ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 15

சென்னை போன்றதொரு பெருநகரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மலைக் குன்றுகள் அமைந்திருப்பதை சுற்றுலாத் துறை சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அது வருமானத்துக்கு வருமானம், நகரத்துக்கும் அழகு என்று எனக்கு எப்போதும் தோன்றும். குன்றத்தூர், திருநீர்மலை, திருசூலம், பறங்கிமலை, சின்ன மலை என்று ஒவ்வொரு குன்றுக்கும் ஒரு சரித்திரம் இருக்கிறது. திருசூலம் குன்றின் மறுபுறம் உள்ள திருசூலம் கிராமத்துக்குப் போய் அங்குள்ள பெரியவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் சரித்திர கால யுத்தங்களெல்லாம் அங்கே நடந்ததாகச் சொல்வார்கள். முன்னொரு காலத்தில் இந்தப் பிராந்தியத்துக்கு வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற பெயர் இருந்திருப்பதாக ஒரு கல்வெட்டு எப்போதோ கிடைத்திருக்கிறது. எனவே, நான்கு வேதங்களே இங்குள்ள நான்கு குன்றுகளாக உட்கார்ந்திருக்கின்றன என்றொரு தலக்கதை. பிறகு, முதலாம் குலோத்துங்கன் என்ற சோழ மன்னன் இந்த ஊரின் பெயரை ‘திருநீற்றுச் சோழ நல்லூர்’ என்று மாற்றி உத்தரவிட்டதாக இன்னொரு கல்வெட்டு. புலியூர் கோட்டத்து சாத்தூர் நாட்டுத் திருச்சுரம் என்று இன்னொரு கல்வெட்டு. இங்குள்ள சிவன் கோயிலுக்கே திருச்சுரமுடையார் கோயில் என்றுதான் பெயர். திருச்சுரம்தான் பிறகு திருசூலமாகிவிட்டதாகவும் சொல்வார்கள்.

பல்லாவரம், குரோம்பேட்டை, திருசூலம் பிராந்தியங்களைப் பல்லவர்களுடன் இணைத்துப் பேச நிறைய சான்றுகள் உள்ளன. சோழர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று எனக்குப் புரிந்ததில்லை.

1992ம் ஆண்டு அத்வானி ரத யாத்திரை போய்க்கொண்டிருந்தபோது, ராமேஸ்வரம் போகும் வழியில் ராமர் குரோம்பேட்டையில் வந்து தங்கியிருந்ததற்கு ஒருவர் சரித்திர ஆதாரம் தேடி எடுப்பதாக ஒரு கதை எழுதினேன். கல்கியில் அது பிரசுரமானது. அந்தக் கதைக்கு உண்மையிலேயே சிறிது சரித்திர வாசனை சேர்க்க முடியுமா என்று பார்ப்பதற்காக இந்தப் பிராந்தியத்துக் குன்றுக் கோயில்களைச் சில நாள் திரும்பத் திரும்பச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். திருசூலம் சிவன் கோயிலுக்குப் பிற்கால சோழர்கள் நிறைய செய்திருப்பதற்குக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுச் சான்றுகள் உண்டு. சோழர்கள், பல்லவர்கள் சம்பந்தம். ஆயிரக்கணக்கான ஆண்டுப் புராதனம். இவற்றை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்திருக்க முடியும். ஆனால் திருசூலம் குன்று கல் குவாரிக்காரர்களின் மொத்த வருமானத் தலமாகிப் போனதுதான் நிகர லாபம். சிறு வயதில் நான் பார்த்த திருசூலம் குன்றின் சரி பாதிகூட இன்று இல்லை.

இந்தக் குன்றுக்கு இன்னொரு சிறப்பு உண்டு. ஊட்டி, ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களின் முகவெட்டு இதற்குக் கொஞ்சம் இருக்கிறது. ஊட்டியிலோ ஏற்காட்டிலோ ஏதாவது படப்பிடிப்பு நடத்திவிட்டு சிறிது மிச்சம் மீதி வைத்துக்கொண்டு வரும் இயக்குநர்கள் அவற்றைத் திருசூலம் மலையில் வைத்து எடுத்து முடித்துவிடுவார்கள். குளிர் இருக்காது, பூச்செடிகள், தாவரங்கள் இருக்காது என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஒரு லாரி தண்ணீரும் ஒரு அண்டா டிரை ஐஸும் இருந்தால் திருசூலத்தை ஏற்காடாக்கிவிடலாம் என்று நானறிந்த ஓர் இயக்குநர் சொல்வார். சொன்னதை அவர் செய்தும் காட்டியிருக்கிறார்.

திருசூலம், தொலைக்காட்சித் தொடர் இயக்குநர்களுக்குப் பிடித்த மலைப் பிராந்தியம் என்றால் திருநீர்மலை, சினிமாக்காரர்களின் சொர்க்கம். எத்தனை நூறு படங்கள் இந்த மலைக் குன்றில் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்குக் கணக்கே இல்லை. வயல்வெளியின் நடுவே ஒரு குடிசை போட்டாற்போலத்தான் திருநீர்மலை கிராமம் இருக்கும். குடிசையின்மீது ஏறி நிற்கும் சேவலைப் போலக் குன்று. ஒரு பக்கம் படம் எடுத்துக்கொண்டிருப்பார்கள். மறு பக்கம் ஏதாவது ஒரு திருமண ஏற்பாடு நடந்துகொண்டிருக்கும். எண்பதுகளின் இறுதிவரை சென்னை காதலர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தால் நேரே திருநீர்மலைக்குத்தான் வருவார்கள். பக்கத்திலேயே இருக்கும் குன்றத்தூர் முருகன் திருமணம் செய்து வைக்க மாட்டாரா, திருசூலம் சிவபெருமான் அதற்கு சகாயம் செய்ய மாட்டாரா என்றெல்லாம் கேட்க முடியாது. காதல் திருமணம் என்றால் திருநீர்மலைதான். இதையும் பல திரைப்படங்களிலேயே பார்த்திருக்கலாம்.

திருநீர்மலை கிராமத்து மக்களுக்குத் திரைப்பட ஷூட்டிங்குகளையும் காதல் திருமணங்களையும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய்விட்டது. பிளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்துக்கொண்டு போகிற பெண்கள், போகிற போக்கில் படப்பிடிப்பில் உள்ளவர்களைப் பார்த்து, ‘பிரேம்ல எரும மாடு வருது பாரு. தொரத்தி உட்டுட்டு எடுப்பா’ என்று சொல்லிவிட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன். கோயில் பட்டாச்சாரியார்கள் ரொம்பக் குடைந்து விவரம் கேட்காமல், மணந்துகொள்ள வருபவர்களின் வயதை மட்டும் சரி பார்த்துவிட்டு மாங்கல்யம் தந்துனானே சொல்லிவிடுவார்கள்.

மேற்சொன்ன இரு குன்றுகள் நீங்கலாக என் வீட்டுக்கு அருகே இன்னொரு குன்றும் இருக்கிறது. அதனை முன்னர் பச்சை மலை என்பார்கள். பிறகு சானடோரியம் மலை ஆனது. அதன்பின் ஹவுசிங் போர்ட் மலையாக உருமாற்றப்பட்டது. இங்கும் ஒரு புராதனமான அம்மன் கோயில் இருக்கிறது. மந்திரகிரி மகாயுக காளி கோயில் என்பார்கள். கர்ணனின் உடலில் கவச குண்டலங்களாக ஒட்டிப் பிறந்த அக்னி சக்தியை காமாந்திகா தேவி என்ற பெயரில் இங்கு பிரதிஷ்டை செய்திருப்பதாக ஐதீகம்.

சன்னியாசி ஆகிவிட வேண்டும் என்று வெறி கொண்டு திரிந்த காலத்தில் தவம் செய்வதற்கு ஏற்ற இடமாக எனக்கு இந்த மலைதான் முதல் முதலில் தென்பட்டது. வீட்டுக்குப் பக்கத்தில், நடந்து செல்லும் தூரத்தில் இருப்பது ஒரு காரணம். பகல் முழுதும் அமர்ந்திருந்தாலும் எட்டிப்பார்க்க யாரும் வரமாட்டார்கள் என்பது இன்னொரு காரணம். மறக்காமல் மதியச் சாப்பாடும் ஒரு பாட்டிலில் தண்ணீரும் எடுத்துக்கொண்டு பச்சை மலைக்குப் போய்விடுவேன். அன்று உண்மையிலேயே மலை பசுமையாகத்தான் இருந்தது. சிறிது தயக்கத்துடன் வனம் என்றும் சொல்லலாம். ஆனால் மிருகங்கள் இருக்காது. நான் போய்க்கொண்டிருந்த நாள்களில் ஒரு பாம்பைக் கூடக் கண்டதில்லை. எங்கும் இருக்கும் நாய்களும் பன்றிகளும் இங்கும் இருக்கும் என்பதைத் தவிர மிகவும் அமைதியான, அழகான இடம்.

கல்லூரி வகுப்பு தொடங்குவது போலக் காலை பத்து மணிக்கு அம்மனைக் கும்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு மரத்தடியில் வசதியாக சாய்ந்து அமர்ந்துகொண்டு கண்ணை மூடித் தவம் செய்யத் தொடங்குவேன். பத்து நிமிடங்களுக்கு மேல் மனம் பக்தியில் நிற்காது. வேறு எதையாவது யோசிக்கத் தொடங்கிவிடுவேன். பிறகு மீண்டும் இழுத்துக் கட்டிக் கொண்டு வந்து அம்மன் முன்னால் நிறுத்தினால் இன்னொரு ஐந்து நிமிடம் நிற்கும். இப்படி இடைவெளி விட்டு விட்டு பன்னிரண்டு மணி வரை கழியும். அதற்குமேல் பொறுமை இருக்காது. எடுத்து வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டு, தண்ணீர் குடித்துவிட்டுச் சிறிது நேரம் படுப்பேன். பெரும்பாலும் இரண்டு மூன்று மணி நேரங்கள் தூங்கிவிடுவேன். எழும்போது குற்ற உணர்ச்சி இருக்கும். அதனால் மாலைப் பொழுது தவம் சிறிது உக்கிரமாகவே இருக்கும். இப்போது அம்மனின் எதிரிலேயே அமர்ந்து கண்ணை மூடாமல் அம்மனைப் பார்த்தே தவம் செய்வேன். பூசாரி வரும்வரை இப்படியே இருந்துவிட்டு அவர் வரும் நேரம் கிளம்பிக் கீழே இறங்கி வந்துவிடுவேன்.

பிறகு ஒரு நாள் எனக்கு தியானமோ தவமோ சரியாக வராது என்று தெரிந்தது. அதன்பின் பச்சை மலைக்குப் போகும்போது ஒரு நோட்டுப் புத்தகமும் பேனாவும் எடுத்துக்கொண்டு போக ஆரம்பித்தேன். கதைகள், கவிதைகள் என்று ஏராளமாக அங்கே அமர்ந்து எழுதியிருக்கிறேன். எழுதி முடிக்கும்போது எனக்கே நான் எழுதியது பிடிக்காமல் போய்விடும். அது அளித்த குற்ற உணர்வும் மனச் சோர்வும் தியானத்தில் தோற்றபோது இருந்ததைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

பிறகு பச்சை மலைக்குப் பாதையெல்லாம் போட்டு, திருப்பதியில் உள்ளது போல டார்மெட்ரி பாணி வீடுகள் கட்டினார்கள். ஆரம்பத்தில் அது ஒரு அழகிய மலை வாசஸ்தலம் போலக் காட்சியளித்தது. எனக்குத் தெரிந்த மரபுக் கவிஞர் இளந்தேவன் அங்கே குடி வந்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் மிகவும் வேண்டப்பட்டவர். முதலமைச்சர் அலுவலகத்திலேயே பணியில் இருந்தார் என்று நினைக்கிறேன். அடிக்கடி அவரைச் சென்று சந்திப்பேன். சென்னைக்குள் அம்மாதிரி ஒரு மலை வீடு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று அவர் சொன்னார். சௌகரியமான இருப்பிடம் குறித்த கவலை இல்லாமல் போனதால் இனி நிறைய எழுதப் போவதாகப் பல திட்டங்களை விவரித்தார். ஆனால் நெடுநாள் அவரால் அங்கு வாழ முடியவில்லை. அரசியலிலும் அவருக்குப் பல திட்டங்கள் இருந்ததால் அடையாளம் இழந்து போய்க் காலமானார்.

பிறகு மெல்ல மெல்லக் குடியிருப்புகள் பெருக ஆரம்பித்தவுடன் பச்சை மலையின் அழகு போய்விட்டது. இப்போதும் அம்மனும் கோயிலும் உண்டென்றாலும் உட்கார்ந்து தவம் செய்யவோ கவிதை எழுதவோ இடம் கிடையாது.

தாம்பரம் முதல் சைதாப்பேட்டை வரையிலான பயணப் பாதையில் ஐந்து மலைக் குன்றுகள் உள்ளன. ஒவ்வொன்றின் மீதும் பல ருசிகரமான கதைகள் உள்ளன. சென்னையின் நதித் தடங்களைப் போலவே இந்த மலைத் தடங்களும் காலத்தால் அடையாளமிழந்துவிட்டன.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி