பக்தன்

எப்போதும்போல் ஒழுங்காக இணையத்தில் எழுத முடியாத சூழல். கொல்லும் பணிகள். எனவே அவ்வப்போது ஆவதுபோல் அவ்வப்போது மட்டுமே இப்பக்கம் வர முடிகிறது. இடையே, ஏன் எழுதவில்லை, என்ன ஆயிற்று என்று அக்கறையுடன் தனி அஞ்சலில் விசாரிக்கும் நண்பர்களுக்கு ஒரு சொல்: வேலை அதிகம், வேறொன்றுமில்லை. இதுவும் எப்போதும் போலவே.

இடையே வெகுநாள்களுக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுதினேன். இன்று தினகரன் வசந்தத்தில் அது பிரசுரமாகி உள்ளது. இணைய வாசகர்களுக்காக அது இங்கே – தினகரன் வசந்தம் வார இதழுக்கு நன்றியுடன்.

***

ஒரு கிளிக்கூண்டு வேண்டும்.

ஆறு வீட்டுப் பிள்ளைகளும் ஏகமனதாக முடிவு செய்து அவரவர் பெற்றோரிடம் மனுத்தாக்கல் செய்தபோது, அப்பார்ட்மெண்ட் வாசலில் மூன்றடிக்கு நான்கடி பரப்பில் கோயில் கொண்டிருந்த பிள்ளையாருக்கு வயிற்றைக் கலக்கியது. நைவேத்தியப் பலகாரத்தில் பிரச்னையிருக்கும் என்றெல்லாம் சிந்திக்கவே முடியாது. அவர் சாப்பிட்டுப் பலகாலம் ஆகியிருந்தது. வாசலில் ஒரு ஜென்மம் வீற்றிருக்கிறது, அதற்குக் கொழுக்கட்டையும் சுண்டலும் இல்லாவிட்டாலும் ரெண்டு இட்லியும் கெட்டி சட்டினியுமாவது கொண்டு வைக்கலாம் என்று நினைக்க யாருமில்லை.

புதிய பிளாட் வாங்கிக் குடியேறும் ஆறு பேரும் கோர நாத்திகர்களாயிருக்கக்கூடும் என்று பிரமோட்டர் நினைத்திருக்க முடியாது. எப்போதும் போல ப்ளான் அப்ரூவலில் பிள்ளையார் சந்நிதிக்கு மூன்றுக்கு நாலடி இடம் காட்டி, கைகூப்பித் தொழுது, கட்டி முடித்துக் கொண்டு வைத்துவிட்டு, விற்ற பணத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வேறு பேட்டைக்குப் போய்விட்டார். கோயில் கொண்ட நாளாக ஒரு கும்பிடு இல்லை. தோப்புக் கரணமில்லை. மணியோசை இல்லை, விளக்கேற்ற ஒரு நாதியில்லை.

பிள்ளையார், தாய்க்குலத்தை மிகவும் நம்பியிருந்தார். அவர்கள் நிச்சயம் நாத்திகர்களாக இருக்கமாட்டார்கள். பக்திப் பரவசம் மேலோங்காவிட்டாலும் பார்த்த மாத்திரத்தில் ஒரு கும்பிடுக்குக் குறையிருக்காது என்று நினைத்திருந்தார். ஆனால் இதென்ன கலித்தாண்டவம்! ஆறு வீட்டுப் பெண்களும் அவரவர் புருஷன்களுக்கு முன்னால் அள்ளி அடைத்துக்கொண்டு ஆபீசுக்கு ஓடி, இருட்டி இரண்டு நாழிகை கழித்து சுருண்டு வீடு வந்து விழுகிறார்கள்!

வாழ்க்கைத் துணைகளை முழுதாகப் பார்ப்பதே வாரம் ஒருமுறை என்னும் பட்சத்தில் வாசல் பிள்ளையாருக்கு வருடத்தில் ஒருநாள் ஒதுக்கினால் போதும் என்று நினைத்திருப்பார்களாயிருக்கும். பிள்ளையார் தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.

ஆனால் விதி வலியது. பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை நாளில்கூட அப்பார்ட்மெண்டில் யாரும் அவரை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஊரெல்லாம் மண் பிள்ளையார்கள் சிவப்புக் கண்ணும் சந்தனப் பொட்டும் கலர்க் குடைகளுமாக பவனி வந்துகொண்டிருக்க, அப்பார்ட்மெண்டில் அவர் எப்போதும்போல் அநாதையாகத் தனித்துக் கிடந்தார். ஆறு வீடுகளிலும் தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தன. அபூர்வமான விடுமுறை தினம். துணி துவைக்கலாம். டிவி பார்க்கலாம். திருப்தியாகச் சாப்பிட்டுப் பகலிலும் ஒருமுறை படுத்துத் தூங்கலாம்.

பாவிகளா, நான் இல்லாமல் உங்களுக்கு இந்த வசதி வாய்ப்புகள் வந்துவிட்டதாகவா நினைக்கிறீர்கள்?

பிள்ளையாருக்குக் கோபத்தைக் காட்டிலும் துக்கமே மிகுந்தது. அடக்கிக்கொண்டார். பிள்ளைகள் தவறு செய்யத்தான் செய்யும். பிள்ளையார்தான் பொறுத்துப் போகவேண்டும். அவருக்கும் ஒரு காலம் வருமல்லவா? உறுமீன் வருமளவும் பிள்ளையார்க் கொக்கு காத்திருக்கும்.

ஆறிலொருவன் டிரான்ஸ்பர் ஆகிப் போனான். வாடகைக்கு வந்த சிவசுப்பிரமணியன், அதிர்ஷ்டவசமாக ஆத்திகனாக இருந்தான். மூட்டை முடிச்சுகளுடன் இறங்கும்போதே சந்நிதியின் முன்னால் ஒருகணம் நின்று கைகூப்பிவிட்டு அவன் நகர, பிள்ளையாருக்குச் சிலிர்த்துப் போனது. பக்தா, சிவசுப்பிரமணியா, நீ மட்டும் ஒழுங்காக என்னைத் தொழுதுகொண்டு வா; மற்ற வீட்டுக்காரர்கள் அத்தனை பேரும் பொறாமைப்படும் உயரத்துக்கு உன்னைத் தூக்கி வைக்கிறேனா இல்லையா பார் என்று மனத்துக்குள் உரத்துக் கூவினார்.

அவனுக்கும் பல பிரச்னைகள் இருந்தன. மனைவி ஊரில் இருந்தாள். பிரசவம் முடித்து அவள் குழந்தையுடன் திரும்பி வர எப்படியும் எட்டு மாதங்களாகும். அதுவரை அவனும் பிள்ளையாரைப் போல பிரம்மச்சாரி. ஆபீஸ் முடித்து, ஹோட்டலில் சாப்பிட்டு, தியேட்டரில் வாழ்ந்துவிட்டு உறங்குவதற்கு வீட்டுக்கு வருவான். பெரும்பாலும் பக்தி செய்ய நேரமிருக்காது.

ஆனபோதிலும் பிள்ளையாருக்கு அவனது சகாயம் வேண்டியிருந்தது. குறைந்தபட்சம் அவன் நாத்திகனில்லை. மனத்தில் நினைக்கும் பொழுதுகள் வெகு சொற்பமென்றாலும் கடந்து போகும்போதெல்லாம் கைகூப்பத் தவறுவதில்லை. அவன் தான் இப்போது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யப் போகிறான் சிவசுப்பிரமணியன்?

‘லெட் அஸ் கன்வர்ட் தட் டெம்ப்பிள்’

பிள்ளையார் எதிர்பார்த்தபடியே கோயிலுக்கு உலை வைத்துவிட்டார்கள். சந்நிதியைக் கிளிக்கூண்டாக மாற்றுவது பெரிய விஷயமில்லை. உள்ளே இருக்கும் பிள்ளையாரை காலி பண்ணிவிட்டு வாசலுக்கு ஒரு கம்பி வேலி போட்டுவிட்டால் தீர்ந்தது விஷயம். பிள்ளைகள் பரவசமாகிவிடுவார்கள். பச்சைக்கிளிகளும் காதல் கிளிகளும் வண்ணவண்ணக் கிளிகளும் மூன்றுக்கு நாலடிக் கூண்டில் கொஞ்சி விளையாடும். வேளைக்கு அவற்றுக்குக் கொட்டைகள் கிடைத்துவிடும். கொட்டாங்குச்சி கப்பில் பால் வைப்பார்கள். வாசலில் போகிற தள்ளுவண்டி பழக்காரனை நிறுத்தி மாதுளை வாங்கி உரித்து கம்பிக்குள் வீசுவார்கள். கிக்கிக்கிக்கிக்கீ என்று இரவும் பகலும் அவை ஓயாமல் சத்தமிட்டு விளையாடும். சந்நிதி சாந்நித்தியம் பெறும்.

பிள்ளையாருக்கு துக்கம் தாளவில்லை. தவறான இடத்தில் மாட்டிக்கொண்ட சரியான கடவுள். பக்தா, சிவசுப்பிரமணியா உன்னை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை. எப்படியாவது என்னைக் காப்பாற்று.

அன்றிரவு பிள்ளையாருக்கு ஒரு கனவு வந்தது. ஃப்ளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் மீட்டிங்கில் அவர் சார்பாக சிவசுப்பிரமணியன் காரசாரமாக வாதம் செய்துகொண்டிருந்தான். பிள்ளையார் கோயிலைக் கிளிக்கூண்டாக மாற்றுவது தவறு. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், நீங்கள் வெறும் டெனண்ட். உங்கள் ஹவுஸ் ஓனரிடம் நாங்கள் பேசிவிட்டோம்’ என்றார் மூன்றாம் நம்பர் வீட்டுக்காரர்.

‘ஆனாலும் நான் வாடகை கொடுக்கிறேன். இப்போது இங்கே வசிக்கிறவனும் நான் தான்.’

‘உங்களுக்கு வேண்டுமென்றால் பிள்ளையார் சிலையை எடுத்துப் போய் உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது.’

சட்டென்று பிள்ளையாரின் கனவு கலைந்துவிட்டது. ஆனால் கனவில் உருப்படியாக ஓர் ஐடியா கிடைத்துவிட்ட சந்தோஷம் அவருக்கு இருந்தது. எப்படியாவது சிவசுப்பிரமணியன் மனத்துக்குள் இந்த யோசனையை தோன்றிவிட வேண்டும். என்னை எடுத்துப் போய் வீட்டுக்குள் வைத்துவிடு என் அருமை பக்தனே.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலை அத்தனை வீட்டுக்காரர்களும் முதல் முறையாகப் பிள்ளையார் கோயில் அருகே வந்து கூடி நின்றார்கள். சிவசுப்பிரமணியன் சற்றுத் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தான். பிள்ளையாருக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுதான். இவ்வளவுதான். எடுத்துவிடுவார்கள். பக்தன் சிவசுப்பிரமணியன் என்ன முடிவு செய்திருக்கிறான்?

அவரது பதற்றம் யாருக்கும் புரியவில்லை. எடுத்துவிடலாமா என்று ஒருவர் கேட்டார். ‘ஓயெஸ்’ என்று இன்னொருவர் ஆமோதித்தார். பிள்ளைகள் கிளிக் கனவுகளில் ஹோவென்று கத்திக்கொண்டு அங்குமிங்கும் குதித்து ஓடினார்கள். ஜாக்கிரதையாக சன்னிதியைத் திறந்து, பீடத்தின் மீதிருந்து பிள்ளையாரை வெளியே எடுத்தார் இரண்டாம் நம்பர் வீட்டுக்காரர். வெற்றிக்கோப்பையை ஏந்திய விளையாட்டு வீரன் மாதிரி அனைவரையும் பார்த்துச் சிரித்தார்.

‘மிஸ்டர் சிவசுப்பிரமணியன், எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனாலும் நீங்கள் ஆத்திகர்.. புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்…’

சிவசுப்பிரமணியன் புன்னகை செய்தான். இரண்டடி முன்னால் வந்து பிள்ளையாரை வாங்கிக்கொண்டான். தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டான். பிள்ளையாருக்கு ரத்த அழுத்தம் 140/100 ஆகியிருந்தது. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று. பக்தா காப்பாற்று.

காரியம் முடிந்த திருப்தியில் ஐந்து வீட்டுக்காரர்களும் அவரவர் போர்ஷன்களுக்குப் போனார்கள்.

சிவசுப்பிரமணியன் அவரை ஏந்திக்கொண்டு நேரே கிணற்றடிக்கு நடக்க ஆரம்பித்தான்.

Share

23 comments

 • யார் பக்தன்? கலியுகத்தில் கடவுள்தான் மனிதனை வேண்டுவான். நல்ல களன், நல்ல நடைன்னு திருப்பதிக்கே லட்டு, சரி வேணாம் ரெண்டு இட்லி கொடுத்தா மாதிரி ஆயிடும்!

  துவாக்கள் உம்மை கும்ம எக்ஸ்ட்ரா வாழ்த்துகள்!

 • மிக நன்றாக இருக்கிறது.

  ஜெயமோகனின் ‘மாடன் மோட்சம்’ சற்றே ஞாபகம் வந்தது.

  பிள்ளையாருக்கு கனவு வருவது சூப்பர். நானும் இம்மாதிரி கடவுள்களைப் பற்றி ஒரு புனைவு முன்னாடி முயற்சித்திருந்தேன் 🙂 . – கடவுளும் கந்தசாமியும்

 • தாங்கள் மும்பையிலும் இல்லை, கதை மராத்தியிலும் எழுதவில்லை என்ற தைரியம் தானே?

 • பா.ராகவனுக்கு இவ்வளவு கற்பனை வறட்சியா???

  இப்படி ஒரு சகிக்காத கதையை எழுத வேண்டுமா??

  தலைகீழாக நின்றாவது எப்படியாவது முற்போக்குவாதி பட்டம் பெற நீங்கள் முனைவது கிருஷ்ணனை மாவா வுடன் ஒப்பிட்டு ஆரம்பித்து, ஆண்டாளை வம்பிழுத்து, இப்போது கனேசனில் வந்து நிற்கிறது..

  போகட்டும், முற்போக்கு அல்லது பிற்போக்கு பட்டம் கிடைத்த பின்பு அதையும் ஒரு பதிவாக போட்டுவிடுங்கள்..

  அன்புடன்,

  ஜெயக்குமார்

 • கதையில் குமுதம் தரம், தினகரன் தரம்ன்னுல்லாம் சொல்லுவாங்களே, அதெல்லாம் சும்மா தானே?

 • ராத்திரி தூங்கற நேரத்துல சேர்லேர்ந்து விழறதுக்கு ஜஸ்ட் மிஸ்!!! சிரிச்சு சிரிச்சு மனைவி, மகளையெல்லாம் இப்படி பயமுறுத்தியிருப்பேன்னு தெரிஞ்சுருந்தா, அந்த கடைசி வரியை மட்டுமாவது படிச்சே இருக்கமாட்டேன் :-))

  நல்ல வேளை எங்க வீட்டு வாசல்ல பிள்ளையார் இல்லை. ஹே! க்ருபா!!! எங்க போறே? மனசு ஆழம்தான்னாலும் கிணறு எல்லாம் அங்க இருக்காது!!!

 • சிவசுப்பிரமணியன் அவரை ஏந்திக்கொண்டு நேரே கிணற்றடிக்கு நடக்க ஆரம்பித்தான்.

  A well in an apartment complex, ur joking.change that to writer para’s house 🙂

  • அன்புள்ள பிள்ளையார்,

   மிகவும் சரி. ரைட்டர்பாரா வசிக்கும் அபார்ட்மெண்டில் கிணறு இருக்கிறது. நீர் வந்தால் உம்மையும் தூக்கிப்போட ஆள்களுண்டு.

 • அன்புள்ள எழுத்தாளர் பாரா,
  மிக சமீபத்தில்தான் -உங்கள் எழுத்தை -முதன் முதலில்- நான் தங்களின் ‘நிலமெல்லாம் ரத்தம்’ முழுதும் படித்து முடித்தேன். இரண்டே இரவுகளில். இடையில் வேலைக்கு செல்ல மனமே ஒப்ப வில்லை. அதுபோல உபயோகமாய் விறுவிறுப்பாய் நிஜங்களை எழுதுங்களேன். படிக்க ஆவலாய் உள்ளேன். அதுபோன்ற மற்ற தொடர்கள் இருந்தால் சுட்டியை தாருங்களேன். மிக்க அன்றி.

  • தமயந்தி, மன்னிக்கவும். நீங்கள் எப்போது கமெண்ட் போட்டீர்கள் என்றுகூடத் தெரியவில்லை. என் வலைப்பதிவுக்கே நான் வாரம் ஒருமுறை வந்தால் யதேஷ்டம். கொஞ்சநாளாக ரொம்ப வேலை. சேர்த்துவைத்துத் தீர்க்க ஏராளக் கணக்குகள் மிச்சமிருக்கின்றன. கிடைக்கிற வினாடிப் பொழுது இடைவெளிகளை ட்விட்டரில் கரைத்துக்கொண்டிருக்கிறேன் 😉

 • பாரா, “நீர்” வந்தால் என்றால்? அப்போ உங்க வீட்டு கிணத்தில் “நீர்” இல்லையோ? சென்னையில் மழை என்றல்லவா சொல்கிறார்கள்? 🙂

 • முக்கியமாகச் சொல்லவேண்டியது, ராஜிவ் காந்தி கொலை சம்பந்தமாக, அதன் வழக்கு விசாரணை சம்பந்தமாக, முதன்மை புலனாய்வு அதிகாரியாக இருந்த கே.ரகோத்தமன் எழுதியிருக்கும் புத்தகம். ராஜிவ் காந்தி வழக்கு விசாரணை பற்றி பல புதிய தகவல்களை இந்த நூலில் ரகோத்தமன் எழுதியிருப்பதாக, கிழக்கின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி தெரிவித்தார்

  நேசமுடன் தெரிவித்துள்ள கருத்து.

  நீங்கள் சொல்லியபோது என்னைப்போன்றவர்களுக்கு முழுமையாக புரியவில்லை. காரணம் இன்னமும் தொலை தொடர்புகளுக்கு அப்பால் அந்நிய செலவாணிக்குள்.

  நீங்கள் ஒரு பதிவாக எழுதுங்களேன்.

 • எழுத்தாளர் ஐயா,
  கதையில் பொருட்குற்றம் இருக்கு. என் போன்ற தூய நாத்தீகவாதிகளின் மனம் பதபதைத்துப் போகும் அளவிற்கு கோவில்களில் பக்தி முற்றிய கூட்டம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்படியிருக்க, ஒரு அப்பார்ட்மெண்ட் முழுக்க நாத்தீகவாதிகள் என்பது கொஞ்சமும் உண்மையான தகவல் இல்லை.
  ஒரு வேளை கதை ஐம்பது, அறுபதுகளில் எழுதப்பட்டதா என்றுப் பார்த்தால் அப்பொழுது ஏதய்யா
  அப்பார்மெண்ட் கலாசாரம்?
  பி.கு கதை அருமை 🙂

 • ஐயா,

  சிறுகதை விறுவிறுப்பாக இருக்கிறது. உங்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி’ என்ற வீடியோ பார்த்த பின்தான் இந்த கதையைப் படிக்கிறேன்.

  படிக்கும் போது தோன்றிய சில எண்ணங்கள் கீழ் வருவனவாவன.

  / உறுமீன் வருமளவும் பிள்ளையார்க் கொக்கு காத்திருக்கும். /

  அடடே! பிள்ளையாரும் நான் வெஜ்ஜுக்கு மாறிடுவார் போலே!

  / அதுவரை அவனும் பிள்ளையாரைப் போல பிரம்மச்சாரி. /
  அதாவது தென்னிந்திய பிள்ளையார் போல்; வட இந்திய பிள்ளையார் போல் இல்லாமல்!

  – பொன்னியின் செல்வன் –

 • பத்திரமாக பிள்ளையாரை பக்கத்திலிருந்த கருங்கல் தாங்கலில் வைத்தான், சிவசு.
  ஒன்று..இரண்டு..மூன்று.. நான்கு..மாங்கு மாங்கு என்று பக்கெட்டை கிணற்றில் இறக்கி பிள்ளையார் குளிரக் குளிர ‘ஜில்’ நீரைத்து ஊற்றி
  அபிஷேகித்தான்.
  ‘அப்படிச் செய்யவேண்டும்’ என்று ஓர் உத்வேகம் போல் மனசில் தோன்றியதை நிறைவேற்றிய திருப்தியும், மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிரிட்டது.
  அடுத்தாற் போல்?.. ஒரு நிமிடம் தான் யோசிப்பு.
  சிவசு இயல்பாகவே புத்திசாலி; யோசித்தால் கேட்க வேண்டுமா?..
  கனவு வேறு கைகொடுத்திருக்கிறது.
  “பிரசவம் மனைவிக்கு செளக்கியமாய் முடிந்து, ஒரு பிள்ளை வாரிசாய் வேண்டுமப்பா!” என்று கனவில் வேண்டிக்கொண்டதைப் போலவே நினைவிலும் மறுபடியும் வேண்டிக்கொண்டு, கையோடு தயாராய் வைத்திருந்த பட்டுத் துணியை பிள்ளையாரின் இடுப்பில்
  கட்டி பெருமையுடன் வீட்டுக்குள் சுமந்து சென்றான்.
  குட்டியூண்டு பூஜை அறையையே நீட்டித்த மாதிரி, பக்கத்தில் மணைப் பலகையில் ‘ஜம்’மென்று புதுப்புன்னகையுடன் பிள்ளையார்.
  சிவசு காபிக்கு வைத்திருந்த பாலை ஒரு டம்பளரில் ஊற்றி அவருக்கு நைவேத்தியம் சைகையில், “யாமிருக்க, பயமேன்?” என்று அர்த்தபுஷ்டியுடன் அவர் சொல்வதாக அவனுக்குப் பட்டது.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter