ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 14

வருமானம் என்ற ஒன்றைக் குறித்த நிச்சயமற்ற சூழ்நிலையில் தனி மனிதன் கவலை கொள்ளும் முதல் விஷயம், அடுத்த வேளை உணவு. இந்தக் கவலை பிச்சைக்காரர்களுக்குக் கிடையாது. வீடற்றவர், பிளாட்பாரவாசிகள், குப்பை சேகரித்துப் பிழைப்போர், திருடிப் பிழைப்போர் என்று விளிம்பில் வாழும் யாருக்கும் அநேகமாக இராது. எது இல்லாவிட்டாலும் அவர்களுக்கு அரைக் கவளம் உணவு கிடைப்பதில் பிரச்னை இருக்காது. அடுத்த வேளை உணவு யாருக்குப் பிரச்னையாக இருக்கும் என்றால், ஒரு வேலை தேடி சென்னைக்கு வந்து எங்காவது ஓரிடத்தில் தங்கிக்கொண்டு, வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு. அது கிடைத்து, சம்பளம் என்ற ஒன்று உறுதியாகும்வரை போராட்டம் இருக்கும்.

ஏதாவது ஒரு திட்டத்துடன் தான் சென்னைக்கு வருவார்கள். திட்டமிட்ட காலத்துக்குள் அது நடந்துவிட்டால் சிக்கல் இல்லை. ஆனால் பெரும்பாலும் அப்படி இருக்காது. யாருக்காவது காத்திருக்க வேண்டியிருக்கும். எதனாலாவது திட்டம் தள்ளிப் போகலாம். யாராவது தட்டிப் பறிப்பார்கள். அல்லது திட்டமே அபத்தமானது என்று சில ஆண்டுகள் போராடிய பிறகு தெரிய வரும். என்னவானாலும் கட்டுச் சோற்றுப் பொட்டலங்கள் நெடுநாள் தாங்காது. வீட்டில் கேட்கத் தன்மானம் தடுக்கும். அதனால், அடுத்த வேளை உணவு ஒரு பிரச்னையாகத்தான் செய்யும்.

வெளியூர்க்காரர்களுக்குப் பெரும்பலும் இந்நகரம் முதலில் அறிமுகப்படுத்தும் அச்சம் மறுவேளை உணவு சார்ந்ததாக இருக்கும். பல நண்பர்கள் இதை என்னிடம் நேரடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் மேன்ஷன்கள் அல்லது மேன்ஷன் போன்ற தோற்றத்தில் உள்ள அச்சுவெல்ல வீடுகள் அதிகம். இம்மாதிரி வீடுகளில் நான்கைந்து பேர் முதல் ஏழெட்டுப் பேர் வரை மொத்தமாக அறை எடுத்துத் தங்குவார்கள். பெரும்பாலும் ஓர் அறை வீடுகள். பொதுக் கழிப்பிட வசதிதான் இருக்கும். நண்பர்களில் ஒரு சிலருக்கு வேலை இருக்கும். பெரும்பாலானவர்கள் அதைத் தேடுபவர்களாக இருப்பார்கள். வேலையில் இருக்கும் நண்பர்கள், அறையிலும் இருக்கும் சமயத்தில் உணவுப் பிரச்னை இருக்காது. அவர்கள் இல்லாத வேளைகளில்தான் சிக்கல்.

கோடம்பாக்கத்தில் என் நண்பர் ஒருவர் டைரக்டர்ஸ் காலனியின் பின்புற சந்து ஒன்றில் ஓர் அறையில் தங்கியிருந்தார். அவர் அங்கே இருக்கிறார் என்று எனக்குப் பல காலமாகத் தெரியும். ஆனால் அந்த அறைக்கு நான் போகும் சந்தர்ப்பம் வந்ததில்லை. சந்திக்கலாம் என்று எப்போது முடிவு செய்தாலும் அவரேதான் வருவார். இது இயல்பாக நடந்ததாகவே நெடுநாள் என்ணிக்கொண்டிருந்தேன். தற்செயலாக அவரது இருப்பிடத்துக்கு ஒருநாள் நானே போய்விட, என்னை உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லக்கூட அவரால் முடியாதிருந்தது. பத்தடி அறையில் ஆறு பேர் குடியிருந்தார்கள். அப்படிச் சொல்வது சரியா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆறுபேர் அமர்ந்திருந்தார்கள். அவ்வளவுதான். தவிர, எங்கும் பேண்ட் சட்டைகள், செருப்புகள், அடுப்பு, பாத்திரங்கள். நான் உள்ளே சென்றபோது இரண்டு பேர் எழுந்து வெளியே வராண்டாவில் போய் நின்றுகொண்டார்கள். திரும்ப நான் வெளியேறியதும் அவர்கள் உள்ளே போய்விட்டார்கள்.

என் நண்பர் அப்போது ஒரு வேலையில் இருந்தார். சுமாரான வருமானம் உண்டு. அவரது அறையில் இருந்த ஆறு பேரில் அவரும் இன்னொருவரும் மட்டுமே வேலைக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள். மீதி நான்கு பேரும் வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள். வேலையில் இருக்கும் இருவரும் சமைக்க, துவைக்க, குளிக்க அரிசி பருப்பு சோப்பு வாங்கிப் போடுவது, வேலை தேடும் நால்வரும் முறை வைத்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்வது. இதுதான் நடைமுறை. அந்த அறையில் மட்டுமல்ல. அநேகமாக எல்லா இடங்களிலும்.

சினிமா துறையில் இந்நடைமுறை மிக அதிகம். வேலையில் இருப்பவர்களுக்கே கூட வருமானம் இல்லாத நாள்கள் ஆண்டில் அதிகமாக இருக்கும். அம்மாதிரி சமயங்களில் உணவு சார்ந்த கவலை அவர்களைச் சிந்திக்க விடாமல் தடுக்கும். என் நண்பர்கள் பலபேரிடம், ‘இப்ப சும்மா இருக்கறப்ப எழுதி வைடா. பின்னாடி உபயோகப்படும்’ என்று சொல்லியிருக்கிறேன். அவர்களும் சம்மதிப்பார்கள். ஆனால் ஆண்டுக்கணக்கில் ஒன்றும் எழுதியிருக்க மாட்டார்கள். சிந்தனையைத் தடுப்பது பசியல்ல. உணவு இருக்காதோ என்கிற அச்சம்.

1993 – 95 காலக்கட்டத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்த எடிட்டர் லெனினின் அறைக்கு அநேகமாக தினமும் செல்வேன். சினிமாவைப் புரிந்துகொள்ள ஒரு டைரக்டரைவிட எடிட்டர்தான் சரியாக உதவுவார் என்பது என் எண்ணம். லெனின் நண்பர் என்பது எண்ணத்தை வலுப்படுத்திய காரணி.

தேசாடனம் என்ற மலையாளப்படத்தை அப்போது லெனின் எடிட் செய்துகொண்டிருந்தார். வேலை நேரத்தில் அங்கே அவரது உதவியாளர்களைத் தவிர யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் மதிய உணவு நேரத்தில் மட்டும் எப்படியோ பத்திருபது பேர் சரியாக அங்கே வந்துவிடுவார்கள். நண்பர்கள். தெரிந்தவர்கள். தெரிந்தவர்களுக்குத் தெரிந்தவர்கள். வேறு வேலையாக வந்தவர்கள். எதிர்பாராமல் வந்தவர்கள். எங்கெங்கிருந்தோ வந்தவர்கள்.

அவரது எடிட்டிங் அறைக்கு வெளியே உள்ள மரத்தடியில் நீளமான பெஞ்சில் பெரிய பெரிய சாப்பாட்டு கேரியர்கள் திறந்து வைக்கப்படும். பத்து பேருக்கு வந்த சாப்பாடு என்றாலும் இருபது பேர் சாப்பிடும் அளவுக்கு இருக்கும். இருபத்தைந்து பேராவது அவசியம் சாப்பிடுவார்கள். இது ஒருநாள் இருநாள் அல்ல. ஒவ்வொரு நாளும். பிறகு சிவசக்தி எடிட்டிங்குக்கு வந்தபோதும் (விஜயன்தான் பெரும்பாலும் அதை எடிட் செய்தார்) இதைப் பார்த்திருக்கிறேன்.

சம்பந்தமில்லாதவர்கள் ஏன் வருகிறார்கள், ஏன் சாப்பிடுகிறார்கள் என்று அங்கே யாரும் கேட்டதில்லை. சம்பந்தமில்லாத இடத்தில் சாப்பிட்டுவிட்டுப் போகும் குற்ற உணர்ச்சியும் யாருக்கும் இருந்ததில்லை.

அந்நாளில் வடபழனி பேருந்து நிலையத்துக்கு வெளியே தினமும் காலையில் ஒரு வயதான பெண்மணி இட்லிக் கடை போடுவார். இட்லியும் சாம்பாரும் மட்டும்தான் அவரிடம் இருக்கும். சட்னிகூடக் கிடையாது. ஒரு இட்லி ஐம்பது காசு. காலை ஏழரைக்குக் கடை திறக்கும் அந்தப் பெண்மணி எட்டரைக்கு மேல் அங்கே இருந்து நான் பார்த்ததில்லை. கொண்டு வந்த மாவுப் பாத்திரம் அதற்குள் தீர்ந்துவிடும். என் நண்பர்களான பல உதவி இயக்குநர்கள் தினமும் அந்தக் கடைக்குப் போவார்கள். காசு இருக்கும்போது கொடுத்துவிட்டுச் சாப்பிடுவார்கள். இல்லாதபோது கடன் சொல்லிவிட்டுச் சாப்பிடுவார்கள். எத்தனை நாள் கடன், அவர் எப்படி அந்தக் கணக்கையெல்லாம் நினைவு வைத்துக்கொள்வார் என்று தெரியாது. ஏனென்றால் இரண்டிரண்டு இட்லியாக ஒவ்வொருவரும் ஏழெட்டு முறை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் இருநாள் கணக்கென்றால் சரி. மாதக் கணக்கில் இப்படிச் சாப்பிடுவதை யார் எழுதி வைப்பது? அந்தப் பெண்மணிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நாம் சொல்வதுதான் கணக்கு. நாம் கொடுப்பதுதான் காசு.

ஒருநாள் அவரிடம் இப்படி இருக்காதீர்கள், ஐம்பது காசு இட்லிதானே கறாராகக் கேட்டு வாங்கிவிடுங்கள் என்று சொன்னேன்.

‘பரவால்ல கண்ணு. ஏமாத்தணுன்னு எந்த புள்ள நினைக்கும்? இல்லாதப்பட்டவன கஸ்டப்படுத்தக்கூடாது’ என்று சொன்னார்.

இதை என் நண்பர் திருப்பதிசாமியிடம் அன்று சொன்னேன். (திருப்பதி அப்போது சிவசக்தியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி லெனின் அறைக்கு வருவார். நானும் அவரும் பலநாள் அந்தப் பெண்மணியிடம் இட்லி வாங்கி உண்டிருக்கிறோம்.) அது அவர் மனத்தில் பதிந்துவிட்டது. பின்னாளில் அவர் ஒரு தெலுங்குப் படத்தை இயக்கி வெற்றி பெற்ற பின்பு அந்தப் பெண்மணியை ஒருநாள் தேடிச் சென்று புடைவை வாங்கிக் கொடுத்து நன்றி சொன்னார்.

ஆறேழு வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த நிறுவனம் அப்போது சிறிது சிரம தசையில் இருந்தது. தொடர்ச்சியாகப் பல பெரிய முயற்சிகளில் தோல்வியடைந்ததால் வேலை பார்ப்பவர்களுக்குச் சம்பளம்கூடக் கொடுக்க முடியாத சூழ்நிலை. ஒன்றிரண்டு மாதங்கள் என்று தொடங்கி, பல மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒவ்வொருவராக அங்கிருந்து விலகிச் சென்றுகொண்டிருந்தார்கள். கடும் விரக்தியிலும் மன உளைச்சலிலும் இருந்த அந்நாள்களில் பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் எனக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அதே நிறுவனத்தின் வேறு ஒரு தொலைக்காட்சித் தொடரில் பணியாற்றியவர். நிறுவனத்தின் பொருளாதார நிலைமையைக் குறித்துப் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நான் வெளியே போனப்ப எனக்கு ஒன்றரை லட்சம் பாக்கி. இன்னும் அந்தப் பணம் வரலை’ என்று சொன்னார். அதாவது அன்றைய தேதிக்கு மூன்றாண்டுகளுக்கு முந்தைய பாக்கி.

எனக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ‘கேட்டு வாங்க வேண்டியதுதானே?’ என்று சொன்னேன்.

‘மனசு வரல சார். கஷ்டத்துல இருக்காங்கன்னு தெரியுது. எதுக்கு கேட்டு சிரமப்படுத்தணும்? அதுவும் இல்லாம, இங்க நான் வேல பாக்காதப்பக்கூட பல நாள் வந்து யூனிட் சாப்பாடு சாப்ட்டு போயிருக்கேன். யாரும் ஒண்ணும் சொன்னதில்ல. தின்ன இடத்துல கணக்குப் பேசத் தோண மாட்டேங்குது சார்’ என்றார்.

பசி எதைத் தரும் என்பதில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனால் பசி நேரத்து உணவு பெரும் பக்குவத்தையும் நிதானத்தையும் எப்படியோ தந்துவிடுகிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter