வணக்கம் பாரா சார்.
என் பெயர் ஆனந்த். என்னைப் பற்றிய பெரிய அறிமுகம் ஏதுமில்லை. தங்களை முகநூலில் தொடர்கிறேன். அலை உறங்கும் கடல் பற்றி நீங்கள் பதிவிட்டபோது நீலுப்பாட்டியை சந்திக்க ஆவல் கொண்டேன். ஆனால் வெகு விரைவில் மறந்தும் போனேன்.
கிண்டிலில் இன்று தமிழ்ப் புத்தகங்களைத் தேடிய போது, இந்தப் புத்தகம் வந்தது. உடனே வாங்கினேன். கடலுக்குள் மூழ்கிப்போக ஆரம்பித்தேன்.
செவியின் கூர்மையைப் பொறுத்த சங்கீதம் என்ற முதல் வரியே என்னை உள்ளே இழுத்துப் போட்டது.
பாரா சார்….
நிறைய எழுதவேண்டும் என்று குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். அதெல்லாம் வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது. பிறந்த குழந்தையைப் பக்கத்தில் வைத்துவிட்டு அதைப் பற்றிப் பக்கம் பக்கமாகக் கவிதைகள் எழுதுவதைவிட அதைக் கையிலெடுத்துக் கொஞ்சுவதுதானே வேண்டிய அனுபவத்தைத் தரக்கூடியது. ஆகவே இந்தக் கதையை நான் அனுபவித்தேன்.
மறைந்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்கள் ஒரு நேர்காணலில் சொன்னதுபோல் beautiful என்பதைவிட சிறந்த விமர்சனம் வேறென்ன வேண்டும்.
ஒரே ஒரு குறைதான் சார். கிண்டிலில் நிறைய எழுத்துப் பிழைகள். அதை மட்டும் திருத்திக் கொள்ளச் சொல்லுங்கள். இதுவரை நான் படித்த எல்லா புத்தகங்களிலுமே அச்சுப் பிழைகள் மலிந்திருக்கின்றன.
இன்னொரு முறை சும்மா இராமேஸ்வரம் போகப் போகிறேன். உமாவையும் அருள்தாஸையும் பார்க்க வேண்டும்.
நன்றி.
அன்புடன்,
ஆனந்த்
மதுரை.