புத்தகம் மனிதர்கள்

ஆடு, பாம்பு, யானை மற்றும் எம்.ஜி.ஆர்.

சமீபத்தில் நான் வியந்து வாசித்த புத்தகம், சின்னப்பா தேவருடைய வாழ்க்கை வரலாறு. ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பல்வேறு கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பழக வாய்த்தவர் வாழ்வில் அனுபவங்களுக்குப் பஞ்சம் இராது என்பது உண்மைதான். ஆனால் தேவருடைய அனுபவங்கள் சாதாரணமாக வேறு யாருக்கும் வாய்க்க முடியாதவை.

அபாரமான கடவுள் பக்தி, கண்மூடித்தனமான பக்தி. [முருகனை மயிராண்டி என்றெல்லாம் கூப்பிடுகிறார். பயமாக இருக்கிறது.] ப்ரொஃபஷனலிசம் என்று இல்லாமல், தன்னொழுக்கமாகவே தன் தொழிலுக்கு ஓர் இலக்கணம் வகுத்து முரட்டுத்தனமாக அதைப் பின்பற்றிய பாங்கு. அடிப்படை நேர்மை, உதார குணம்.

தேவர் தன் வாழ்நாளில் ஒரு கணம் கூட சினிமாவை ஒரு கலைப்படைப்பாகவெல்லாம் நினைத்துப் பார்த்தவரில்லை. அது அவருக்கு பிசினஸ். நாலைந்து வெற்றி பெற்ற படங்களைப் பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்துப் போட்டு புதிதாக ஒரு திரைக்கதை சமைப்பதை ஆத்ம சுத்தியுடன் செய்தவர். எம்.ஜி.ஆர். கால்ஷீட் இல்லாவிட்டால் ஏதாவது ஒரு பாம்பைப் பிடி, ஆட்டைப் பிடி, யானையைப் பிடி என்று ஹீரோவை மாற்றுபவர். அதே எம்.ஜி.ஆர். மனம் வருந்தி, திருந்தி வந்து நின்றால், சற்றும் தயங்காமல் உடனே அடுத்தப் படத்துக்கு அவரை வைத்து பூஜை போடுகிறவர். தனக்கு லாபம் கொடுக்கும் எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டார் என்பதற்காக வாழ்நாள் முழுதும் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படமும் எடுக்காதவர்.

‘கத சொல்றியா? நாலு வரில சொல்லு. மொத வரில மேட்டர சொல்லு’ என்று நிர்த்தாட்சண்யமாகப் புதியவர்களை அச்சுறுத்தியவர். [அப்படி நாலு வரியில் சொல்லத் தெரியாததால் அவர் நிராகரித்தவர்களுள் ஒருவர் கே. பாக்யராஜ்!] ஹீரோயின் ஒழுங்காக நடிக்க வராவிட்டால், சரோஜா தேவியே ஆனாலும் தூக்கிப் போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றவர். ஹிந்தி சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவைக் கதறக் கதற மிரட்டி விரட்டியவர். புனித வெடிகுண்டாக இடுப்பில் எப்போதும் கத்தை கத்தையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு திரிந்தவர். யார் கேட்டாலும் கிடைக்கும். எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும். ஆனால் சம்பந்தப்பட்டவரால் தேவருக்கு உபயோகம் இருக்கவேண்டும்.

ஒரு சமயம் தேவரின் மனைவி அவரிடம் கேட்டார். யார் யாருக்கோ எவ்வளவோ பணம் குடுக்கறிங்க. நம்ம குடும்பத்துக்கு நாலு காசு சேத்து வெக்கக்கூடாதா?

தேவர் அப்போதுதான் மனைவியின் பேங்க் பேலன்ஸைப் பார்த்தார். அதிர்ச்சி. உடனே வினியோகஸ்தர்களைக் கூப்பிட்டு, அடுத்தப் படத்துக்கு யார் எத்தனை அட்வான்ஸ் தருவீர்களோ, இங்கே, இன்றே, இப்போதே கொடுங்கள் என்று கேட்டார்.

தேவர் அழைத்து யார் மறுப்பார்கள்? குவிந்த பணத்தை மனைவியிடம் கொண்டு கொட்டினார். போதுமா? போதுமா? போதுமா?

இந்தப் புத்தகம், தமிழ் சினிமா இன்றுவரை எப்படி எடுக்கப்படுகிறது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. ஏதோ ஒரு நம்பிக்கை. கிட்டத்தட்ட குருட்டு நம்பிக்கை. ஓடும் ஓடாது என்பதைக் கடவுள் தலையில் தூக்கிப் போடு. இது பண விளையாட்டு. லாபம் ஒன்றுதான் குறிக்கோள். லாபம் கொடுத்தால் நல்ல படம். கொடுக்காவிட்டால் கெட்ட படம். கொண்டாடப்படும் நபர்கள் யாரும் நிரந்தரமானவர்கள் அல்லர். கொண்டாட்டம் ஒன்றே நிரந்தரமானது.

ஆட்டுக்கார அலமேலுவின் பிரம்மாண்ட வெற்றிக்கான பாராட்டை தேவர் அந்த ஆட்டை மேடையேற்றி அளித்ததில் எந்த வியப்பும் உங்களுக்கு ஏற்படாவிட்டால், உங்களுக்குத் தமிழ் சினிமா உலகம் புரிந்தது என்று பொருள்.

ஒரு பார்வையில் தேவர் பரிதாபகரமான மனிதராகவும் எனக்குத் தெரிந்தார். கிட்டத்தட்ட மாடு மேய்ப்பது மாதிரிதான் அவர் தம் யூனிட்டை மேய்த்திருக்கிறார். கலைஞர்கள் அனைவரையும் கடலைப் புண்ணாக்கு போலவே அவரால் பாவிக்க முடிந்திருக்கிறது. அதிர்ஷ்டத்தினாலன்றி, வேறு எதனாலும் தேவர் படங்கள் அத்தனை பிய்த்துக்கொண்டு ஓடியிருக்க முடியாது என்று வெகு நிச்சயமாகத் தோன்றுகிறது. [அவர்கள் கதை பண்ணும் அழகை நீங்கள் வாசித்துத்தான் உணரவேண்டும். ஒன்று விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அல்லது தலைதெறிக்க ஓடிவிடுவீர்கள்!]

அதிர்ஷ்டம் தொடர்ச்சியான விஷயமல்ல. தேவருக்குப் பிறகு அவரது நிறுவனம் காணாமல் போனதற்கான காரணத்தை யூகிப்பது அத்தனை சிரமமானதுமல்ல.

ஆனால் இன்றளவும் தேவர் ஃபார்முலாவைக் கோடம்பாக்கம் நம்புகிறது என்பதுதான் இதில் வியப்புக்குரிய அம்சம்.

தமிழ் வெகுஜன வெற்றி சினிமாவுக்கான இலக்கணங்களுள் முக்கியமான ஒன்றை வகுத்தவர் தேவர் என்று தயங்காமல் சொல்லலாம். அந்த ஃபார்முலா அபத்தமானது. ஆனால் அதனை உருவாக்கிய தேவரின் வாழ்க்கை சுவாரசியமானது.

[சாண்டோ சின்னப்பா தேவர் / பா. தீனதயாளன் / கிழக்கு / விலை ரூ. 110]
Share

22 Comments

 • இப்போதும் கூட படம் முடிந்த பின்னர் பிளிறியபடி வரும் அந்த யானையை பார்த்தால்தான் முழுப்படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.

  //தமிழ் வெகுஜன வெற்றி சினிமாவுக்கான இலக்கணங்களுள் முக்கியமான ஒன்றை வகுத்தவர் தேவர் என்று தயங்காமல் சொல்லலாம்//

  உங்கள் கருத்தை வழிபொழிகிறேன்.

  //அந்த ஃபார்முலா அபத்தமானது//

  உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன்.

  //அதிர்ஷ்டம் தொடர்ச்சியான விஷயமல்ல. தேவருக்குப் பிறகு அவரது நிறுவனம் காணாமல் போனதற்கான காரணத்தை யூகிப்பது அத்தனை சிரமமானதுமல்ல.//

  தேவர்-MA.திருமுகம்-எம்.ஜி.ஆர் கூட்டணி அளவிற்கு இல்லாவிட்டாலும் தேவருக்கு பின்னர் தண்டாயுதபாணி-R.தியாகராஜன்-ரஜினிகாந்த் கூட்டணியும் ஒரு கலக்கு கலக்கினார்களே…. அதன் பின்னர்தான் எங்கோ தவறு நடந்துள்ளது.

  என்மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் கேள்வி, நீங்களும் திரைப்படத்துறையில் இயங்குவதால்தான் கேட்கிறேன்.

  தர்மத்தின் தவைவனுக்கு பின்னர் தேவர் பிலிம்ஸில் படமெடுத்தார்களா? தேவரின் குடும்பத்தினர் ஏன் படத்தயாரிப்பிலிருந்து ஏன் விலகினார்கள்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

 • Pa Ra,

  I think you are addicted to the word “Athma Sutthi”. In all your books which I read, I count at least 5 to 10 times. I am telling you this with “Athma Sutthi”.

  Kalai

 • அருமையான அறிமுகம் ராகவன். கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  சில விஷயங்களை பல புத்தகத்தில் படித்தது நினைவிருக்கு.

  இது தான் தேவர் பற்றிய முழுமையான புத்தகம் என எண்ணுகிறேன்.

  பகிர்விற்கு நன்றி.

 • சற்று தொடர்பில்லாத வேண்டுகொள்: உங்களின் புதையல் தீவு தொடரை தமிழோவியத்தில் படத்தேன். நன்றாக இருந்தது. மேலும் உங்களின் யாழிமுட்டை சிறுகதையினைத் தென்றல் இதழில் படிக்க நேர்ந்தது. அதே போல் உங்களின் ”கால் கிலோ காதல் அரைக்கிலோ கனவு” தொடரை எங்கேனும் பதிவேற்ற முடியுமா?

  நன்றி,
  முரளி

 • கலை,

  நான் தோற்றேன். நீங்கள் சொல்வது சரி. என்னையறியாமல் அந்தச் சொல் பல இடங்களில் எப்படியோ நுழைந்துவிட்டிருக்கிறது. கட்டாயம் குறைத்துக்கொள்ள இனி முயற்சி செய்வேன். இதனை ஆத்மசுத்தியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 • முரளி, புதையல் தீவைப் பாராட்டிய முதல் வாசகர் என்கிற படியால் உங்களுக்குக் கோடி நன்றி. என் மற்ற அத்தனை புத்தகங்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிடித்த படைப்பு அது. துரதிருஷ்டவசமாகத் தமிழ் வாசகர்கள் அடியோடு புறக்கணித்துவிட்டார்கள். காரணம் தெரியவில்லை.அதன் குறைகளைக் கண்டுபிடித்து, சரி செய்யவேண்டும் என்று நினைத்து நினைத்தே, இத்தனை நாள் புத்தகமாக்காமலே இருந்துவிட்டேன்.

  கால் கிலோ காதல்- கல்கியில் தொடராக வந்தது. இதுவும் இன்னும் புத்தகமாகவில்லை. சும்மா பொழுதுபோக்காக எழுதிய தொடர் இது. அதிகம் மெனக்கெடவில்லை. அதனாலேயே, சரியாக வரவில்லையோ என்கிற எண்ணம். உங்களை மாதிரி இன்னும் பத்துப்பேர் வாசிக்கத் தயாரென்றால் இந்தத் தளத்திலேயே மறு பிரசுரம் செய்யலாம். பிரச்னையொன்றுமில்லை.

 • பிரகாஷ்:

  கனகவேல் காக்க ரிலீஸுக்கு உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன். திரைப்பட வெளியீடுகளை ஹீரோக்கள் தீர்மானிக்கிறார்கள். கரணின் முந்தைய படமான ‘மலையன்’ இம்மாதம்தான் வெளிவருகிறது. (அநேகமாக 19) அதிலிருந்து 20-30 நாள் வைத்துக்கொள்ளுங்கள். கனகவேல் காக்க வந்துவிடும். படம் முடிந்து, தயாராகிவிட்டது.

  கனகவேல் காக்கவுக்குப் பிறகு கரணின் அடுத்தப்படமான கந்தா வரவேண்டும். [என் நண்பர், எழுத்தாளர் திருவாரூர் பாபு என்கிற பாபு காமராஜ் இதன் இயக்குநர்.] அதன் ரிலீஸுக்குப் பிறகு நான் எழுதிய அடுத்தப் படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம் வரும்.

 • நண்பர் காத்தவராயன்:

  தேவர் குடும்பத்தினர் இப்போது திரைத்துறையில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை. தற்போது என்ன செய்கிறார்கள் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வேண்டுமானால் பா. தீனதயாளன் எப்போதாவது எங்கள் அலுவலகத்துக்கு வரும்போது கேட்டுச் சொல்கிறேன். [எனக்குத் தெரிந்து மொபைல் போன் வைத்துக்கொள்ளாத ஒரே எழுத்தாளர் அவர். அவராக வந்தால்தான் உண்டு.]

  தர்மத்தின் தலைவனே பெரிய வெற்றிப்படமல்ல என்று நினைக்கிறேன். அதுவேகூடக் காரணமாக இருக்கலாம்.

 • புதையல் தீவு கண்டிப்பாக குழந்தைகளுக்கான கதை நேரத்தில் படித்து காட்டலாம். அங்கங்கே இலை மறைவாக தூவியிருக்கும் நீதி போதனைகள் அசர வைத்தன. வில்லன் கதாபாத்திரங்கள் சற்று எளிதாக சிறுவர்களிடம் ஏமாறுகிறார்கள். ஆனால் அப்படி இருந்தால் குழந்தைகள் அதை ரசித்தே கேட்பர் என்று நினைக்கிறேன். பாலு , குடுமிநாதன் மற்றும் டில்லி பாபு கதாபாத்திரங்கள் நன்றாக வந்துள்ளன. முக்கியமாக பாலுவின் ‘குண்டு’ , குடுமியின் பயம் , டில்லியின் வீரம் சுவையாகவும் ரசனைக் குறியதாகவும் இருந்தன.

  முக்கியமாக கதை திரில்லர் ஸ்டைலில் இருப்பது வரவேற்பைப் பெறலாம். தமிழக மக்கள் எதைத் தான் புறக்கணிக்கவில்லை.
  ‘கால் கிலோ…’ இங்கே ரிலீஸ் செய்யுங்கள் , படித்து பார்க்க ஆர்வமாக உள்ளது.

  நன்றி.

  • நன்றி. இரண்டு வோட்டுகள் விழுந்திருக்கின்றன. பத்து விழுந்தால் இங்கே கால்கிலோ.

 • கால் கிலோ காதல் தொடரை உங்கள் இணைய தளத்திலேயே வெளியிடுங்களேன் . வாசிக்க ஆர்வமாய் இருக்கிறேன்

 • கால் கிலோ காதல் தொடரை உங்கள் இணைய தளத்திலேயே வெளியிடுங்க..

 • //பத்து விழுந்தால் இங்கே கால்கிலோ.//

  தகவலுக்காக – பத்து என்னும் நண்பர் பத்மநாபனை கீழே தள்ளி விட்டுவிட்டேன். சந்தோஷம்தானே?

  அப்ப நெக்ஸ்ட் ’கால்கிலோ’தானே? வெயிட்டிங் :))

 • புதையல் தீவு சம்பந்தமாக ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். எனக்குத் தெரிந்த வரை பதில் சொல்லவே இல்லை. லாஜிக் உதைத்த ஒரு விஷயம்.

  புதுக்கதைக்கு வோட்டுப் போடணுமா? போடலாமே. வோட்டுக்கு எவ்வளவு தருவீங்க? நாங்க எல்லாம் தமிளன் தெரியுமில்ல….

  • என்ன கேள்வி கேட்டீர் இலவசம்? நினைவில்லை.

 • புதையல் தீவு படக்கதையாக வருவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது:-) எனவே தயாராக இருக்கவும்!

 • புத்தகம் கூட இவ்வளவு சுவராசியமாக இருந்திராது….வேகமாக பாஸ்ட் பார்வேர்டில் படம் பார்த்தமாதிரியான விமர்சனம்….நன்றி!

  ஆனால், என்னை பயமுறுத்தியது தலைப்பு:-)

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி