என்னுடைய எழுத்து வகுப்புகளுக்கு வருவோரில் சிலர் வரும்போதே அடிப்படை எழுத்துத் திறமையுடன் வருவார்கள். மிகச் சிறிய பிசிறுகளை மட்டும் சரி செய்தால் போதும் என்று தோன்றும்.
மிகச் சிலருக்கு அதுவும்கூட அவசியமாக இராது. பள்ளி நாள்களில் ஒழுங்காக இலக்கணம் கற்று , நிறைய புத்தகங்களும் படித்து, இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிப் பார்த்து, தனக்கு எவ்வளவு எழுத வருகிறது, இன்னும் என்ன வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் வருவோரும் உண்டு.
ஒரே ஒருவர் மட்டும் வரும்போதே ஒரு முழுமையான எழுத்தாளராக வந்தார். வகுப்பு நாள்களில் எனக்கு அந்த வினா இருந்துகொண்டே இருந்தது. இவருக்கு எதற்கு வகுப்பு?
மொழித் தெளிவு, கருத்துத் தெளிவு, பார்வைக் கூர்மை, அழுத்தமான எழுத்து, அனைத்துக்கும் மேலாக, உயர்தர எளிமை. இவ்வளவு நன்றாக எழுதக் கூடிய ஒருவர் எப்படி ஒரு பேராசிரியராகவும் இருக்கிறார் என்பதுதான் என் தீராத வியப்பு. அதிர்ஷ்டவசமாகத் தமிழ்ப் பேராசிரியர் இல்லை. கணினி அறிவியல் துறை. அநேகமாக அதனால் தப்பித்தார் என்று நினைக்கிறேன்.
மெட்ராஸ் பேப்பரில் அவர் எழுதிய அறிவியல்-தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகள் தொகுக்கப்பெற்று நூலாக வெளியாகின்றன (நல்லவனுக்கு எதற்கு இன்காக்னிடோ?). விவரமறிந்தவர்களை விடுங்கள். எளிய மனிதர்கள் டிஜிட்டல் காட்டுக்குள் நுழையும்போது பெறுகிற உளக்கிளர்ச்சி, அதன் விளைவான தடுமாற்றங்கள், செய்கிற பிழைகள், கவனிக்கத் தவறுகிற அடிப்படைகள், பிறகு பிரச்னை என்று வரும்போது அம்மா தாயே என்று அழுது புலம்பிக்கொண்டிராமல், சிடுக்கு விலக்கிச் சிக்கலில் இருந்து வெளிவரும் வழிகள் என்று தொட்டுத் தொட்டு ஒவ்வொரு அம்சமாக எடுத்து அலசியிருக்கிறார்.
உணவு, குடிநீர் போல இணையம் ஓர் அத்தியாவசியமாகியிருக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்கிறோம். இதன் அத்தனை சந்து பொந்துகளிலும் ஒரு வீதி விளக்கு பொருத்துகிற பணியைத்தான் இந்தப் புத்தகம் செய்கிறது.
குப்புசாமி இன்னும் புனைவுப் பேட்டையின் பக்கம் வரவில்லை. (ஆனால் வெண்பாவெல்லாம் எழுதுகிறார். கொஞ்சம் கெட்டத்தனம் இருக்கிறது.) இம்மாதிரி, மக்களுக்கு உதவும் பத்திருபது புத்தகங்களாவது எழுதிவிட்டு அவர் அடுத்தத் தொகுதிக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்.
சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் இந்தப் புத்தகத்தை வாங்கலாம். இப்போதே வாசிக்க விரும்பினால் இங்கே செல்க.