படுக்கப் போகும்போது ஒன்றுமில்லை. அதிகாலையில் வினோதமான சத்தம் கேட்டுக் கண் விழித்தான். இருளில் குறிப்பாக எதுவும் தெரியவில்லை. எழுந்துகொள்ளப் பார்த்தபோதுதான் அபாயம் புரிந்தது. ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அறைக்குள் எப்படியோ நுழைந்துவிட்டிருந்தன. பாய்ந்து விளக்கைப் போடப் பார்த்தபோது முகமெல்லாம் அவை மோதி மொய்க்கத் தொடங்க, ஐயோ என்று அலறினான். அலறும்போது திறந்த வாய்க்குள் சட்டென்று சில வெட்டுக்கிளிகள் நுழைந்து உள்ளே போய்விடவும், அச்சத்தில் மேலும் அலறிக்கொண்டே கதவைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்தான்.
பெரிய தவறு. வெளி முழுவதும் அவை ஆக்கிரமித்திருந்தன. பல லட்சம் கோடி வெட்டுக்கிளிகள். எங்கிருந்து எப்படி வந்தன என்று தெரியவில்லை. காலியான கறிக்கடையின் ஈரத்தின்மீது மொய்க்கும் ஈக்களைப் போல அவை நகரம் முழுவதையும் சுழன்று சுழன்று மொய்த்துக்கொண்டிருந்தன. எதையும் யாரையும் அவை விட்டு வைக்கப்போவதில்லை என்பது புரிந்துவிட்டது. ஊழித் தருணம் வெட்டுக்கிளியின் வடிவில் வரும் என்று எண்ணிப் பார்த்ததில்லை.
இறப்பதற்கு முன்பு, செய்த பாவங்களை எண்ணிப் பார்த்துச் சிறிது வருந்திவிட விரும்பினான். எண்ணிக்கைக்குள் அவை அடங்குமா என்று தெரியாத போதிலும் முடிந்தவரை நினைவுகூர்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் அதற்குள் அவன் வாய் வழியே உள்ளே போன வெட்டுக்கிளிகள் உட்புறத்தைக் கொத்தித் தின்னத் தொடங்கிவிட்டன. வலி பொறுக்காமல் கதறியபடியே ஓடத் தொடங்கினான். மிதிபட்ட இடமெங்கும் வெட்டுக்கிளிகளே இருந்தன. தப்பித்து ஓடுவதையும் அவற்றின் பிணங்களின்மீதேதான் செய்யவேண்டும் என்பது மரணத்தினும் கொடும் துயரமாக இருந்தது. கண்களில், காதுகளில், கழுத்தில், உச்சந்தலையில் நூறு நூறாக அவை ஏறி அமர்ந்து ஊர்வது தாங்காமல், ‘சனியனே! செத்துத் தொலை’ என்று கத்தினான்.
பிறகு வாழத் தொடங்கினான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.