எனக்குக் கொஞ்சம் சங்கீதக் கிறுக்கு உண்டு. பெரிய தேர்ச்சி கிடையாது என்றாலும் கொஞ்சம் சூட்சுமம் புரிந்து ரசிக்கத் தெரியும். ஒரு காலத்தில் வீணையெல்லாம் கற்றுக்கொண்டு நாளெல்லாம் வாசித்துப் பலபேரைப் பகைத்துக்கொண்டிருக்கிறேன்.
இசையென்றால் கர்நாடக இசை ஒன்றுதான் என்று வெகுநாள் வரை மற்ற எதையும் கேட்கக் கூட விரும்பாமல் இருந்திருக்கிறேன். ஆனால் இளையராஜா வழியே எனக்கு மேற்கத்திய சாஸ்திரிய சங்கீத விற்பன்னர்கள் அறிமுகமாக, கொஞ்சம் கொஞ்சமாக முரட்டுப் பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு 1998க்குப் பிறகு நிறைய மேற்கத்திய இசை கேட்கத் தொடங்கினேன்.
ஏதோ ஒரு கட்டத்தில் மேற்கத்திய இசை வடிவத்தின் சூட்சுமம் பிடிபட்டுவிட்டது. அதன்பின் தீவிரமாக ரசிக்கத் தொடங்கி பாக், மொசார்ட், பீத்தோவன், ஃப்ரன்ஸ் ஷூபர்ட் என்று தேடித் தேடிக் கேட்கிற வழக்கம் உண்டானது. இசை வடிவங்களின் ஊடாக அக்கலைஞர்கள் வெளிப்படுத்த விரும்பிய செய்திகளைத் தேடுவது எனக்கு ஒரு நல்ல பொழுதுபோக்கு. இசை ஒரு செய்தி ஊடகமல்லதான். ஆனாலும் தேடிப் பார்க்கலாம். அதுவும் ஓர் அனுபவம். எழுத்தாளன் டைரி எழுதினால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கும் மாபெரும் இசைக்கலைஞர்களின் சில பிரத்தியேக இசைத் துணுக்குகள். தங்களது சொந்தக் கஷ்டங்களை, சந்தோஷங்களை, காதலை, கருணையை, கோபத்தை, பொறாமை உணர்வை, மித மிஞ்சிய போதையின் அலையடிப்பை அவர்கள் சுரங்களாக மொழிபெயர்த்துப் பல்வேறு தொகுப்புகளுக்கிடையே ஒளித்து வைப்பது வழக்கம். தேடிப் பிடிப்பது ஒரு நல்ல விளையாட்டு.
நான் தேடுவேன். அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையையும் கூடவே யோசித்துக்கொண்டு தேடினால் இன்னும் சுவாரசியமாக இருக்கும். இந்தக் கிறுக்குத்தனங்களையெல்லாம்கூட கிளாசிக்குகளில் மட்டும்தான் செய்வேனே தவிர, அப்போதும் நவீன இசைக்கலைஞர்களைத் தேடிப் போனதில்லை. ஏதோ ஒரு மனத்தடை இருந்திருக்கிறது.
உடைத்தவர் யானி. தற்செயலாகக் காதில் விழுந்து என்னை நிலைகுலைய வைத்த அத்தகைய ஓர் இசைத் தொகுப்பு Live at the Acropolis என்கிற அவருடைய ஒரு மேடை நிகழ்ச்சித் தொகுப்பு. அந்த ஆல்பத்திலிருந்துதான் நான் யானியை அறிவேன். இன்றைக்குவரை யானி வெளியிட்டிருக்கும் அத்தனை ஆல்பங்களையும் கேட்டிருக்கிறேன், திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். அந்த முதல் நாள் பரவசத்தில் எள்ளளவும் குறைவற்ற அனுபவமே எப்போதும் சித்திக்கிறது. ஆழ்ந்த மரபு வலுவும் நவீனத்துவத்தின் எழிலும் இரண்டறக் கலந்த இசை அவருடையது. பல இடங்களில் மொசார்டின் சாயல் இருக்கும். அது தந்தையின் சாயல் வாரிசின் வார்ப்பில் இருப்பது போன்றது. (இளையராஜாவிலும் முன்பெல்லாம் இது உண்டு.)
யானியின் இசையைப் போலவே அவருடைய வாழ்க்கையும் வேகம், வேகம், வேகம் என்று மூச்சுவிட அவகாசம் தராத இறுக்கமான திரைக்கதை அமைப்பினைக் கொண்டது. இளம் வயதில் தான் மிகவும் நேசித்த குத்துச்சண்டை மற்றும் நீச்சல் இரண்டுக்கும் மாற்றாகத்தான் இசை அவரை ஆட்கொண்டிருக்கிறது. என்ன ஒரு வினோதமான சேர்க்கை! யானியின் இசையில் நீச்சல் மற்றும் குத்துச்சண்டையின் அடிப்படைக் குணத்தை யாரும் எளிதில் உணர முடியும். ஒரு மாபெரும் தன்னம்பிக்கைவாதியின் மொழியாக இசை அமையும்போது, அது முற்றிலும் புதிய முகமும் வேகமும் கொண்டுவிடுகின்றது.
என்றைக்காவது இது பற்றி எழுதவேண்டும் என்று பலகாலமாக எண்ணிக்கொண்டிருந்தேன். முன்னதாக மொசார்ட் பற்றி ஒரு சிறு நூலை எழுதி, என்னால் இத்தகைய விஷயங்களை எழுத்தில் கொண்டுவர முடிகிறதா என்று பரீட்சித்தும் பார்த்துக்கொண்டேன். குமுதம் ரிப்போர்ட்டரில் சில மாதங்களுக்கு முன்னர் திடீரென்று இதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது வேறொரு தொடரும் நான் எழுதிக்கொண்டிருந்தபடியால் ஒரே பெயரில் இரண்டு தொடர்கள் சாத்தியமில்லாமல் இருந்தது. எனவே ஒரு திடீர் புனைபெயரை உருவாக்கி, [எனக்குப் பிடித்தமான இரண்டு பெரியவர்களின் பெயர்களைச் சேர்த்து உருவாக்கினேன்.] அந்தப் பெயரில் இந்தத் தொடரை எழுதினேன்.
ஆனால் பல்லாண்டு காலமாக என்னைத் தொடர்ந்து வாசித்துவரும் ரிப்போர்ட்டர் வாசகர்கள் முதல் அத்தியாயத்திலேயே கண்டுபிடித்துக் கேட்டுவிட்டார்கள். என்னை மறைத்துக்கொண்டு அதனை எழுதும் விருப்பமோ ஆவலோ இல்லாவிட்டாலும், பத்திரிகையின் தேவைக்கேற்ற அவசியம் இருந்தபடியால் அதனைச் செய்யவேண்டியதானது.
யானி – இப்போது நூலாக வந்திருக்கிறது. இந்தத் தொடரை எழுதுவதன்பொருட்டு நான் தகவல்கள் சேகரித்துக்கொண்டிருந்தபோது, இணையத்திலுள்ள பல யானி ரசிகர்கள் ஆர்வமுடன் உதவினார்கள். நண்பர் பாஸ்டன் பாலாஜி அனுப்பிய ஒரு புத்தகம் யானியை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவி செய்தது. யானியின் எந்த ஒரு இசைக்கோவையும் விடுபட்டுப் போகாமல் அவரது அத்தனை ஆல்பங்களையும், மேடைக் கச்சேரிகளையும் என் மடிக்கணினிக்குக் கொண்டு வந்து சேர்த்தது முகில். எழுதிக்கொண்டிருந்த நாளெல்லாம் என் வீட்டில் யானியின் சங்கீதம் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. விஜய் பாட்டுகள் தவிர வேறெதையும் கேட்கா விரதம் மேற்கொண்டிருந்த என் குழந்தையும் குதூகலித்து ரசித்த இசை அது.
புத்தகத்தை வாசிக்கும்போதும் அந்தத் துள்ளலை உணர முடிந்தால் நான் யானிக்கு நேர்மையானவனாக நடந்துகொண்டிருக்கிறேன் என்று பொருள்.
நான் இணையத்துக்கு அறிமுகமான தினம் தொடங்கி இன்றுவரை மாறா அன்புடனும் நட்புடனும் பழகிவரும் கணேஷ் சந்திராவுக்கு இந்நூல் சமர்ப்பணம்.
—
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே வருடவும்.
வாழ்த்துகள்!!
என் புத்தகம் வாங்கும் பட்டியலில் ‘யானி’யை சேர்த்தாச்சு 🙂
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
மேற்கத்திய இசையில் நானும் ஒரு யானி ரசிகன் என்பதால் இந்தப் புத்தகம் கண்டிப்பாக வாங்கி படிப்பேன்.
கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா சரி – பேர் எதுவாக இருந்தால் என்ன புத்தகம் நல்லா இருந்தா சரி சித்தார்த் ராமானுஜரே