தனிமையில் நூற்றைம்பது ஆண்டுகள்

இளம் வயதில் அவள் ஒருவனைக் காதலித்தாள். அவன் வேறொருத்தியைத் திருமணம் செய்துகொண்டு போனான். பிறகு அவளுக்கு வீட்டார் வரன் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். ஓராண்டில் அவன் விபத்தில் காலமானான். அதன் பிறகு அவள் வேலை தேடிக்கொண்டு வெளியூருக்குச் சென்றாள். என்ன ஆனாலும் இனி சொந்த ஊருக்கு வரக்கூடாது என்று நினைத்தாள். வைராக்கியமாக அப்படியே இருந்துவிட்டு, பெற்றோர் இறந்த போது மட்டும் வந்துவிட்டுச் சென்றாள். இனி தன்னை நினைவுகூர யாருமில்லை என்பது அப்போது சிறிது ஆறுதலாக இருப்பது போலத் தோன்றியது.

ஆனால் விரைவில் அது சலிப்பூட்ட ஆரம்பித்தது. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளின் போதும் யாராவது அழைத்து வாழ்த்துவார்கள் என்று நினைப்பாள். ஆனால் அப்படி ஒரு அழைப்பு வராது. புதிதாக அறிமுகமான மனிதர்களிடம் பேச்சு வாக்கில் தன் பிறந்த தேதியைச் சொல்லி வைத்தாள். யாருக்கும் அது நினைவில்லாமல் போனது. மற்ற நாள்களைக் கடப்பதுகூடப் பிரச்னை இல்லை. பிறந்த நாள் வரும்போது பெரும் மன உளைச்சலாகிவிடுகிறது. ஏன் பிறந்தோம் என்று எண்ண ஒன்றுமில்லைதான். துயரங்கள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனாலும் இருப்பது பாரமாகத் தோன்ற ஆரம்பித்தது. ஒரு குழந்தையாவது பிறந்திருக்கலாம் என்று எப்போதாவது அவளுக்குத் தோன்றும். பிறக்காதிருந்ததே நல்லது என்றும் உடனே தோன்றும். நீண்ட நாள் நோக்கில் தனி நபர் வாழ்க்கை அவ்வளவு வண்ணமயமானதல்ல என்ற முடிவுக்கு வந்தாள்.

அவளுக்கு ஐம்பதாவது பிறந்த தினம் வந்தது. தனக்கென யாருமில்லாமல் இருபத்தைந்து வருடங்களைக் கழித்துவிட்டதை எண்ணிப் பார்த்தாள். யாருக்காகவேனும் தான் இருந்திருக்கலாம் என்றும் தோன்றியது. இனி அந்த எண்ணங்களால் பயனில்லை. விரக்தியால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை அப்படித்தான் இருக்கும். நீண்டதொரு கடிதத்தை எழுதினாள். அதில், என் உடலைக் கண்டெடுப்பவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு அளித்துவிடவும் என்று குறிப்பிட்டாள். பிறகு அதை பத்திரமாகத் தனது தலையணையின் அடியில் வைத்தாள்.

நீண்ட நாள்களாக டீ ஆக்டிவேட் செய்து வைத்திருந்த ஃபேஸ்புக் கணக்கை மீண்டும் திறந்தாள். என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று ஒரு போஸ்ட் போட்டுவிட்டு உறங்கத் தொடங்கினாள்.

Share

1 comment

  • ஒரு மன நல மருத்துவரின் கவுன்சிலிங் பிரிவில் சில நாட்கள் வாலண்டியர் செய்த போது நிறைய பேரின் கதைகள் கேட்க நேர்ந்தது.
    ஒரு சில கதைகள் அந்த குழந்தைமனிதர்களின் வார்த்தைகள் போல இருக்கிறது. இது ஒரு மனநிலை. அதுவும் படித்து வேலை கையில் இருக்கும்போது இல்லாத maturity யை இருப்பதாக எண்ணி முடிவெடுத்து விடும் மனநிலை.

By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!