ரகோத்தமன் பேசுகிறார்

 • வாசகர்களுக்கு ஓர் அறிவிப்பு. நேற்று இந்தத் தளத்தின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்தேன். அநாவசியமாக எனக்குத் தோன்றிய Sidebarகளை நீக்கியிருக்கிறேன். அலங்காரங்கள் இல்லாத, இந்த எளிய வடிவம் போதும் என்று கருதுகிறேன். ஆனால் Internet Explorer 6 உபயோகிப்பவர்களுக்கு மட்டும் இதனை வாசிப்பதில் பிரச்னைகள் இருக்கும். அவர்கள் Upgrade செய்துகொள்வதையோ, அல்லது Feed Reader எதிலாவது வாசிப்பதையோ தவிர வேறு வழியில்லை – மன்னிக்கவும்.

நாங்கள் வெளியிட்டுள்ள ‘ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்’ நூலின் ஆசிரியர் கே. ரகோத்தமனின் [தலைமைப் புலனாய்வு அதிகாரி, சி.பி.ஐ – சிறப்புப் புலனாய்வுக் குழு] பேட்டி, இன்று வெளியாகியிருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் அட்டைப்படக் கட்டுரையாகப் பிரசுரமாகியுள்ளது. அது இங்கே, ரிப்போர்ட்டருக்கு நன்றியுடன்.

 • பதினெட்டு வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது விசாரணையின்போது நடந்த பிரச்னைக்குரிய அம்சங்களைப் பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?

மொத்தம் மூன்று காரணங்களைச் சொல்லவேண்டும். நம்முடைய நாட்டில் நடந்த முக்கியப் படுகொலை இது. அதைப் பற்றிய புலன் விசாரணையைத் தொடங்கி, மூளை உழைப்பு, மனித உழைப்பு எல்லாவற்றையும் கொட்டி, ஏ டு இஸட் எல்லா விவரங்களையும் சேகரித்தோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திராசாமி செய்யச் சொன்னார் என்கிறார்கள். சிஐஏ உளவு அமைப்பின் கைங்கர்யம் என்கிறார்கள். இந்தத் திசை திருப்பல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ராஜிவின் மனைவி இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜிவ் காந்தியைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்துகொள்வது வெகு சுலபம். அவர்களாக ஏஜென்ஸி வைத்துக்கூட விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் தனது மகள் பிரியங்காவை அனுப்பி குற்றவாளி நளினியிடம், ‘என் அப்பாவைக் கொலை செய்தது யார்?’ என்று கேட்டதாக செய்தி வந்தது. எனில், ராஜிவ் குடும்பத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழுவையோ, அதன் குற்றப்பத்திரிகையையோ நம்பவில்லை என்றுதானே அர்த்தம். இது எனக்கு மன வருத்தத்தைக் கொடுத்தது. உண்மையில் தடா நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பல சாட்சியங்கள், ஆவணங்கள் வெளியே வராமல் போய்விட்டன. அவை முறைப்படி எல்லோருக்கும் தெரியவந்திருந்தால் இந்த சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆதாரங்கள் கைவசம் இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை நான் தலைமைப் புலனாய்வு அதிகாரி. வழக்கின் பிரதம குற்றவாளியான பிரபாகரனும், அடுத்த நிலைக் குற்றவாளியான பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புலனாய்வு அதிகாரியான நான் – ஓய்வு பெற்றுவிட்டாலும் – அது குறித்துப் பேசக்கூடாது. அது சட்ட விரோதம். அதனால்தான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நான் அறிந்த உண்மைகளை இதுநாள் வரை வெளியில் பேசாமல் இருந்துவந்தேன்.

ஆனால் சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில், பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசே அறிவித்து, அந்த வழக்கை மூடிவிட்டார்கள்.
இனி இந்தியாவிலும் ராஜிவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நிச்சயம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கப்போவதில்லை. இதுதான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியது. எழுதிவிட்டேன். ஒருவேளை பிரபாகரன் உயிருடன் இருந்தால் புத்தகமே எழுதியிருக்கமாட்டேன்.

 • பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?

reporter wrapperபரிபூரணமாக. இலங்கை அரசு நீதிமன்றத்திலே அதைப் பதிவுசெய்த பிறகு ஏன் நம்பாமல் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் எந்த நாடும் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறந்து போனவர் பிரபாகரன் என்று பலகாலம் அவர் உடன் இருந்த கருணாவே அடையாளம் காட்டியிருக்கிறார். ஆகவே, பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை.

சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் எந்த அதிகாரியும் வைத்ததில்லை. புலனாய்வின்போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். ஓரிரு உதாரணங்களைச் சொல்லமுடியுமா?

கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன என்பதுதான் என்னுடைய வாதம். புலனாய்வு தொடங்கிய புதிதில் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்றார்கள். விசாரணை தொடங்கி, அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். இதுதான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையிலும் நடந்தது.

ஒரு புலனாய்வு நடக்கிறது என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு எல்லா கோணங்களிலும் விசாரிக்க சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இவரைப் போய் விசாரிக்காதே… அவரைப் போய் எதுவும் கேட்காதே என்று சொல்வது தவறு.

ராஜிவ் படுகொலைக்கு முன்பு அந்தப் பகுதியில் நடக்க இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அது ஏன் என்பது குறித்து விசாரிக்கவேண்டும். நான் கருணாநிதியை விசாரிக்கவேண்டும் என்று கார்த்திகேயனிடம் கேட்டேன். ஆனால் கார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா? ‘இனிமே இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாதீங்க’ இதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதியை விசாரிப்பதில் கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்றுதானே!

புலன் விசாரனையின்போது பல வீடியோ கேசட்டுகள் கிடைத்தன. அதில் ஒன்று, புலிகளின் குகையில் என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ. வைகோ இலங்கைக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவருடன் பேசியது போன்ற காட்சிகள் எல்லாம் அதில் இருக்கும். ஆகவே, புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று நினைத்தேன். பிறகு சின்ன சாந்தனிடம் விசாரணை செய்தோம். அப்போது அவர், ‘கொடுங்கையூரில் சிவராசனை வெள்ளை உடையில் வந்த ஒருவர் சந்தித்து, இந்தக் காரியத்தை நல்லபடியாக முடியுங்கள். அடுத்த இலக்கு வைகோவை சி.எம் ஆக்குவதுதான் என்றார்’ என்று சின்ன சாந்தன் கூறினார். இது என்னுடைய சந்தேகத்தைக் கிளறியது.

பாளையங்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ‘பிரபாகரனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளது’ என்று பேசினார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அந்த உருவம் என்னுடையது. ஆனால் குரல் என்னுடையது அல்ல’ என்று பொய் சொன்னார். அது பத்திரிகையில் வெளியான செய்திதான். ஆனால் அதைச் சொல்வதற்கே தயங்கி, பொய் சொன்னார். இது என்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னேன். அனுமதி கொடுத்தார் கார்த்திகேயன். ஆனால் சந்தேகத்துக்குரியவராக அல்ல; முக்கியமான சாட்சியமாக மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று சொன்னார். விசாரணையை சரியான பாதையில் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.

 • ராஜிவ் கொலைச் சம்பவம் குறித்து, அது நடப்பதற்கு முன்பே வைகோவுக்குத் தெரியும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர எது ஆதாரமாக  இருந்தது?

இரும்பொறை என்பவருக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கு பற்றி எனக்குத் தெரியும் என்று யாரிடமும் பேசாதே என்று அதில் அவர் கூறியிருந்தார். ரவிச்சந்திரனின் வீட்டில் விடுதலைப் புலிகளை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இந்தமுறை ராஜிவ் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ என்று பேசியதாகவும் செய்திகள் வெளியாகின. உடனே வைகோ, ‘மண்டல் கமிஷனை எதிர்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியே போக முடியாது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி விளக்கம் கொடுத்தார். அவர் என்ன பேசினார், என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்பதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக விசாரித்திருக்கவேண்டும்.

 • ராஜிவ் கொலைவழக்கு விசாரணையிலும் கொலைக்கு முந்தைய புலனாய்வு சேகரிப்பு நடவடிக்கைகளிலும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

தொடக்கத்தில் இருந்தே கொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று ’ரா’ அமைப்பின் இயக்குனர் பாஜ்பாய் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதிலும் பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி என்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அப்போதைய அமைச்சர் சுப்ரமணியம் சுவாமியும் இருந்துள்ளார். ‘புலிகள் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பிரதமர் சந்திரசேகர் கேட்டதற்கு, ‘என்னுடைய உளவாளி கிட்டு சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கமுடியும்?  புலிகள் செய்யவில்லை என்று கிட்டு சொன்னதை ராவின் தலைவரும் திரும்பத் திரும்பச்  சொன்னால் இவருக்கும் அவருக்கும் என்னதான் வித்தியாசம்? குற்றவாளிகளை திரைபோட்டு மறைக்கப்பார்த்த பாஜ்பாய்தான் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துக்கொண்டேன்.

ராஜிவ் கொலை தொடர்பாக ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் இண்டலிஜென்ஸ் பியூரோவுக்குக் கிடைத்தது. வர்மா கமிஷன் சார்பாக அந்த வீடியோ கேசட்டைக் கேட்டபோது இறுதிவரை இண்டலிஜென்ஸ் பியூரோ தரவேயில்லை. அப்போது ஐ.பியின் இயக்குனராக இருந்தவர் எம்.கே. நாராயணன். பாஜ்பாய் முழுப்பூசணிக்காயை மறைக்கிறார். எம்.கே. நாராயணன் கேசட்டைக் கொடுக்கத் தயங்குகிறார். இந்த அளவில்தான் ரா மற்றும் ஐ.பி என்ற இரண்டு உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தது.

சுப்ரமணியன் சுவாமியின் எந்தக் கருத்தையும் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்னும் நிலையில் ராஜிவ் கொலையை அடுத்து நடைபெற்ற அதிமுக்கியமான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் நடந்தவை பற்றி அவர் எழுதியதை நீங்கள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொடுத்திருக்கிறீர்கள். உளவுத்துறை மீதான சுவாமியின் விமரிசனங்களையும் ராஜிவ் கொலை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் நீங்கள் நம்புகிறீர்களா? ஏற்கிறீர்களா?

பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி கூட்டத்தில் பேசியதாக சுப்ரமணியம் சுவாமி சொன்னதை நான் நம்புகிறேன். அங்கே பேசப்படும் விஷயங்களுக்குப் பதிவுகள் இருக்கும். ஆகவே அந்த விஷயத்தில் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை என்னை அனுமதித்திருந்தால் அந்தப் பதிவையும் எடுத்துவந்திருப்பேன். திரும்பவும் சொல்கிறேன். சுவாமி எழுதிய புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.

 • புலனாய்வின்போது ஏற்பட்ட ஏராளமான சயனைடு மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால்தான் நடந்தன என்பதற்கு உங்கள் பதில் என்ன?

சயனைடு என்பது விடுதலைப்புலிகளின் முக்கிய ஆயுதம். விடுதலைப்புலி ஒருவர் போலீஸாரால் பிடிபடுவதற்கான சூழல் ஏற்பட்டால் உடனடியாக குப்பி கடித்து சாகவேண்டும் என்பது அவர்கள் இயக்கத்தின் ஆணை. சிவராசனை கர்நாடகாவில் சுற்றிவளைத்தபோது தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி அதிரடியாகப் பிடித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, டெல்லியில் இருந்து சிறப்புப் படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி ஒருநாளுக்கு மேல் தாமதம் செய்ததுதான் சிவராசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதைவிடக் கொடுமை, அவர் வசம் இருந்த ஆவணங்களை எல்லாம் அழிப்பதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுதான். அதிரடியாகச் செயல்பட்டிருந்தால் சிவராசனை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம்.

 • ஜெயின் கமிஷன் விசாரணையின்போது சிபிஐ ஒத்துழைப்பு தரவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?

ஜெயின் கமிஷனை நியமித்த உடனேயே அவர் விசாரணையைத் தொடங்கவில்லை. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடியட்டும். அதைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுங்கள். அதன்பிறகு நான் விசாரணையைத் தொடங்குகிறேன் என்றார் ஜெயின். விசாரணைகள் எல்லாம் முடிந்ததும் திரட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்றை ஜெயின் கமிஷனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன் அப்படிச் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்று சிபிஐ பப்ளிக் பிராசிகியூட்டரால் போடப்பட்டு, வழக்கு விவரங்களை அதிகாரபூர்வமற்ற நபர்களுக்குக் கொடுக்ககூடாது என்று ஆர்டர் வாங்கப்பட்டது. அதன்மூலம் ஜெயின் கமிஷனுக்கு எந்த விவரங்களையும் கார்த்திகேயன் தரவில்லை. இதன் பின்னணியில் ஜெயின் சொன்ன ஒரு கருத்து இருக்கிறது. ‘சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்காத நபர்களை எல்லாம் நான் விசாரிப்பேன்’ என்று சொல்லியிருந்தார்.

தனக்குத் தகவல் கொடுக்காத ஆதங்கத்தில்தான் எல்லோருடைய அஃபிடவிட்டுகளையும் வாங்கி, விசாரித்து, இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விளைவாகவே குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு விசாரணை செய்வதற்காக கார்த்தியேகயனை அழைத்தார். அப்போது தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் நானும் சென்றிருந்தேன்.

‘என்னிடம் எந்த ஆதார நகலையும் தரவில்லை. எனக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியை நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஜெயின்.

 • உளவுத்துறைத் தலைவர் முதல் கலைஞர் வரை, மரகதம் சந்திரசேகர் முதல் வைகோ வரை இந்நூலில் ஏராளமானவர்கள் மீது நீங்கள் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?

அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரையும் குற்றம் சாட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. சாட்சி இருந்தால் எவரையும் விடக்கூடாது. இல்லையென்றால் ஒருவரையும் தண்டிக்கக்கூடாது. இதுதான் என்னுடைய எண்ணம்.

 • நளினியைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் பகுதிகள் அவர்மீது பரிதாப உணர்வை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது போலத் தோன்றுகிறதே.. நளினியை விடுதலைசெய்வது பற்றி உங்கள் நிலைபாடு என்ன?

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்ல உதவியவர் நளினி. அவர் விடுதலைப் புலி அல்ல; எம்.ஏ படித்தவர். முருகனைக் காதலித்தார். அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ராஜிவ் கொலையை நிகழ்த்திவிட்டார்கள். அவ்வளவுதான். அதற்கான தண்டனையை ஏற்கெனவே அனுபவித்துமுடித்துவிட்டார். ஆகவே, அவரை விடுதலை செய்யவேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இன்னொன்றையும் சொல்கிறேன். ராஜிவ் கொலைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மனித வெடிகுண்டுகள் மூன்று பேர். அவர்களில் தணுவும் சுபாவும் இறந்துவிட்டனர். இன்னொரு மனித வெடிகுண்டான ஆதிரையை நாங்கள் பிடித்துக்கொடுத்த பிறகும் அவரை சுப்ரீம் கோர்ட் விடுவித்துவிட்டது. டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட மனித வெடிகுண்டையே விடுவிக்கும்போது நளினியை விடுவிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

1. புத்தகத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே

2. பத்ரி எழுதிய குறுங்கட்டுரை
3. இட்லிவடை எழுதியது

Share

13 comments

 • ராஜீவ் கொலை நடந்த பிறகு திருப்பெரும்புதூரில் இருந்து சிவராசனும், சுபாவும் எப்படி சென்னைக்கு பயணமானார்கள் என்பதை ரகோத்தமன் கண்டறிந்துவிட்டாரா..?

  ரொம்ப நாளாக “இதை மட்டும்தான் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” அப்படீன்னு சொல்லிட்டிருந்தார்..! அதான் கேட்டேன் சாமி..!!!

  • //திருப்பெரும்புதூரில் இருந்து சிவராசனும், சுபாவும் எப்படி சென்னைக்கு பயணமானார்கள்// முழு விவரம் புத்தகத்தில் உள்ளது. கண்டுபிடிக்க முடியாமலிருந்த விஷயம் அதுவல்ல. அப்படித் திரும்பும்போது சிவராசன், சுபா, நளினி தவிர இன்னொருவரும் அவர்களுடன் சென்னைக்குப் பயணம் செய்தார். அந்த நபர் யார் என்பதுதான் இறுதிவரை தெரியாத விஷயமாக இருந்தது. வழக்கு விசாரணைகள் முடிந்தபின்னரே அந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருக்கிறது. அது பற்றிய தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன.

 • அந்த சைடு பார்களில் ஒன்றே ஒன்றை(Recent posts/archives) மட்டும் திருப்பி கொண்டு வந்தால் நல்லா இருக்கும் – பழைய இடுகைகளில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடுகையை படிக்க வேண்டுமென்றால் வரிசையாய previous post/older பட்டனைத் தட்டியே ஆக வேண்டும் என்பது கொஞ்சம் சோர்வு தருகிறது.

  • லக்ஷ்மி, சைட்பார்கள் வேண்டாம் என்று தீர்மானித்தே இந்த வடிவமைப்புக்கு மாற்றினேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் ஆர்கைவ் பிரச்னை இருப்பதை அறிவேன். கட்டுரைகளின் கீழே வரும் ‘நெக்ஸ்ட்’ பட்டனை அழுத்தினால் முந்தைய கட்டுரைகளின் தேதிவாரியான பட்டியல் வரும்படி மாற்றி அமைக்க கணேஷ் சந்திராவிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் செய்துவிடுவார்.

 • //கட்டுரைகளின் கீழே வரும் ‘நெக்ஸ்ட்’ பட்டனை அழுத்தினால் முந்தைய கட்டுரைகளின் தேதிவாரியான பட்டியல் வரும்படி மாற்றி அமைக்க கணேஷ் சந்திராவிடம் கேட்டிருக்கிறேன். விரைவில் செய்துவிடுவார்//

  நெக்ஸ்ட் பட்டனை அழுத்தினால் அடுத்தக் கட்டுரை தான் போக வேண்டும், தப்பாட்டம் ஆடக்கூடாது. கூடுதலாக ஆர்க்கைவ்ன்னு ஒரு சுட்டிக் கொடுத்து அங்கே தேதிவாரி பட்டியல் வர்ற மாதிரி செய்யச் சொல்லுங்க.

  சைடுபாரெல்லாம் வேண்டாம்ன்னு எடுத்தாச்சு, பொறவு ஏன் வெற்றிடம் வைக்கணும். நடுல இருக்கிற கண்டெண்ட் பகுதியை கொஞ்சம் அகலமாகவோ அல்லது பக்கம் முழுமைக்கும் வர்ற மாதிரி செய்யலாமே!

  • ராஜா, சுற்றிலும் வெண்மை இருப்பது வாசிப்பை எளிதாக்கும் என்று எண்ணுகிறேன். நெக்ஸ்ட் பட்டனை அழுத்தினால் அடுத்ததற்குத்தான் போகவேண்டுமென்பது சரி. ஆனால் நெக்ஸ்ட் பட்டனையே முந்தைய கட்டுரைகள் என்று மாற்றிப் பெயர் கொடுத்தால் உனக்கென்ன கஷ்டம்? 😉

 • ரொம்ப plainஆக இருக்கிறதே..என்னமோ மிஸ்ஸிங்..

  புதிதாக வருபவர்களுக்கு இந்த ஒரு பக்கம்தான் இருக்கிறது என்று தவறாக எண்ண வாய்ப்புகள் அதிகம்…

  Archive மற்றும் தள தேடல் மட்டுமாவது sidebarல் வைக்கலாம்..

  முந்தைய பதிவுகளை தேடி பிடித்து படிக்க வேண்டியிருக்கிறது 🙁

  தள தேடல் கீழே இருப்பதற்கு இல்லாமலே இருக்கலாம்..

  அப்புறம் மேலே ‘BLOGS’ menuவை ‘Archive’ என்று வைக்கலாம்..

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  • சுவாசிகா, archives என்று போட்டால் அடுத்தவரிக்குப் போய்விடுகிறது. blogs என்றால்தான் ஒரே வரியில் உட்கார்கிறது. அதான் விஷயம்.

 • This is the third/fourth book on this topic.There was Jain Commission.Yet has the full and whole truth been revealed threadbare. I dont think so.Karthikeyan is the one who led the investigation.If Rahothaman had some problems with his style of investigation and found that it hampered in finding out truth at that stage he should have quit the team.What is the big point in writing a book after so many years.Is it for another round of creating a sensation or to target some politicians now so that their futures are sealed once and for all.
  It seems that the target now is Vai.Ko who is politically weak now. The timing of the book raises doubts about the intention of the author.Is he acting on behalf of some one by writing such a book. Did he take the permission from government to disclose facts and matters of the investigation.
  I dont know but his interview raises more questions than answers. This was a case where the accused No 1 and No 2 could not be produced before the court. Had this case been tried under normal IPC the case would have taken a different turn. When many version of ‘truth’ are floating around and are propogated by persons with bloated egos, the best solution is to ignore them all.[ floating, bloated- does it not rhyme well, yes you got it right, i am a big fan of TR:)].

 • பிரபாகரன் இறந்த காரணத்தால் இந்த உண்மையைச் சொல்கின்றேன் என்ற இந்த வாக்கியமே அத்தனை வாசிக்க கஷ்டமாக இருக்கிறது. அப்படி என்றால் இருந்து இருந்தால் என்று கேட்க தோன்றுகிறது.?

  கார்த்திகேயன் பற்றி பத்ரி சொன்னது மிகச்சரி. வேலைப்பளுவின் தூக்ககலக்கம் என்ற போதிலும் வாசிக்க தொடங்கி வைக்க முடியவில்லை. ஒரு தீவிரவாத எல்லை, ஒரு தனி மனித உழைப்பு இரண்டின் மொத்த பரிணாமமும் அப்பட்டமாக அந்த வலைபின்னல் உணர்த்துகிறது.

  பெட்டிக்கடை வரைக்கும் எளிதாக பரவிய கிழக்கு பதிப்பகம் உண்மையான ஆளுமை என்பது நிரூபிக்கப்படவேண்டுமானால் நீங்கள் வெளியிட்ட அடுத்த நாளே திருப்பூரில் கிடைத்து இருக்க வேண்டும்.

  கார்த்திகேயன் எழுத்து கிட்டத்தட்ட உங்கள் ஆளுமையை எனக்கு உணர்த்தியது. நழுவாமல், அதே சமயத்தில் எதை விட்டு விடாமல், சார்ந்து இல்லாமல், சமரசம் செய்து கொள்ளாமல் என்ற தன்னுடைய தனி மனித உழைப்பை மொத்தமாக புலனாய்வில் காட்டியது போலவே எழுத்திலும் காட்டி உள்ளார்.

  பத்ரி இடுகையில் அவரின் புத்தகத்தை விமர்சனப்பார்வையில் எழுத்துக்களாக படித்த போது உதவி செய்யமாட்டோம். ஆனால் உண்டு இல்லை என்று பண்ணாமலும் இருக்க மாட்டோம் என்று தமிழன் குணாதிசியம் உணர்த்தியது.

 • para ,
             why are you stopped the YUTTHAM SARANAM  article ???? if any threat are you faced ??  

  • சங்கர்: எனக்கு எந்த மிரட்டலும் இல்லை. இருந்தாலும் அதற்கு பயப்படுபவனும் நானல்ல. பிரபாகரனே இறந்தார் என்னும் செய்தி வந்த வேளையில் பழைய சரித்திரம் பேசிக்கொண்டிருப்பது அபத்தமானது. அதனால் நானே தான் பத்திரிகை ஆசிரியரிடம் சொல்லி, தொடரை நிறுத்தினேன். பின்னொரு சமயம் எழுதி முடித்து நூலாகக் கொண்டு வருவேன்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter