பூனைக்கதை

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாவலை எழுதி முடித்தேன். பூனைக்கதை.

உண்மையில் நான் எழுத நினைத்ததும் எழுதத் தொடங்கியதும் வேறொரு நாவல்.  ‘யதி’ என்று பெயர். ஆறேழு மாதங்களாக அதில்தான் மூழ்கியிருந்தேன். தற்செயலாக ஒரு நாள் உறக்கத்தில், கனவில் அந்த நாவலுக்குள் புகுந்த ஒரு பூனை கணப் பொழுதில் பூதாகார வடிவமெடுத்து என் கதாநாயகனை விழுங்கிவிடும்போல் இருந்தது. அந்தப் பூனையை முதலில் நாவலில் இருந்து இறக்கி வைத்தால்தான் சரிப்படும் என்று தோன்றியது.

அப்படி இறக்கிவைத்த பூனைதான் இந்த நாவலாக உருக்கொண்டது. ‘யதி’க்குள் இருந்தபோது இந்தப் பூனை காட்டிய முகம் வேறு. இப்போது இந்நாவலில் இது எடுத்திருக்கும் வடிவமே வேறு. நீண்ட நாள்களுக்குப் பிறகு, முற்றிலும் என்னை வெறும் கருவியாக மட்டுமே கொண்டு தன்னை எழுதிக்கொண்ட நாவல் இது. அலகிலா விளையாட்டுக்குப் பிறகு, பத்திரிகைத் தொடராக அல்லாமல் நேரடியாக எழுதப்பட்ட நாவலும்கூட.

எழுதி முடித்ததை முழுக்க ஒருமுறை வாசிக்கக்கூட அவகாசமின்றி கும்பகோணம் வரை செல்லவேண்டியிருந்தது. ஒரு திருமணம். அப்படியே கிண்டிலில் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டேன். போகிற வழியில் கொஞ்சம் படித்தேன். திரும்பி வரும்போது கொஞ்சம் படித்தேன். ஒரு பூனையின் நடையை இந்நாவலின் தொனியாகக் கொண்டிருந்தேன். அது சரியாக வந்திருக்கிறதா என்பதுதான் என் ஆகப்பெரிய கவலை.

இப்போது படித்து முடித்தேன். திருப்தியாக இருக்கிறது.

தமிழில் கலைத்துறை சார்ந்து எழுதப்பட்ட நாவல்களுக்கு என்று ஒரு வண்ணமும் வாசனையும் உண்டு. அவலங்களைச் சொல்லும் கதைகூடக் கொஞ்சம் வாசனை பூசிக்கொண்டிருக்கும். அரிதாக அசோகமித்திரனின் சினிமா சார்ந்த நாவல்களிலும் [கரைந்த நிழல்கள், மானசரோவர்] குறுநாவல்களிலும் [விழா மாலைப் போதில், பாவம் டல்பதடோ] மட்டும்தான் அவலங்களின் வாசனை சரியான அளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதை உணர முடியும். கண்ணீரால் கலைக்கப்பட்ட மேக் அப் எப்படி இருக்கும் என்பதை தரிசிக்க முடியும்.

பூனைக்கதை கலைத்துறை சார்ந்த ஒரு நாவல். ஆனால் வண்ணமோ வாசனையோ சற்றும் இல்லாத அதன் ஒரு பகுதியை மட்டும் இது சித்திரிக்கிறது. கண்ணீரும் இல்லாத, புன்னகையும் இல்லாத ஒரு பேருலகம். இங்கும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். சமயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இருப்பதும் இறப்பதும் இங்கும் நிகழ்கிறது. கலையுலகம்தான். ஆனால் இதன் முகமும் அகமும் வேறு. நீங்கள் இதுவரை இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பார்க்கலாம்.

கடந்த மூன்று மாதங்களாக நான் இந்நாவலுக்குள்தான் வாழ்ந்துகொண்டிருந்தேன். குறிப்பாக செப்டெம்பர் 15ம் தேதி கிழக்கு அலுவலகத்தில் பத்ரியையும் பிரசன்னாவையும் சந்தித்துவிட்டு வந்தபின்பு [நவம்பர் 15 டெட்லைன் வைத்தார்கள்] வேறு நினைவே இல்லை. எனது வருமானப் பணிக்கென உள்ள நேரம் போக, மிச்ச நேரம் முழுவதையும் இந்நாவலுக்கு அளித்தேன். ஒரு நாளில் பதினாறு மணி நேரங்களுக்குக் குறையாமல் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு நாவல் எழுதுவது போலக் கசக்கிப் பிழியும் பணி வேறு இருக்க முடியாது.

சொன்ன தேதிக்குப் பதினைந்து நாள் தள்ளித்தான் என்னால் முடிக்க முடிந்தது என்றாலும் ஒப்புக்கொண்டதை ஒழுங்காகச் செய்து முடித்த திருப்தி இருக்கிறது. ஜனவரியில் இது நூலாக வெளிவரும்.

யதி, அடுத்த ஆண்டு.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி