தனது பன்னிரண்டாம் வயதில் கோவிந்தசாமிக்கு ஞானம் பெறுவதில் தாகம் உண்டானது. பதினான்காம் வயதில் அவன் வீட்டை விட்டு ஓடிப் போனான். பதினைந்தில் ஒரு குருவைக் கண்டுபிடித்து அவரிடம் தனது உள்ளக்கிடக்கையைத் தெரிவித்துவிட்டு, அவருக்குக் கால் அமுக்கிவிட ஆரம்பித்தான்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனது குரு ஒரு டுபாகூர் என்று தெரிந்துகொண்டு அவரைவிட்டு விலகினான். வித்தவுட்டில் தேசமெங்கும் சுற்றித் திரிந்துவிட்டு இறுதியில் இமயமலைச் சாரலை அடைந்தான். ஓசி உணவு கிடைக்கும் இடங்களில் எல்லாம் குருநாதர்களைத் தேடித் திரிந்தான். ஒருவர் அவனை தியானம் செய்யச் சொன்னார். இன்னொருவர் யோகம் பயிலச் சொன்னார். வேறொருவர் நாம ஜபமே உய்ய வழி என்றார். அவன் சப்பாத்தி சப்ஜி சாப்பிட்டபின் அனைத்தையும் முயற்சி செய்துவிட்டு தினமும் தூங்கிப் போனான்.
இப்படியே பல்லாண்டுகள் ஓடிய பின்பு கோவிந்தசாமி ஊருக்குத் திரும்பி வந்தான். அதற்குள் அவனது தந்தை இறந்து போயிருந்தார். அவரது சொத்தாக இருந்த வீடு அவன் பேருக்கு வந்து சேர்ந்தது. மருமகன் வளர்ந்து தன் மகளைத் திருமணம் செய்துகொண்டு வியாபாரத்தையும் பார்த்துக்கொள்வான் என்று எண்ணியிருந்த அவனது தாய்மாமனும் இறந்துவிட்டிருந்தார். எனவே அவரது இறுதி விருப்பப்படி அவர் மகள் மலர்க்கொடியைத் திருமணம் செய்துகொண்டு அவரது புண்ணாக்கு வியாபாரத்தை கோவிந்தசாமி தொடர ஆரம்பித்தான். அவனுக்கும் மலர்க்கொடிக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறகு அவர்கள் வளர்ந்து திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போனார்கள்.
காலக்கிரமத்தில் கோவிந்தசாமிக்கு வயோதிகம் வந்தது. நோய்வாய்ப்பட்டு, ஒரு குயின் சைஸ் மெத்தையை மரணப் படுக்கையாக்கிப் படுத்துக்கொண்டான்.
“அப்பா உங்களுக்கு இறுதி ஆசை ஏதாவது இருக்கிறதா?” என்று அவன் சேமித்த சொத்துகளைத் தம் பெயருக்கு மாற்றிக்கொண்ட பின்பு மகன்கள் கேட்டார்கள்.
தனது பால்ய காலத் தேடல்களைக் குறித்து என்னென்னவோ சொல்லத் துடித்தான் கோவிந்தசாமி. உணர்ச்சி மேலிட்டு அவன் கண்கள் கலங்கிவிட்டன. பிள்ளைகள் இருவரும் பரிதவிப்புடன் நெருங்கி வந்து அவனது கைகளை ஆளுக்கொருவராகப் பிடித்துக்கொண்டு, ‘எதுவானாலும் சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறோம்’ என்றார்கள்.
“எனக்கு ஒரு ப்ளேட் புண்ணாக்கு பிரியாணி வேண்டும்” என்றான் கோவிந்தசாமி.