அன்பின் ராகவன்,
யதி வாசித்து முடித்தேன். அற்புதம் என்கின்ற சொல்லைத் தவிர வேறு பொருத்தமான சொற்கள் எதையேனும் இடமுடியும் எனத் தோன்றவில்லை. விமல் என்கின்ற ஒற்றைப் பாத்திரத்தின் தன்மையில் நின்றுகொண்டு விஜய், வினய், வினோத், அம்மா, கேசவன் மாமா, பத்மா மாமி, சித்ரா, சொரிமுத்து போன்ற பல்வேறு பாத்திரங்களுக்கூடாக சுவாரசியம் குறையாமல் கதையினை நகர்த்திச் சென்ற விதம் ஆகா போட வைக்கின்றது. ஒரு தாயின் நான்கு பிள்ளைகளும் வீட்டை விட்டு ஓடிச்சென்று சாமியார்களாக மாறுகின்றனரே என மனதைப் பதைக்க வைத்து, முடிவில் காட்டிய வேறு வடிவம் திகைக்கச் செய்துவிட்டது.
நிஜ உலகிலும் நான்கு வகைச் சாமியார்கள் இருக்கின்றனர். மரணத்தை வெல்ல நினைக்கும் சித்தர்கள், மந்திர தந்திரங்களில் தேங்கிவிடுவோர், பக்திப் பிரவாகத்தில் திளைப்போர், சாமியார் வேடமிட்டு அனைத்தையும் அனுபவிக்கத் துடிக்கும் கள்ளர்கள். இந்த நால்வகைச் சாமியார்களையும் நால்வருக்கூடாக காட்டியுள்ளீர்கள்.
ஆனால் இந்த நால்வர் பயணத்திலும் எதோ ஒரு வகையில் காமம் குறுக்கிடவே செய்கிறது. ஒருவராலும் காமத்தைக் கடக்க முடியவில்லை. ஏன் கடக்க வேண்டும் என்றொரு கேள்வியும் எழுகின்றது. ஆன்மிகம் என்பது எதையும் அதுவாக ஏற்றுக்கொள்வதே. அப்படிப் பார்த்தால் காமத்தையும் பெண்களையும் தேடிச் செல்வது தான் தவறு; அதுவாக எதிர்நின்றால் கடந்து செல்வதைக் காட்டிலும் அதை ஏற்று அனுபவமாய்க் கொள்வது தவறில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.
“கிருஷ்ணன் என்பது உருவமல்ல அது ஒரு தத்துவம்”, “பரிபூரணத்தை தேடுவது வீண்; உலகில் எதுவுமே பூரணமானதல்ல”, “மரணத்தை வெல்ல ஏன் ஆசைப்படுகிறாய்” போன்றவை அத்தியாயங்களின் மத்தியில் அங்கோன்றும் இங்கொன்றும் சிதறிக் கிடக்கும் சிந்தனைச் சிதறல்கள். அனைத்து அத்தியாயங்களும் சிறப்பென்றாலும் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயமென்றால் அது வினோத் பத்மா மாமியை சந்தித்த அத்தியாயம் தான்.
என்னதான் வேலை இருந்தாலும் காலை 10 மணி என்றவுடன் தினமணி இணையத்தளத்தில் யதி வாசிக்கத் தவறமாட்டேன். ஒருமுறை சர்வதேசக் கருத்தரங்கொன்றில் கலந்துகொள்ள வெளிநாடு சென்றபோது கூட மதிய உணவு இடைவேளையில் வெளியே வந்து கைத்தொலைபேசியில் யதி வாசித்தபின் தான் போசனம். அவ்வளவு வெறித்தனத்துடன் வாசித்தேன். மொத்தத்தில் கடந்த பத்து மாதங்களாக யதி என்னைக் கட்டிப் போட்டிருந்தது என்றே சொல்லலாம்.
ஒன்றுதான் எனக்கு எப்பவுமே வியப்பைத் தருகின்றது. இத்தனை எழுதுவதற்கு நீங்கள் எத்தனை வாசித்திருக்க வேண்டும், எத்தனை சிந்தித்திருக்க வேண்டும். அத்தனையும் யதி என்கின்ற அற்புத அனுபவமாக எம்மை வந்தடைந்திருக்கின்றது. உங்கள் மூலமாக இப்படி ஒரு நல்ல அனுபவம் பெறப்பட வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது போல! அது நிறைவேறி இருக்கிறது.
ஒரே ஒரு கவலை! யதி முடிந்து விட்டதே என்பது தான். புத்தக வடிவில் மீண்டும் வாசிக்கக் காத்திருக்கின்றேன்.
சிறிதரன்
இலங்கையிலிருந்து
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.