இரண்டு தொடர்கள்

ஜோவென்று பொங்கிப் பெருகிக்கொண்டிருந்தது நதி. கண்ணுக்குத் தென்பட்ட தொலைவுவரை, நிலமெல்லாம் நீராக இருந்தது. அது கதுத்ரி நதியாக இருக்கலாம். இன்றைக்கு சட்லெஜ் என்று பெயர். அசின்யை என்கிற சந்திரபாகா நதியாக இருக்கலாம். சீனாப் என்று நாம் சொல்லுவோம். ஒருவேளை விதஸ்யை என்கிற ஜீலம் நதியாகவும் இருக்கலாம். ஆர்ஜீகி, சுசோமா, விபாசா என்று வேறு ஏதாவது சிந்துவின் கிளை நதியாக இருக்கலாம். இன்றுவரை பெயர் மாறாத சிந்துவாகவே இருக்கலாம்.

ஏழில் ஏதோ ஒரு நதி அது. மிகப்பெரிய படைகளுடன் ஏதோ ஒரு கோட்டையை முற்றுகையிட ஓடி வரும் மாவீரன் மாதிரி நுங்கும் நுரையுமாக அலையடித்துப் புரண்டு ஓடி வருவது தெரிகிறதா?

தெரியவேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மானசீகத்தில் பாருங்கள். நதியின் இக்கரையில் வண்டல் படர்ந்த நிலத்தில் கொத்துக் கொத்தாக முளைத்திருக்கும் ஓலைக் கூடாரங்களையும். அபாரச் செழிப்புடன் வானுயர வளர்ந்து ஆடும் மரங்களைப் பாருங்கள். சிலவற்றுக்குப் பெயர்கள் இடப்பட்டிருந்தன. பெயரிடப்படாத மரங்கள் நிறைய. புதராக மண்டிக்கிடக்கும் மூலிகைக் காடுகளும் வண்ண மயமாகப் பூத்துக் குலுங்கும் பூச்செடிகளும் இன்னொரு பக்கம். இயற்கை வாசனையானது. இயற்கை தெய்வீகத் தன்மை மிகுந்தது. இயற்கை நோய் நீக்கக்கூடியது. புத்துணர்ச்சி தரவல்லது. பறவைகள் நூறு நூறாக, ஆயிரம் ஆயிரமாக வினோதமாகச் சத்தமிட்டுக்கொண்டு பறந்து மறைகின்றன. பரிபூரணம் நிறைந்து கிடைக்கிற வெளி.

அங்கே ஒரு கூட்டம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. வில்லும், மரத்தைச் செதுக்கிச் செய்த அம்புகளும், நீண்ட, கூர்மையான கற்களைத் தீட்டி உருவாக்கிய வினோத ஆயுதங்களும் அவர்கள் மடியில் கிடக்கின்றன. பார்த்தால் தெரியவில்லை? போரில் ஜெயித்திருக்கிறார்கள். வெற்றிக் களிப்பு அவர்கள் முகங்களில் தெரிகிறதா? விட்டால் எழுந்து குதித்து, ஆர்ப்பரித்து நதிக்கு நிகராகப் பொங்கிக் களியாட்டம் போடத் தொடங்கிவிடுவார்கள்.

ஆனால் இப்போது செய்ய முடியாது. இது அமைதியாக அமரவேண்டிய நேரம். வெற்றியைக் கொடுத்த இந்திரனுக்கு நன்றி சொல்லும் பொழுது. ரிஷிகள் யாகம் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வெற்றியும் இந்திரனுக்கு உரியது. அவன் தான் ஜெயிக்க வைக்கிறான். அபாரமான திறமைசாலி. பெரிய சக்திமான். அவனால் முடியாதது ஒன்றுமில்லை. அவன் அருள் இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். அவன் கவிழ்த்துவிட்டால் காரியம் கெட்டுவிடும்.

இன்றைக்குப் பாகிஸ்தானியர்கள் ராவி எனச் சொல்லும் அன்றைய பருஷ்ணி நதியைக் கடப்பதற்கு இந்த நாலாயிரம் வருடத்துக்கு முந்தைய ஆதிவாசி வீரர்கள் முயற்சி செய்தபோது எப்படி அது சாத்தியமானது என்று நினைக்கிறீர்கள்? சந்தேகமில்லாமல் இந்திரன்தான் உதவி செய்தான். திருஷ்டு இனத்துத் தலைவன் சுதாசன் என்றால் அவனுக்கு ரொம்ப இஷ்டம். அவன் பெரிய இந்திர உபாசகன். அடிக்கடி ரிஷிகளை வரவழைத்து யாகம் செய்வான். அக்னி வளர்த்து நெய்யும் தேனும் பாலும் வாசனை மலர்களும் சந்தனமும் வளமான சதைப்பற்று மிக்க மிருக பாகங்களும் அதில் இட்டு இந்திரனுக்கு அக்னியின் மூலமாக அனுப்பிவைப்பான்.

நல்ல சாப்பாடு என்றால் இந்திரனுக்கு இஷ்டம். அதைவிட நல்ல சாராயம். அவர்கள் அதை சோம ரசம் என்று சொல்லுவார்கள்.

சோமரசம் போய்ச் சேர்ந்து அவன் அதை எடுத்துப் பருகிவிட்டால் போதும். உடனே குஷியாகி, அள்ளிக்கொடுக்க ஆரம்பித்துவிடுவான். மந்தை மந்தையாகப் பசுக்கள். ஏராளமான விளைநிலங்கள். ஆபரணங்கள். யுத்தக் களங்களில் நிச்சயமான வெற்றி.

அவனுக்குக் களி கூடவேண்டும். அதுதான் விஷயம்…..

[ உ – புதிய தொடர், குமுதம் ரிப்போர்ட்டர் தீபாவளி இதழில் ஆரம்பம்]

0O0

‘உயிரோடு இருப்பது பெரும் சுமை. எனக்கு மற்றவர்கள். மற்றவர்களுக்கு நான். பேசாமல், இறந்தவர்களைக் கடைத்தேற்றி அனுப்பிவைக்கும் கருமாதி காண்ட்ராக்டர் ஆகிவிடப் போகிறேன். எனக்கு அதுதான் சரி. ஃப்யூனரல் சயின்ஸ் கோர்ஸ் எங்கெல்லாம் இருக்கிறது?’

ஜோலியை எப்போதும் லூசு என்று சொல்லும் சக மாணவிகள் அப்போதும் அதைத்தான் சொன்னார்கள். அவள் ஒரு மரை கழண்ட கேஸ். தேற மாட்டாள்.

அவளுக்கு நண்பர்கள் என்று யாரும் கிடையாது. உறவினர்களும்கூட. பதினான்கு வயதில் தனியே வாழ விதிக்கப்பட்டு, ஒரு கார் கேரேஜில் வசிக்க ஆரம்பித்தவள் அவள். ஏனோ யாருக்கும் அவளைப் பிடிப்பதில்லை. மூக்கும் முழியுமாக லட்சணமாகத்தானே இருக்கிறோம் என்று மாடலிங்குக்குப் போனாலும் ‘அடச்சே டொக்கு விழுந்த கன்னம்’ என்று திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். நிற்கத் தெரியவில்லை, வாத்து மாதிரி நடக்கிறாள், சிரித்தால் பயமாக இருக்கிறது, கண்ணைப்பார், கழுதைக் கண் என்று எத்தனை விமரிசனங்கள்! தனக்கு மட்டும் கண்ணாடி பொய் சொல்கிறதா?

[மூன்றெழுத்து – புதிய தொடர், குங்குமம் தீபாவளி சிறப்பிதழில் ஆரம்பம்]
Share

4 comments

  • மீண்டுமொரு தொடர் ? வாழ்த்துக்கள் பா ரா …காத்திருக்கிறோம் …

  • வெரைட்டியா நிறைய எழுதுவீங்கன்னு எதிர்பார்த்து தங்களின் இணையதளத்திற்கு தினமும் வந்து போகிறேன் ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நேரமில்லை, வேலைப்பளு என்று சொல்வீர்கள், இருந்தாலும் என் போன்ற இணையதள வாசகனையும் கொஞ்சம் கருத்தில் கொள்க.ஆதம் முஹம்மத், பெல்ஜியம்

  • ஹலோ, எப்பப்பாத்தாலும் ட்விட்டர்ல மட்டும் எழுதிக்கிட்டு இருந்தா எப்படி ? அக்டோபர் முடிஞ்சி நவம்பர் முடியப்போவுது ! அப்பப்ப ப்ளாக் அப்டேட் பண்ணுங்க.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!