அதுல்யாவின் பதிவிற்கு, சாகரிகாவிடம் எழும் உணர்ச்சிகளின் காரணம் எனக்குப் புரியவில்லை. வேண்டாமென வெறுத்து ஒதுக்கியவனிடம் எதற்கு இப்படியொரு உணர்வு ?
தன்னுடைய தோழி ஷில்பாவிடம் புலம்புவது, கதையோட்டத்தில் எதார்த்தமாக அமைந்துள்ளது. இருந்தும், தோழியின் அறிவுரைகளுக்குக் காது கொடுக்காமல் அதுல்யாவை வெண்பலகையில் தனியே அழைத்துப் பேச்சு கொடுக்கிறாள்.
அதில் தெரிய வரும் விடயங்களைக் கேட்டதும் இன்னும் மனம் உடைகிறாள். கோவிந்தசாமியை இன்னும் காதலிக்கிறாளோ எனச் சந்தேகம் எழுகிறது. அதுல்யா உண்மையிலேயே கோவிந்தசாமியின் முன்னாள் மனைவி தானா? இல்லை இதுவும் சூனியனின் சதியா எனத் தெரியவில்லை.
சாகரிகா, அதுல்யாவை சந்திக்க விண்ணப்பம் தெரிவிக்கிறாள், அதுல்யாவும் சம்மதிக்கிறாள்.இவர்கள் சந்திப்பிற்கு நாமும் காத்திருக்கலாம். சற்று ஆர்வம் மேலோங்கித் தான் நிற்கிறது.
தான் ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்ற குழப்பத்துடன் உறங்கிப் போகிறாள் சாகரிகா. அவள் வீட்டிலேயே தங்கி இருக்கும் நிழல் தூங்கும் அவளை ரசிக்கத் தொடங்குகிறது. அவள் ஏன் கோவிந்தசாமியை பற்றித் தெரிந்தும் அவனை மணந்து கொண்டாள் என்ற கேள்விக்கு விடையை ஷில்பாவிடம் கேட்கலாமென ஷில்பாவிடம் சென்ற நிழல் கேள்வியை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்துவிட்டது. மனித மனம் ஒரு குரங்கு தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லையென நிழல் நிரூபித்து விட்டது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!