154 கிலோ பைட் – என்னுடைய முதல் கட்டுரைத் தொகுப்பு. 2002ல் வெளி வந்தது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மறு பதிப்பாக மின் நூல் வடிவில் வெளியாகியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் பார்த்தவர்கள் / வாசித்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள். ஒரே ஒரு பதிப்பு மட்டும் வெளிவந்தது. அதிலும் பெரும்பாலான பிரதிகளைப் பதிப்பாளர் எடைக்குப் போட்டுவிட்டு கடையைக் கட்டிக்கொண்டு போய்விட்டார்.
இணையம் எனக்கு அறிமுகமான 1999-2000 காலக்கட்டத்தில் மிகுந்த ஆர்வமும் உற்சாகமும் ஆவேசமும் கொண்டு எழுதிய கட்டுரைகள் இவை. குமுதம் டாட்காம், தமிழோவியம் போன்ற மின் இதழ்களிலும், ராயர் காப்பி கிளப், தினம் ஒரு கவிதை போன்ற யாஹு மடற்குழுக்களிலும் இக்கட்டுரைகளை எழுதினேன்.
அப்போதெல்லாம் கட்டுரைகளுக்குப் பின்னூட்டங்கள் கிடையாது. [அந்தக் கலாசாரம் வலைப்பதிவுகள் உருவான பிறகே உற்பத்தியானது] மின்னஞ்சல் மட்டுமே வரும். அதுவும் பெரும்பாலான வாசகர்களுக்குத் தமிழ் தட்டச்சு சாத்தியமின்றி இருந்த காலம். ஆங்கிலத்தில்தான் எழுதுவார்கள். ஆங்கில லிபியில் தமிழ்க் கடிதம் எழுதுவோர் பெருகியது அப்போதுதான். அபூர்வமாகச் சில கடிதங்கள் தமிழில் வரும். தனியே வேர்டில் எழுதி அட்டாச் செய்து அனுப்புவார்கள். அவற்றில் பலவற்றைப் படிக்கவே முடியாது. என்ன எழுத்துருவில் அனுப்பியிருக்கிறார்கள் என்பது தெரியாது. சிரத்தையாக அதை காப்பி செய்து சுரதா எழுத்துரு மாற்றியில் போட்டுத்தான் படிக்க வேண்டும். Tab, Tam, Tscii, மயிலை என்று ஏகப்பட்ட எழுத்துரு வகை உலவிக்கொண்டிருந்த காலம். இதில் இந்தியத் தமிழர்கள் பயன்படுத்தும் எழுத்துரு, இலங்கைத் தமிழர்கள் பயன்படுத்தும் எழுத்துரு என்று இரு இனங்கள் வேறு. இலங்கை வாசகக் கடிதங்கள் அனைத்தும் பாமினியில் வரும்.
பிறகு யுனிகோட் வந்தது. பாதிப்பேர் டிஸ்கியிலும் பாதிப்பேர் யுனிகோடிலும் அடிப்பார்கள். அதிலேயே யுனிகோட் 8 பிட், 16 பிட் என்று இரண்டு ஜாதி இருந்தது. கணினியில் ஒவ்வொரு முறையும் செட்டிங் மாற்றம் செய்தே ஒவ்வொரு தளத்தையும் அணுக வேண்டியிருக்கும். குமுதத்துக்கு ஒரு ஃபாண்ட். விகடனுக்கு ஒரு ஃபாண்ட். திண்ணை, தமிழோவியமென்றால் ஒன்று; நிலாச்சாரல் போன்றவற்றுக்கு வேறொன்று.
எண்ணிப் பார்த்தால் சுவாரசியமாகவும் தமாஷாகவும் இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள ஒரு கட்டுரையை ராயர் காப்பி கிளப் குழுவுக்கு அனுப்பிவிட்டு, இரா முருகனை போனில் அழைத்து, ‘வந்துவிட்டதா? திறக்கிறதா? படிக்க முடிகிறதா?’ என்று கத்து கத்தென்று கத்தினேன். அத்தனை பதற்றம். ‘எல்லாம் சரியாக உள்ளது’ என்று சொல்லி அவர் பப்ளிஷ் செய்துவிட்டார். ஆனால் நான் குழுமத்தைத் திறந்து படிக்கப் பார்த்தால் எனக்கு ஒரே ஜாங்கிரி ஜாங்கிரியாக இருந்தது.
இன்னொரு போனில் ஆர். வெங்கடேஷைக் கூப்பிட்டு எழுத்தை எப்படித் தெரியச் செய்வது என்று கேட்டு அரை மணி நேரம் கிளாஸ் கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்து ஒரு வழியாக என் கட்டுரையை இணையத்தில் கண்டேன். யாஹு குழும டிஸ்கி எழுத்துரு என்பது தயிர்வடை தேசிகனைக் குந்தவைத்துக் கசக்கிப் பிழிந்தது போலிருக்கும். ஆனாலும் கணினியில் தமிழ்! அதுவும் என் எழுத்து!
ஆனந்தப் பரவசக் கண்ணீருடன் அந்தக் கட்டுரையை நாளெல்லாம் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருந்தது நினைவுக்கு வருகிறது.
இதில் தினம் ஒரு கவிதை குழுவில் எழுதியது இன்னும் மாறுபட்ட அனுபவம். அந்தக் குழுமத்தை அப்போது சொக்கன் நடத்திக்கொண்டிருந்தான். இந்த எழுத்துரு, டிஸ்கி, யுனிகோட் வம்பே வேண்டாம் என்று என்ன அனுப்பினாலும் அப்படியே ஜேபெக் ஃபைலாக்கிப் போட்டுவிடுவான். அன்றைய தேதியில் இணையத்தில் மிக அதிக உறுப்பினர்கள் இருந்த குழுமம் அதுதான். ஒரே காரணம், அதில் அன்பே என்று தொடங்கும் பூ, சூரியோதயப் படம் போட்ட கவிதைகள் அதிகம் வரும் என்பதும், எல்லோரும் படிக்கும்படியாக இமேஜ் ஃபைலாக வரும் என்பதும்தான்! ஒரு குழுமத்தில் உள்ள அத்தனை படைப்புகளும் அட்டாச்மெண்ட்களாக மட்டுமே வந்து விழுந்த ஒரே பிராந்தியம் அதுதான்!
பதினேழு வருடங்கள் ஓடியே விட்டன. இன்று இணையத்தில் எனக்குள்ள அத்தனை நண்பர்களும் அன்று கிடைத்தவர்கள்தாம். அநேகமாக அத்தனை பேருடனும் இன்றுவரை நல்லுறவில் இருக்கிறேன். இந்தக் கட்டுரைகள் அனைத்தும் அவர்கள் அளித்த உற்சாகத்தால் எழுதியவையே.
மறுபதிப்பே இல்லாதிருந்த இந்நூலை இன்று மின் நூலாக மீளுருவாக்கித் தருகிறேன். என் ராயர் காப்பி கிளப் நண்பர்கள் அத்தனை பேருக்கும் இதனை அன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.