நாயகி

1

ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குரிய எந்த இலட்சணமும் அந்த ஸ்டேஷனுக்கு இல்லை. மிக நீண்டதொரு தூக்குமேடை போல் காட்சியளித்தது. ஆளற்ற வெறுமையும் எரியும் வெயிலும் அலைபுரளும் கானல் கோட்டு வெளியும் கண்ணில் தென்படாமல் குலைத்து அடங்கும் நாய்க்குரலும் சற்று அச்சமூட்டுவதாயிருந்தது. மிஞ்சிப் போனால் நூறு குடும்பங்கள் கூட அங்கிருக்காது எனப்பட்டது. ஜமீன், தன் சொந்தச் செலவில் கட்டிக் கொண்ட ஸ்டேஷனுக்கு அரசு ரயில்கள் நின்று மரியாதை செலுத்திய நூறு வருடத்து சரித்திரத்தின் மேலும், ஸ்டேஷனிலிருந்த ஒரே மர பெஞ்சின் மேலும் புழுதி படிந்து மங்கச் செய்திருந்தது.

சாப்பிட்ட இலையும் தண்ணீர்க் குவளையுமாக ஸ்டேஷன் மாஸ்டர் வெளியே வந்தார். தண்டவாளம் தாண்டி அவர் விசிறியடித்த இலைக்கொரு காகம் மேற்கிருந்து விரைந்து வந்தது. சப்தமுடன் கொப்பளித்து விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தவர், ‘வந்துட்டீங்களா? ரயில் நின்னப்ப பார்த்தனே? இறங்கலையே? நீங்கதானே பெரிய வீட்டுக்கு வந்திருக்கறது?’ என்றார்.

ரயில் நின்றபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஒரு ஸ்டேஷன் வந்ததற்கான எந்தப் பரபரப்புமில்லாமல், சிக்னலில் நின்றதுபோல் நின்று, நகர்ந்துவிட்டது வண்டி. விதியே என்று வீரக்குடி ஜங்ஷனில் இறங்கி தண்டவாளத்துக் கட்டைகளை எண்ணிக்கொண்டே அரை மணி நடந்து, இங்கு வந்து சேர்ந்திருந்தேன்.

‘அடடா!’ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். ‘இப்பத்தான்  ஐயா வீட்டுலேருந்து போன் வந்தது. ஆளைக் காணுமே, வந்தாரா, இல்லையான்னு கேட்டு. வாங்க, ஒரு நிமிசம்’ என்றவர், அறைக் கதவை இழுத்துச் சாத்தி விட்டு, சைக்கிளைத் தட்டி ஏறி, ‘உட்காருங்க’ என்றார்.

‘வழி சொல்லிட்டீங்கன்னா போதும். நான் போயிடறேன்’ என்றேன். ஸ்டேஷனுக்கு குதிரை வண்டி ஏதாவது அனுப்பியிருப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை சாரதியாகக் கொண்டு சைக்கிள் பயணம் செய்வதன் மீதான இருப்பியல் சார்ந்த வினாக்கள் எழுந்து அலைக்கழித்தன.

‘அட, வாங்க சும்மா’ என்றார் எஸ்.எம். ஜமீன் தனியொரு ரயில்வே போர்டு வைத்து நடத்திக் கொண்டு, சைக்கிள் சேவைக்குத் தனியே அலவன்ஸ் தருகிறாரோ என்னவோ.

செம்மண் சாலையில் கரகரத்து ஊர்ந்து சென்றது சைக்கிள்.

வழிமுழுக்கப் பேசிக்கொண்டே வந்தார் ஸ்டேஷன் மாஸ்டர். ஓர் ஆராய்ச்சி என்றால் அதில் கண்டிப்பாக முயல் இருக்க வேண்டுமென்று அவர் நம்பியிருந்தார்.

குறுந்தாடி வைத்துக் கொள்ளாமல், முயலின் மீது தன் ஆய்வைப் பரிசோதித்துப் பார்க்காமல், குறைந்தபட்சம் கண்ணாடியணிந்த உதவியாளன் உடன் என்ன ஆராய்ச்சி? இதற்கெல்லாமும் பல்கலைக்கழக மானியம் கொடுக்கிறார்களா என்ன?

‘ஐயா, அறிவியல் என் துறையல்ல. பண்டைய ஜமீன் வம்சங்களைப் பற்றிய ஆராய்ச்சிக்கு முயலின் துணை அவசியமுமல்ல. தேர்ச்சி பெற்ற ஜமீன் பரிசாரகர்கள் முயல்கறி சமைத்துப் போட்டால் ருசித்துப் பார்க்க ஆட்சேபணை இல்லை.’

‘நல்லதுங்க. அந்தா பாருங்க. பெரிய வீடு வந்திருச்சி. இங்கனவே இறங்கிக்கறீங்களா? ரெண்டு பத்துக்கு ஒரு கூட்ஸ் வரும். ஐயா வீட்டுத் துணிகளை வெளுத்து எடுத்தாருவாங்க. போயி, வாங்கி எடுத்தார டைம் சரியா இருக்கும்.’

அவர் ஜமீனின் குதிரை லாயத்தில் சாணமள்ளிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பரம்வீர் சக்ராவுக்குப் பதிலாகக் குழாய் மாட்டி ஸ்டேஷனில் அமர்த்தியிருப்பார்கள், சேவையைப் பாராட்டி.

கம்பீரம் தோய்ந்த கிழட்டு ராட்சஸன் மாதிரி அமர்ந்திருந்த பங்களாவை நோக்கி நடந்தேன். மிக உயரே, பருந்தொன்று, மாளிகையை வட்டமிடக் கண்டேன்.

2

‘ஆத்தா, இவுகதான் உம்ம மயன் சொன்ன ப்ரொபசரு. மெட்ராசுலேருந்து வந்திருக்காவ’ என்றார் மானேஜர்.

நானொரு ப்ரொபசர் அல்ல என்பதை முதலில் அவருக்குத் தெளிவுபடுத்திவிட விரும்பினேன். ஆனால், ஆய்வு மாணவன் என்றால் கிழவி அசிரத்தையாகப் பேச விரும்பாமலாகக் கூடும் ‘கதை கேக்க வந்தியா? எளுந்து போடே மூதி!’ என்று விரட்டியடித்த ஜமீன் கிழவர்களின் பரிச்சயம் சமீப காலத்தில் சற்று அதிகமாகவே லபித்திருந்தது. கதை கேட்கும் வயது கடந்துவிட்ட பேரன் பேத்திகள் திசைக்கொருவராகப் பிரிந்துவிட்ட பின்னர் யானைத் தந்தங்களுக்கு நிகரானதொரு புராதனச் சின்னமாக மாளிகையில் பகல் இரவற்றுத் தனிமையில் அலைந்து அதிகாரம் புரியும் கிழவிகளுக்குக் கதை சொல்வதிலான விருப்பம் மழுங்கிப் புழுத்துப் போயிருக்கும். வேளைக்குச் சோறும் வாய் நமநமத்தால் வசவும் மீளாத இரவுகளில் கரகரத்த, நடுங்கும் குரலில் எழும் இருமலுமாகப் பாதி இறந்த கிழவிகள் ச்¢லரைக் கண்டிருக்கிறேன்.

ஆய்வு நோக்கங்கள் மறந்துபோய், கரை காண முடியாத அவர்களது மனவெளிப் பாலைகள் அலைந்து திரியும் பேரவா உந்த, முயன்று, தோற்றுத் திரும்பியிருக்கிறேன்.

ஆய்வின் சாரமாகத் திரண்டு வரும் தோல்வி, கரும்பூதமாகத் துரத்த, அலுப்புற்று விழுவதும் மறுபடி எழுந்து வருவதுமாக நீளும் நாள்களின் தாற்காலிக விளிம்பில் இதோ, இன்னுமொரு காது நீண்ட கிழவி.

குடிக்க என்ன கொடுத்தாய் என்று சைகை மூலம் மானேஜரிடம் கேட்டாள் கிழவி. உண்டு முடித்த அற்புதமான பகலுணவு பற்றி நான் உற்சாகமாகக் கூற ஆரம்பித்தேன். இதுவும் அனுபவ சாரந்தான். உன்னைக் குளிரச் செய்ய உன் வீட்டுச் சமையலை நான் புகழ்ந்தாக வேண்டும். அது புளித்து ஊறிய களியுருண்டையாயிருந்தாலும் சரி.

கிழவி பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. மறுபடியும் குடிக்க ஏதாவது கொடு என்று மானேஜரிடம் சொன்னாள்.

‘ஆத்தா இப்படித்தாங்க அவங்க எதிர்க்க ஒரு கிளாஸ் மோர் குடிக்காட்டி, திருப்திப்படமாட்டா’ என்று சொல்லிவிட்டு, ‘சங்கரபாண்டீ’ என்று உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

கிழவியின் வயதை என்னால் அனுமானிக்க இயலவில்லை. நூறோ, எண்பதோ, நூற்றியிருபதோ இருக்கலாம். ஒரு கிராஃப் தாள் போல முகத்தின் குறுக்கே ஓடிய நூற்றுக்கணக்கான கோட்டுச் சுருக்கங்களினடியில் புதையுண்ட விழிகள், கோதுமை நிறத்தில் இலக்கற்று அலைபாய்ந்து கொண்டிருந்தன. உதிர்ந்ததுபோக ஒட்டிக் கொண்டிருந்த ஒன்றிரண்டு இமைகள் வெளுத்திருக்க, பற்களற்ற வாய் அசையும்போது தவளையின் வயிறு போலத் தென்பட்டது.

‘காது அவ்வளவா கேக்காதுங்கா. பேச்சும் குறைஞ்சிடிச்சி. மதியத்துக்கு மேல பார்வை சரியா இருக்காது. ஆறு மணி ஆச்சின்னா சுத்தம். பெருமா கோயில்ல சாமி ஏளப்பண்றாப்பிலே தூக்கியெடுத்துப் போயி வெச்சாத்தான் செரி. ஜயா மாசம் ஒருக்கா வாரப்ப எங்கிருந்துதான் இவுகளுக்கு வீரம் வருமோ தெரியாது. எளுந்து நடமாட ஆரமிச்சிருவாக. அதிசெயமா குரல் ரெண்டு ரூம்பு தாண்டிக் கேட்கும். அவுரு திரும்பிப் போறண்ணிக்கி அளுமோ, அளுமோ, அப்பிடி அளும். அடுத்த மூணுநா ஒரு பேச்சு வரணுமே? ம்ஹூம், பிறவு செரியாப்போவும்’

அத்தனை பெரிய அரண்மனையில் ஓர் ஓரத்தில் குவித்து வைத்த குப்பை போல் கலைந்து அமர்ந்திருந்தாள் கிழவி. சென்னையில் பெரிய தொழிலதிபராயிருக்கும் இவள் மகனை, விஷயத்தை விளக்கிச் சந்தித்தபோது ஒரு ஜமீந்தார் என்கிற உணர்வெல்லாம் சுத்தமாகத் தனக்கில்லை என்று தெரிவித்தார். விவசாய விஞ்ஞான சாதனங்கள் சதனங்கள் உற்பத்தி செய்யும் அவரது நிறுவனம் பங்குச் சந்தையில் உயர்மட்ட நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதற்கான முயற்சியில் தனக்கு உறங்கக் கூடச் சராசரியாக் மூன்று மணி நேரங்களே கிடைப்பதாகச் சொன்னார். “நீங்கள் ஊருக்குப் போய் அம்மாவிடம் பேசிப் பாருங்கள். அவர்ள் உதவக்கூடும் உங்கள் ஆய்வுக்கு” என்றார் பெருந்தன்மையுடன்.

நான் கிழவியைப் பார்த்தேன். கருவேப்பிலை, இஞ்சி நேர்த்த நீர்மோர் குவளையைக் காலி செய்து நான் வைத்துவிட்டதை கவனித்துவிட்டு, திருப்தியாகச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள். சில விநாடிகளில் அப்படியே குறட்டைச் சத்தம் கேட்டது.

“அத்தா எப்பவும் இப்படித்தாங்க. நெனச்சப்ப டக்குனு தூங்கிடும். எளும்ப ரெண்டவராச்சும் ஆகும்” என்றார் மேனேஜர்.

அவளை அப்படியே சாயவைத்து தலைக்கொரு திண்டைக் கொடுத்து, மின்விசிறியை அவள் புறமாகத் திருப்பி வைத்தார்.

நான் இன்னொரு கிளாஸ் நீர்மோர் கேட்டு வாங்கி அருந்திவிட்டு, எழுந்து வீட்டைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தேன்.

3

மனிதர்களைக் கொசுவாக உணரச் செய்யும் மிக உயரமான சுவர்கள் தாங்கிக் கொண்டிருந்த மேற்கூரை பிரமிட் வடிவில் இருந்தது. பாடம் செய்யப்பட்ட புலித்தலைகள் இல்லாத ஜமீன் பங்களாக்களை இதுகாறும் நான் பார்த்ததில்லை.

“வாங்க” என்றா மேனேஜர். மூன்றாம் கட்டும் கதவைத் திறந்ததும் கிரிக்கெட் பிட்ச் மாதிரி நீண்டிருந்த முற்றத்தில் மிளகாய் காய்ந்து கொண்டிருந்தது. செவ்வக வடிவில் சுற்றியிருந்த தாழ்வாரச் சுவர்களில் ஆங்காங்கே பச்சை நிறக் கதவுகள் தென்பட்டன. “இது பூசை ரூம்புங்க. இது பெரிய ஜமீன் இருந்தப்ப, வெத்தல பாக்கு போட உட்கார்ற இடங்க. இது பளைய சாமானுங்க வெக்கற இடம். அது பாருங்க, ஜமீன் வூட்டுக்காரங்களோட் அஜிம்மு” என்று காட்டிக் கொண்டே வந்தார் மேனேஜர். ஓரிடத்தில் கண்ணாடி போல் மழமழத்த பச்சை நிறத் தரைத்தளம் சதுரமாக ஒரு குளம் போலிருக்க, “அம்மணிங்க சோழி ஆடுவாங்க இங்க. நாங்க ஆம்லெட் தரைன்னுவோம். சிமிண்டு இல்லாம முட்டைக் கலவையால மட்டும் போட்ட தளங்க” என்றார்.

சத்தமெழுப்பிய மரப்படியில் ஏறி முதல் தளத்தை அடைந்தோம். கீழிருந்தது போலல்லாமல் மிகக் குறுகலான தாழ்வாரம் சுற்றி நீண்டிருக்க, வம்ச நாயக்கர்களின் ஓவிய முகங்கள் சட்டமிடப்பட்டு வரிசையாகக் காட்சியளித்தன.

“கவனிச்சீங்களா? இங்க ஃபேனுமில்லை, ஏசியுமில்லை. ஆனா சில்லுனு இருக்கு பாருங்க? அதான் டெக்னிக்கு. வெளிக்காத்து ஆக்ரோசமா தாக்கறப்ப மெல்லிசு ஓட்டைங்களை போட்டு வெச்சா என்னாவும்? சும்மா குளத்தங்கரை கணக்கா சில்லுனு ஆயிடாது?”

அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் பொட்டு வைத்தாற்போல வானத்துளிகளைக் கண்டேன்.

“இந்த ஜமீன் எத்தனை வருஷத்துதுங்க?” என்றேன் மேனேஜரிடம்.

“அது ஆச்சிங்க நூத்தம்பது வருசம். இவுக முப்பாட்டன் வெள்ளைக்காரனுக்கு ரொம்ப விசுவாசியாட்டு இருந்திருக்காரு. இங்க வரி கிரி வசூலிச்சுத் தாறது, சட்டாம்பிள்ளைக் காரியம் பாக்கது, துரைங்க ஓய்வெடுக்க வந்தா சாராயம் ஊத்தித் தாரதுன்னு இருந்திருக்காவ. அவனுக்கென்ன? நல்லா குடிச்ச வேளையில வள்ளல் மனசு வந்துட்டு. எடுத்துக்கடா இந்த கிராமத்தனிருக்கான். முன்ன நானூத்தம்பது ஏக்கரா சொத்து. இவுக தாத்தா சாரட்டுல போறத நாலு வயசுல பாத்த ஞாபகம் இருக்குங்க. பெரிய்ய குடும்பம். பங்காளிங்க மட்டும் பதினெட்டு பேருன்னா பாத்துக்கிடுங்க. இப்பம் யாரும் இல்லை. ஐயா மட்டும்தான்.”

“எல்லாருமா காலமாயிட்டாங்க?” என்றேன்.

“ஆமுங்க” என்றவர் சற்றுக் குரல் தாழ்த்தி, “யார் சாவும் நேரானதா இல்லீங்க. என்னமோ குலசாபம். வெட்டுப்பட்டே செத்துப் போனாங்க” என்றார்.

4

வானம் மறைத்த கருமையில் கரைந்து உப்படிகையில் நின்றிருந்தேன். உறக்கம் வரவில்லை. நெடுநெடுவென நீண்டிருந்த மேல் தளத்தில் அரண்மனை வேலையாள்களுக்குக் குடிசை அடித்துக் கொடுத்திருந்தார்கள். தரையெங்கும் உடல்கள் உறங்கிக் கிடக்க, எங்கோ தொலைவில் தவளைச் சத்தம் கேட்டது. மழைக்கு முந்தைய புழுக்கம் காற்றைக் கட்டிப் பிடித்திருக்க, பசிப்பது போலிருந்தது எனக்கு. இந்த நேரத்தில் யாரை எழுப்பி என்ன கேட்க முடியும்?

சத்தமின்றி கீழிறங்கினேன். இருளை மிகைப்படுத்திக் காட்டும் விதமான முட்டை விளக்குகள் முப்பதடிக்கு ஒன்றாக எரிந்து கொண்டிருக்க, கிழவியின் அறைக்குள்ளிருந்து வந்த சத்தம் என் கால்களை அசைவற்றுப் போகச் செய்தது. ஓசையின்றி அருகே செல்ல, அது பேச்சொலியல்ல; யாரோ பாடுகிறார்கள் என்பது விளங்க, வியப்பானது. கீழ்க்குரலில், மொழியற்ற ஒலி வடிவில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது குரல். தயக்கமிருந்தாலும் மெதுவாகக் கதவைத் தள்ளி, உள்ளே பார்த்தான்.

சட்டென்று ஒலி நின்று கிழவி நிமிர்ந்து பார்த்தாள். “ஆரு?” என்றபோதுதான் முதல் முதலில் அவள் குரலைக் கேட்டேன்.

“நாந்தான் ஆத்தாஸ மெட்ராசுலேர்ந்து வந்திருக்கனேஸ”

“தூங்கலையா தம்பி?” என்றாள் கிழவி.

“இல்லத்ஹ்டா. உங்க பாட்டுச் சத்தம் கேட்டிச்சா? நேரா எழுந்து வந்துட்டேன்/”

“பாட்டா! ஹெ!” என்றஹ்டு கிழவி. “அவுகளோட பேசிட்டில்ல இருந்தேன்?”

விளங்காமல், “நல்லாவே பாடறீங்க” என்றேன். அருகே அமர்ந்து.

“பாட்டில்லைன்னு சொல்லுதேனில்ல? இங்கிருந்து ஒரு குரலை அனுப்புவேன், மேலுக்கு. அவுக அதைப் பிடிச்சுகிட்டு இறங்கி வருவாங்க. ரெண்டு பேரும் பேசிகிட்டிருப்போம். விடிஞ்சதும் மறு குரல்ல ஏறிப் போயிருவாக” என்றாள் கிழவி.

முதுகு சிலிர்த்தது எனக்கு. யாரும் நுழைந்துவிட முடியாததொரு பேருலகையல்லவா கிழவி தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கிறாள். பகலெல்லாம் அவள் உறங்கி விடுவதன் காரணம் புரிந்தது.

“ஆத்தா, உங்கள் வீட்டுக்காரரை எனக்குக் காட்டுவீங்களா?” என்றேன் சிரித்துக் கொண்டே.

“எங்கே? எனக்கேதான் கண்ணவிச்சி வெச்சிருக்கானே? அவுக வருவாக. கையப் பிடிச்சிகிட்டு உக்காந்திருப்பாக. ஏதும் கேட்டா பதில் சொல்வாக. நேரமாச்சி, வாரேன்னு கிளம்பிருவாக. சமயத்துல அவர் போறப்ப குரல் கம்மி, அளுதுடுவேன். தொப்புன்னு விளுந்துடுவாக. ஐயோன்னு மறுபடியும் குரல் கொடுப்பேன். பிடிச்சிகிட்டு ஏறிப் போயிடுவாக.”

உறங்கும் எண்ணமே மறந்துவிட்டது எனக்கு. கிழவியின் மானசீக உலகின் கண்கூசச் செய்யும் வெளிச்சத்தில் ஒரு தும்பி போல் படபடத்துப் பறந்து கொண்டிருந்தேன்.

“அவரு பெரிய ராசாவா இருந்தாருன்னு சொன்னாரே மேனேஜர்?”

“சொன்னானா? சொல்லிருப்பான், சொல்லிருப்பான். பின்னே? மனுச வாழ்க்கையா வாழ்ந்தாக மகராசன்? ஊரு, சாமியாவுல்ல தொழும்! மம்முதங் கணக்கா என்ன நடெ! என்ன கெம்பீரம்?ஒடம்பொறந்த ஒருத்தனுக்குமில்லாத லெச்சணமில்லா? வேட்டைக்குப் போனாருன்னா, வனதேவதை மண்டு போட்டில்ல கேவும்? இத்தன மானு, இத்த மிளான்னு கப்பமாட்டு கொண்டு வந்து வெச்சி, மிச்சத்தப் பொறவு பார்த்துக்கிடவும்னு கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பிருமில்லே?”

“நீங்க போயிருக்கீங்களா ஆத்தா?”

“ஆருடெ வெவரந்தெரியாதவனாட்டு பேசுத. பொட்டச்சி எங்கன போவுறது? எல்லா அவரு சொல்லுறதுதேன்.”

கிழவியின் கண்களில் தென்பட்ட ஒளிக்கீற்று அறையை நிறைத்துத் ததும்புவதாகப்பட்டது. தன் மானசீகப் பற்றுக் கோல் துணையில் அவள் இருந்து கழித்த வருடங்களைத் தேடியெடுத்து மேய்ந்து பார்ப்பதில் அத்தனிஅ சிரமமிருக்காது என்று நினைத்தேன். பகலில் உறங்கி, இரவில் விழித்திருக்கச் சற்று பழக வேண்டும்.

தன் படுக்கையின் பின்புறம் எதையோ தேடி எடுத்தவள், பாட்டில் மூடியைத் திறந்து மடக் மடக்கென்று நான்கு வாய் குடித்துவிட்டு மூடிவைக்க, வியப்பில் “என்னது ஆத்தா?” என்றேன்.

“ஔசதம்!” என்றது, அசிரத்தையாக.

சற்றும் எதிர்பாராத அந்த நெடி என் மூளையைத் தாக்க, கிழவியின் ஸ்டாமினா பற்றிய சிந்தனையே அச்சமூட்டுவதாயிருந்தது.

“உறவுக்காரங்க வேற யாரும் இப்ப இல்லையா ஆத்தா?” என்றேன் மெதுவாக.

“எம்மயன் மட்டுந்தா” என்றாள் உடனே.

“இருந்தாலும் உங்களை விட்டுட்டு அவரு மட்டும் மெட்ராஸ் போயிட்டது சரியில்ல ஆத்தா. பாவம், வயசான காலத்துல.”

என்னைத் தொடரவிடவில்லை. “இருக்கட்டும்டே. நாந்தேன் அனுப்பி வெச்சேன். இங்க அவன் வாழமுடியாஹ்டு பார்த்துக்க.”

“ஏன் ஆத்தா?”

“வெப்பம் புடிச்ச மாளிகையிது. கெட்ட ஆவிங்க பொளுதும் சுத்திச் சுத்தி வருதுக. அந்தா, அந்தா பார் – சுதர்சனன் மேயுதான் தெரியுமா? இவம்பெரியப்பம்மவன். கட்டேல போறவன். செத்தொழிஞ்சும் விட்டொழிய மாட்டேங்குதான். நானொருத்தி வீட்டைச் சுத்தி மந்திரவேலி போட்டு வெக்காட்டி விளுங்கி ஏப்பம் விட்டிருப்பானுவ., பேதியில போறவனுவ. ஒரு படையேல்ல இங்க வாழுது? எப்பம் எம்மயன் வருவான். மேலே விளுந்து விழுங்கீறலாம்னுட்டுதானே காத்திருக்கானுவ? புளுத்தப் பய மக்கா, புளுத்தப் பய.”

ஆடிப் போயிருந்தேன். கண்ணவிந்த கிழவிக்கு ஆவிகள் உலவுவது தெரிகிறதா? என்ன சொல்கிறாள் இவள்?

“அவுக ஒடம்பொறந்தவக இருந்தானுவளே, காக்காசுப் பயனத்தவக. வடிச்சி வெப்பேன், பானை பானையா. விழுங்கி, ஏப்பம் விட்டு, உருளச் சொல்லு? நல்லா உருளுவானுவ பித்தளச் சொம்பு கணக்கா. நாசமாப்போற பயலுவ. சொத்தைப் பிரின்னவ. நெலத்தக் கூறு போடுன்னாவ. வீட்டை வித்துப் பங்கு பிரின்னாவ மக்கா! எம்புருசனா மசியற மனுசன்? போங்கடே பொசகெட்டவனுவளான்னு வீசினாரு பார் ஒருக்கா… இஞ்ச பிடிச்ச ஓட்டம் வீரக்குடி போயித்தான் நின்னாவ. எப்பம்பாரு சண்டை. எப்பம்பாரு சள்ளை…

சற்றே குரலைத் தழைத்தவள், “இந்த சமீனுக்குன்னு ஒரு குலசாமி உண்டு. வீருமாராத்தான்னு பேரு. அவ ஒருக்க வந்து சொல்லீட்டே போனா: பிரிச்சி கிரிச்சிப் பேசினீகளோ மக்கா, பொலிபோட்ருவேன்னு. இவுக பாட்டா ரெத்தத்தத் தண்ணியா சிந்தி உழைச்சி சம்மாரிச்ச பூமியல்லா? கூறு போட்டு ஆளுக்கொண்ணு திங்க இதென்ன பொரிளங்கா உண்டையா?”

“அதானே?” என்றேன் உசுப்பும் விதமாக. கிழவி இன்னொருமுறை பாட்டிலைத் திறந்து ஊற்றிக் கொண்டாள்.

“கேட்டியா? ஓரு அப்பிசி மாசம். மள வெளுத்து ஊத்துது. இவுக சிம்மம்பட்டு வரையும் போய் வாரேன்னு கிளம்பினாவ. எதுக்குங்கே? அவுக தம்பி மயனுக்குப் பொண்ணு பாக்க! குத்துவெளக்கு ஏத்தி வெச்சாப்புல இருக்கணும்டீன்னு ஏண்ட்ட சொல்லீட்டே இருப்பாக. எம்மயனுக்கு வாய்ச்சவதா சீக்காளியாப் போனா. அடுத்தவ அஷ்டலெச்சுமி அம்சமா வரோணும்னுட்டு அவுகளுக்குக் கெனா. தம்பி சொல்லுதான், ‘நீ பாத்தாச் செடிதான்’ எண்ணு. இது ஏதுடா பாசம் கம்மா ஒடச்சிக்கிட்டு ஊத்துதுன்னு அப்பமே நெனச்சேன். செரிதான் மனுச புத்தி ஊஞ்சப் பலகையாட்டம் தானேன்னு நினைச்சேன். மள கொட்டுது பாரு. அப்பிடியொரு கொட்டு! இவுக சாரட்டு புடிச்சி ஏறி கெளம்பிட்டாக. நண்ணி கெட்ட நாலு நாயிக பிளான் தெரியுமா? வழியில மடக்கி, வெட்டிப் போடுதுண்ணு…”

“ஐயோ!”

“கேளு! பாதையில்லாத பாதையில போனாரா? இவனுவ இந்தா வாரம் மதினின்னு பின்னொடவே கெளம்பிட்டாவ. அப்பவே சம்சயப்பட்டேன். செரி, நம்ம மவராசனுக்கு வனதேவதையே பணிஞ்சிப்போவா. இந்தப் பயித்தாரப் பயலுவ மளைலநெனஞ்சி சளி புடிச்சித்தான் வருவானுவ. வேறொண்ணும் களேட்டீறமாட்டானுவன்னு நெனச்சிப் போட்டேன்.

“ஆச்சா? ஒரு மணியாச்சு, நெண்டு மணியாச்சு. பொளுது சாஞ்சி இடி புரட்டுது. இவுக வாராக, ஒத்தை ஆளா. என்னான்னு சாரிச்சா, சொல்லுதாரு, வளியில தம்பிமாரு நாலு பேரும் தலை உருண்டு கெடுக்காமுண்ணு! பிடிச்சிது பாரு பீதி. ஒரே ஓட்டம், சாமியாண்ட ஓடினேன். பர்த்தா, மக்கா நம்பமாட்டே. அவ கையில புடிச்ச சூலத்துல ரெத்தஞ் சொட்டுது. கிளர்ந்து போசி பார்த்துக்க. சொத்தென்னடே சொத்த்! இவுக உசிர வெச்சிருந்தாக அவுக மேல. வெவரங்கெட்ட நாயிக, நாண்டுபோனாவ…”

கிழவியின் உடல் ஆடிக் கொண்டிருந்தது. பீதியில் எனக்கு வியர்த்திருந்தது. தொலைவில் ஒற்றை மாட்டின் குரல் ஒலிக்க, மணி மூன்றரை ஆகியிருந்தது. கிழவி, காலை நீட்டிப் படுத்துக் கொண்டாள். நான் எழுந்திருக்கலாமா என்று யோசித்தேன்.

“அந்தக் காத்தைக் கொஞ்சம் திருப்பி வையி” என்று உத்தரவிட்டாள் கிழவி.

நான் டேபிள்ஃபேனை அவள் பக்கமாகத் திருப்பினேன்.

“கேட்டியா? அவுக தம்பிமார் மயனுவ ஒவ்வொருத்தனுஞ் செத்ததும் இப்பிடித்தேன். மனசுல ஒரு கோணல் விளுந்திருச்சின்னு வையி. வீருமாராத்தா விளிச்சிகிடுவா. பதினெட்டு பொலி போட்டா. எத்தினி? பதினெட்டு! இப்பம் சுத்தி வாரானுவ ஆவிகளா. நல்லசாவு நேர்ந்தாத் தானே நல்ல கெதி வாய்க்கும்? கொள்ளியில போறவனுவ. பணப்பிச்சி பிடிச்சி அலைஞ்சானுவ. கொலைக்கு அஞ்சாதவனுவ பார்த்துக்க. ஆனுமுட்டும் என்னைப் போட்டுத் தள்ளப் பாத்தானுவ. ஏங்கிட்ட மந்திவேலி உண்டில்லா? நெருங்கினா எரிச்சிப் போடுமே?”

“அதென்ன ஆத்தா மந்திரவேலி?” என்றேன் ஆர்வம் தாங்கமாட்டாதவனாக.

“அவுக மொதமொத எங்கொரலைப் பிடிச்சிக்கிட்டு இறங்கி வாரப்ப குடுத்துப் போட்டுப் போனாரு. கண்ணுக்குத் தெரிஞ்சா அதெப்பிடி மந்திரமாவும்? சந்திரமதி தாலியொக்க அவுக மாட்டிவுட்டுப் போனத அவுக மட்டுந்தான் பாக்க முடியும். ஒரு காத்துக் கருப்பு அண்டனுமே? ம்ஹும்! ஷ்ட்ராங்! என்று ஆர்ம்ஸ் காட்ட்சி சிரித்தாள் கிழவி.

சன்னலைத் திறந்து பார்த்தேன். வானில் ஒரு விமானம் கடந்து மறைந்தது. தோட்டத்துச் செடிகள் மொக்கு விட்டிருக்க, கிழவி எழுந்து என் தோளைத் தட்டினாள்.

“பதினெட்டு தடியனுவள பொதச்ச பூமி இதா. பூத்திருக்கு பாரு, சீமெக்கரி லெச்சணமா.”

முதுகுத்தண்டு சிலிர்த்தது எனக்கு. அப்படியே சரிந்து படுத்தேன். மொட்டுகள் வெடித்து, வாசனை ம்தந்து வந்து நாசியில் நுழைய, நரம்புகள் செயலிழந்து உறங்கிப் போனேன்.

5

“ப்ரொபசர் இங்க எப்ப வந்து படுத்தீரு?” என்று மேனேஜர் எழுப்பியபோதுதான் கண் விழித்தேன். கொஞ்சம் முரண்டு பிடித்தபின் இரவு நிகழ்ந்தவை ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, “ஆத்தாவோட பேசிட்டிருந்தேன். அப்படியே தூங்கிட்டேன்” என்றேன் வெட்கமாக.

“ஆத்தாவா? அதுகு ராத்திரியே பேதியெடுக்க, ஆசுபத்திரிக்கில்ல கொண்ட்டு போனோம்?”

குழப்பமாயிருந்தது. “எப்ப போனீங்க?” என்றேன் சந்தேகமாக.

“நீங்க படுத்த நிமிஷம் தூங்கிட்டீகளா?” ஒம்பதரைக்கே அவுகளைத் தூக்கிட்டுப் போயிட்டம். அடிக்கடி வாரதுதான். ஆனா உசிரு கெட்டி. இந்தா, பத்து மணிக்கு வந்துருவாக பாரும்” என்றார் மேனேஜர்.

முற்றிலும் புரியாமல் நான் அந்த அறையைப் பார்த்தேன். பழைய உடைசல்களும் பிரப்புக் கூடைகளும் ஓர் உபயோகமற்றா சைக்கிளும் அங்கிருக்கக் கண்டேன். ஒட்டடை படிந்து, நான் கணக்கில் தரை கூட்டாமல் புழுதியும் குப்பையுமாயிருக்கக் கண்டு மேலும் குழம்பினேன்.

“பெரியவக இருந்த காலத்துல இது அவுக பெட்ரூம்பா இருந்தது. பிறவு ஆத்தா இந்தப் பக்கமே வாரதில்லை. என்னருந்தாலும்பளசு நெனப்பு வந்து கஷ்டமாவுமில்ல?” என்றார் மேனேஜர். நான் பதிலேதும் பேசவில்லை.

பல் துலக்கிவிட்டு, அவசரமாக அவருடன் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினேன். கிழவி ஒரு பழைய தாள் மாதிரி படுக்கையில் கிடந்தாள். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது.

“ஆத்தா! ஆத்தா!” என்று மேனேஜர் அழைக்க, ஒரு குகையிலிருந்து மீள்வது போல அவள் கண்கள் மயங்கித் திறந்தன. பேசும் சக்தி முற்றிலுமாக இருக்காது என்பஹ்டு பார்த்ததுமே புரிந்தது.

நம்ப முடியாமல், காய்ப்பேறிக் கறுத்துக் கிடந்த கிழவியின் கையை மெல்லத் தொட்டுப் பார்த்தேன்.

அடுத்த விநாடி ஜமீன் வீட்டுக்குத் தலை தெரிக்க ஓடினேன். மூன்றாம் கட்டுத் தாழ்வாரங்களைக் கடந்து வலப்புறம் மாடிப்படி அருகில் இருண்டு கிடந்த அந்த அறையை உதைத்துத் திறந்து இலக்கற்றுத் தேடினேன்.

இரும்பு வாளிகள், உபயோகமற்ற கரண்டிகள், உடைந்த ராட்டினம், தகரத் தகடுகள் எனக் குவிந்திருந்தனவற்றை விலக்கியபோது அது அகப்பட்டது. துருப்பிடித்து ஒரு குறுவாள். பாய்ந்து எடுத்து வெளிச்சத்தில் பார்த்தேன். பிடியில் ரத்தக்கறை படிந்து இருகியிருந்தது.

பிரமை பிடித்தவன் போல் சன்னலருகே வந்து நின்றேன். செடியோ, பூக்களோ அற்ற மண் மேட்டில் சுள்ளிகள் அடுக்கியிருக்கக் கண்டேன். [1999]

Share

12 comments

 • பேய் இருக்குதா இல்லையா ? பாத்துருக்காங்களா பாக்கலையா ? நம்பலாமா நம்பப்படாதா ? இதுக்கு பதில் சொல்லுங்க முதல்ல ?

 • சிறுகதைகள் படித்து வருடக்கணக்கில் ஆகி விட்டது. வெளியே வெகு நேரம் காத்துருக்கும் சமயங்களில் இப்போது உங்கள் பழைய தலைப்புகள் பல விசயங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. படித்து ஊக்கமாய் இருந்த பத்து கட்டளைகளைப் போலவே இந்த கதையில் உள்ள வரிக் கோர்வைகள், லாவகம், எளிமை போன்றவை மிகுந்த ஆச்சரியத்தையும் தந்தது. ஒரு வருடமாய் தொடர்ந்தாலும் ஒவ்வொன்றும் புதிதாய் பிறப்பது போல் இருக்கிறது. அதுவே அரிச்சுவடியில் இருக்கிறாய் என்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.

 • //அவர் ஜமீனின் குதிரை லாயத்தில் சாணமள்ளிப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஒரு பரம்வீர் சக்ராவுக்குப் பதிலாகக் குழாய் மாட்டி ஸ்டேஷனில் அமர்த்தியிருப்பார்கள், சேவையைப் பாராட்டி.// கலக்கல்…

 • இரா முருகனின் அரசூர் வம்சம் ஜமீன் விவரிப்பு (காட்சிகள்)இங்கிருந்து தான் போயிற்று போல… என்ன விவரிப்பு அய்யா!

  அறுக்கிறதுக்கு எங்க ஊரில் கீசரதுன்னு சொல்வாங்க… இந்த கதை தளம்… பாசை… கொங்கு மண்டலம் அல்லது மதுரை மையம் தானா?

  கிழக்கு பதிப்பகத்தில் இந்த புத்தகம் ( தொகுதி ) வந்துள்ளதா?

  – ஆமா ஓனர் கடையிலே அவிக புக் வராதா என்ன?

  • நண்பன்: முருகன், எனக்கு எழுதச் சொல்லிக்கொடுத்தவர்களுள் ஒருவர். அவரது சாறு என் எழுத்தில் இறங்கியிருக்கும். நீங்கள் மாற்றிச்சொல்கிறீர்கள்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter