அன்சைஸ்

நம்ப முடியவில்லைதான். ஆனால் எல்லாம் அப்படித்தானே இருக்கிறது? நமுட்டுச் சிரிப்பு சிரிக்காதீர்கள். இப்படியெல்லாமும் ஒரு மனுஷகுமாரனுக்கு அவஸ்தைகள் உருவாகும் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டீர்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று கருதுவதற்கு ஒரு ஆதாம் அல்லது ஏவாளின் மனநிலை நமக்கு வேண்டுமாயிருக்கும். துரதிருஷ்டம். நாகரிகம் வளர்ந்துவிட்ட இருபத்தியோறாம் நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கிறோம். ஒன்றும் சொல்லுவதற்கில்லை. உங்கள் பேட்டையில் யாராவது ஒரு நல்ல தையல் காரர் இருப்பாரானால் ஒரு கடுதாசியில் முகவரி எழுதி அனுப்பிவிட்டு மேற்கொண்டு படிக்கத் தொடங்குவீரானால் உமக்குச் சர்வ மங்களமும் உண்டாக எல்லாம் வல்ல எம்பெருமானை அவசியம் பிரார்த்திப்பேன். தேசத்தில் இன்று பெரும்பஞ்சம் அந்தக் கலைஞர்களுக்குத்தான். அந்தப் பஞ்சத்தால் வஞ்சிக்கப்பட்ட வாலிப வயோதிக அன்பர்கள் என்னைப் போல் எத்தனை பேர் இருப்பார்கள் என்று எளிதில் கணக்கெடுத்துவிட இயலாது. டூஜியும் சமச்சீரும் இன்னபிற இகவாழ்வு இம்சைகளும் காலக்கிரமத்தில் தீரும், மறக்கப்படும். இந்த அவலத்துக்கு இனியொரு விடிவு என்பதே இருக்காது என்று அச்சமாயிருக்கிறது.

ஒரு காலத்தில் வீதிக்கொரு தையல்காரராவது அவசியம் இருப்பார். பாம்பே டைலர்ஸ். நியூ லுக் டைலர்ஸ். ஃபேஷன் டைலர்ஸ். இந்த மூன்று பெயர்களில் மட்டும் சுமார் மூவாயிரம் கடைகள் பார்த்திருக்கிறேன். வண்ணமயமான நாரீமணிகளின் நவநாகரிக கோலத்தை வாழ்க்கையளவு போஸ்டர்களில் சிறைப்பிடித்து சுவரில் ஒட்டியிருப்பார்கள். தொங்கும் ஹேங்கர்களில் தைத்து முடித்த கால் சட்டைகளும் மேல் சட்டைகளும் அடையாள அட்டைகளுடன் வசீகரித்து உள்ளே அழைக்கும். குவிந்திருக்கும் துணி மலைகளின் இடுக்கில் ஒரு பையன் தவ சிரேஷ்டனாக காஜா பிரித்துக்கொண்டிருப்பான். கடைக்கு இரண்டு கலைஞர்கள் காங்கிரஸ்காரர்களின் அங்கவஸ்திரம் மாதிரி இஞ்ச் டேப்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஸ்டைலாகத் தைத்துக்கொண்டிருப்பார்கள். தலைமை தையல் கலைஞருக்கு மாஸ்டர் என்று பெயர். அவர் கழுத்திலும் இஞ்ச் டேப் இருக்கும். புதுத் துணியுடன் உள்ளே நுழைவோரின் விருப்பங்களைக் கேட்டு நோட்டுப் புத்தகத்தில் அவர் குறித்துக்கொள்வார். வினாடிப் பொழுதுகளில் மேலுக்கும் கீழுக்கும் அளவெடுத்து, துணியின் ஓரத்தில் ஒரு முக்கோண வெட்டுப் போட்டு துண்டுச் சீட்டில் பின் செய்து கொடுத்து நாலு நாளில் வரச் சொல்லுவார். பிராந்தியத்தில் வசிக்கும் அத்தனை மனுஷகுமாரர்களின் உடலளவும் அந்த 192 பக்க நோட்டுப் புத்தகத்தில் இருக்கும். ஒல்லி மனிதர்கள். குண்டு மனிதர்கள். சற்றே பூசிய, ஆனாலும் குண்டு என வகைப்படுத்த இயலாத நடுவாந்திர மனிதர்கள். அசாத்திய உயரமும் ஆஜானுபாகுத் தோற்றமும் கொண்ட வானவராயர்கள். ஆ, பெண்கள்!

அழகிய பெண்களுக்குத் தைக்கும் கலைஞர்கள் எப்படியோ இயல்பிலேயே ஸ்டைல் மன்னர்களாக இருந்துவிடுவார்கள். இந்தப் பெண்களும்தான் அவர்களிடம் எத்தனை உரிமையுடன் சிரித்துப் பேசி காரியத்தைச் சாதித்துக்கொண்டுவிடுகிறார்கள்.

எனக்கு நீண்டநாள்களாக ஒரு சந்தேகம் இருந்தது. ஆண்கள் புதுத் துணியைத் தைக்கக் கொடுக்கப் போகும்போதெல்லாம் புதிதாக அளவெடுப்பது வழக்கம். வாழ்நாளில் ஒரு பெண்ணும் தையல் கடையில் அளவெடுத்து நான் கண்டதில்லை. தயாராகக் கையில் ஓர் உடுப்பு எடுத்து வருவார்கள். பெரும்பாலும் அந்த அளவிலேயே தைக்கச் சொல்லுவார்கள். தவறிப் போனால் தோள்பட்டைக்குக் கீழே அல்லது இடுப்புப் பகுதியில் அரை இஞ்ச் அல்லது முக்கால் இஞ்சுக்குத் தளர்த்தித் தைக்கச் சொல்லுவார்கள். இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரிந்ததே இல்லை. இந்த உடுப்புக்கு, அந்த உடுப்பு மாதிரி. சரி, அந்தப் பழைய உடுப்புக்கு? அதற்கு முன் தைத்த வேறு உடுப்பு மாதிரி. அதற்கும் ஒரு மாதிரி இருந்திருக்க வேண்டுமல்லவா? அட, ஏதாவது ஒரு முதல் உடுப்புக்கு அளவெடுத்துத்தானே தீரவேண்டியிருந்திருக்கும்?

இந்தப் பெண்கள் முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தையல் கடையில் அளவு கொடுத்துத் தைத்ததன் பிறகு, அளவு கொடுக்கும் வழக்கத்தையே நிறுத்திவிட்டார்களோ என்று தோன்றும். அந்தப் பிராயம் தொட்டு அரை இஞ்ச், முக்கால் இஞ்ச், ஒரு இஞ்ச், ஒன்றரை இஞ்ச் என்று வளர்த்தியை மனக்கண்ணில் அவதானித்து விடுகிறார்களா என்ன?

என்ன சூட்சுமமோ? எளிய ஆண் மனத்துக்கு இதெல்லாம் புரிகிறதில்லை. தவிரவும் இதையெல்லாம் யோசித்தால் பொதுவில் எனக்கு சுய சோகம் பொங்கத் தொடங்கிவிடும். காரணம் உண்டு. ஒவ்வொரு முறை நான் உடுப்புக்கு அளவு கொடுக்கப் போகும் போதும் முந்தைய அளவுக்கும் தற்போது கொடுக்கிற அளவுக்கும் சற்றும் சம்பந்தமேயிருக்காது. மழித்தலும் நீட்டலும் வள்ளுவரைப் பொறுத்தவரை தாடி சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு அது பாடி சம்பந்தப்பட்டது.

விளக்குகிறேன். என்னுடைய பார தேகமானது சற்று வினோதமான கட்டமைப்புக் கொண்டது. என்னைக் காட்டிலும் குண்டான மனிதர்கள் உலகில் உண்டு. என்னைவிட ஒல்லியானவர்களும் ஏராளமானோர் உண்டு. ஆனால் என்னை அச்செடுத்துச் செய்தவர்கள் அரிது என்றே எண்ணுகிறேன்.

ஒரு தையல் கலைஞரிடம் ஒரு சமயம் அளவு கொடுத்துக்கொண்டிருந்தபோது, என் சட்டை அளவு என்னவென்று கேட்டேன். அவர் திடுக்கிட்டுப் போய்விட்டார். அது தயார் ஆடைகள் அவ்வளவாகப் பிரபலமாகாத காலம். கோ ஆப்டெக்ஸில் துணி வாங்கி, பேட்டைக் கலைஞரிடம் கொடுத்துத் தைத்துக்கொள்வதுதான் பொதுவில் இருந்த ஒரே வழக்கம். நான் அப்போது என் பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன்.

நான் கேட்டது ஒன்றும் பிரமாதமான கேள்வி இல்லை. ஆனாலும் இந்தக் கலைத்தொழில் வல்லுநர் ஏன் பதில் அளிக்காமல் நேரம் கடத்துகிறார்? திரும்பவும் கேட்டேன். என் சட்டை அளவு என்ன?

‘அதெல்லாம் அவ்ளோ ஈசியா சொல்லமுடியாது தம்பி’ என்று பதில் சொன்னார். பொதுவாக ஒரு சட்டையின் அளவு என்பது அதன் இடது தோள்பட்டை தொடங்கும் புள்ளியிலிருந்து வலது தோள்பட்டை முடியும் புள்ளி ஈறாக எத்தனை இஞ்சுகள் என்பது ஆகும். இந்த ஓர் அளவைச் சரியாக எடுத்துவிட்டால் போதும். இதர பாகங்களின் அளவை நல்ல கலைஞர்கள் யூகத்திலேயே சரியாகக் கணித்து வடிவமைத்துவிடுவார்கள். எனது அப்போதைய தோள்பட்டைகளும் அப்படியொன்றும் அளக்கமுடியாத பாரதூரங்கள் கொண்டதல்ல. ஆனாலும் கலைத்தொழில் வல்லுநர் அலட்டிக்கொள்கிறார். இது எனக்குக் கோபம் தந்தது.

‘அட, சொல்லுங்கண்ணே. என்னதான் நம்ம சைசு?’ என்று திரும்பவும் பொறுமையாகக் கேட்டேன்.

‘என்னமோ ஒண்ணு. மூணுநாள் களிச்சி வந்து வாங்கிட்டுப் போ’ என்று அடுத்த வாடிக்கையாளரின் துணியை அளவெடுக்கப் போய்விட்டார். இது எனக்கு அவமானமாக இருந்தது. என் சங்கடத்தை அவருக்கு நான் எப்படி விளக்குவேன்? ஒரு முறையும் அவர் தைத்துக்கொடுக்கும் சட்டைகளும் கால் சட்டைகளும் எனக்கு நூறு விழுக்காடு பொருந்தியதே இல்லை. தோள் கண்டார், தோளே கண்டார் என்பதுபோல தோள்பட்டை அளவில் அவர் பிழை புரிவதேயில்லை. சரியாக எடுத்துவிடுவார். ஆனால் அரைக்கைச் சட்டையின் விளிம்பு, முழங்கைக்குக் கீழுமில்லாமல் மேலுமில்லாமல் ஹிரணிய கசிபுவின் இறுதிப் படுக்கையிடம் மாதிரி மடிப்பில் போய் சிக்கிக்கொள்ளும். எப்போதும் கசகசக்கும். தப்பித்தவறி அந்த முறை கையளவும் சரியாக இருந்துவிட்டால், நெஞ்சுக்குக் கீழே, இடுப்புக்கு மேலே உள்ள ஒரு சாண் பிரதேசத்தில் துணி உரசும். கப்பென்று பிடித்துக்கொண்ட மாதிரி இருக்கும். சம்மணமிட்டு உட்கார்ந்தால் இரு பொத்தான்களுக்கு இடைப்பட்ட இடைவெளி, ஒரு பாதாம் கொட்டை பிளப்பது மாதிரி பிளந்துகொண்டு நிற்கும். ஒரு ஆணழகனை அலங்கோலப்படுத்த அதைக் காட்டிலும் உத்தம வழி வேறில்லை.

தவறிப் போய் அந்த முறை அதுவும் சரியாக இருந்துவிடும் பட்சத்தில் சட்டையின் கழுத்துச் சுற்று தடாலென்று பெருகி அல்லது சுருங்கியிருக்கும். சந்தேகமின்றி சட்டை ஒரு தேசம். எப்படியானாலும் ஏதாவது ஒரு பிராந்தியம் பிரச்னைக்குரியதுதான். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தாலும் வட கிழக்கும் காஷ்மீரும் சத்தீஸ்கரும் அவ்வப்போது அவதியுறுவதில்லையா? அம்மாதிரியாக.

என் பிரச்னை, உடலின் வேறு வேறு பகுதிகள், வேறு வேறு பருவ காலங்களில், வேறு வேறு அளவுக்கு, சொல்லாமல் கொள்ளாமல் மாறிவிடுவதுதான் என்று சொன்னால் உங்களுக்குப் புரிவதற்குச் சிரமமாயிருக்கலாம். ஆனால் அது உண்மை. தவிரவும் முழு ஆகிருதிக்கு ஏற்ற அளவுக்குக் கரங்களின் நீளம், தோள்பட்டையின் அகலம், உடலின் சுற்றளவு, வயிற்றுப் பகுதியின் சுற்றளவு சரியான விகிதத்தில் அமையாதது என் பிழையல்ல. எம்பெருமான் பிழை.

யோசித்துப் பார்த்தால் பிழை என்று சொல்லுவது அத்தனை சரியல்ல என்று நினைக்கிறேன். இது ஒரு சைஸ். என்ன சைஸ் என்று கேட்பீர்களானால், அன் சைஸ் என்றுதான் பதில் சொல்லவேண்டி வரும். தவிரவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பக்கவாட்டிலும் சுற்றளவிலும் மட்டும் வளர்ந்துகொண்டு போகிறவனுக்குத் தையல் கலைஞர்களின் தோழமையும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமானது.

இதை நன்கு உணர்ந்தபடியாலேயே, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எனக்கெனப் பிரத்தியேகமாக ஒரு தையல் கலைஞரை சிநேகம் பிடித்து வைத்துக்கொண்டு வந்திருக்கிறேன். 38, 40, 42, 44, 46 போன்ற சட்டை அளவுகளுக்கும் என் சட்டையின் அளவுக்கும் எந்தச் சம்பந்தமும், எக்காலத்திலும் இருந்தது கிடையாது. பொதுவாக என் சட்டையின் அளவுகள் 37 ¾, 39 ¼ , 41 ½ , 43.8,  44.6 என்றுதான் இருந்திருக்குமென்று நினைக்கிறேன். அதனால்தான் மேற்குறிப்பிட்ட கலைத்தொழில் வல்லுநர் என் வினாவுக்கு பதிலளிக்க மறுத்திருக்கிறார். அவர் மீது பிழையில்லை.

இந்த உண்மை எனக்குப் புரியவந்தது சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர்தான். அப்போதுதான் தையல் கலைஞர்கள் காணாமல் போகத் தொடங்கி, கடைகளில் தயார் ஆடைகள் வந்து குவிய ஆரம்பித்திருந்தன. இது ஒரு அராஜகம். மாபெரும் அராஜகம். நான் இந்த அளவில்தான் இருக்க வேண்டும், இது இல்லாவிட்டால் அந்த அளவில்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்க இந்தத் தயார் ஆடைத் தயாரிப்பாளர்கள் யார்? அயோக்கிய சிகாமணிகள், ஒருத்தராவது என் அளவுக்குச் சட்டையும் கால் சட்டையும் தைத்து வைத்திருக்கிறார்களா என்றால், அதுவுமில்லை.

பத்தாண்டு காலமாக நானும் மாநகரில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகளிலும் அனைத்து விதமான தயார் ஆடைத் தயாரிப்புகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஒருமுறையேனும் என் கொள்ளளவுக்கேற்ற உடுப்பு அகப்பட்டதில்லை. தோள்பட்டை அளவு சரியாக இருக்கும் சட்டைகள் தொப்பையை இறுக்கும். சரி ஒழிகிறது என்று இரண்டு புள்ளிகள் கூட்டிய அளவில் சட்டை வாங்கினால் தொப்பை இடிக்காது. ஆனால் கையளவு காமராசருடையதுபோல் ஆகிவிடும். தவிரவும் ஒரு பைஜாமாவின் நீளத்தை நினைவூட்டக்கூடிய அளவு முழங்கால்வரை சட்டையின் கீழ்ப்புறம் நீண்டுவிடும்.

கால்சட்டை விஷயத்தை நான் சொல்லவே போவதில்லை. மாதம் ஒருமுறை மாறும் தன்மையுடைய என் இடுப்பளவுக்குப் பொருந்துவதான தயார் ஆடை இந்தியாவிலேயே கிடையாது! எத்தனையோ பழைய ஃபேஷன்கள் திரும்பவும் உயிர்ப்பெற்று வந்ததைப் போல நாடா வைத்து இறுக்கும் பாணி திரும்ப வராதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். அதுதான் நமக்குச் சரிப்படும் என்று அப்பன் இட்டமுடன் எழுதி வைத்திருக்கும்போது நான் என்ன செய்ய இயலும்?

சரி, வேட்டி கட்டியாவது அந்தப் பிரச்னையைத் தீர்த்துவிடலாம் என்றாலும் இந்தச் சட்டை விஷயம் பெரும்பாடல்லவா? தீர அலசி ஆராய்ந்து இறுதியில் ஓரிரு வருடங்களுக்குமுன் டி-ஷர்ட்கள் அணியலாம் என்று முடிவு செய்தேன். அதைமட்டும் ஏன் விட்டுவைப்பானேன்?

ஆனால் அதிலும் பிரச்னை. உருண்டையான மனிதர்களுக்கு ஏற்ற டி-ஷர்ட்டுகளை ஏனோ தயார் ஆடை நிறுவனங்கள் உருவாக்குவதேயில்லை. தோள்பட்டை, உயரம், கையளவு விஷயங்களில் தயார்ச் சட்டைகளைக் காட்டிலும் இவை ஓரளவு சரியாகப் பொருந்தக் கூடியனவே என்றாலும் தொப்பை விஷயத்தில் இங்கும் சிக்கல்தான். தயாராக உள்ள அளவில் ஓரளவு பொருந்தக்கூடியதைத் தேர்ந்தெடுத்து, திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். சுமார் இருபது விதமான தயார் ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களின் டி ஷர்ட்டுகளை முயற்சி செய்து பார்த்து அலுத்துப் போய்விட்டேன். எந்தத் தயாரிப்பாளருக்கும் தரிசனமே போதாது. இப்படியும் அன் சைஸில் மனிதர்கள் இருக்கக்கூடுமென்று யோசிக்க வேண்டாமோ? ம்ஹும்.

நாட்டில் தையல் கலைஞர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிற சூழலில், எதிர்காலத்தில் என்னை ஆதிவாசி மாதிரி அலைய வைக்க இயற்கையின் திட்டமிட்ட சதி அல்லாமல் இது வேறல்ல.

வெகுகாலம்  தேடித் தேடி அலைந்து, சமீபத்தில் என் பேட்டைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு தையல் கலைஞரைக் கண்டுபிடித்திருக்கிறேன். பொதுவாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே தைப்பவர். அதனால் யூக உணர்வு நிச்சயமாக இருக்கும், நம் பிரச்னையைப் புரிந்துகொண்டு தைப்பார் என்று ஒரு நம்பிக்கை. இரண்டு ஜோடி சட்டைகளும் கால் சட்டைகளும் தைக்குமளவு துணி வாங்கிக் கொடுத்து, அளவும் கொடுத்துவிட்டு வந்தேன்.

தைத்து முடித்துவிட்டு, வந்து வாங்கிச் செல்லும்படி அழைத்தார். போட்டுப் பார்த்தபோது ஒரு பெரும் பிரச்னைக்குத் தீர்வு கிட்டிவிட்டது என்றே தோன்றியது. அவரை மனமாரப் பாராட்டிவிட்டு, ‘எப்படி என் அங்க அளவுகளை அத்தனைத் துல்லியமாகக் கணித்துத் தைத்தீர்கள்?’ என்று கேட்க விரும்பினேன். ஆனால் கேட்கவில்லை.

எங்கே, சமையல் எரிவாயு சிலிண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தைத்தேன் என்று சொல்லிவிடுவாரோ என்கிற அச்சம் காரணம்.

Share

10 comments

  • சின்ன வயதில் ஆச்சர்யபட்டிருக்கிறேன்; எப்படி கமல் படத்திற்கு படம் எடையை கூட்டி குறைக்கிறார் என்று. நீங்கள் கூட அப்படித்தான் போல் இருக்கிறது. பருவ ச்சே உருவ கால மாற்றங்கள் 🙂

  • ஆதாம் ஏவாளின் மனநிலையோடு இருப்பதை விட அவர்கள் பழம் தின்று கொட்டை போடுவதற்க்கு முன்னிருந்த ஆடை இன்னும் சொளகரியம். கடைசி வரியை படித்தவுடன் நினைவுக்கு வந்தது “The Emperor and his new clothes” கதைதான். புதுத்தையல் காரரிடம் தைத்ததை உடுத்தி புறப்படும்முன் கண்ணாடியில் நன்றாக பார்த்துவிட்டு செல்லுங்கள். தையலர்களின் பரிகாசத்திலிருந்து தப்பிப்பீர்கள்.

  • P.G. WODDHOUSE எழுத்திற்கு மட்டுமே இவள்ளவு வாய் விட்டு சிரித்திருக்கிறேன் !!! தேவன் மன்னிப்பார்ராக !ஒரு முழு ந்வச்சுவை நாவல் எழுதலாமே …

  • என்னுடைய பிரச்சனையை, என்னுடைய எண்ணங்களேயே நீங்கள் எழுத்தில் கொண்டுவந்துவிட்டது போலுணர்கிறேன்.நான் தைப்பதை விட்டு டீ ஷர்ட்டுக்கு மட்டுமின்றி, ஜீன்ஸ் பேண்டுக்கு, அதுவும் எக்ஸ்பேண்டபிள் மெட்டீரியலில் தயாரான ஜீன்ஸ் பேண்டுக்கு மாறியபிறகு இப்போது கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறேன். நீங்களும் டிரை பண்ணிப் பாருங்களேன்.

  • Sir,
    oru chinna suggestion. Plus endru oru kadai irrukirathu. athu unga urlla irrukka parunga, readymade aadigal satru poosina mathiri irrukkum ungala mathri alungalukku kandippa kidaikkum.

  • நம்ப மாட்டீர்கள். போன வாரம் ஊருக்கு போன போது, ஒரு ஜீன்ஸுக்கு ஜிப் தைப்பதற்காக, இரண்டு புது துணியெடுத்து பேன்ட் தைக்க கொடுத்து, இலவச இணைப்பாக அந்த ஜீன்ஸுக்கு ஜிப் தைத்துக் கொண்டு வந்தேன்.

    பொதுவாக வெறும் ரெடிமேட் மட்டும் போடுபவன் நான். இடுப்பளவு மட்டும் தெரிந்தால் போதும், அந்த பேன்ட்டுக்கு எல்லா விதத்திலும் சரியாக பொருந்துபவன் நான்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி