கதை

ஒரு கொலைக் கதை (கதை)

குறுங்கதை தன் வளையை விட்டு வெளியே வந்தது. வெளி, இருளாகி இருந்தது. எங்கும் ஆள் நடமாட்டமில்லை. முன்பெல்லாம் வீட்டு வாசல்களில் அகல் விளக்கு வைத்திருப்பார்கள். மின் விளக்குகள் வந்தபின் வாசலில் ஒரு நாற்பது வாட் விளக்கெரியும். வீதி விளக்குக் கம்பங்கள் நடப்பட்ட பின்பு வீட்டு விளக்குகளை யாரும் போடுவதில்லை. உபரி மின்கட்டண சேமிப்பு நவீன வாழ்வில் இன்றியமையாத அம்சம். உபரி மின் சக்திச் சேமிப்பு, மின்சார வாரியத்துக்கும் அவசியமாக இருப்பதால் அவர்கள் வீதி விளக்குகளையும் போடுவதில்லை. யாரும் நடமாடாத வீதிகளுக்கு விளக்கு ஒரு அநாவசியம். எனவே வீதி இருண்டிருந்தது.

எங்கோ ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அது அடுத்த வீதியிலாக இருக்கலாம். அல்லது பிரமையாகக் கூட இருக்கலாம். அவன் இருண்ட வீதியின் ஒரு முனையில் ஒரு மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு நின்றான். நாற்பது வாட்ஸ் விளக்குகள் எரிந்துகொண்டிருந்த காலத்தில் அவனது தந்தையும், அகல் விளக்கு எரிந்த காலத்தில் அவனது பாட்டனும் அவனைப் போலவேதான் அங்கே நின்றிருந்தார்கள்.

அவன் எதிர்பார்த்தவண்ணம் அவள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று எச்சரிக்கை உணர்வுடன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, வீதியில் இறங்கி வேகமாக நடந்தாள். காத்திருந்தவன் குடித்து இருந்தான். ஆனால் வீட்டை விட்டு வந்தவளின் தாய் வாழ்ந்த காலத்தில், காத்திருந்தவனின் தந்தைக்குக் குடிப்பழக்கம் இருக்கவில்லை. ஆனால் அவன் தனத மூதாதையரைக் காட்டிலும் வெறி கொண்டவனாக இருந்தான்.

எப்படியாவது அவளைக் கொன்றுவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு காத்திருந்தவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்தபடி பாய்ந்தான். இன்றைக்காவது யார் கண்ணிலும் படாமல் ஓடிச் சென்றுவிட வேண்டும் என்ற ஒற்றை எண்ணத்துடன் விரைந்துகொண்டிருந்தவளின் தாயைப் பெற்றவள் பின்புறத்தில் இருந்து பாய்ந்தவனை எப்படி கவனிக்கவில்லையோ, அதே போல அவளும் கவனிக்கவில்லை. அவன் கிட்டே நெருங்கிய அதே சமயம், நாயின் குரைப்புச் சத்தம் அடங்கிவிட்டது.

எதிரே யாரோ அவளை நோக்கி தடதடவென ஓடி வருவது தெரிந்தது. அவளும் பரபரப்பானாள். ‘சீக்கிரம் வா. யாராவது பார்த்துவிடப் போகிறார்கள்’ என்று ஓடிய வேகத்திலேயே அவனையும் இழுத்துக்கொண்டு தன் தாயைப் போலவே கணப் பொழுதில் எங்கோ சென்று மறைந்தாள்.

கத்தியுடன் பாய்ந்தவனைக் குறுங்கதை குத்திக் கொன்றுவிட்டுத் தன் வளைக்குள் சென்று மறைந்தது.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி