அழியாத சில

சிக்கல் எதுவுமின்றி வழக்கு நல்லபடியாக முடிந்தது. பரஸ்பரப் புரிதலின் பேரில் விவாகரத்து வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். ஒன்றரை வருடங்களுக்கு மேலாகப் பிரிந்தே இருந்ததால் இருவராலுமே பெரிதாக உணர்ச்சி வயப்பட முடியவில்லை. அதே சமயம் மகிழ்ச்சியோ நிம்மதியோ நிறைந்துவிட்டதாகவும் தோன்றவில்லை. அவன் மதியம் அலுவலகத்துக்குச் சென்று விடலாம் என்று நினைத்தான். அவள் தனது தோழியின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தாள்.

நீதி மன்றத்தில் இருந்து வெளியே வந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை செய்துகொண்டார்கள். விடை பெறுகிறேன் என்று அவன் சொன்னான். குட் லக் என்று அவள் சொன்னாள். ஏதோ தோன்றி, ‘ஒரு காப்பி சாப்பிட்டுவிட்டுப் போகலாமா?’ என்று அவன் கேட்டான். அவள் ஒப்புக்கொண்டாள்.

இருவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்று எதிரெதிரே அமர்ந்து காப்பி குடித்தார்கள். ‘நீ உனக்குப் பொருத்தமானவனாகப் பார்த்து இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று அவன் சொன்னான். பதிலுக்கு, ‘நீ என்ன செய்யப் போகிறாய்’ என்று அவள் கேட்டாள்.

‘இன்னொரு முறை விஷப் பரீட்சை செய்ய விருப்பமில்லை.’

பில்லுக்கு அவன் பணம் கொடுக்க முயன்றபோது தடுத்து, அவள்தான் கொடுத்தாள். கிளம்பும்போது அவனுக்குப் பிடித்த டெய்ரி மில்க் சாக்லேட் ஒன்றை வாங்கிக் கொடுத்து, கசப்பானவற்றை மறந்துவிடுவோம் என்று சொன்னாள். ஒரு சம்பிரதாயத்துக்காகவேனும் ‘இனி நாம் நண்பர்களாக இருப்போம்’ என்று சொல்வாளா என்று அவன் எதிர்பார்த்தான்.

அவள் தனது மொபைல் போனை எடுத்து ‘ஐ’ம் டெலீடிங் யுவர் நம்பர்’ என்று சொன்னபடி அவனது எண்ணை அவன் எதிரில் அழித்தாள். அவனும் அவளது எண்ணை அழித்தான். இருவரும் பிரிந்து போனார்கள்.

பிறகொரு சமயம் அழித்த எண்களைக் குறிப்பேட்டில் எழுதிப் பார்த்தார்கள்.

Share

9 comments

  • மறந்து தொலைக்க முடியாத எண், ஏன் இன்னும் மனதிற்குள் நிழலாடுகிறது? என்பதற்கான பதில் கிடைத்திருக்கிறது.
    அன்புங்க சார்.

  • விவாகரத்து வரமா சாபமா என்பதை அதற்க்கு பிறகான வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.

  • நினைவுகள் அழியாதே…சில சமயங்களில் யாருக்காகவோ யாரோ எடுக்கும் முடிவாக விவாகரத்து

  • எண்ணைத்தான் அழிக்க முடியும்

    எண்ணங்களை அல்ல

    என்பதை கடைசி வரி சொல்லியது

    வாழ்ந்து பிரிவது
    தீயினால் சுட்ட புண் போல அல்ல
    உள்ளுக்குள்ளும் ஆறாத ரணம்.

  • ஐயா, ஆமிர் கான் – கிரன் ராவ்? // We remain devoted parents to our son Azad, who we will nurture and raise together. We will also continue to work as collaborators on films //

  • பரஸ்பர புரிதலின் பேரில் விவாக ரத்து.
    அந்த புரிதல் பரஸ்பரம் இருந்திருந்தால் பிரிவேது.

  • வாழ்தலை எளிதாக்க, சிலவற்றை அழிக்க துணிந்தாலும்… வடுவாக பதிந்திருக்கும்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி