எடுத்ததும் வைத்ததும்

மண் சட்டியில் இருந்த நெருப்புத் துண்டுகளை எடுத்து அப்பாவின் நெஞ்சில் வைக்கச் சொன்னார்கள். மின் மயானமானாலும் சடங்குகளை விட்டுவிடுவதற்கில்லை. அவருக்கு அது சுடப் போவதில்லை என்று தெரியும். இருந்தாலும் கஷ்டமாக இருந்தது. வாழ்நாளில் எவ்வளவு முறை அவருக்கு அப்படிப்பட்ட சூட்டைத் தந்திருப்பேன் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றியது. இருக்கும். எப்படியும் ஏழெட்டு முறை. அப்பா கோபித்துக்கொண்டதில்லை. வருந்தியிருப்பார். ஆனால் காட்டிக்கொண்டதில்லை. அவரது ஒவ்வொரு நம்பிக்கையையும் ஒரு தீவிரத்துடன் பொய்ப்பித்துக்கொண்டு வரும் மகனாக அவருக்கு நான் மறைமுகமாக எதையாவது உணர்த்தியிருக்கலாம். ஏதோ ஒரு கட்டத்தில் நான் என்ன செய்தாலும் வெறுமனே புன்னகையுடன் தலையசைத்துவிட்டு நகர ஆரம்பித்துவிட்டார்.

கொள்ளி வைத்த வேளையில் அதுதான் நினைவுக்கு வந்தது. அழுதுவிடுவேன் என்று தோன்றியது. ஆனால் எவ்வளவு அபத்தம்! நான் அழுதால் அது ஓர் அர்த்தமற்ற செயல்பாடு. வாழும்போது அவருக்கு நான் எதுவும் செய்ததில்லை. எதுவும் செய்யாதவனின் கண்ணீருக்குப் பொருள் இருக்க வாய்ப்பில்லை.

அழுதுவிடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இடுக்கியால் ஒவ்வொரு கங்காக எடுத்து அவர் நெஞ்சில் வைத்தேன். சில நிமிடங்கள்தான். குகை போலிருக்கும் மின் கலத்துக்குள் அப்பாவைச் செலுத்திக் கதவை மூடி விடுவார்கள். பிறகு ஒரு சட்டியில் சாம்பலாகக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அதையும் கொண்டு கடலில் சேர்த்துவிட்டால் அனைத்தும் முடிந்தது.

‘அப்படியா?’ என்று அப்பா படுத்தபடியே கேட்பது போல இருந்தது. என் கையில் இருந்த அலுமினிய இடுக்கி நழுவிக் கீழே விழுந்தது. சட்டிக்குள் இருந்த கடைசிக் கங்கைக் கையை உள்ளே விட்டு எடுத்தேன். விர்ரென்று சுட்டது. விரல்கள் எரிந்தன. பொறுத்துக்கொண்டு அப்படியே உள்ளங்கைக்குத் தள்ளி ஒரு முறை அழுத்தி மூடிவிட்டுப் பிறகு திறந்து எடுத்து நடு நெஞ்சில் வைத்தேன். எது எதற்கோ சேர்த்து ஒரு தண்டனையைக் கொடுத்துக்கொண்டு விட்டதாக ஒரு அற்ப மகிழ்ச்சி.

பிறகு தோன்றியது. அதுவும்கூட அவர் விரும்பாததாகத்தான் இருக்கும். ஒழியட்டும். ஏழெட்டுடன் இன்னொரு கொள்ளியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

Share

5 comments

    • அக்னி உடம்பை எரித்து ஆன்மாவை..அப்பா!!..அக்னியால் கை யை சுட்டு மகன் தன் ஆன்மாவை!!…

  • தினமும் பாரா வின் கதையை படித்துவிட்டு தான் தூங்குகிறேன் . மிக்க நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter