பங்கரை

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி ஜெனிலியா, முதல் முறையாக ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருவாரம் தங்கட்டும், பழகட்டும், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் எனக்கு இவளைக் கல்யாணம் பண்ணிவையுங்கள் என்று கதாநாயகனாகப்பட்டவர் தனது தந்தையிடம் ஒரு நூதனமான டீலிங் போட்டிருக்கிறார். அந்த நல்ல குடும்பமானது, ஜெனிலியாவை, புதிதாக மாட்டிய முதல் வருஷ மாணவி மாதிரி ராகிங் செய்யத் தயாராக இருக்கிறது.

முதல் நாள் காலை. சாப்பாட்டு மேசையில் குடும்பம் கூடியிருக்கிறது. கண்ணை மூடி பிரார்த்தனை செய்துவிட்டு ஜெனிலியா டிபன் வகைகளை ஒரு கை பார்க்க ஆரம்பிக்கிறார். சொய்யாவென்று முதல் கேள்விக் கணை வருகிறது: ‘சாப்பிடும்போது மேல துண்டு போட்டுக்கிட்டு சாப்பிடணும்னு உங்க வீட்ல சொல்லிக்குடுக்கலியா?’

சமர்த்துப் பெண் ஜெனிலியா பதில் சொல்கிறார்: ‘சாப்பிடும்போது மேல சிந்தாம சாப்பிடறது எப்படின்னு சொல்லிக் குடுத்திருக்காங்க!’

அடுத்த ஷாட்டில் திடுக்கிட்டுப் போவது அந்தக் குடும்பத்தினர் மட்டுமல்ல. நானும்தான். பார்க்கும்தோறும்  துக்கமும் ஏக்கமும் பொங்கிப் பீறிட்டு எழுவதைத் தவிர்க்கவே முடிந்ததில்லை. ஆய கலைகள் அறுபத்தி சொச்சத்தில் சுட்டுப் போட்டாலும் எனக்கு ஒட்டாத ஒரு கலை உண்டென்றால் அது இதுவே. எத்தனையோ விதமாக முயற்சி செய்து பார்த்தாகிவிட்டது. ஒருசில முறை சாப்பிட உட்காரும்போது உணவின் மீதான ருசியை அழுந்தத் துடைத்து எறிந்துவிட்டு, ஒரு ஏழாங்கிளாஸ் சோடாபுட்டிக் கணக்கு வாத்தியார் கவனத்துடன் தட்டிலிருந்து எடுக்கிற சோறையும், அது வாய் வரை சென்று சேர்வதற்கான தூர நீளங்களையும் இஞ்ச் இஞ்ச்சாகக் கணக்கிட்டு, அதற்கான பிரத்தியேக லாகவங்களை உருவாக்கக்கூட முயற்சி செய்திருக்கிறேன். தூரமும் நீளமும் அல்ல; பாரமும் ஓரமும்தான் பிரச்னை. அள்ளிக் கைப்பள்ளத்தில் தேக்கிய உணவை அலுங்காமல் குலுங்காமல் அத்திப்பூ வாடாமல் அப்படியே ஆ தூக்கி அண்ணாக்கப் போடுவதில்தானே சிக்கல்?  நல்லது. ஒரு கோப்பரகேசரியின் கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போன் வளைந்து சலாம் இடும் பாணியில் குனிந்து சாப்பிட்டு தூரபாரங்களைக் குறைத்து, அதன்மூலம் சேதார சாத்தியங்களை மட்டுப்படுத்தலாமே?

ம்ஹும். ஒன்று, ரசம் உதட்டின் எல்லையிலிருந்து ஒழுகிக்கொண்டிருக்கும். அல்லது நாலைந்து பருக்கைகள் சட்டைக்குள் புகுந்து, பனியனில் நுழைந்து நெஞ்சைத் தொட்டிருக்கும். அதுவுமில்லாவிட்டால், பாரதாரியின் ப்ரொஜக்டட் ஏரியாவை மூடிக்கொண்டிருக்கும் சட்டையின் மையப் பகுதியில் சாம்பார் கறை பட்டு, ஒரு நினைவுச் சின்னம் மாதிரி நாளெல்லாம் நெஞ்சை நிறைக்கும். உப்புமா போன்ற டிபன் வகைகளென்றால் எப்படியும் தட்டைச் சுற்றி ஒரு கோலம் உண்டாகிவிடும். அதைப் பொறுக்குகிறேன் பேர்வழி என்று களமிறங்கினால் இன்னும் விசேடம். விரலில் பரவிய எண்ணெய்ப் படலம் வீட்டுக்குப் புள்ளி வைத்துக் கோலமிடும். எங்கிருந்தோ அசரீரி மாதிரி புறப்படும் மாகாளி பராசக்தியின் உக்கிர சௌந்தர்யக் குரலில் அண்ட சராசரங்கள் அடங்கி ஒடுங்க எப்படியும் அரை மணிக்குக் குறையாமல் ஆகிவிடும்.

சிந்தாமல் சாப்பிடுவது எப்படி?

இது ஒரு இம்சை. பெரிய இம்சை. வீட்டுக்குள்ளேயே இதன் வீரிய பராக்கிரமங்கள் கணக்கிட இயலாது என்னும்போது வெளியே, பொது இடங்களில் இப்பிரச்னை உண்டாக்கும் சேதாரங்கள் அனந்தம். எப்போதாவது மனைவியுடன் ஹோட்டலுக்கு சாப்பிடப் போனால் மிகவும் பதற்றமாகிவிடுகிறேன். என்ன சாப்பிடுவது என்பதல்ல பிரச்னை. எப்படிச் சாப்பிடுவது என்பதுதான் பிரச்னை. கொஞ்சம் பெரிய ஹோட்டல்களுக்குப் போக நேர்ந்தால் இப்பிரச்னை ஒரு சர்வதேசப் பரிமாணம் பெற்றுவிடுவது வழக்கம்.

தட்டுக்கு இரண்டு புறமும் சும்ப நிசும்பர்கள் மாதிரி கத்தி கபடாக்கள் இரண்டிரண்டு வைத்திருப்பார்கள். அவை எதற்கு என்று பொதுவாக எனக்குப் புரிகிறதில்லை. சில பேரைப் பார்த்திருக்கிறேன். இடது கையில் ஒரு கத்தி. வலது கையில் ஒரு கபடா. இடைப்பட்ட பரப்பளவில் இந்தியப் பாரம்பரியச் சின்னமான இட்லி சாம்பார். இடது கையால் ஒரு குத்து. ஒரு பாலே நடனக்காரியின் இடுப்பு கணப்பொழுதில் வளைவதுபோல, அதே குத்திய கத்தியை வளைத்து, வெட்டுண்ட இட்டிலியை வலக்கரத்து ஸ்பூனுக்கு ஒரு தள்ளு. அடுத்த கணம் அந்த ஸ்பூன் உதட்டில் படாமல் வாய்க்குள் இட்டிலியை பத்திரமாகக் கொண்டு சேர்த்திருக்கும்.

அடடே, ரொம்ப சுலபம் போலிருக்கிறதே என்று நானும் முயற்சி செய்து பார்த்தேன். குத்திய வரை சரி. ஆனால் குத்திய இட்டிலியை வலப்புற ஸ்பூனுக்குத் தள்ளுவதில் ஏதோ ஒரு ரகசிய சூட்சுமம் இருக்கிறது. நான் இடப்புறக் கத்தியால் இட்டிலியைத் தள்ளிய வேகத்தில் இட்டிலி, சாம்பாரைத் தள்ள, சாம்பார் எல்லையோரச் சட்டினி வகைகளைத் தள்ள, தட்டுக்கு வெளியே சற்றுத் தள்ளி இருந்த தம்ளரின் புறமுதுகெங்கும் சாம்பார், சட்டினிக் கரை படிந்துவிட்டது.

அடக்கடவுளே என்று அவசரப் பதற்றத்தில் தம்ளரை இடக்கையால் எடுத்து வலக்கையால் துடைக்கப் போக, முழுத் தம்ளருக்கும் கோபுரம் பூசுமஞ்சள் தூள் பூசிக் குளிப்பாட்டியது போலாகிவிட்டது.

இதுகூடப் பரவாயில்லை. இத்தகு மகத்தான தோல்விக்குப் பிறகு ஃபோர்க் வகையறாக்களை வைத்துவிட்டுத் தன் கையே தனக்குதவி என்று களமிறங்குவதில் ஒரு ஆழ்ந்த சோகம் உள்ளடங்கியிருக்கிறது. எதிரே என்னைப் பார்த்துக்கொண்டிருப்பது என் மனைவி மட்டுமல்ல. விரல் நுனியைத் தாண்டி உணவுப் பதார்த்தங்களை உள்ளே நுழைய அனுமதிக்காத ஏராளமான நாகரிகச் சீமான்களும் சீமாட்டிகளும்கூட.

எனக்குப் புரியாத விஷயம், இந்த விவகாரத்தை ஏன் எல்லோரும் வயதோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் என்பதுதான். எத்தனை வயதானால் என்ன? என் ஜீன்களில் நானொரு பங்கரை என்று என்னப்பன் இட்டமுடன் எழுதி வைத்துவிட்டபிறகு வயது என்ன செய்ய முடியும்? இது ஏன் யாருக்கும்  புரிவதேயில்லை?

ஒரு சமயம் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். நல்ல, பெரிய ஆறேழு நட்சத்திரங்களை வாங்கிய விடுதியில் தங்க வைத்திருந்தார்கள். பல தேசத்து வர்த்தகர்களும் வந்து குவியும் கேந்திரம் என்பதால் எல்லா நாட்டு உணவு வகைகளும் அங்கே உண்டு. குறிப்பாக அந்தக் காலை டிபன்!

ஒரு பெரிய ஹாலில் நாலைந்து நீள வரிசைகளில் மேசை போட்டு பல தேசத்து உணவுப் பதார்த்தங்களைக் குவித்து வைத்திருந்தார்கள். சுமார் நூற்றம்பது விதமான உணவுகள் அங்கே இருந்திருக்கும்.

ஒரு கணம் மூச்சடைத்துவிட்டது. வாழ்நாளில் அந்தக் காலைப் பொழுது எனக்கு ஒரு தரிசனம்தான். சந்தேகமில்லை. ஒவ்வொரு மேசையாகத் தாவித் தாவிப் போய் பார்த்துக்கொண்டே இருந்தேன். எத்தனை  விதமான உணவுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு விதமான தயாரிப்பு. எதையுமே எடுக்கத் தோன்றவில்லை. என் எதிரே வெள்ளைத் தோலும் பாதி வெற்றுடம்புமாக ஏராளமான நாரீமணிகள் பிளேட்டில் இரண்டு ஸ்லைஸ் பிரெட், கொஞ்சம் வெண்ணெய், கொஞ்சம் பழக்கூழ், நாலைந்து பழத் துண்டுகள், ஒரு தம்ளரில் ஆரஞ்சு ஜூஸ், ஒன்றிரண்டு வேகவைத்த முழு முட்டைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு போனார்கள். இன்னும் சிலர் கருப்பாக, உருண்டையாக ஒரு பாத்திரத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த பதார்த்தத்தை இடுக்கியால் எடுத்து வைத்துக்கொண்டு அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றிக்கொண்டார்கள். வேறு சிலர் நூடுல்ஸ் சாப்பிட்டார்கள். அதன்மீது பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணத் திரவங்களைத் தெளித்துக்கொண்டார்கள்.

அந்த மாபெரும் அரங்கில் என் ஒருத்தனுக்கு மட்டும்தான் எது என்ன உணவு, எதற்கு எதெல்லாம் துணை என்பது பற்றிய அடிப்படை அறிவு இல்லை என்று தோன்றியது. ரொம்ப துக்கமாக இருந்தது. கேட்டால், வெயிட்டர்கள் உதவி செய்வார்கள்தான். ஆனால் வெட்கமோ என்னமோ தடுத்துக்கொண்டிருந்தது. இறுதியில் எனக்கு நன்கு அறிமுகமான இரண்டு பிரெட் துண்டுகளை எடுத்து, ஒரு பாத்திரத்தில் இருந்த வெண்ணெயை ஒரு கரண்டி அள்ளி அதன்மீது போட்டுக்கொண்டு போய் உட்கார்ந்தேன்.

என் எதிரே சாப்பிட்டுக்கொண்டிருந்த நண்பர்,  ‘க்ரீம் எதற்கு இவ்வளவு? வெறும் க்ரீம் வாயில்  வைக்க வழங்காதே. நீங்கள் வெண்ணெய் எடுத்திருக்கலாம்’ என்றார். இல்லை, நான் இன்று உண்ணாவிரதம் இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒரு தம்ளர் ஜூஸ் குடித்து உடனே அதையும் முடித்தேன்.

உணவுதான் என்றில்லை. ஒரு கோன் ஐஸ் சாப்பிடுவதில்கூடப் பல இருப்பியல் சிக்கல்கள் உள்ளன. ஒரு காலத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஐஸ் க்ரீம் பார்லரில் என் நண்பர் பார்த்தசாரதியுடன் அடிக்கடி கோன் ஐஸ் சாப்பிடப் போவேன். நண்பர், தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். நான் சாத்தானின் செல்லக் குழந்தை. நண்பர் ஐஸ் க்ரீம் சாப்பிடும் அழகைப் பற்றி காவியமே எழுதலாம். உதட்டில்கூட ஒட்டாமல் கடைசிச் சொட்டுவரை  சிந்தாமல், கையில் பிடித்துச் சாப்பிட்ட தடயமே தெரியாமல், ஒரு மைக் பிடித்துப் பேசி முடித்த லாகவத்தில் எப்படித்தான் அவர் சாப்பிடுவாரோ தெரியாது.

அவர் சாப்பிட்டு முடித்துப் பத்து நிமிடம் ஆனபிறகும் என் கோன் முடிந்திருக்காது. கோனின் வெளிப்புற பிஸ்கட் தோல் பாதி பிய்ந்திருக்கும். க்ரீம் எந்தக் கணமும் பொத்தென்று கீழே விழும் அபாயத்தை உணர்ந்தவனாக, அப்படியே அதை விழுங்கப் பார்ப்பேன். உதடு, கன்னம், மூக்கு என்று அது பரவி, என் மானசீகத்தில் கோகுலத்துக் கண்ணனாக உணர்வேன். தவிரவும் வாயில் நிறைந்த ஐஸ் க்ரீமின் குளுமை தாங்க மாட்டாமல்  துரிதகதியில் சுரம் பாடும் பாகவதர்போல் முகத்தை அப்படியும் இப்படியும் ஆட்டி, அரைத்து அதை உள்ளே தள்ளப் பார்ப்பேன். பாதி வெளியே வழியும். அதற்குள் கையில் பிடித்திருக்கும் கோனுக்கு என்னவாவதுஆகிவிடும். சொல்லி வைத்தமாதிரி அதன் அடிப்புறத்தில் ஒரு ஓட்டை விழுந்து சொட்டத் தொடங்கும். ஐயோ சொட்டுகிறதே என்று கையை நகர்த்தினால் பாதி உடைந்து விழும். ஒரு நிரந்தர ஆராதகனை ஐஸ் க்ரீம்களின் சமூகம் இழந்ததே இதனால்தான்.

சமைப்பது போலவே உண்பது ஒரு கலை. எனக்குப் பார்க்க வாய்த்த பிரகஸ்பதிகளுள் ஜப்பானியர்களும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் ரொம்ப அழகாகச் சாப்பிடுவார்கள். இந்தக் குச்சி வைத்து சாப்பிடுவது எனக்கு எப்போதும் தீராத ஆச்சரியம். சீன உணவகத்துக்குப் போய் நூடுல்ஸ் ஆர்டர் செய்தாலும் வெங்காயப் பச்சடியை அதன் தலையில் கொட்டி தயிர் சாதம் மாதிரி பிசைந்து அடித்தால்தான் திருப்தி ஏற்படுகிறது. ஏனோ, இது நம்முடன் சாப்பிட வருவோருக்குப் பெருத்த சங்கடங்களை உண்டாக்கிவிடுகிறது.

பல்லாண்டு காலமாக மனத்தளவில் இந்த விஷயம் என்னை எத்தனை பாதித்திருக்கிறது என்பதை விளக்கவேமுடியாது. ஒரு கட்டத்தில், சாப்பிடும்போதெல்லாம் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படிச் சாப்பிடுகிறார்கள் என்று கவனிப்பதே என் முதன்மையான செயல்பாடாக ஆகிப்போனது. நான் கவனித்த வரையில் ஆண்களைவிடப் பெண்கள் அழகாகச் சாப்பிடுகிறார்கள். அதிகம் சிந்துவதில்லை. ஒரு பெண்ணின் அழகுணர்ச்சியை அவள் முருங்கைக்காயை எப்படிச் சாப்பிடுகிறாள் என்பதைப் பார்த்து அளவிடுவதே சரியாக இருக்கும் என்பது என் தீர்மானம்.

அமரராகிவிட்ட முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை பேட்டியெடுக்க ஒரு சமயம் அவர் வீட்டுக்குப் போயிருந்தேன். பேட்டி முடிந்ததும் சாப்பிட்டுத்தான் போகவேண்டும் என்று வற்புறுத்தி அழைத்தார். எளிய சிற்றுண்டி. அவர் மனைவிதான் பரிமாறினார். ‘நீங்களும் உட்கார்ந்து சாப்பிட்டால் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னேன். அவர் மறுக்கவில்லை. என் பக்கத்தில்தான் உட்கார்ந்தார். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் கணம்வரை அந்தக் காட்சி கண்முன் நிற்கிறது. ஒரு மாயாஜாலம் மாதிரி இருந்தது, அவர் சாப்பிட்ட அழகு. இலையில் ஒரு சொட்டு மிச்சமில்லை. நகம் தாண்டி ஒரு பதார்த்தமும் விரலைத் தொடவில்லை. உண்ட சுவடே இல்லாமல் வினாடிகளில் முடித்து, எழுந்துவிட்டார்.

நான் எழுந்தபோது மிகவும் குற்ற உணர்ச்சியாக இருந்தது. மேசையில் நான் உண்ட இடம் மட்டும் கலிங்கப் போர் நடந்த களம் மாதிரி இருந்தது. கடவுளே, இந்த அம்மணி அப்போது என்னை ஒரு தனி மனிதனாகவா பார்த்திருப்பார்? தமிழ்நாட்டுக்காரனாக அல்லவா பார்த்திருப்பார்? மாநிலத்துக்கே அவப்பெயர் சேர்த்திருக்கிறேன். வெகுகாலம் அது எனக்கு மறக்கவில்லை. பெண்களை நான் பொறாமையுடன் பார்க்கத் தொடங்கியது அப்போதிருந்துதான். [திருமதி கமல் பாசு, 2003ம் ஆண்டு காலமானார்.]

அப்படியும் முழுப் புகழைக் கொடுத்துவிடுவதற்கில்லை. ஒரு சில பங்கரை குலப் பெண் பிரதிநிதிகளும் இருக்கவே செய்கிறார்கள். சந்திரா, சுஜாதா என்று எனக்கு இரண்டு உடன் பிறவா சகோதரிகள் இருக்கிறார்கள். ரொம்ப காலத்து சிநேகிதம். உணவைச் சிந்துகிற விஷயத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்கள். புடைவை, சுடிதாரில் இருவரில் யார் ஒருவர் உணவைச் சிந்திக்கொள்வதைப் பார்க்க நேர்ந்தாலும் என் மனம் ஆனந்தக் கூத்தாடும். பரவசத்தில் கண்ணில் நீர் மல்கும். ஆண்டவனே, நன்றி. என்னைப் போல் ஒருவர். தண்ணீர் பாட்டில் மூடியைத் திறந்தால்கூட  நாலு சொட்டு வெளியே தெறிக்காமல் திறக்க முடியாது. ஒரு சகோதரி டிபன் பாக்ஸில் எடுத்து வரும் ஓட்ஸ் கஞ்சியைத்தான் பொதுவாகத் தனது உடைகளுக்கும் போடுவார். எதைத் திறந்தாலும் கொட்டுவார். உடனே நான் வாழ்த்துத் தெரிவிப்பேன். இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு வாய், கை கழுவிய பிறகும் சாப்பிட்ட தடயத்தைப் பல மணி நேரங்களுக்கு வெளிப்படுத்தும் சூட்சுமம் அறிந்தவர். இந்த விஷயத்தில் என்னைக் காட்டிலும் கைதேர்ந்தவர்.

தீவிரமாக யோசித்துப் பார்த்தால் இந்த இரண்டு பெண்களையும் நான் உடன் பிறவா சகோதரிகளாக என் மானசீகத்தில் வரித்துக்கொண்டதன் காரணமே அவர்களும் என்னைப் போல் பங்கரை குலப் பிரதிநிதிகளாக இருப்பதால்தான் என்று நினைக்கிறேன்!

Share

36 comments

  • வார்த்தை பிரயோகம் அபாரம். படிக்க படிக்க சுவையாக இருந்தது.எடுத்தாட்கொண்ட பொருள் சுவையாக இருந்தாலும் அது இரண்டாம் பச்சம்தான்.நன்றி.

  • A fantastic article. I can’t eat mango decently and I don’t eat it in public. Some people eat “Son Papdi” without dropping a single bit which I can’t. Thorougly enjoyed the article.

  • நீங்கள் ஒரு வளர்ந்த குழந்தை..!!உங்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் நிறையபேர் இருக்கிறார்கள் கவலை வேண்டாம். 🙂

  • தூத்துக்குடி மாவட்டத்தில் பங்கரைக் கொத்து என்று சொல்வார்கள். ஒழுங்காக முடி வெட்டாமல் கந்தரிகோலமாக வெட்டிக் கொண்டு வருவதற்குப் பங்கரைக் கொத்து என்று பெயர். தலைப்பைப் படித்ததும் என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று நினைத்து வந்தேன். மெல்லிய முறுவல் தோன்றி, புன்னகையாகிக் கடைசியில் சிரித்து முடித்தேன். நல்ல எழுத்தைப் படிக்கும் சுகத்தில் உண்டாவது இது. 🙂

    சிறுவயதிலிருந்தே ராகவன் சாப்பிட்டால் பளிச்சென்று சுத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். சமீபத்தில்தான் கொஞ்சம் மிச்சம் வைக்கும் பழக்கம் வந்திருக்கிறது. உண்ணும் உணவின் அளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

    நம்மூர் உணவுகளுக்குக் கைதான் பொருத்தம். எங்கு போனாலும் அந்த விஷயத்தில் யோசிப்பதில்லை. வேலைக்குச் சேர்ந்த புதிது. அலுவலகத்திலேயே உணவு கிடைக்கும். முழுச் சாப்பாடுதான். அதில் சோறு சாப்பிடுவதற்குக் கையைப் பயன்படுத்திச் சாப்பிட்டேன். பாதி சாப்பிடும் போது அருகில் ஒருவர் உட்கார்ந்தார். இங்க உக்காரலாமா என்று தமிழிலேயே கேட்டார். நெற்றியில் எழுதியிருந்ததோ என்னவோ. உக்காருங்க என்றேன். அவர் அங்கு முன்பே வேலையில் இருப்பவர். எல்லாரும் ஸ்பூன் வைத்துச் சாப்பிடுவதைப் பார்த்து அவரும் அப்படியே சாப்பிட்டிருக்கிறார். எப்பொழுது கையால் சாப்பிடும் கலைஞன் வருவான் என்று காத்துக்கொண்டிருந்தாராம். எதற்கா? அவரும் அப்படிச் சாப்பிடுவதற்குத்தான். 🙂

    • என் பெயர் கொண்ட நண்பருக்கு,

      இந்தக் கட்டுரையில் நான் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டேன். ரொம்ப ரசமான சம்பவம். ஒருமுறை புகைப்பட நிபுணர் யோகாவுடன் ஒரு சிறப்பிதழுக்காகக் காரைக்குடி வரை ரயிலில் பிரயாணம் செய்தேன். ரயில்வே கேண்டீனில் வாங்கிய இட்லிக்குத் துணையாக பாக்கெட்டில் சாம்பார் மற்றும் சட்னி.

      எனக்கு அந்த பாக்கெட்டைக் கட்டியிருந்த நூலைப் பிரிக்கத் தெரியவில்லை. குறைந்தது பத்து நிமிடங்கள் போராடிப் பார்த்துவிட்டு இறுதியில் ஒரு வழி கண்டுபிடித்தேன். தண்ணீர் பாக்கெட்டுகளை ஓரத்தில் கிள்ளி அப்படியே குடிப்போமல்லவா? அம்மாதிரி இந்த சாம்பார் பாக்கெட்டையும் முயற்சி செய்யலாமே?

      ஆனால் பொது இடத்தில் சாம்பார் பாக்கெட்டை பல்லில் வைத்துக் கடிக்க என்னமோ கெட்டது ஒன்று [விதி என்று நினைக்கிறேன்.] தடுத்தது. எனவே சரியாக இட்லிகளுக்கு மேலாக பாக்கெட்டைக் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு பேஸ்ட் பிதுக்குவது மாதிரி பிதுக்கினேன். பாக்கெட் பக்கவாட்டில் கிழிந்தாலும் பிளேட்டில்தான் விழும் என்று சயின்ஸெல்லாம் யோசித்துத்தான் அம்முயற்சியில் ஈடுபட்டேன்.

      கணக்குப் போட்டதெல்லாம் சரிதான். ஆனால் பாக்கெட்டை அழுத்திய வேகம் சற்று அதிகமாகிவிட்டது. விளைவு, பாட்ஷா படத்தில் ரஜினி அடிபம்பை இழுத்ததும் தண்ணீர் பீறிட்டுப் பொங்குமே, அம்மாதிரி சாம்பார் பீறிட்டு எதிரே இருந்த அத்தனை பேர் மீதும் அபிஷேகமாகிப் போனது.

      ரயிலில் பிஸ்கட் தவிர வேறெதுவும் உண்பதில்லை என்று அன்று முடிவெடுத்தேன்.

  • //வெங்காயப் பச்சடியை அதன் தலையில் கொட்டி தயிர் சாதம் மாதிரி பிசைந்து அடித்தால்தான்//
    பிரயோகங்கள் பிரமாதம் சார் !

  • //இடது கையில் ஒரு கத்தி. வலது கையில் ஒரு கபடா. //
    வலக்கை காரர்கள் கத்தியை வலது கையிலும் கபடாவை இடதுகையிலும் பிடிக்கவேண்டும்.

    //எனக்கு அந்த பாக்கெட்டைக் கட்டியிருந்த நூலைப் பிரிக்கத் தெரியவில்லை//
    நூல் நுனியை பிடித்து பிரதக்ஷணமாக மூன்றுமுறை,அப்பிரதக்ஷணமாக மூன்றுமுறை சுற்றினால் இட்லிக்கு அபிஷேகம் இல்லையேல் நம்(அல்லது,அடுத்தவர்)சட்டைக்கு !!!

    உங்கள் எழுத்தைவிட உங்கள் ENERGY அசரவைக்கிறது.
    சும்மாவா சொன்னார் எடிசன் : “மேதைத்தனம் என்பது 10 சதவீத மூளை; 90 சதவீத வியர்வை!” என்று!!

  • ///எனக்கு அந்த பாக்கெட்டைக் கட்டியிருந்த நூலைப் பிரிக்கத் தெரியவில்லை…… அம்மாதிரி சாம்பார் பீறிட்டு எதிரே இருந்த அத்தனை பேர் மீதும் அபிஷேகமாகிப் போனது///

    ஆஹா… ஆனந்தம் ஆனந்தம். ரொம்ப சந்தோஷம். என்னைப் போன்றும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்று அல்ப திருப்தியும் கூட. உங்கள் இன்றைய விருந்து பிரமாதம் சார்.

  • There are some courses which teach table manners and how to eat dosa with spoon etc., please try… Hope they will stop the course once you join… 🙂

  • http://www.jeyamohan.in/?p=5959

    இரு தண்ணீர்புட்டிகள் இரவுக்கான வாழைப்பழம் புத்தகங்கள் பெட்டிகளுடன் ரயிலில் ஏறினேன். இருக்கையில் அமர்ந்து ரகோத்தமன் எழுதிய ராஜீவ்காந்தி கொலை பற்றிய புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தேன். சில்லிட வைக்கும் புத்தகம். கொஞ்சம் கூடுதலாகவே சில்லிடுகிறதோ என்ற ஐயம் எழுந்தது என்றாலும் பொருட்படுத்தவில்லை. பக்கத்து இருக்கைக்காரர் எழுந்து ”என்ன சார்? தண்ணிக்குப்பிய சரியாக மூட மாட்டீங்களா? வெளீயாடுறீங்களா?” என்று கத்தினார். அவரது வேட்டி ஈரம். என்னுடைய பாண்ட் மட்டுமல்ல உள்ளாடையே ஈரமாக இருந்தது.

    கழிப்பறைக்குச் சென்று லுங்கி மாற்றிக்கொண்டேன். பாண்டை காயப்போட்டேன். அவர் தந்த ஜூவியை கிழித்து எல்லா இடத்தையும் துடைத்தேன். உள்ளே ஜட்டி சில்லென்றிருந்தது. ஏஸி குளிரில் நடுங்கியபடி மிச்சநூலையும் வாசித்துவிட்டு மேலே சென்று இன்னொரு புட்டியை திறந்து கொஞ்சம் தண்ணீர்குடித்துவிட்டு கம்பிளியை விரித்து படுத்துக்கொண்டேன். கொஞ்சநேரத்தில் கீழே அதே ஆள் எழுந்து ”சார் நீங்க லூஸா? தெரியாம கேக்கிறேன், லூசா சார் நீங்க?” என்றார்.

    கனிமொழி பேட்டியை படித்திருப்பாரா என்று பதறிப்போனேன். இல்லை, மீண்டும் இன்னொரு புட்டி திறந்து மொத்த தண்ணீரும் கொட்டி கீழே அவரது கம்பிளி நனைந்துவிட்டிருந்தது. அதைவிட மோசம், என்னுடைய கம்பிளியும் போர்வைகளும் நனைந்திருந்தன. ”பாத்தா பாவமா இருக்கீங்க, வேணும்ணே பண்ணுத மாதிரில்லா இருக்கு? தெரியாம கேக்கேன், உங்களுக்கு என்ன பிரச்சினை?”

    வாய்பேசாமல் அந்த போர்வைகளால் பர்த் மடிப்பில் குளம்போல நின்ற நீரை துடைத்தேன். என்ன செய்வதென தெரியவில்லை. அவர் போய் ஸ்டுவர்ட்டை கூட்டி வந்தார். மேலதிக கம்பிளி இல்லை என்று அவன் சொல்லிவிட்டான். ஒருவர் கீழ் இருக்கைக்காரருக்கு ஒரு சால்வை இரவல் கொடுத்தார். என்னை எவரும் கண்டுகொள்ளவில்லை. வெளியே நல்ல மழை. உள்ளே கடுமையான ஏஸி குளிர்.

    எதைப்போர்த்துவது? ஈரப்பாண்டையே போட்டுக்கொள்ள வேண்டியதுதான். அதைபோட்டுக்கொண்டு லுங்கியை போர்த்திக்கொண்டேன். எஸ்கிமோ போல என்னை உணர்ந்தேன். ஆன்மாவின் கனலால் ஈரத்தை உலரவைத்து தூங்குவதற்கு இரவு ஒருமணி. காலை ஆறுமணிக்கு எழும்பூருக்கு அரைத்தூக்கத்துடன் வந்தேன்.

  • சிரித்து சிரித்து கண்ணிலே தண்ணி வந்துடுத்து. அதுவும் சாம்பார் அபிஷேகம். பின்னூட்டத்தில சொல்லி இருக்கிறா மாதிரி நூலை பிரதட்சணம் அப்பிரதட்சணம் செய்யணும்.

    நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது எங்க பள்ளியிலே இருந்த ஒரு nun உணவை சாப்பிடும் போது விரல்கள் தாண்டி உணவு போய் விட்டால் எழுந்து போய் கை கழுவி வந்து மறுபடி சாப்பிடச் சொல்வார். அந்தப் பழக்கம் இப்போதும் உள்ளது. உணவு உள்ளங்கை செல்லாது. ஆனால் வீட்டில் செமத் திட்டு விழும். பிசைஞ்சு சாப்பிடு. இது என்ன கொறிக்கிற பழக்கம் என்று.

    நீங்க எச்சில் ஆகக் கூடாதுனு உதடு படாம இந்திய உணவுகளை உண்ண முயற்சி செய்வதால் தான் இந்தப் பிரச்சனைன்னு நினைக்கிறேன். அதுக்கு யானைக்கு கொடுக்கிறா மாதிரி உருட்டி தூக்கித் தான் போடணும்.

  • பாரா,
    இதே பொருளில் நீங்கள் முன்பும் எழுதியிருந்ததாக நினைவு.
    ஆனால் இப்போதும் கலக்கலாக எழுதி இருக்கிறீர்கள்,நீங்கள் முன்பொருமுறை சொன்னது போல சுய எள்ளல் நகைச்சுவை எழுத்துக்கு மிகவும் பாதுகாப்பான ஒரு டொமெய்ன்.
    பொதுவாக மனிதனின் பழக்க வழக்கங்கள் மற்றும் சுபாவங்கள் மற்றவர்களைப் பார்த்துத்தான் குழந்தைப் பருவத்திலிருந்து படிகிறது;நல்ல பழக்கங்களை கையாள்பவர்களை குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்து வளர்பவர்களுக்கு இயல்பாகவே அந்தப் பழக்கங்கள் படிகிறது.எனவே இதில் சுயமான தேர்ச்சிக்கு இடம் இல்லை.சிலர் பழக்க வழக்கங்களை தன்பாணியில் மெருகேற்றுபவர்களாக இருப்பார்கள்,கமலா பாசு மாதிரி.அவர்கள் நுண்ணிய அவதானிப்பாளர்களாக இருப்பவர்கள்.
    மற்றபடி உணவை நேர்த்தியாக உண்ணுவது ஒரு நல்ல பழக்கம்,அது உங்களுக்கு கைவராமற் போயிருக்கிறது..அவ்வளவுதான் விதயம்.இதற்கு உங்களைக் குறை சொல்வதை விட உங்கள் சுற்றத்தாரை,நீங்கள் வளர்ந்த சூழலில் பார்த்த பெரியவர்களைத்தான் நான் குறை சொல்வேன்.

    எனக்குத் தெரிந்த வரை தமிழ் பிராமண குலத்தைச் சேர்ந்த பலர் சாப்பிடுவதைப் பார்க்க வழங்காது;அதனாலேயே பிராமண போசனைத்தை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்ற வழக்கத்தை ஏற்படுத்தி வைத்தார்களோ என்றும் நான் எண்ணுவது உண்டு.

    மற்றபடி தென்னிந்திய உணவுகளுக்கு கத்தி,கபடாக்களை உபயோகிப்பது எனக்கும் உடன்பாடானதல்ல.அந்தந்த உணவை அந்தந்த முறையில் உண்பதே சரி என்பது எனது பார்வை.

    அமெரிக்காவாக இருப்பினும் சாதம் சாப்பிடும் போது கையை பயன்படுத்துவதுதான் என் பழக்கமும்.இட்லி சாம்பார்,மசால்தோசை வகையறாக்களுக்கு கத்தி கபடாக்களைப் பயன்படுத்துபவர்கள் நாகரிக நிர்மூடர்கள் என்பது எனது பார்வை.

    நல்ல நடையில்-வழக்கம் போல-எழுதப்பட்ட பதிவு.

  • தலைப்புக்கு ஒரு ஓ..
    விவரணையின் நாயகனுக்கு இதை விட அழகான ஒரு குணகுறிப்பெயர் இடமுடியாது..
    🙂

  • எங்கே போனாலும் சாப்பிடும்போது ‘என்கையே எனக்குதவி” ரகம் நான். அது விண்மீன் விடுதியாக இருந்தாலும் சரி.

    யாராவது கேட்டால், இல்லை, பார்த்தாலே, “கையால சாப்பிடறது பத்தி முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?” ந்னு எடுத்துவுட்ருவேன 🙂

  • எனக்கு கத்தி / கபடா வைத்து நேர்த்தியாக சாப்பிட தெரிந்தாலும், கையில் சாப்பிடும் பொது கிடைக்கும் ஆனந்தம் ஈடு இணையற்றது. இன்று உங்களுடைய வார்த்தை விருந்து மிக பிரமாதம்.

  • இந்த மாதிரி மொக்கைத் தொடர் பதிவுகள் உங்களால மட்டும்தான் முடியும். அடுத்தது என்ன? உங்க ஸ்கூட்டரை வீட்டு ஷெட்டிலிருந்து எடுக்கும் படலமா (ஏன்யா படிக்கிறேன்னு கேட்டால் என்னிடம் பதில் இல்லை :))?

  • பாரா. இந்த மாதிரி அவஸ்தைகள் என்னிடமும் உண்டு.

    உதா: சில பேர் டூஷ் பிரஷ்ஷில் பேஸ்ட்டை தடவி துலக்கிக் கொண்டே பேப்பர் படித்து பாத்ரூம் போய் சின்ன வாக் கூட போய் விட்டு வந்து விடுவார்கள். பேஸ்ட் நுரை வாயை விட்டு வெளியே வராமலிருக்க சிறப்பு யோகாசனம் ஏதேனும் இருக்குமோ என்னவோ?

    இந்த ஏரியாவில்தான் அடியேன் பயங்கர வீக். பேஸ்ட்டை இரண்டாவது துலக்கு துலக்கும் போதே premature ejaculation மாதிரி நுரை வாயிலிருந்து வழியத் துவங்கி விடும். உடனே பேசினை நோக்கி ஓட வேண்டும்.

  • While reading the article I enjoyed as if I am sitting carefully beside you, so that sambaar is not abhishekamed on me.

  • பங்கரை என்ற வார்த்தையை எங்கள் ஊர் பக்கம் நிறையவே உபயோகப்படுத்துவர்.வாய்விட்டு சிரித்து ரசித்தேன்.வார்த்தை ஜாலங்கள் ரசித்தேன்-ஒரு கோபர……மட்டுப்படுத்தலாமே-அருமை

  • உங்களைப் போல ஒருவன் நான். தக்காளி சூப்பை குடித்துக்கொண்டே உங்கள் பதிவை படிக்கையில் உங்கள் சொல்லாடலில் மயங்கி சூப்பை லேப்டாப்பில் வழிய விட்டு என் பையனிடம் வாங்கிக்கட்டிக்கொண்டேன். அவன் கிடக்கறான். நீங்க எழுதுங்க சார்.

  • பாரா சார்

    மாம்பழம் , ஷ்ரார்த்த சமையல் அப்புறம் வட இந்திய உணவகத்தில் ரொட்டி பருப்பு மற்றும் சப்ஜி வகைகளின் அவியல் . இந்த மூன்றும் எனது பங்கரை வகைகள்.

  • பல சமயங்களில் எனக்காக எழுதுகிறீர்களோ என எண்ண வைத்தது. சாப்பாட்டு மேசைகளுக்கும் என் வீல்ச் சேருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் உண்டு. இடையில் தூரம் அதிகமாயிருக்கும் போது, ஜிப்பா ஏந்திக்கொள்ளும் நிறங்களிலும் பருக்கைகளிலும் அடுத்து வருபவர்காளுக்கு மெனு குறித்த ட்ரெய்லர் ஓடும். உயரம் அதிகமாய் இருக்கும் பொழுதுகளில் கை நீட்டி இலையின் மறுமுனையைச் சேரப்போய், முழங்கையில் பாயசமோ, பருப்போ ஈஷிக்கொள்ளும். புஃபே முறையில், பாதியிலேயே எழுந்துகொள்ளத் தோன்றும், இடக்கை ஏந்திய தட்டின் அதீத கனத்தால்.

    ஆழ்வார்பேட்டை Freeze Zone -ல் ramp இல்லாமல் வாசலிலேயே கைனடிக்கை விட்டிறங்காமல் கேஷு-சாக்கோ-கோன் சாப்பிட முயன்று, வெளிச் சூட்டில் அது சீக்கிரம் வேறு உருகும், ஜாக்ரதையாகச் சாப்பிடும் எண்ணமும் சேர்ந்து, கோன் தவிர பெரும்பகுதி வழிந்தும் சிந்தியும், கிரீடம் மண் சேர்ந்த மண்டு ராஜாவைப் போல், அந்த சாக்லேட் டாப்பிங் கழன்று விழுந்து, நிறைய கண்கள் பார்க்க, நான்கைந்து டிஷ்யு காகிதங்கள் போதாமல், தனக்குத் தானே சிரித்துக் கொண்டதுண்டு (வேற என்ன செய்யறதாம்).

  • சரளமான நடை, அழகான சொற்பிரயோகம். நம்மைப் போல் பலர் இருக்கிறார்கள் (சாப்பிடும் விஷயத்தில்) என்பதை அறிந்து ஆறுதல் கொள்ள வைத்தது உங்கள் கட்டுரை. நன்று பா.ரா. சார்.

  • If you observe north indians while eating roti/naan with gravy, their fingers will not be stained except the fingertips. I tried it, but in vain. After finishing eating they don’t need to wash.

  • கத்தி,போர்க்கை வைத்து சாப்பிட இப்ப ட்ரைனிங் எல்லாம் இருக்கு நீங்க ஏன் ட்ரை பண்ண கூடாது ?அல்லது சப்பாத்தி சாப்பிட கத்தி,போர்க்கை பயன் படுத்தலாம்.சத்தம் வராம சாப்பிட நீங்க பாஸ்.

  • இது ரொம்ப சிம்பிள் சார். உலகத்தில் நிறைய விஷயங்களில் பெரிய ஆளாக இருப்பவர்கள் சின்ன விஷயங்களில் பெரிய வீக்னஸ் ஆக இருப்பார்கள் அதுபோலத்தான் இதும். சுவையாக எழுதுகிற உங்களுக்கு சுவைத்து சாப்பிட தெரியவில்லையே என்பது ஒரு வருத்தமான விஷயம் தான். என் சிற்றறிவுக்கு எட்டிய ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறேன். நாளைக்கு என்ன எழுதலாம் என்கிற உங்கள் சிந்தனையை ஒத்தி வைத்துவிட்டு (ஐயோ நாம் சிந்திவிடுவோமோ என்ற பயத்தையும் உதறிவிட்டு) உணவின் மீது ஆர்வமாகவும் ஆசையோடும் சாப்பிட ஆரம்பித்தால் ஓரளவாவது வெற்றிகரமாக சாப்பிட முடியும். முயற்சி செய்யுங்களேன்.

  • பாரா,

    மிகவும் சிரிக்கவைத்துவிட்டீர்!

    சென்னை வரும்போது உங்களோடு ஒரு தடவையாவது மாமி மெஸ் போகவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

    இதைப் படித்தபின் அந்த எண்ணம் தாற்காலிகமாக ஒத்திப்போடப்படுகிறது- நான் மிகவும் நாசூக்காக சாப்பிடுகிறவன் என்பதனால் அல்ல. இரண்டு பேருமே அப்படியென்றால் அங்கே வரும் மற்ற ஜீவராசிகளுக்கு மிகுந்த சிரிப்பு உபத்திரவம் ஏற்பட்டுவிடுமே என்கிற அன்பான முன்னெச்சரிக்கை உணர்வால்.

    ஒரு காலத்தில் நான் ஒழுங்காகத்தான் இருந்தேன். அதென்னவோ தெரியவில்லை. சமீப காலங்களில் இந்த விஷயத்தில் நானும் பாரா பார்ட்னராகவே மாறிக்கொண்டிருக்கிறேன் என்பது என் குடும்பத்தினரால் அடிக்கடி சுட்டப்படுகிறது!

  • We turn girls into Ladies என்று அறிவித்துக்கொண்டு பெண்களுக்கு நாசுக்கான விஷயங்கள் உட்பட பலவற்றை சொல்லிக்கொடுக்கும் பயிற்சி நிலையங்கள் உண்டு.அதில் fork,spoon,knives கையாள்வது உட்ப்ட table mannersஐ சொல்லிக் கொடுப்பார்கள்.வாயால் சொல்லாமல் போதும்,வேண்டாம் என்பதை பரிமாறுவோருக்கும்,விருந்திற்கு அழைத்தவருக்கும் எப்படி அறியச்செய்வது என்பதும் அதில் அடங்கும்.
    ஆண்களுக்கு அப்படி ஒன்று சென்னையில் இருந்தால் நீங்கள் அதற்கு முதல் மாணவர் மற்றும் ஆள்பிடிக்கும் முகவராக இருக்கலாம். உண்மையில் யோசித்தால் உங்களுக்குள் ஒரு டென்ஷன் இருப்பதால் இப்படியெல்லாம் நடக்கிறது.மிகவும் relaxed ஆக இருந்தால் இத்தனை பிரச்சினை இருந்திராது.நட்சத்திர ஒட்டல்களில் breakfast buffet ஆக இருப்பதில் பல வசதிகள் உள்ளன.வேண்டியதை தெரிவு செய்து உண்ணலாம்.பிறரை கவனித்தாலே பலவற்றை புரிந்து கொள்ளலாம்.நீங்கள் இப்படியாகி விடுமோ அல்லது அப்படியாகிவிடுமோ இது சிந்தி கரையாகி விடுமோ என்று பயப்படுகிறீர்கள்,அந்த பயம்தான் கெடுக்கிறது.விரல்களை மட்டும் பயன்படுத்தி உள்ளங்கையில் உணவு ஒட்டாமல் சாப்பிடுவது ஒரு கலைதான்.சிலருக்கு உள்ளங்கையை வாயில் வைத்து நாக்கால்
    நக்கி சாப்பிட்டால்தான் சாப்பிட்ட உணர்வு வரும்.

    எதற்கும் கேட்டுப்பாருங்கள்- ரின்/சர்ப் விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்கலாம் :).

  • அட்டகாசம் பாராண்ணா, சி ரிச்சு மாளலை..

    ஆஃபாயில் சாப்பிட ரொம்ப ஆசை, ஆனா மூணு சாப்பிட்டா ஒண்ணை உடைக்காம சாப்பிட்டதேயில்லை நான்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

  • நானும் உங்களை மாதிரிதான் இருந்தேன்,பாரா. ஆனால் இப்போது, உணவை அழகாக சாப்பிடுவதை விட ஆரோக்கியமாய் சாப்பிடுவதுதான் முக்கியமெனப் புரிந்துவிட்டதால் கவலை போய்விட்டது.

  • அருமையான நடை. காலந்தாழ்ந்து தங்களது படைப்புகளை படிக்கிறேன். அதென்ன “பங்கரை”?. அதன் அர்த்தம் என்ன?. எந்த மொழி?

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter