பேசும் புறா

ஆம், நம்புங்கள். அந்தப் புறா பேசியது. இதை என் மனைவியிடம் சொன்னபோது பைத்தியம் என்று சொல்லிவிட்டுப் போனாள். குடியிருப்பு வளாகத்தில் உள்ள எனக்குத் தெரிந்த சிலரிடம் சொன்னபோது அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் என் மனைவி சொன்னதைத்தான் அவர்கள் நினைத்திருப்பார்கள். நான் என்ன செய்ய. அது பேசியதை நான் கேட்டேன். பிரமையல்ல. கனவல்ல. அது நன்றாக, தெளிவான குரலில்தான் பேசியது.

ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். மற்ற பறவைகளைப் போல அல்லாமல் புறாக்களை அவற்றின் கூட்டத்தினிடையே தனித்து இனம் காண முடியும். மனித முகங்களைப் போன்றதுதான் புறாக்களின் முகங்களும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். யாரும் உற்றுக் கவனிப்பதில்லை என்பதால் இது பொதுவில் தெரிய வரவில்லை. என்னால் நான் வசிக்கும் வளாகத்தில் உள்ள ஏழெட்டுப் புறாக்களைத் தனியே அடையாளம் காண முடியும். அவற்றில் எதுவும் வெள்ளைப் புறா அல்ல. சாம்பல் நிறப் புறாக்கள். கழுத்தில் மட்டும் கணக்கிட முடியாத வண்ணங்களைக் கலந்து செய்தாற்போல ஒரு தகதகப்பு. பிறகு அவற்றின் சிவந்த பாதங்கள். ஒவ்வொரு புறா நடந்து நான்கடி செல்வதைக் காணும்போதும் தரையில் சிவப்புத் தூள் உதிர்ந்திருக்கிறதா என்று பார்ப்பேன். புறாக்களின் பாதச் சிவப்பு எனக்கு நினைவின் மிக ஆழத்தில் எதையோ ஒன்றைக் கிளறிக்கொண்டே இருக்கும். ஆனால் இன்றுவரை அது பிடிபட்டதில்லை. அது உதிரத்தின் சிவப்பல்ல. வேறு ஒன்று. எனக்கு மிக நன்றாகத் தெரிந்தது. கண்ணை மூடினால் அந்த நிறம் வரும். ஆனால் கணப் பொழுதுதான். நான் நன்கறிந்த எதையோ நினைவூட்ட முயற்சி செய்துவிட்டு அந்நிறம் மறைந்துவிடும். நான் நன்கறிந்த அந்த ஏதோ ஒன்று மட்டும் இறுதி வரை அகப்படாது. நெடு நாள்களாக இது எனக்கு நடக்கிறது.

இருக்கட்டும். எனக்குப் பரிச்சயமாகிவிட்ட அந்தப் புறாக்களுக்குப் பெயர் வைக்கலாமா என்று முதலில் நினைத்தேன். பிறகு, உணவு வைத்தால் போதும் என்று தோன்றிவிட்டது. அன்று முதல் தினமும் நடைப் பயிற்சிக்குச் செல்லும்போது கையில் ஒரு பிடி அரிசி எடுத்துச் செல்வேன். வளாகத்தில் எங்கே அதைக் கொட்டி வைத்தாலும் புறாக்கள் வந்து உண்ணும். அப்படி ஒரு புறா உண்டுகொண்டிருந்தபோது நின்று கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அது என்னிடம் பேசியது.

முதலில் அது அதிர்ச்சியாகவும் பிறகு வியப்பாகவும் இருந்தது. ஒரே ஒரு சொற்றொடர்தான். அதுவும் எனக்குப் புரிந்த மொழியில். என்னால் உணர முடிந்த குரலில். அந்தப் புறா என் தந்தையாகவோ அல்லது முன்னோர்களில் ஒருவராகவோ முற்பிறப்பில் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். காகங்கள் முன்னோராகக் கருதப்படுமானால் புறாக்கள் ஏன் இருக்க முடியாது? எதையாவது முன்னறிவிப்பு செய்யவோ, வேறு எதையேனும் குறிப்பால் உணர்த்தவோ இயற்கை பறவைகளை அனுப்பிவைக்கும் என்று படித்திருக்கிறேன்.

இருப்பினும் அது பேசியதை இன்னொரு முறை உறுதி செய்துகொள்ளலாம் என்று தோன்றியது.

மறுநாள் அதே இடத்தில் ஒரு பிடி அரிசியைத் தூவிவிட்டுக் காத்திருந்தேன். ஏழெட்டுப் புறாக்கள் வந்து கொத்தித் தின்றுவிட்டுப் பறந்தன.

அந்தப் புறா கடைசியில் வந்தது. இரண்டு அரிசி மணிகளைத் தின்றுவிட்டு என்னைப் பார்த்து, ‘நான் சொன்னது நடந்ததா இல்லையா? நேற்று முதல் நீ பைத்தியம் ஆகிவிட்டாய்’ என்று சொல்லிவிட்டுப் போனது.

Share

6 comments

  • Similar to good morning msg story.
    இது போன்ற உளச் சிக்கல் கதைகளை படித்தால் கொஞ்சநேரம் அப்படியே பித்துக் கொண்டு விடுகிறது

  • பேசியது புறா இல்லைங்க, பாரா.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி