குற்றமும் மற்றதும்

குற்றவாளிகளைக் குறித்துப் பொதுவாக நம்மில் யாரும் சிந்திப்பதில்லை. ஒரு கிரிமினலை செய்தித்தாள் மூலம் அறிய நேர்ந்தால் ஒன்று, வெறுப்படைவோம். அல்லது, விறுவிறுப்பான செய்தியாக மட்டுமே உள்வாங்கி, படித்த மறுகணம் மறந்துவிடுவோம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ரயில் பயணங்களிலும் அலுவலக இடைவேளைகளிலும் எப்போதாவது விவாதம் நடக்கும். குற்றம் செய்தது யாராவது அந்தஸ்துள்ள பெரிய மனிதர் எனக் கண்டால் ஒருவேளை மேற்சொன்ன விவாதம் சற்றே கனபரிமாணம் அடையலாம். மற்றபடி குற்றங்கள் நம் சமூகத்துக்குத் தொலைக்காட்சி மாதிரி, சினிமா மாதிரி ஒரு பொழுதுபோக்கு அம்சமாகத்தான் ஆகிவிட்டது.

அரசியல், சமூகத் தளங்களின் மேல் மட்டங்களில் நிகழும் குற்றங்களின் எண்ணிக்கை கூடிவிட்டதால் இப்படியாகியிருக்கலாம். குற்றங்கள், தொழிலின் ஒரு பகுதி என்பதாகக் கருதுகிற அளவுக்கு அதன் அதிர்ச்சி மதிப்பு குறைந்து போயிருக்கலாம். எப்படியாயினும் இது கவலைக்குரிய மனோபாவமே.

இந்த நாவலில் வருகிற ஐயனார், தன் சுயப் பிரக்ஞையுடன் குற்ற உலகில் பிரவேசிக்கிறான். விருப்பமுடன் தவறுகளை, குற்றங்களை, பாவங்களைச் செய்கிறான். பிறப்பிலிருந்தே கோணலாகிப்போன வாழ்க்கைகள் குறித்த மனோதத்துவ ரீதியிலான விவாதங்கள் உலகெங்கும் இன்னும் நடக்கின்றன. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மனித மனம் எடுக்கிற முடிவுகளின் விசித்திரம் ஆராயத் தீராத விஷயமாகவே காலம் காலமாக இருந்துவருகிறது.
ஒரு காலத்தில் தேசத்தைக் கலக்கிய சார்லஸ் சோப்ராஜ் தொடங்கி, நேற்றைய மலையாள நடிகர் திலீப் வரை மீடியாவுக்குச் செய்தித் தீனி போட்டிருக்கிற, போட்டுக் கொண்டிருக்கிற பலரைக் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறேன். தம் செயல்களின் பின்னால் உள்ள நியாய, அநியாயங்களை அவர்கள் முழுக்க அறிந்தே இருக்கிறார்கள். பின் விளைவுகளை யோசிக்காமல் பெரும்பாலான கிரிமினல்கள் குற்றம் புரியக் கிளம்புவதில்லை.

ஏழைமை ஒரு காரணமல்ல. பொருளாதாரக் காரணங்களை ஏழைமை மட்டும் உருவாக்குவதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் இதுவரை மீடியா பெரிதுபடுத்திக்காட்டிய ஒரு நூறு குற்றங்களை எடுத்து வைத்துக் கொண்டு ஆராய்ந்தால் பெரும்பாலும் ஏழைமை, குற்றங்களின் ஆதாரக் காரணமாக இருந்ததில்லை என்பது தெரியவரும்.

எனில், குற்றங்கள் புரிவதற்கான உந்துசக்தியாக இருப்பது எது? விதி என்பது செளகரியமான பதில். தன்னை வெளிப்படுத்திக் கொள்ளல், பாதுகாப்பின்மையை மறைத்தல், சாகச நாட்டம் போன்ற பல காரணிகள் ஒரு கட்டத்துக்கு மேல் தீவிரமடைந்து மனநோயாகப் பரிமாணம் பெறுவதால் குற்றங்கள் நிகழ்கின்றன.

திட்டமிட்ட குற்றங்களைச் சொல்கிறேன். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் செய்கிற கொலைகளும் பிறவும் இந்த வகையில் சேராது.

சென்னை, பர்மாபஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவலில் கூடியவரை மிகையின்றிக் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன். திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக் கதை என்பது சற்று விநோதமான விஷயம்தான். எங்கே போகிறோம் என்று சிந்திக்கக் கூட அவகாசமின்றி நாவல் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிற நாயகன், அதே வேகத்தில் நம் பார்வையிலிருந்தும் காணாமல் போவதன் பின்னால் இருக்கிற இருப்பியல் சார்ந்த அபத்தத்தை நீங்கள் யோசிக்கலாம்.

இப்படியான உலகில் ஒருவன் காணாமல் போவதற்குப் பிரமாதமான காரணங்கள் வேண்டாம். அபத்தங்கள் நிறைந்த வாழ்வின் ஆகப் பெரிய அர்த்தம், இல்லாது போவதேயாகும். மானுட சரித்திரமெங்கும் கொட்டிக் கிடக்கும் தற்கொலைகளும் சித்தம் கலங்கிய நிலைகளும் இதையேதான் நமக்கு மெளனமாகத் தெரிவித்து வந்திருக்கின்றன.

இந்நாவல் தினமலரில் தொடராக வெளிவந்தது. இதை ஒருவர் சினிமாவாக எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்துவிட்டுக் காணாமல் போய்விட்டதை இப்போது நினைவுகூர்கிறேன். சிரித்துக்கொள்கிறேன்.

[விரைவில் கிண்டில் மின் நூலாக வெளிவரவிருக்கும் ‘தூணிலும் இருப்பான்’ நாவலுக்கு எழுதிய முன்னுரை.]
Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி