உருகாத வெண்ணெய்

பன்னிரண்டு வயதில் விசாலாட்சி மாமி எனக்கு அறிமுகமானபோது அவளுக்கு முப்பது வயதுதான். அக்கா என்று சொல்லியிருக்கலாம். ஆனால் சொன்னதில்லை. மாமி, தனது ஐம்பது வயதுக் கணவரின் இரண்டாம் தாரமாக நாங்கள் குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். என் அம்மாவிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போதே தான் இரண்டாம் தாரமாக மணமுடித்து வந்தவள் என்பதை வெளிப்படையாகச் சொன்னாள்.

மாமியின் கணவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவரது நடை உடையைப் பார்த்தால் பெரிய அதிகாரி என்று தோன்றும். முதல் குடும்பம் என்ற ஒன்று உடுமலைப்பேட்டையில் இருக்கும்போதே சைதாப்பேட்டை காரணீசுவரர் தெருவில் இரண்டாவது குடும்பமாக ஒன்றை நிறுவிக்கொண்டு வாழ வந்தவர் வேறெப்படி இருக்க முடியும்?

‘எப்படி நீ இதுக்கு சம்மதிச்சே?’ என்று என் அம்மா விசாலாட்சி மாமியைக் கேட்டபோது, ‘மறுக்கத் தோணலை மாமி. சின்ன வயசுலேருந்து நிறையக் கஷ்டம் பாத்துட்டேன். பெத்தவா இல்லே. ஆதரிக்க யாருமில்லே. காசு மேல அப்டி ஒரு வெறி. ரெண்டாந்தாரமானா என்ன? வசதியா இருக்கலாம்னு தோணித்து. அதான்’ என்று பதில் சொன்னாள்.

என் வீட்டில் பல நாள் இதைக் குறித்து அம்மாவும் அப்பாவும் வாய் ஓயாமல் பேசிப் பேசி மாய்ந்தார்கள்.

விசாலாட்சி மாமி விரதங்கள், நோன்பு என்று வந்தால் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவாள். என் அம்மாவுடன் உட்கார்ந்து அனைத்தையும் சிரத்தையாகச் செய்வாள். இறுதியில் அம்மாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்வாள். ‘பாவம், அவளுக்குன்னு யார் இருக்கா? நல்ல பொண்ணு’ என்று அம்மா சொல்லத் தொடங்கினாள்.

ஒரு காரடையான் நோன்பு தினத்தில் ‘ஒரு நாளும் என் கணவன் பிரியாத வரம் வேண்டும்’ என்று நெக்குருக வேண்டிக்கொண்டிருந்த தருணத்தில் அவள் கண்ணில் இருந்து கரகரவென நீர் வழிந்தது என்று அம்மா சொன்னது நினைவிருக்கிறது. அன்று அம்மா, விசாலாட்சி மாமியிடம் அவள் புருஷனின் மூத்த தாரம், அவளுக்குப் பிறந்த பிள்ளை குறித்தெல்லாம் நிறைய விசாரித்தாள். தனது திருமண விவரம் அறிந்தபோது அந்தப் பெண்மணி துடைப்பக்கட்டையால் அடி அடி என்று அடித்து, திட்டித் தீர்த்ததை அவள் அழாமல் சொன்னாள்.

‘கடவுளுக்கு ஓர வஞ்சனை. சில பேருக்குப் பணத்தைக் குடுத்துடறார். சிலபேருக்கு அதைக் கண்ணுலயே காட்டமாட்டேங்கறார். நான் என்ன செய்ய மாமி? இவர் என்னைப் பிடிச்சிருக்குன்னார். கவர்மெண்ட் உத்தியோகம். நல்ல சம்பளம். பென்ஷன் வேற வரும். சரி போ, அவா துடைப்பக்கட்டையால ஆசீர்வாதம் பண்ணான்னு நினைச்சிண்டேன். ஆனா என்ன இருந்து என்ன. அவருக்கு அடுக்கி வெச்சி அழகு பாக்கத்தான் பிடிச்சிருக்கே தவிர செலவு பண்ண மனசே வர்றதில்லே’ என்று விசாலாட்சி மாமி சொன்னாள்.

ஏழெட்டு மாதங்களில் அவள் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவளாகிப் போனாள். ஆனால் திடீரென்று அவள் வந்து போவது படிப்படியாகக் குறைந்தது. ‘என்னமோ தெரியல. உம்முன்னே இருக்கா’ என்று என் அம்மா சொன்னாள். புருஷன் பெண்டாட்டி சண்டையாக இருக்கலாம் என்று அப்பா முடிவுக்கு வந்தார். மாதத்தில் நாலைந்து நாள் அவளது கணவர் உடுமலைப்பேட்டைக்குப் போய் வந்துகொண்டிருந்தாலும் இங்கே இவளிடம் எல்லாம் சரியாக இருப்பது போலத்தான் தோன்றியது.

ஆனால் அது அப்படி இல்லை. ஒருநாள் விசாலாட்சி மாமி இல்லாமல் போனாள். அவளது வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு வந்து திரும்பத் திரும்ப விசாரித்துக்கொண்டிருந்தார். என்ன ஆனாள், எங்கே போனாள் என்றே தெரியவில்லை என்று கண்ணில் நீரோடு சொன்னார். போனவள் ஒரு கடிதம்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. மாமி மாமி என்று பாசத்தோடு பழகிய என் அம்மாவிடம்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு விசாலாட்சி மாமியைத் திருச்சியில் பார்த்தேன். அன்றும் காரடையான் நோன்பு. மாமி நோன்பு முடித்துவிட்டுக் கோயிலுக்கு வந்திருந்தாள். நெற்றியில் பெரிய பொட்டும் கழுத்தில் நோன்புச் சரடும் தலை நிறையப் பூவும் வலது மேலாக்கு மடிசார்க் கட்டுமாகப் பார்க்க மங்களகரமாக இருந்தாள். என்னை அவளுக்க அடையாளம் தெரியவில்லை. தலை நரைத்து முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தாலும் எனக்குப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. அறிமுகப்படுத்திக்கொண்டு, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன்.

‘நன்னா இருக்கேண்டா. எங்காத்துக்காரர் இங்க பிஎச்ஈஎல்ல இருக்கார். லேட்டா பொறந்ததால பிள்ளை இப்பதான் எட்டாங்கிளாஸ் படிக்கறான்’ என்றாள்.

நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் அம்மா அப்பாவைப் பற்றியெல்லாம் நிறைய விசாரித்தாள். சொந்த வீடு, கார் இருக்கிறது, வீட்டில் சமையலுக்கு ஆள் போட்டிருக்கிறது என்று என்னென்னவோ சொன்னாள். வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். இன்னொரு சமயம் வருவதாகச் சொல்லிவிட்டு விடைபெற்றேன்.

அந்த மின்சார வாரிய அதிகாரி மாரடைப்பால் காலமானதை நான் சொல்லவில்லை.

Share

8 comments

  • அருமையான கதை. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இரண்டாம் தாரமாக சம்மதித்து வந்தவர், புருஷன் கஞ்சனாக இருந்தால் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்படி திடுக்கிடும் முடிவுகளை பெண்களால்தான் எடுக்க முடியும். ஆண்களுக்கு இவ்ளோ தைரியம் எல்லாம் கிடையாது ;))))

  • மாமியிடம் சொல்லியிருந்தாலும் பெரிதாக ஒன்றும் வருத்தப் பட்டிருக்க மாட்டாள்.
    அவர் தான் அடுக்கி வைத்தாரே தவிர செலவழிக்க வில்லையே.

  • கால புருஷனுக்கு இரண்டாம் இடம் 12-ஆம் இடம் இது மட்டுமே இப்போது வேலை செய்கிறது. இந்த கதை வேறயா.. கலிகாலம்.. ஆசாபாசம் மட்டும் பணம்..

  • கால புருஷனுக்கு இரண்டாம் இடம் 12-ஆம் இடம் இது மட்டுமே இப்போது வேலை செய்கிறது. இந்த கதை வேறயா.. கலிகாலம்.. ஆசாபாசம் மட்டும் பணம்..

  • சார், கதையும் பிடித்திருந்தது, அதைவிட கதைக்கான தலைப்பு மிகவும் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது….

  • மிகவும் உணர்வுப்பூர்வமான கதை. இதுபோன்ற பெண்களை நானும் கண்டிருக்கிறேன். அவர்களை இந்த சமூகம் நடத்தும் விதம் மிகவும் மோசம். என்னை மிகவும் பாதித்த கதை.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி