வகுப்பு அனுபவம்

சமீப காலமாக என்னுடைய வகுப்புகளைக் குறித்து விசாரிக்கும் நண்பர்கள் அனைவரும் தவறாமல் ஒன்றைக் கேட்கிறார்கள். ‘இரண்டு மணி நேரம் உங்களால் தடையின்றிப் பேச முடிகிறதா?’ இவர்கள் அனைவரும் என் இயல்புகளை மிக நன்றாக அறிந்தவர்கள். குறிப்பாக மைக் முன்னால் பேசுவதில் எனக்குள்ள தயக்கங்களையும் அப்போது ஏற்படும் தடுமாற்றங்களையும் கண்டு களித்தவர்கள்.

சிறு வயதில் பல பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு வீராவேசமாகப் பேசி, பரிசு வாங்கியிருக்கிறேன். அனைத்தும் என் அப்பா எழுதிக் கொடுத்து, மனப்பாடம் செய்து பேசியவை. வாசிப்பிலும் எழுத்திலும் நாட்டம் வந்த பிறகு வாய் திறந்து பேசுவது அரிதாகிப் போனது. அந்த மாற்றம் உண்மையில் எனக்கே சிறிது அச்சம் அளித்தது. சாதாரணமாக வீட்டில், அலுவலகத்தில், நண்பர்கள் மத்தியில்கூட நான் பேசுவது கணிசமாகக் குறைந்துவிட்டது. இன்றைக்கு வரை எனக்கும் என் மனைவிக்கும் வீட்டில் வருகிற சண்டைகளின் தொடக்கப் புள்ளி நான் போதிய அளவு பேசுவதில்லை என்பதாகத்தான் இருக்கும். எனக்கே அது தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் பேச வேண்டியவற்றைப் பேசாதிருப்பதில்லை.

வீட்டிலேயே இந்நிலை என்னும்போது மேடைப் பேச்சு எப்படி முடியும்? யார் கூப்பிட்டாலும் கணப் பொழுதும் யோசிக்காமல் தவிர்த்துவிடுகிறேன். ஒப்புக்கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றுமானால், சொற்பொழிவு வேண்டாம், கலந்துரையாடலாக அமைத்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு ஒப்புக்கொள்பவர்களின் நிகழ்ச்சிகளை மட்டுமே ஏற்கிறேன். எழுதுவதில் உள்ள சுதந்தரம், மொழியின் மீது எனக்குள்ள கட்டுப்பாடு, முழு விழிப்புணர்வுடன் ஒவ்வொரு சொல்லையும் தேர்ந்தெடுக்கிற வசதி, பிடிக்காது போனால் உடனே அழித்துவிட்டு மாற்றி எழுதிக்கொள்கிற வாய்ப்பு – இவற்றில் ஒன்றுகூடப் பேச்சில் கிடையாது. அந்தந்தக் கணத்தில் வெளிப்படும் சொற்களே அந்நிகழ்ச்சியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். அது தனிக்கலை. நான் அதில் விற்பன்னன் அல்லன். சராசரி கூட இல்லை. அதற்கும் பல படிகள் கீழே உள்ளவன். இதைச் சில தொலைக்காட்சி கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளின்போது தெளிவாகப் புரிந்துகொண்டேன்.

முன்பெல்லாம் எந்த நாட்டில் எங்கே குண்டு வெடித்தாலும், புரட்சி நடந்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் உடனே ஒரு ‘பைட்’ கேட்பார்கள். செய்தி, அதன் பின்னணி, பாதிப்பு, விளைவு அனைத்தைக் குறித்தும் எனக்கு முழுதாகவே தெரிந்திருக்கும். அரை மணி உட்கார்ந்தால் ஏன், எதற்கு, எப்படி, எதனால், யாரால் என்று அலசி ஆராய்ந்து அற்புதமாக ஒரு கட்டுரை எழுதிவிட முடியும். ஆனால் அதையே ஐந்து நிமிடங்களுக்குள் பேசும்போது உலகின் நிகரற்ற சொதப்பல் உரையாக அது அமையும். என்னடா ஒரு வல்லுநர் இவ்வளவு மோசமாகப் பேசுகிறாரே என்று ஊர் உலகம் காறித் துப்பியிருக்குமே என்று அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் சிரமப்படுவேன்.

வம்பே வேண்டாம் என்று ஒருநாள் அதைத் தலை முழுகினேன். மீடியா அப்போதும் விடாமல் ஒவ்வொரு சம்பவத்துக்கும் போன் செய்துகொண்டேதான் இருந்தது. ஒசாமா பின் லேடன் இறந்த தினத்தை என்னால் மறக்கவே முடியாது. இங்கே உள்ள சன் நியூஸ், நியூஸ் 7, நியூஸ் 18, புதிய தலைமுறை தொடங்கி எண்டிடிவிக்காரர்கள் வரை நாளெல்லாம் கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். வேண்டுமானால் காசிக்குச் சென்று பின் லேடனுக்குப் பிண்டம் வைத்துவிட்டு வந்துவிடுகிறேன்; ஆளை விடுங்கள் என்று போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டேன்.

அதன் பிறகும் விட்ட குறையாக எப்போதாவது யாராவது ஏதாவது கூட்டத்தில் பேச அழைப்பார்கள். மிகவும் வேண்டியவர்கள் என்றால் தவிர்க்கவும் முடியாது. யோசித்து, அதற்கும் ஒரு வழி கண்டு பிடித்தேன். இனி யாராவது பேசக் கூப்பிட்டால் எழுதி வைத்துப் படித்துவிடுவது. ஒரு சில கூட்டங்களில் அப்படிச் செய்தேன். பிறகு அதுவும் பிடிக்காமல் போய்விட்டது. காரணம், எழுத்து மொழி மைக்கில் பேசுவதற்குக் கண்ணராவியாக இருக்கும். மிக நேரடியாக மனத்துடன் மட்டும் தொடர்பு கொள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சாதனத்தைக் காதுகளுக்கும் வழங்குவது என்பது, பெட் ரோல் தீர்ந்து போன டிவிஎஸ் 50ஐ பெடல் செய்து ஓட்டிக்கொண்டு போவதற்குச் சமம். இது கூடாது என்று தோன்றிய ஒரு நாளில் அதை நிறுத்தினேன்.

வகுப்பு தொடங்கும் முன்னர் இவற்றையெல்லாம் எண்ணிப் பாராமல் இல்லை. ஆனால் ஏதோ ஒரு குறிப்பிட்ட பொருள் சார்ந்து படித்து, யோசித்து, மனத்துக்குள் தொகுத்து வைத்துக்கொண்டு பேச வேண்டிய அவசியம் இங்கு இல்லை. நினைவு தெரிந்த நாளாக நான் செய்துகொண்டிருப்பதை மட்டும்தான் சொல்லித்தர முடிவு செய்தேன் என்பதால் அதில் பிரச்னை இராது என்று தோன்றியது. தவிர, பதிப்பாசிரியராகப் பணியாற்றிய காலத்தில் எவ்வளவோ பேருக்கு இதே வகுப்புகளை வகுப்பு என்று சொல்லாமல் நாள் கணக்கில், வாரக் கணக்கில் நடத்தியிருக்கிறேன். ஒரு புத்தகத்துக்கான கருவைத் தீர்மானிப்பதில் தொடங்கி, அதற்கு எப்படி உழைக்க வேண்டும், என்னென்ன படிக்க வேண்டும், எங்கெங்கே தேடலாம், எதை நம்பலாம்-எவற்றை நம்பக்கூடாது, அத்தியாயங்களை எப்படிப் பிரிப்பது, தகவல்களை எப்படி ஒழுங்கு செய்வது, சலிப்பூட்டாமல் அடுக்குவது, மொழிச் செம்மைக்கு என்ன செய்வது, மொழிக் கூர்மைக்கு என்ன செய்வது, க்ளீஷேக்களை எப்படித் தவிர்ப்பது, தனித்தனி அத்தியாயங்களை எப்படித் தொடுத்தால் அது புத்தகமாகும் என்று இண்டு இடுக்கு விடாமல் சொல்லித் தந்திருக்கிறேன். தீவிரமான கட்டுரை எழுத்துக்கு இலக்கணமாக நான் பின்பற்றுவது எட்வர்ட் சயீதின் புத்தகங்களை. நாவல் என்றால் மறு யோசனையே கிடையாது; அசோகமித்திரனை. இவர்களிடம் என்ன பயின்றேனோ அதைத்தான் வகுப்புகளில் சொல்லித் தருகிறேன். இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில், உள்ளுக்குள் எப்போதும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடலைத்தான் வாய் விட்டுச் சொல்கிறேன். இது ‘பசிக்குது. சாப்ட உக்காரலாமா?’ என்று என் மனைவியிடம் கேட்பதைப் போலவே எளிதானது. பிரத்தியேக முயற்சிகளோ, பயிற்சியோ தேவைப்படவேயில்லை.

இந்த வகுப்புகளைத் தொடக்கம் முதல் என் மனைவிதான் ஒழுங்கு செய்கிறாள். ஒவ்வோர் அணிக்கும் மாணவர்களைச் சேர்ப்பதில் தொடங்கி, வகுப்பு தொடங்கும் தினத்தன்று காலை மாணவர்கள் பட்டியலை எனக்குத் தருவது முதல், ஒவ்வொரு வகுப்பையும் மாடரேட் செய்வது, அடுத்த வகுப்புக்கு லிங்க் அனுப்புவது வரை அனைத்தையும் அவளேதான் பார்த்துக்கொள்கிறாள். என்னை அணு அணுவாக விமரிசிப்பதையே வாழ்வின் தலையாய பணீயாகக் கொண்ட அவளே வகுப்பில் நான் தடையின்றிப் பேசுவதாகவும் நன்றாக உரையாடுவதாகவும் இப்போது சொல்கிறாள். இது அரசாங்கத்தை எதிர்க்கட்சிக்காரர்கள் பாராட்டினால் எப்படி இருக்குமோ அதற்கு நிகரானது.

இந்த வகுப்புகளுக்காகவே வாங்கிய fifine மைக்கைப் பார்த்தால் இப்போதெல்லாம் அச்சம் வருவதில்லை. மாறாக என் மேக் புக் ஏரைப் போலவே அதுவும் வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. Zoom வகுப்பு என்பதால் முகம் தெளிவாகத் தெரிவதற்கு ஒரு ரிங் லைட் வாங்கினேன். அதைத்தான் இன்னும் சரியாகப் பொருத்தத் தெரியவில்லை. என் மூக்குக் கண்ணாடியில் விளக்கொளி பட்டு வகுப்பு நேரங்களில் நாலு கண்ணனைப் போலவே காட்சியளிக்கிறேன்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி