உற்றார்

பூமியாகப்பட்டது, தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வந்தபோது, மீனாட்சி மாமியின் எண்பது வயதுக் கணவருக்குப் பக்கவாதம் வந்தது. அதே பூமி சூரியனையும் சுற்றி வந்தபோது மீனாட்சி மாமிக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து உடம்புக்கு முடியாமல் போய் ஆசுபத்திரியில் சேர்க்கப்பட்டார்.

காலனி முழுக்க அதுதான் பேச்சு. ஐயோ பாவம் மாமி. படுக்கையை விட்டு எழமுடியாத கணவரை நினைத்தபடியே ஆஸ்பத்திரியில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருப்பார். பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் இல்லை. காலனியில் உள்ள முப்பது குடித்தனக்காரர்களுக்கும் மாமி என்றால், சொந்தமாகப் பெற்று எடுத்த அம்மாவைப் போல ஒரு இது. சிநேகிதங்களைத் தவிர சொத்து எதுவும் சேர்த்து வைத்திராத மாமி. கோடையில் இலை வடாமும் மாங்காய் வற்றலும் கொண்டைக்கடலை ஊறுகாயும் போட்டுக்கொடுத்து, வாடாத உறவுகளை எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டுவிடுகிற மாமி.

மாமி, உங்களுக்கு மட்டும் கைமுறுக்கு எப்படி இப்படித் தாமரைப்பூவா அமையறது? மாமி, புளியோதரை வாசனை தூக்கி அடிக்கிறதே? மாமி, நீங்க காப்பிதான் போடறீங்களா? உங்க காப்பிக்குன்னு ஒரு ஸ்பெஷல் வாசனை எப்படியோ வந்துடறதே. மைகாட், மாமி எப்படி வீட்டை இவ்ளோ சுத்தமா வெச்சிக்கறேள்? பின்றேள் போங்கோ.

அற்ப விஷயங்களின் தேவதையாகத் தனது எழுபதாவது வயதில் மாமி அந்தக் காலனியில் அறியப்பட்டார். உடம்புக்கு முடியாத கணவரும், உதவிக்கு ஆளில்லாத வாழ்க்கையும் வருத்தம் தரக்கூடியவைதான். ஆனாலும் பிரச்னையில்லை. வாழ்க்கை அழகானது. அர்த்தமுள்ளதாக்க வேண்டியதும் அவசியமானதே. வலியச்சென்று ஒரு பாட்டில் ஊறுகாய் போட்டுக் கொடுத்து வாழ்நாள் விசுவாசத்தை வாங்கிவிட முடிகிறது. உடனடியாக எதுவும் பிரதியாகச் செய்யவேண்டுமென்பதில்லை. கட்டையைக் கிடத்தினால் எடுத்துப் போட நான்குபேர் வேண்டித்தானே இருக்கும்?

மாமி, மாமாவுக்கு சிசுருஷை செய்த நேரம் போக, சுலோக கிளாஸ் எடுக்கிறேன் என்று அறிவித்தார். பக்தி எப்போதும் விலைபோகக் கூடியது. வேலைகள் ஒழிந்த பதினொன்றரை மணிக்குப் பத்துப் பன்னிரண்டு பெண்கள் அவரிடம் சுலோகம் கற்றுக்கொள்ள வரத்தொடங்கினார்கள். ஸ்ரீசூக்தம். லஷ்மி அஷ்டோத்திரம். கனகதாரா ஸ்தோத்திரம். லலிதா சஹஸ்ரநாமம். மாமி, ஃபீஸ் எவ்ளோன்னு சொல்லுங்கோ. சீ போடி, அதெல்லாம் பேசப்படாது.

அவர்கள் மாமியிடமிருந்து நிறைய பெற்றவர்கள். அதனால் அவர்களுக்கு ஒரு பிரச்னையென்றால் யாரும் விட்டுவிடக்கூடியவர்கள் இல்லை. சி பிளாக் அகிலா, மாமாவுக்குக் காலை டிபன் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள். ஏ-டூ சந்தான லட்சுமி மதிய உணவு தன்னுடையது என்று சொன்னாள். மாமா இரவில் சாப்பிடுவது வெறும் கஞ்சிதான். அது ஒரு பிரச்னையா? பக்கத்து போர்ஷனில் இருக்கிறேன். நான் செய்ய மாட்டேனா என்று காயத்ரி கேட்டாள். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களுக்கு இளைப்பாற இடமில்லாமல் இல்லை.

மாமாவின் மாத்திரைகள், மாமாவின் பெட்-பேன், மாமாவின் டிரான்சிஸ்டருக்கு வீரியம் குறையா ட்யூராசெல், அவ்வப்போது சைகை செய்தால் நெஞ்சு நனைக்கக் குடிநீர், பக்கத்திலிருந்து எப்போதும் கவனித்துக்கொள்ள ஷிப்ட் முறையில் பொறுப்புள்ள நபர்.

மாமி, கவலையே படாதீர்கள். மாமாவைப் பார்த்துக்கொள்ள வேண்டியது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ட்ரீட்மெண்ட் முடித்துக்கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று காலனியே புடைசூழ்ந்து வாக்களித்தது. ஹெல்த் செண்டர் கட்டிலில் பலவீனமாகப் படுத்திருந்த மாமி, புன்னகையில் நன்றி சொன்னாள். திக்கற்றவர்களுக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தெய்வங்கள்.

‘என்னமோ போங்கோடி. நீங்கள்ளாம் எங்கெங்கேருந்தோ, யார் யார் வயித்துலயோ உதிச்சி வந்திருக்கேள். நான் என்ன பண்ணிட்டேன் உங்களுக்கெல்லாம்? இப்படிப் பெத்த தாய் மாதிரி பாத்துக்கறேளே.’ குளூகோஸ் பாட்டில் ஒன்றிரண்டு ஏற்றப்பட்ட பிறகு மாமிக்குக் கொஞ்சம் பேச்சு வந்தது. ஆஸ்பத்திரியில் அதுவரை ஆன செலவை ஏ பிளாக் விசுவநாதன் பார்த்துக்கொண்டார் என்று தெரிந்ததும் மாமியின் விழியோரம் ஒரு சொட்டுக் கண்ணீர் தெரிந்தது. முப்பது வீட்டுக்காரர்களும் இப்போதே டிஸ்சார்ஜ் நிதி சேர்த்து காயத்ரியிடம் கொடுத்தனுப்பியிருக்கும் விஷயத்தைத் தாமதமாகச் சொன்னார்கள். மாமி மூக்கையும் கண்ணையும் சேர்த்துத் துடைத்துக்கொண்டார்.

‘ஐயோ மாமி உணர்ச்சிவசப்படாதிங்கோ. பிபி ஏறிடப் போறது.’

‘இறங்கினதுதானே பிரச்னை? ஏறட்டும், வீட்டுக்கு வந்துடுவா.’

எதிர்பார்ப்பவர்களை ஏமாற்றுவது அழகல்ல. மாமி சற்றே சிரிக்க முயற்சி செய்தார். திரும்பவும், வீட்டிலிருக்கும் தன் கணவரின் உடல்நிலை பற்றிக் கேட்டார். அவர் ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா? ஆறு முறை ஒன்றுக்குப் போகிறாரா? ஒரு பாட்டில் தண்ணீராவது முழுக்கக் குடிக்கிறாரா? மருந்து மாத்திரைகள்? சுவாமி அலமாரியில் குருவாயூரப்பன் போட்டோவுக்குப் பின்னால் மின்சார அட்டை இருக்கிறது. நாளைக்கு ட்யூ டேட். அட்டைக்குள்ளேயே பணமும் இருக்கிறது.

‘நாங்க பாத்துக்கறோம் மாமி.’

‘நெனவு தப்பி விழுந்ததுல எல்லாம் போட்டது போட்டபடி ஆயிடுத்தேடி. ஸிங்க்லே பத்துப்பாத்திரம் தேய்க்காம கிடக்கும்.’

‘எல்லாம் தேய்ச்சாச்சு மாமி.’

‘ஆருடி பண்ணினது?’

‘காயத்ரி வீட்டு வேலைக்காரி போய் துலக்கிவெச்சிட்டு வந்துட்டா.’

‘நன்னா இருக்கட்டும்.’

மாமி கண்களை மூடிக்கொண்டாள். கூடுதலாக மூச்சு வாங்குவதுபோல் இருந்தது. கொஞ்சம் அமைதி தேவை. குடுகுடுவென்று ஓடிக்கொண்டிருந்தவரை ஒன்றுமே தெரியவில்லை. மாமா பக்கவாதம் வந்து விழுந்தபோதுகூட மாமி ஒருநாள்தான் அதிர்ச்சியில் இருந்தாள். மறு தினமே புடைவையை இழுத்துச் சொருகிக்கொண்டு தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.

‘வேற என்ன பண்ணச் சொல்றேடி? கவலைப்பட்டுண்டு உக்காந்திருந்தா கஞ்சிக்கு யார் பொறுப்பு? என்னை அவர் தாங்கினார். அவரை நான் தாங்கத்தானே வேணும்?’

மாமா, பிடபிள்யூடியில் வேலை பார்த்து ரிடையர் ஆனவர் என்று மாமி சொல்லியிருக்கிறாள். காலனிக்கு அவர்கள் குடி வந்தபோதே ஓய்வுபெற்ற தம்பதியராகத்தான் வந்தார்கள். பிள்ளைகளும் பெண்களும் அமெரிக்காவில் இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தில் ரொம்பநாள் வரைக்கும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் வீட்டில் ஒரு டெலிபோன் கனெக்‌ஷன் கூட இல்லாதது உறுதியபோதுதான் மெல்ல விசாரித்தார்கள்.

‘நாமிருவர் நமக்கிருவரெல்லம் ஊருக்கு. எங்களுக்கு, நமக்கு நாமிருவர். அவ்ளோதான்’ என்று சிரித்தபடி மிளகாய்ப்பொடிக்கு வறுத்துக்கொண்டிருந்தார் மாமி.

’ஓ, சாரி மாமி’ என்றாள் டி-4 லாவண்யா.

‘எதுக்குடி சாரி? இருவத்தஞ்சு வயசுல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. எழுவத்தஞ்சுல என்ன கஷ்டம்? எல்லாம் பழகிண்டுடறதுல இருக்கு. தலைக்குமேல வெச்சு தாங்கற புருஷன் போதாதா? முப்பது வருஷம், ஒரு மாசம் தவறாம, புதுப்புடைவை வாங்கித் தந்திருக்கார். எந்த மனுஷன் செய்வான் சொல்லுங்கோ.’

மாமிக்குத் தன் கணவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவது தெரியாது. அன்பான கணவர். அக்கறைமிக்க கணவர். பொதுப்பணியோடு குடும்பப் பணிகளிலும் குறை வைக்காத கணவர். ஓய்வு பெறும் வயது பொதுவானது. முதுமை பொதுவானது. நோய்கள் பொதுவானவை. ஓடிக்களைத்தவர் இன்று படுத்துக் கிடக்கிறார். அதனாலென்ன? மாமியால் இன்னும் ஓட முடிகிறதே. போதும்.

மாமாவின் பென்ஷன் ஏழாயிரமோ என்னவோ வருவதாக மாமி ஒருமுறை சொல்லியிருக்கிறார். இருவருக்குச் சாப்பாடு, வாடகை, மருந்து மாத்திரைகள். ஒரு அவசர ஆத்திரத்துக்கு மாமி என்னதான் செய்வாள்? காலனிவாசிகள் ஊறுகாய் பாட்டிலுக்கும் சுலோக கிளாசுக்கும் மற்றதுக்குமாக எப்படியாவது முடிந்ததைக் கொடுக்க முயற்சி செய்துகொண்டேதான் இருந்தார்கள்.

ம்ஹும். மூச்சு விடப்படாது.

‘நீங்க பண்றது அநியாயம் மாமி. கடையிலே காசு குடுத்து வாங்கினா ஒரு பாட்டில் ஊறுகாய் என்ன விலை தெரியுமா?’

‘என்னவா இருந்தா எனக்கென்னடி? என் பொழுதுபோக்குக்கு நான் ஊறுகாய் போடறேன். பிபி இருக்கு, நான் சாப்பிட முடியாது. வெச்சிண்டு என்ன பண்றது? நன்னா இருக்குங்கறேள். சப்பு கொட்டிண்டு சாப்பிடறேள். அதுவே திருப்தி. போதும் போ.’ என்று சொல்லிவிடுவார்.

ஒரு சமயம் ஈ 14 சந்திரசேகரன் பிள்ளைக்குத் தீராத ஜுரம். ஆறு வயசுப் பையன். குரோசின் கொடுத்துப் பார்த்ததில் ஆரம்பித்து, ரத்தப்பரிசோதனை அளவுக்குச் சென்ற பிறகு பன்றிக் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார்கள். பதறிவிட்டது காலனி. சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் வசித்த சந்திரசேகரனுக்கு இரண்டு குழந்தைகள். இன்னொன்றுக்குத் தொற்றிக்கொண்டு விடப்போகிறதென்று அவர் தவித்த தவிப்பு சொல்லி மாளாது.

மாமிதான் தீர்மானமாகச் சொன்னாள். ‘சந்துரு, குழந்தைய எங்காத்துல கொண்டுவந்து விட்டுடுங்கோ. நான் பாத்துக்கறேன்.’

வாய் வார்த்தைக்குச் சொல்பவரில்லை அவர். விடுவிடுவென்று சந்திரசேகரன் வீட்டுப் படியேறி, சுவரோரம் சுருண்டுகிடந்த பையனைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு நேரே தன் போர்ஷனுக்குப் போய் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுவிட்டாள்.

அச்சத்தில் ஒருவாரம் காலனி முழுக்கக் கதவு திறக்கவில்லை. விளையாடும் பிள்ளைகள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் அடைத்துவைத்தார்கள். ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டுக் குடும்பத்துடன் ஊருக்குப் போனார்கள். சந்துருவும் அவர் மனைவியும் மட்டும் மாமி போர்ஷனுக்கும் பிள்ளையார் கோயிலுக்கும் மருத்துவமனைக்குமாக நடந்தார்கள். பையன் பிழைத்து எழுந்தபிறகு மாமிக்கு மஞ்சள், குங்குமத்துடன் கோ ஆப்டெக்ஸ் புடைவை வைத்துக் கொடுத்து விழுந்து சேவித்து நன்றி சொன்னார்கள்.

‘உங்க தைரியம் யாருக்கும் வராது மாமி.’

‘என்ன பேசறே நீ? இதுக்கு தைரியம் என்னத்துக்கு? குழந்தை உசிரில்லையா முக்கியம்?’

எல்லோருக்கும் யாராவது பெரியவர்கள் வேண்டியிருக்கிறார்கள். எப்போதாவது ஆலோசனை கேட்க. எப்போதாவது ஆசி வாங்க. எப்போதாவது எண்ணி நெகிழ்ச்சியுற. மீனாட்சி மாமி, அந்தக் காலனியின் நடமாடும் பழுத்த பெண் தேவதையாக அறியப்படத் தொடங்கியது அதன்பிறகுதான். மாமி, பரீட்சைக்குப் போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்கோ. மாமி கரெக்டா எட்டரைக்கு காக்காய்க்கு சாதம் வைக்க வெளிய வருவா. அப்ப வீட்டை விட்டுக் கிளம்பு. மாமி, முடக்கத்தான் கீரையிலே தோசை பண்ணமுடியும்னு சொன்னிங்களே, எப்படி?

0

பூமி திரும்பவும் தன்னைத்தானே மூன்று முறை சுற்றிய பிறகு மாமியை ஹெல்த் செண்டரில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஏகப்பட்ட டெஸ்ட் ரிசல்டுகளும் எக்ஸ் ரே, ஈசிஜி ரிப்போர்ட்டுகளும் பெட்டி பெட்டியாக மாத்திரைகளும் மருந்து பாட்டில்களும் பிளாஸ்டிக் கூடையை நிறைத்தன. வாழ்நாளில் ஒருமுறைகூட மருத்துவப் பரிசோதனை என்று செய்துகொண்டிராத மாமிக்கு சர்க்கரை இருக்கிறது. ரத்த அழுத்தப் பிரச்னை இருக்கிறது. அடிக்கடி முதுகு வலி என்று சொல்வதை டாக்டரிடம் சொன்னபோது அப்டமன் ஸ்கேன் எடுக்கச் சொல்லி, சிறுநீரகத்தில் இரண்டு கற்கள் என்று தெரியவந்திருக்கிறது.

‘மீனாட்சி மாமி, நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். வயதுக்கேற்ற உழைப்பு போதும். ரொம்ப சிரமப்படுத்திக்கொள்ளாதீர்கள்.’

மாமி வழக்கம்போல் சிரித்தார். ஈஸ்வரன் சித்தம் என்று புத்தி போட்டுக்கொண்டார். டாக்டருக்கும் நர்ஸ்களுக்கும் ஆயாக்களுக்கும் நன்றி சொல்லி பிளாஸ்டிக் கூடையுடன் வெளியே வந்தார். காலனிவாசிகள் ஆட்டோ கூப்பிட்டு ஏற்றி அலுங்காமல் அழைத்துப் போனார்கள்.

உலகம் மாறவில்லை. உயிர்கள் மாறவில்லை. போட்டது போட்டபடி விட்டுச் சென்ற வீடு அப்படியேதான் இருக்கிறது. பக்கவாதத்தில் படுத்துக்கிடக்கும் மாமியின் கணவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். மூன்றுநாளில் அவரிடமும் பெரிய மாற்றமில்லை. நல்லவர்கள் நன்றாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மீனாட்சி, எப்படி இருக்கே? அவர் பார்வை கேள்வி கேட்கிறது. எனக்கு ஒண்ணுமில்லை. பதில் பார்வை பதில் சொல்கிறது. அறுபது வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்துவிட்டவர்களுக்கு சொற்கள் அநாவசியம்.

மாமியின் கண்கள் நிறைந்திருந்தன. ’உங்களுக்கெல்லாம் எப்படி நன்றி சொல்லுவேன்? பெத்த பிள்ளைகள் மாதிரி என்னையும் என் ஆத்துக்காரரையும் பாத்துண்டிருக்கேள்.’

நெகிழ்ச்சியில் அவர் குரல் நடுக்கம் கண்டது.

‘ஐயோ மாமி, என்ன பேசறிங்க? இது எங்க கடமை இல்லியா? ஏன் வேத்து மனுஷங்களா நினைக்கறிங்க?’

‘சந்தோஷம்டி. போதும்டி எனக்கு. இந்த ஜென்மத்துக்கு இது போதும்டி பொண்ணுகளே.’

‘இதோ பாருங்கோ மாமி, டாக்டர் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்லியா? இனிமே நீங்க பழையபடி சூப்பர் லேடி மாதிரி ஓடிண்டிருக்கப்படாது. உக்காந்த இடத்துல மாமாவ பாத்துக்கறதோட நிறுத்திக்கணும், ஆமா.’

மாமி சிரித்தார். ‘எப்படிடி முடியும் கோகிலா? வேளைக்கு வயித்துல மணி அடிச்சுடறதே.’

‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். நீங்க இப்படி ஏதாவது சொல்லுவிங்கன்னு தெரிஞ்சிதான் நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கோம்.’

‘என்னதுடி?’ என்றார் மாமி. திரும்பித் தன் கணவரை ஒருமுறை பார்த்துக்கொண்டார். உணர்ச்சியற்ற முகத்தில் அவர் வெளிப்படுத்துவதுதான் என்ன? புதிய ஏற்பாட்டை முன்னதாக அவரிடம் சொல்லியிருப்பார்களா?

‘நல்ல இடம் மாமி. ஏ க்ளாஸ் சர்வீஸ். தனி ரூம் தந்துடுவா உங்க ரெண்டு பேருக்கும். ரூம்ல டிவி உண்டு. கட்டில் உண்டு. வேளைக்குச் சாப்பாடு. டாக்டர் உண்டு. ஹெல்ப்பர் உண்டு. காம்பவுண்டுக்குள்ளயே கோயில் இருக்கு. கடைசி வரைக்கும் ஒரு பிரச்னையும் இருக்காது. இருக்கறவா எல்லாரும் டீசண்ட் பீப்பிள். நீங்க சௌக்கியமா இருக்கலாம்.’

‘என்ன சொல்றேள் நீங்க? ஒண்ணும் புரியலியே’ என்றார் மீனாட்சி மாமி.

’புதுசா திறந்திருக்கா மாமி. பேப்பர்லல்லாம்கூட விளம்பரம் வந்துதே, ஸ்டார் ஓல்ட் ஏஜ் ஹோம்.. பாக்கல நீங்க?’

மாமி பதில் சொல்லவில்லை. சில வினாடிகள் மௌனமாக இருந்தார்.

‘என்ன மாமி? பேசமாட்டேங்கறேளே.’

சட்டென்று திரும்பிச் சிரித்தார். ‘என்னடி பேசறது? பிள்ளை இல்லாத குறை தீர்ந்தது போ’ என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போனார். மாமா கண்ணை மூடிக்கொண்டு தூங்க ஆரம்பித்தார்.

[நன்றி: கல்கி தீபாவளி மலர் 2010]
Share

11 comments

 • க்ளாஸ் ராகவன். மாமி சொல்லும் கடைசி வசனத்தில் மொத்தக் கதையும் ஒரு யூ டர்ன் அடித்து விட்டது. அபாரம். பகிர்விற்கு நன்றி.

 • ==== “என்னடி பேசறது? பிள்ளை இல்லாத குறை தீர்ந்தது போ” ====
  கிளாஸ்.ஒரு வரியில் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டது.

 • ராகவன், உங்கள் விரல்களுக்கு ஒரு வைரமோதிரம் தான் பண்ணிப்போடவேண்டும். மீனாட்சி மாமியிடம் சொல்லி சுத்திபோடச் சொல்லுங்கோ! மனதை நிறைக்கிறது.

  பாரதி மணி

 • சிறுகதை என்றுதானே முகப்பில் பார்த்ததாக நினைவு ? சுட்டியை
  உருட்டி உருட்டிக் கீழ்நுனி வரை வந்து விட்டோமே, கொஞ்சம் உருட்டினால் இந்தப் பக்கமே முடிந்து விடப் போகிறதே, இன்னும்
  இரண்டு மூன்று பாகம் இருக்குமோ என்று ஏதேதோ நினைத்துக்
  கொண்டிருந்தபோது, முகத்தில் தண்ணீரை அறைந்தாற்போல
  சட்டெனக் கதை நிறைந்து விட்டது. நிறைவான கதை. 🙂

 • குரு கொன்னுடிங்க போங்க

  (அறுபது வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்துவிட்டவர்களுக்கு சொற்கள் அநாவசியம்.)

 • மனசு நிறைந்து விட்டது . பகிர்வுக்கு நன்றி

 • பிள்ளை இருந்தாலும் முதியோ இல்லம்தான் என்று முடித்திருப்பது???

 • super raghavan. especially the last line means a lot.in my life also i came across one mami like yours.that relationship still worth a lot to me.aii the best

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter