பேர் அவரைச் சூழ்ந்து நின்றுகொண்டு பேசத் தொடங்கிவிட்டார்கள். லேண்ட் மார்க் சிப்பந்திகளுக்குக் கடையை எப்படி மூடுவது என்ற குழப்பம். அவ்வளவு பெரிய எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருப்பவர்களை நெருங்கி, கலைந்து போகச் சொல்லவும் தயக்கம்.

அன்று அந்தத் தருணத்தை நான் எவ்வளவு மகிழ்ச்சியுடன் அனுபவித்தேன் என்பதை விவரிக்கவே முடியாது. அதற்கு ஒரு வாரம் முன்னர்தான் யாரோ ஒரு ஆங்கில எழுத்தாளர் லேண்ட் மார்க்குக்கு வந்திருந்தார். யார் என்று மறந்துவிட்டது. அபெக்ஸ் பிளாசா வாசலில் தட்டியெல்லாம் வைத்து விளம்பரப்படுத்தியிருந்தார்கள். இந்து பேப்பரில் ஒரு செய்திக்குறிப்பு வெளியாகியிருந்தது. அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் கூட்டம் இல்லை. முன்னறிவிப்பின்றி வந்த ஒரு தமிழ் எழுத்தாளரைப் பார்க்க, கடை மூடும் நேரத்தில் குவிந்த கூட்டம் லேண்ட் மார்க் நிர்வாகத்துக்கு மௌனமாக எதையாவது உணர்த்தும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

2008ல் டாட்டா நிறுவனம் லேண்ட் மார்க்கை வாங்கியபோது, கடை இன்னும் விஸ்தரிக்கப்படுவது போன்றதொரு தோற்றம் கிடைத்தது உண்மை. இறுதிவரை லேண்ட் மார்க் சென்னையில் வசிக்கும் ஆங்கில வாசகர்களை மட்டும்தான் தனது முக்கிய வாடிக்கையாளர்களாகக் கருதியது. அவ்வளவு விரைவில் அந்தக் கடை இல்லாமல் போனதற்கும் அதுவேகூடக் காரணமாக இருக்கலாம்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!