காந்தி சிலைக் கதைகள் மின் நூல் இன்று வெளியாகியிருக்கிறது.
குமுதம் ஜங்ஷனில் ஆசிரியராக இருந்தபோது அதில் எழுதிய கதைகள் இவை. பிறகு கிழக்கில் புத்தகமாக வெளிவந்தது. இப்போது கிண்டில் மின் நூலாக.
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த என்னுடைய கதைகள் இவை. இந்தக் கதைகள் அனைத்திலும் காந்தி இருக்கிறார். ஆனால் நேரடியாக அல்ல. படு தீவிர காந்தி மறுப்பாளருக்குள்ளும் அவரது கூறுகள் ஒன்றிரண்டாவது இருக்கும் என்று எனக்கு எப்போதும் தோன்றும். அந்த எண்ணத்தின் விளைவே இக்கதைகள்.
இந்தக் கதைகளின் பொதுத்தன்மை காந்தி மட்டுமல்ல. இவற்றில் ஒரு கற்பனைப் பாத்திரம்கூடக் கிடையாது. உலவும் மனிதர்கள் அனைவரும் உயிரோடு இருப்பவர்களே. நிகழும் சம்பவங்களும் அப்படியே. ஆங்காங்கே அடையாளம் மாற்றியிருக்கிறேன். அவ்வளவுதான்.
நேற்று நண்பர் முருகு தமிழ் அறிவன் ‘புனைவுக்கு அருகில்?’ என்று ஒரு கமெண்ட் போட்டிருந்தார். உண்மை அதுதான். புனைவின் பாவனையில், நிகழ்ந்த சிலவற்றை நிறம் மாற்றாமல் சொல்லப் பார்த்த கதைகள் இவை. காந்தி சம்பந்தப்பட்டது என்பதால் பூச்சு கூடாது என்பது எனக்கு நானே விதித்துக்கொண்ட ஒழுங்கு.
என்னை உருப்படிக்கு அருகிலாவது கொண்டு வந்ததில் காந்தியின் பங்கு அதிகம். ஒரு விதத்தில் இக்கதைகள் அதற்கு எனது நன்றிக்கடன்.
என் பிரியத்துக்குரிய நண்பன் ஆர். வெங்கடேஷுக்கு இப்பதிப்பை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.