படுத்து ஒரு ஜாமம் கழிந்தும் வியாசருக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு பார்த்தார். மேல் துண்டை இழுத்து முகத்தைச் சுற்றி மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தார். பத்து நிமிடம் தியானம் செய்தால் ஒருவேளை தூக்கம் வருமோ என்று அதையும் முயற்சி செய்தார். மிகவும் புத்துணர்ச்சியாகிவிட்டாற்போலத் தோன்றியது.
அவருக்கு பயமாக இருந்தது. இப்படியே இருப்பது தொடர்ந்தால் வாழ்நாளில் உறக்கம் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும். எதையாவது செய்ய முடிந்தால் நல்லது. சற்று வலுவாக. ஆனால் எப்போதும் இப்படி சிந்திக்க முடியாத அளவுக்குப் பதற்றம் ஏற்பட்டதில்லை. சரியாகச் சிந்திக்க முடியாதபோது எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. சரியாகச் செய்யாத எதுவும் சரித்திரமாவதில்லை.
உறக்கம் முற்றிலுமாக நீங்கிவிட்டதால், எழுந்து நதி தீரத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார்.
ஒரு மரணத்தைப் போல பூதாகாரமாகக் கவிந்திருந்தது இருள். ஆனாலும் பழகிய பாதையில் இருளும் ஒளியும் ஒன்றுதான். அது தவறு செய்வதில்லை. மனம்தான் சிக்கலாகிவிடுகிறது.
‘வியாசா, உன் பெயர் நாளை இல்லாமல் போகலாம். உன் தரிசனம், கற்பனை, கவித்துவம் அனைத்தும் காலாவதி ஆகிவிட்டதாக அறிவிக்கப்படலாம். விழித்துக்கொள்’ என்று அவரது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால் என்ன செய்வது?
வழக்குத் தொடர்ந்து பார்க்கலாமா என்று யோசித்தார். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. காலம் கடந்த பிரதிகளுக்கான காப்பிரைட் சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன. தவிரவும் தமிழ்நாட்டில் எந்தக் கதாசிரியனும் வழக்குப் போட்டு வெல்ல முடியாது. நான்கு நாள்களுக்கு ஃபேஸ்புக்கில் வேண்டுமானால் பிரபலமாக இருக்கலாம். இத்தனை யுகங்களுக்குப் பிறகு இப்படியொரு சங்கடம் நேருமென்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
இந்தப் புகழும் பிரபலமும் தான் எழுதிய காலத்தில் தனக்கு வந்திருக்க வேண்டியது. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து யாருக்கோ எழுதிக் கொடுத்துவிட்டாற்போல ஆகிவிட்டது. இதை அனுமதிக்க முடியாது. போகிற போக்கில் ஒரு வணக்கம் போட்டுவிட்டு அனைத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டான். ஏதாவது செய்துதான் தீரவேண்டும்.
உறுதி கொண்ட பிறகு அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மறுநாளே ரயிலேறிவிட்டார்.
பயணத்தின்போதுதான் என்ன செய்யலாம் என்று தெளிவான ஒரு முடிவுக்கு அவரால் வர முடிந்தது. சிறிது குரூரம்தான். ஆனால் வேறு வழியில்லை. விஷத்தை விழுங்கிச் செரிக்கவோ, கண்டத்தில் தேக்கி வைக்கவோ கலைஞனால் முடியாது. அது நினைவில் ஏறிவிட்டால் எல்லாம் முடிந்தது. ஊர் என்ன சொன்னால் என்ன, யார் என்ன சொன்னால் என்ன. எழுத்தாளனுக்கு அவன் முக்கியமல்ல. அவனது படைப்புதான் முக்கியம்.
சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் வண்டி பெரும் சத்தமுடன் நுழைந்தது. வியாசர் தனது தர்ப்பைப் புல்லால் நெய்த கைப்பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு இறங்கினார். எந்தப் பக்கம் போவது என்று புரியவில்லை. ரயில்வே ஸ்டேஷனே ஒரு ஊர் மாதிரி இருந்தது. சிறிது நேரம் திகைத்து நின்றிருந்தார். பிறகு எல்லோரும் செல்லும் வழியிலேயே சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து நடக்கத் தொடங்கினார்.
சிறிது தூரம் நடப்பதற்குள் யாரோ தடதடவென்று அவரை நோக்கி ஓடி வருவது போலத் தோன்ற, திரும்பிப் பார்த்தார். நாலைந்து பேர் சீறிப் பாய்ந்து வந்து அவரை வளைத்து நின்றுகொண்டார்கள். ‘நீங்கள்தானே வியாசர்?’
வியாசர் திகைத்துப் போனார். தேகம் சிலிர்த்துக் குளிர்ந்தது. அது படைப்பாளிக்கே உரிய எளிய உணர்ச்சி வசப்படல். கண்களில் கனிவும் பேரன்பும் பெருக ஆமென்று மெல்லத் தலையசைத்தார்.
‘உங்களத்தான் சார் தேடிட்டிருந்தோம்.’
‘நீங்கள் யார்?’
‘நாங்க விஷ்ணுபுரத்துலேருந்து வரோம் சார். இந்த வருஷ விருது உங்களுக்குத்தான்!’ என்றபடி கையைப் பிடித்துக் குலுக்கினார் நாலைந்தில் ஒருவர்.
வியாசருக்கு மூச்சடைத்தது. நிதானத்துக்கு வர மிகவும் சிரமப்பட்டார். கண் கலங்கிவிடக் கூடாது என்றுதான் நினைத்தார். முடியாமல் கதறி அழத் தொடங்கினார்.
0
வியாசருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்க தேர்வு செய்தது “ஆசானுக்கு” தெரியுமா?
ரகளை.. ஆசான் படிச்சுட்டாரா இதை.
திரைப்படம் பார்ப்பது போல் உள்ளது உங்கள் கதை சார்.
Pendulum Time Machine
காலையில் இருந்து ஐந்து முறை படித்து விட்டேன்.. சிரிப்பை அடக்க முடியவில்லை.. இத்தனைக்கும் நான் வென்முரசு வாசகன் நான்.. இந்த நாள் முடிவாதற்குள் மீண்டும் மூன்று முறை படித்து விடுவேன்..
வியாசருக்கும் விருதா!!!
ஆசான்களுக்குள் யுத்தம் ?…
ரகளை…
அடுத்து பா ரா வுக்கும் ஒரு பாயாசத்தை போட்ற வேண்டியதுதான்.
இந்த வருட விஷ்ணுபுர விருது பாராவுக்கு…
என்னா ஒரு வில்லத்தனம்
முடிவு எதிர்பாரா திருப்பம் ..பயணத்தை தவிர்த்து இருந்தாலும் ேதடி வந்திருக்கும் அல்லவா!!