C/O கருவறை

வழியும் சத்தியமும் ஜீவனும் சந்தேகமில்லாமல் நானே தான். வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டுப் போ என்று எம்பெருமான் கூப்பிட்டான். கூப்பிட்ட மரியாதைக்குப் போய்ச் சேர்ந்தபோது பதினெட்டு மணிநேரம் கூண்டுக்குள் காத்திரு என்று திருப்பதி தேவஸ்தானத்தின் எலக்டிரானிக் போர்டு சொன்னது.

சுந்தரத் தெலுங்கும் மந்திரத் தமிழும் மற்றும் கொஞ்சம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் கலந்த ஒலிச் சித்திரங்கள் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்க, மேலுக்கு ஆணி அடித்து மரக்கட்டை நட்டு ஆங்காங்கே டிவி மாட்டி, படம் காட்டிக்கொண்டிருந்தார்கள். மொட்டை அடித்தவர்கள், அடிக்காதவர்கள் என்று ஜாதி இரண்டொழிய வேறில்லை. கடலை மிட்டாய், கைமுறுக்கு, பஞ்சுமிட்டாய், பட்டாணி சுண்டல். பாக்கெட் உணவுகள், பலமான மசாலா நெடி. சாப்பிட்டுக் கைகழுவ வெளியே போவது சாத்தியமில்லை. உன்னுடைய கைக்குட்டையிலோ, அடுத்தவர் சட்டையிலோ துடைத்துக்கொள். எப்படியும் தரிசனத்துக்குள் விடிந்துவிடும். படுக்க இடமில்லை. உட்கார்ந்த வாக்கில்தான் தூங்க முயற்சி செய்யவேண்டும்.

தூங்கித்தான் ஆகவேண்டுமா என்பது இன்னொரு கேள்வி. ஆன வயது அப்படியொன்றும் அதிகமில்லை என்றாலும் ரத்த அழுத்தம் இப்போதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை. தூங்கி எழுந்தால் பல் தேய்ப்பது அவசியம். குளிப்பது? ஏடுகொண்டலவாடனைக் குளித்துவிட்டுத்தான் தரிசிக்க வேண்டுமென்கிற கட்டாயம் இல்லை. ஆகவே, பல் தேய்ப்பதும் கூட அப்படியொன்றும் நிர்ப்பந்தமில்லை. நாற்றத் துழாய்முடி நாராயணன் அவன். துர்நாற்றங்கள் மீதும் அவனுக்கு விரோதம் ஏதுமில்லை. தவிரவும் காத்திருக்கும் கூண்டுகளில் கடன் முடிக்க ஒதுக்கமாகக் கட்டிவைத்திருக்கும் இடங்கள் அப்படியொன்றும் சிலாக்கியமாக இல்லை. பாவத்தைத் தொலைத்துவிட்டு வியாதியை வாங்கிக்கொண்டு வர நான் தயாரில்லை.

ஜருகண்டி, ஜருகண்டி.

பேஷ். இங்கேயே ஆரம்பித்துவிட்டார்கள். கூட்டம் நகர்கிறது. தோளுக்குமேலே மொட்டையடித்த குட்டிக் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு, கச்சம் கட்டிய மொட்டையடித்த பெரியவர்கள் சந்துகளில் நகர்ந்துகொண்டிருந்தார்கள். இப்படி வா, இப்படி வா. அப்படிப் போகாதே. தள்ளாதிங்க சார். எவுரண்டி அக்கட? ஜருகு, ஜருகு..

ஐம்பது ரூபாய் டிக்கெட். நூறு ரூபாய் டிக்கெட். சுப்ரபாத சேவை. திருப்பாவை சேவை. கல்யாண உற்சவம். போனதெல்லாம் இப்படித்தான். இது புதுசு. ஜனதா தரிசனம். வேணாம்டா, உன்னால மணிக்கணக்கா உக்கார முடியாது, நிக்க முடியாது. அப்பறம் அங்க வலிக்கறது, இங்க வலிக்கறதுன்னு ரெண்டு நாள் பிராணன வாங்குவ. கிளம்பும்போது சுற்றமும் நட்பும் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

அதையும்தான் பார்த்துவிடுவோமே? நடந்தே மலையேறி, காத்திருந்து, இலவசமாக தரிசித்துவிட்டு, க்யூவில் நின்று தரும உணவு சாப்பிடுவது ஓர் அனுபவமாக இருக்காது என்பது என்ன நிச்சயம்? தரும தரிசனக்காரர்கள் தேவஸ்தானத்துக்கு ஒரு பொருட்டாக இல்லாது போனாலும் தெய்வத்துக்கு அப்படி இராது. லட்டு கிடைக்காவிட்டாலும் அல்வா கொடுக்காத கடவுள் என்று உத்தமமான பெயர் வாங்கியிருக்கிறார். சந்தேகமென்ன, கண்டிப்பாக ஏதாவது திருப்பம் நேர்ந்தே தீரும்.

டிஜிட்டல் கடிகாரம் இரவு இரண்டு மணி என்று காட்டியது. தூக்கம் வரவில்லை. கொசுத்தொல்லை இல்லாதுபோனாலும் கூட்டம் அச்சமூட்டக்கூடியதாக இருந்தது. திடீர் திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் ஏடுகொண்டலவாடா என்று கத்தினார்கள். கூடச் சேர்ந்து கத்தலாம் என்றுதான் தோன்றியது. எது தடுத்தது என்று தெரியவில்லை. பக்தியை அத்தனை உரக்க வெளிப்படுத்தத்தான் வேண்டுமா என்றொரு பகுதிநேரப் பகுத்தறிவாளன் உள்ளே உட்கார்ந்துகொண்டு கேள்வி எழுப்பினான்.

என் பக்தியின் மீது எனக்கு சந்தேகம் கிடையாது. துளியும் கிடையாது. அது ஒரு திட்டவட்டமான பிசினஸ் பக்தி. எனக்கு இதைக் கொடு. உனக்கு நான் இதைச் செய்கிறேன் என்கிற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட். இல்லாதுபோனால் ஒரு போன் அடித்து எங்கள் கம்பெனி ஏஜெண்டிடம் சொன்னால் ஏசி காட்டேஜ் ஒதுக்கி, கோயில் கோபுர வாசலிலிருந்து நேராக உள்ளே கூட்டிக்கொண்டு போய்விடமாட்டானா!

அதிகாரி. அடேயப்பா. ஒரு அதிகாரியாகப் போகும்போதெல்லாம் என்ன மரியாதை! பரிவட்டமென்ன, மாலை என்ன, பக்கத்தில் இருந்து தரிசனமென்ன? தட்டில் போடும் பணத்தின் கனத்தைப் பொறுத்து, வேறு சில கண நேர சந்தோஷங்களுக்கும் எம்பெருமான் அவசியம் அருள்பாலித்துவிடுவான். தெய்வம் மனுஷ்ய ரூபேண.

தூங்கும்போதும் அழகாகத் தெரியும் மனிதர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அகப்பட்டதில்லை, அப்படியொருவர் அல்லது ஒருத்தி. வாய்பிளந்த கோலம். ஆடை கலைந்த கோலம். கால்களை அகல விரித்த கோலம். தலை கலைந்த கோலம். இயல்பாக இருக்கும் எதுவும் சௌந்தர்யமாக இருக்காது போலிருக்கிறது. தவிரவும் அந்தக் குறட்டை. ஆ, எத்தனை எத்தனை சுருதிகளில் குறட்டைகள்! என் பக்கத்தில் உட்கார்ந்த வாக்கில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயதான மனிதர் சிங்கத்தின் குகை மாதிரி வாயைப் பிளந்துகொண்டிருந்தார். ஒரு காலைத் தொங்கப்போட்டு, இன்னொரு காலைக் குத்திட்டு, அதில் கையை ஊன்றி, கையால் முகவாய்க்கு முட்டுக்கொடுத்து – சட்டென்று முன்னெப்போதோ பார்த்த பிரெஞ்சு ஓவியம் ஒன்று நினைவுக்கு வந்தது. ஆனால் ஓவியத்தை ரசித்தமாதிரி ஒரிஜினலை ரசிக்க முடியவில்லை.

யார் கண்டது? இதற்குப் பெயர்தான் மேட்டிமை மனோபாவமோ என்னமோ. என்னைக்காட்டிலும் அவர் ஏடுகொண்டலுவாடனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கக் கூடும். சட்டென்று வேறுபுறம் திரும்பி உட்கார்ந்துகொண்டேன்.

மூன்று மணிக்கு எங்கோ மணியடித்தார்கள். உறக்கம் கலைந்த மனிதர்கள் சொல்லிவைத்த மாதிரி ஏடுகொண்டலவாடா வெங்கட் ரமணா என்று கூப்பிட்டபடி எழுந்தார்கள். எப்படியும் இன்றைய பொழுது முடிவதற்குள் தரிசனம் கிடைத்துவிடும். இப்போதைக்கு சூடாக ஒரு காப்பி கிடைத்தால் தேவலை. கூட்டம் நகரத் தொடங்கியது. முண்டியடித்தார்கள்.

இம்முறை என்னுடைய டீல் ஒன்றும் பிரமாதமில்லை. ஒரு தவறு செய்திருந்தேன். எனக்கு மட்டுமே தெரிந்து, நானே மறைத்து, தப்பித்துவிட்ட தவறு. மன்னித்துவிடு எம்பெருமானே என்று மனத்துக்குள் கூப்பிட்டுக் கேட்டேன். சரி, ஒழிந்துபோ, வந்து ஒரு நடை சேவித்துவிட்டுப் போய் வேலையைப் பார் என்று சொல்லியிருந்தான். சேவித்துவிட்டால் சரியாகிவிடும். சரணாகதி என்பது எத்தனை சௌகரியம். உமக்கே நாம் ஆட்செய்வோம். எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிக்கத் தயாரான கடவுள். பாவத்துக்குச் சம்பளம் கொடுக்காத பரமாத்மா. அப்பேர்ப்பட்டவனை பதினெட்டு மணிநேரம் காத்திருந்து தரிசிப்பது ஒன்றும் தப்பில்லை. எத்தனை அதிகாரிகள், அமைச்சர்களுக்காக மணிக்கணக்கில், நாள் கணக்கில் காத்திருந்திருக்கிறேன்.

சத்தம் அதிகமாக இருந்தது. என் பேண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டேன். என்னுடைய காணிக்கை அங்கே ஒரு சிறு பேப்பர் பொட்டலத்துக்குள் இருந்தது. இந்த காணிக்கை சூட்சுமம்தான் எனக்குப் புரியவேயில்லை. படியளப்பவனுக்கே பைசா கொடுப்பதா என்று மீண்டும் பகுத்தறிவாளன் கேட்கிறான். முடியைக் கொடுப்பதிலாவது ஒரு லாஜிக் இருக்கிறது. மானுடப் பிறவிகளின் ஆணவச் சின்னமல்லவா அது? சீவி சிங்காரிப்பதெல்லாம் அதைத்தானே? மழித்துப் போடும்போது அகந்தையையே மழித்து ஒழிப்பதாக எப்போதும் தோன்றும் எனக்கு.

ஆனால் நான் அப்படியொரு வேண்டுதல் செய்ததில்லை இதுவரை. நெட் கேஷ். பிசினஸில் முடி காணிக்கையெல்லாம் சரிப்படாது. செக் டிரான்ஸாக்ஷனும் கிடையாது. நெட் கேஷ். கறுப்பு வெள்ளைக் கலவை பெரிய விஷயமில்லை. என்னிடம் இருந்தால் கறுப்பு. அவன் உண்டியலில் போய்ச் சேர்ந்தால் அதன் நிறம் வெண்மை. எம்பெருமான் ஒரு வினோதமான கரன்ஸி கன்வர்ட்டரும் கூட.

கூட்டம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்தது. கூண்டு கூண்டாக நான் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தேன். ஏடுகொண்டலுவாடா, வெங்கட் ரமணா, கோவிந்தா, கோவிந்தா. திசை தெரியவில்லை. நான் நின்றுகொண்டிருந்த கூண்டிலிருந்து கோவில் எந்தப் பக்கம் என்பது கூடச் சட்டென்று மறந்துவிட்டது. எட்டுத்திசையிலும் அவன் இருந்தாலும் அந்தக் கருவறைதான் எல்லோருக்குமே இலக்கு. எதிரே போய் நிற்க ஒரு கணம். திருமுகத்தை ஏறிட்டுப் பார்க்க ஒரு கணம். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு வரி பிரார்த்தனை. ஒரு சின்ன மனமுருகல். எதிரே நிற்கும் கணத்தில் ஒரு பூ அல்லது துளசி விழுமானால் நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டு அடுத்த ஆறு மாதத்தை ஓட்டிவிடலாம். எல்லாம் அவன் செயல். அதற்கெல்லாம் அவகாசமிருக்காது. ஜருகண்டி, ஜருகண்டி.

ஒரே ஒரு பயம்தான். நிவேதிதாவைக் கைவிட முடிவு செய்தபோது அந்த பயமில்லை. எங்கே ஊரைக் கூட்டி நாரடித்துவிடுவாளோ என்று தோன்றியபோதுதான் அது பற்றிக்கொண்டுவிட்டது.

அந்தஸ்து. கௌரவம். மரியாதை. மாபெரும் சபைகளில் நடக்கும்போதெல்லாம் விழும் மாலைகளின் எண்ணிக்கை. இதெல்லாம் ஏன் அவளுடன் பழக ஆரம்பித்தபோது தோன்றவில்லை என்று தெரியவில்லை. ஜாலியாகத்தான் இருந்தது. சந்தோஷமாகத்தான் இருந்தது. கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் இருந்தது. எக்காலத்திலும் லைசென்ஸ் கிடைக்காத உறவு என்பது உள்ளூரத் தெரிந்திருந்தபோதிலும் வேண்டியிருந்தது. பணத்திமிர் என்று நண்பர்கள் சொன்னார்கள். அப்படியா? தெரியவில்லை. ஒருவேளை இருக்கலாம். திமிரும் அழகுதானே? ரசிக்கலாம், தப்பில்லை என்று நினைத்ததுதான் தப்பாகிவிட்டது.

நோமோர் நிவேதிதா. போய்விடு. இதற்குமேல் தாங்காது. எனக்கும் சரிப்படாது, உனக்கும் சரிப்படாது. காரண காரியங்களுடன் விளக்கிச் சொன்னபோது முதலில் முறைத்தாள். அதிர்ச்சி அல்லது வெறுப்புடன் சிறிதுநேரம் பார்த்துக்கொண்டே இருந்தாள். கொஞ்சம் பணம் கொடுக்கவேண்டியிருந்தது. அவள் அதனை மறுத்துக்கொண்டிருந்தவரைக்கும் பயம்தான். எப்போது ஏற்றுக்கொண்டாளோ, அப்போதே தப்பித்துவிட்ட உணர்வு வந்துவிட்டது.

சீச்சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? உன்னோடு ஓடிவரத் தயாராக இருந்தேனே, இப்படிச் செய்துவிட்டாயே?

வசனங்கள், மற்றும் வசனங்கள். நான் மறுப்பேதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு என் மனைவி குறித்த பயம் இருந்தமாதிரி அவளுக்கும் அவளது கணவனைக் குறித்த அச்சம் இருக்காமலா இருக்கும்?

எப்படியோ, அந்தக் காண்டம் கடந்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. ஏடுகொண்டலுவாடனுக்கு நன்றி. இனி உன் முகத்தில் விழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவனருளாலே அவன் தாள் வணங்கவேண்டியது ஒன்றுதான் பாக்கி.

யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. ஒருத்தருக்கும் தெரியாது. மூன்று வருடகாலம் நாங்கள் பழகியிருக்கிறோம். என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிந்திருக்கிறாள். என்னுடன் சினிமாவுக்கு வந்திருக்கிறாள். கிழக்கு கடற்கரைச் சாலை ரிசார்ட்ஸுக்கு வந்திருக்கிறாள். ஒகேனக்கல் வந்திருக்கிறாள். ஒருத்தருக்கும் எங்கள் நடவடிக்கைகள் தெரியாது. மிகத் திறமையாக நாங்கள் வாழ்ந்திருக்கிறோம், அல்லது நடித்திருக்கிறோம்.

சந்தேகமில்லாமல், நூறு சதவீதத் தவறுதான். தெரிந்தேதான் செய்தோம். அதனாலென்ன? வருத்தப்படாமல் சுமந்த பாரம் என்றாலும் இளைப்பாறுதல் தர எம்பெருமான் தயாராகவே இருந்தான்.

ஜருகண்டி, ஜருகண்டி என்றார்கள். நினைவுகளைப் பொட்டலம் கட்டி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கூட்டத்தோடு உள்ளே போனேன். கோபுரம் கடந்தது. கொடிமரம் வந்தது.  தரையெல்லாம் ஈரமாக இருந்தது. அங்கப்பிரதட்சணம் செய்தவர்கள் அரூபமாக மனத்தில் வந்து போனார்கள்.

கோவிந்தா, கோவிந்தா.

யாரோ தள்ளினார்கள். எங்கோ போய் முட்டிக்கொண்டேன். கோவிந்தா கோவிந்தா.

உள்ளே போனது தெரியவில்லை. இருளும் பச்சைக் கற்பூர நெடியும் திடீரென்று சூழ்ந்த பேரமைதியும் என்னவோ செய்தது. சர்வேஸ்வரா, என்னை மன்னித்துவிடு. தவறு செய்தேன். ஆனாலும் மன்னித்துவிடு. இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று உத்தரவாதம் தரத் துணிச்சலில்லை. ஆனால் செய்யும்போதெல்லாம் இதே மாதிரி காப்பாற்றிவிடு.

கண்ணை நான் மூடிக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஜருகண்டி சத்தம்தான் கேட்டது. மீண்டும் யாரோ பிடித்துத் தள்ளினார்கள். இம்முறை யூ-டேர்ன் மாதிரி இருக்கவே திரும்ப முயற்சி செய்தேன்.

நோ சான்ஸ். அடக்கடவுளே! சந்நிதிக்கு வந்துமல்லவா பார்க்கமுடியாமல் போய்விட்டது. நின்று பார்த்தாலே மனத்தில் பதியாத ரூபம். நடந்தவாக்கில் தலையைத் திருப்பிப் பார்ப்பதாவது!

ஜருகண்டி, ஜருகண்டி.

சட்டென்று எனக்குள் இருந்த இண்டலெக்சுவல் குரல் கொடுத்தான். முட்டாள், நீ பார்க்க வேண்டாம், அவன் உன்னைப் பார்த்தால் போதும்!

அதானே! கால் வலிக்க நடந்து ஏறி, காத்திருந்து வந்தாகிவிட்டது. இனி அவன் பாடு.

சந்தோஷமாகத் திரும்பிவிட்டேன். எம்பெருமான் அந்த எட்டுக்கு எட்டு அறைக்குள் மட்டுமா இருக்கிறான்? எங்கும் இருக்கிறான். எப்போதும் இருப்பான். எனக்கு ஒத்தாசை செய்வதற்காகவே உயிரோடு இருப்பவன்.

நிம்மதியுடன் APTC பஸ் பிடித்துக் கீழே இறங்கி, ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆம்னி பஸ் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

யார் சொன்னார்களோ, சத்தியமான வார்த்தை. திருப்பதி போனால் திருப்பமில்லாமல் இருக்காது. வீட்டுக்கு வந்தபோது ஒரு கூரியர் தபால் வந்திருந்தது. நிவேதிதாதான் அனுப்பியிருந்தாள்.

கருவுற்றிருக்கிறாளாம்.

Share

17 comments

  • இந்த கதையை ஒரு தீபாவளி (?) மலரில் படித்த நாளிலிருந்து பார்த்த அனைவரிடமும் இது பற்றி பேசியபடி இருக்கிறேன். இன்றே லிங்க் அனுப்பிவிடுவேன்.

    அற்புதம்

  • //எப்படியோ, அந்தக் காண்டம் கடந்துவிட்டது.//

    பகுத்தறிவாளனுக்கு காண்டத்தின் உபயோகம் பற்றி தெரியாமலா இருந்திருக்கும்? 🙂

  • அடடே லட்டு வாங்க மறந்திட்டீங்களே! 🙂
    கதை ஆரம்பத்தில் திருப்பதி பத்தி பேச ஆரம்பிச்சிட்டாரே என்று நினைத்தேன், ஆனால் ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க இறுதி வரை.

  • நல்ல கட்டுரை, ராகவன்

    1)’தூங்கும்போதும் அழகாகத் தெரியும் மனிதர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அகப்பட்டதில்லை’

    கிறிஸ்துமஸுக்கு முந்தின இரவு வீட்டில் தோரணம், விளக்கு அலங்காரம் எல்லாம் செய்து முடித்து விட்டுக் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்திருப்பார்கள் வீட்டு ஆண்கள். ‘வேலை செய்து களைத்த ஆண்கள் தூங்கிக் கொண்டிருக்கும் அழகு அலாதிதான்’ (என்கிறதுபோல்) வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ கதாநாயகி ரசிப்பாள். நினைவு இருக்கிறதா?

    2) என் ‘தலை’ சிறுகதை படித்திருக்கலாம். திருப்பதியில் மொட்டை அடிக்கப் பட்டபின் தொலைந்து போன சிறுவனைத் தேடும் ஆலப்புழை ரிட்டயர்ட் ஹெட்மாஷ் (ஹெட்மாஸ்டர்) ..

  • Para sir,
    ’தூங்கும்போதும் அழகாகத் தெரியும் மனிதர்களை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை அகப்பட்டதில்லை’….. கண்டிப்பாக உள்ளனர்…..
    கண் கொட்டாமல் ரசித்து கொண்டிருப்பேன், என் ஒரு வயது குழந்தை தூங்கும் போது !!

  • I don’t accept that nobody is looking good while sleeping. I always enjoy seeing my Son while sleeping. See your kids while sleeping. You will definately enjoy.

  • கருவறை…

    வாய்பிளந்த கோலம். ஆடை கலைந்த கோலம். கால்களை அகல விரித்த கோலம். தலை கலைந்த கோலம். இயல்பாக இர…

    • உறங்கும் குழந்தையை உற்றுப் பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள்;-)

  • தல ரொம்ப நாளா காணோமே !! தலைமறைவுக்கு என்ன காரணம்?

  • அருமையான விஷயம்.
    அற்புதமான நடை.
    பிரமாதமான வார்த்தைக் கோவை.
    பிரமிக்கவைக்கும் வர்ணனை.
    ஆழாமான அர்த்தங்கள்.
    நன்றி பாரா.
    வாழ்க வளர்க.
    அன்புடன்,
    சீனுவாசன்.

  • இல்லை… இல்லை… இதை முன்பே படிக்க்வில்லை!!

    திருப்பதிக்குள்ள போய்ட்டு வந்தமாதிரி இருக்கு! ஆனா, எனக்கு கூரியர் வரலை ஹி ஹி 🙂

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!