300 வயதுப் பெண் (கதை)

கதை

எதிர் வீட்டு பால்கனியில் எப்போதும் அவளைப் பார்க்கிறேன். சமுராய்களின் காலத்தில் சீனத்தில் வரைந்த தைல ஓவியத் தாள் ஒன்றிலிருந்து அவள் எழுந்து வந்து அமர்ந்திருப்பாள். எப்படியும் என்னைவிட முன்னூறு வயதுகள் மூத்தவளாக இருக்கக்கூடும். காலம் அவள் முகத்தைப் பழுப்பாக்கியிருந்ததே தவிர சுருக்கங்கள் உருவாகியிருக்கவில்லை. பருவத்தில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாளோ, எவ்வளவு இளமையாக இருந்திருப்பாளோ, அதே அழகும் இளமையும் இப்போதும் இருந்தன. ஓவியத்தைப் போலவேதான் இருந்தாள். சிறிதும் அசைவில்லாமல். ஆனால் உயிருடன். அவள் கண்கள் மட்டும் அலையாடிக்கொண்டே இருக்கும். ஓரிரு முறை அவளை அழைத்துப் பார்த்தேன். அவள் கவனிக்கவில்லை. அவள் வீட்டுக்குள் இருந்தும் யாராவது அவளை அவ்வப்போது உரத்த குரலில் அழைப்பார்கள். அப்போதும் அவள் எழுந்து சென்று பார்த்ததில்லை. பகல் இரவுக் கணக்கின்றி, எப்போதும் அவள் அங்கிருந்தாள். ஒரு கையை பால்கனியின் கம்பியின்மீது ஊன்றிக்கொண்டும் மறு கையை முகவாயில் ஊன்றிக்கொண்டும்.

அப்படி எதை அவள் ஓயாமல் தேடுகிறாள் என்று கண்டுபிடிக்க முடிந்ததில்லை. கண் இமைக்காமல் அவள் உற்றுப் பார்க்கும் இடத்தையோ பொருளையோ தெரிந்துகொள்ளப் பல நாள் முயற்சி செய்தேன். முடியவில்லை. எப்படியாவது அவளுக்கு உதவ முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கேட்டேன். ‘எதைத் தேடுகிறாய்? சொன்னால் உதவி செய்வேன்.’

இப்போது அவள் திரும்பிப் பார்த்தாள். பிறகு சொன்னாள், ‘வேறென்ன? தொலைத்ததைத்தான்.’