ஜனவரி புத்தகக் காட்சிக்கு இம்முறை மெட்ராஸ் பேப்பர் சார்பில் எட்டு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இந்த நூல்களை ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நமக்காக வெளியிடுகிறது. ராம்ஜிக்கும் காயத்ரிக்கும் மெட்ராஸ் பேப்பர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தகங்களை ஓரிரு வரிகளில் இங்கே தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ளோருக்கு உதவலாம் அல்லவா?
1. கடவுளுக்குப் பிடித்த தொழில் / ராஜிக் இப்ராஹிம்
உயிர் அறிவியல் துறை சார்ந்து அநேகமாகத் தமிழில் வெளிவரும் முதல் நூல் இதுதான் என்று நினைக்கிறேன். அந்தத் துறை சார்ந்த பரிச்சயம் இல்லாதவர்கள் ஆங்கிலத்தில் படித்தால் ஒரு சொல்கூடப் புரியாது. அவ்வளவு அடர்த்தியும் நுணுக்கங்களும் மிக்க உடற்கூறு / மருத்துவத் துறை சார்ந்த சங்கதிகள். ஆனால் மிக எளிய தமிழில் ஒரு குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பது போலச் செய்திருக்கிறார் ராஜிக். இதனைப் படித்து முடிக்கும்போது இந்த வைரஸ், பாக்டீரியா வகையறாக்களெல்லாம் நமக்கு நாய் பூனை ஆடு மாடு போல நன்கு பரிச்சயமானவை என்று தோன்றிவிடும்.
அறிவியலை எளிமையாகப் புரிய வைப்பது பெருஞ்செயல். அதனை ஒரு துறை சார்ந்த விஞ்ஞானியே செய்வது அபூர்வம். என்னைப் பொறுத்தவரை இந்தப் புத்தகம் தமிழில் ஒரு சாதனை.
நீங்கள் படித்துவிட்டுச் சொல்லுங்கள். புத்தகம், சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் கிடைக்கும். இப்போதே வாங்க விரும்பினால் இங்கே செல்லவும்.