யாரை எப்போது என்ன நோய் தாக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒரு வருடம் முன்னர் வரை கூட பத்ரி நன்றாகத்தான் இருந்தார். திடீரென்று அவருக்கு மொழிபெயர்ப்பு ஜுரம் வந்ததற்குக் காரணம், எங்கள் நிறுவனத்திலிருந்து வெளிவந்த சில மொழிபெயர்ப்புகளின் அதி உன்னதத் தரம்தான் என்று நினைக்கிறேன்.
பொதுவாக எனக்கு மொழிபெயர்ப்புகள் என்றால் ஒவ்வாமை உண்டு. வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்த மாட்டேன். எனவே செப்பனிடும் பணியில் எத்தனை கவனம் செலுத்துவேன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கிழக்குக்கு வரும் மொழிபெயர்ப்பு நூல்களை யாராவது நல்ல [என்றால் ஏமாந்த என்று பாடம்] சிஷ்யர்களாகப் பார்த்து, தள்ளிவிட்டுவிடுவதே என் வழக்கம். அந்தப் பிரதிக்கு நான் செய்யும் சிறந்த உபகாரம், அதனைத் தொடாமல் இருப்பதுதான் என்பது என் தீர்மானம். கோடி ரூபாய் கொடுத்தால்கூட ஒரு மொழிபெயர்ப்புப் பணியை என்னால் மேற்கொள்ள இயலாது. அதைப்போல் ஒரு சள்ளை பிடித்த சோலி வேறில்லை என்பது என் கருத்து.
எனவே, பேய்க்கு வாழ்க்கைப்பட்ட பாவத்துக்காக பத்ரி மொழிபெயர்ப்புகளைத் தானே தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ள வேண்டியதானது. நாகூர் ரூமி மொழி பெயர்த்த பர்வேஸ் முஷரஃபின் வாழ்க்கை வரலாறுதான் ஆரம்பம் என்று நினைக்கிறேன். அடிப்படை எடிட்டிங் மட்டும் முடித்து நான் தூக்கிப் போட்டுவிட, அதை எடுத்து வைத்துக்கொண்டு வரி வரியாக மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்த்து அச்சுக்கு அனுப்பியபோதே அவருக்கு அந்த ஜுரம் வந்திருக்க வேண்டும். நான் தான் சரியாக கவனிக்கவில்லை.
அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்களை அவரே எடிட் செய்ய ஆரம்பித்தார். எனக்குத் தமிழில் உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் அத்தனை பேரின் தோஷ ஜாதகமும் நன்கு பரிச்சயம் என்பதால், எப்படியும் இவருக்குச் சில மாதங்களுக்குள் இந்த வியாதி விட்டுவிடும் என்று நம்பினேன். இதனிடையில் ‘நாம் ஏன் இத்தனை மொழிபெயர்ப்புகள் கொண்டுவருகிறோம்?’ என்று அலுவலகத்தில் பலபேர் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட, அவர்களுக்கெல்லாம் பத்ரியின் மொழிபெயர்ப்புப் புரட்சி வெகு சீக்கிரம் ஜீவசமாதி அடைந்துவிடும் என்று ஆறுதலும் நம்பிக்கையும் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மொழிபெயர்ப்பாளர்களின் மேதாவிலாசத்தால் பத்ரி நிலைகுலைந்து போனது நான் எதிர்பார்த்ததே. ஆனால் அதற்குத் தீர்வாக, தானே மொழிபெயர்ப்பது என்று இறங்கிவிடுவார் என்று எண்ணவில்லை. முற்றிலும் புதிய அதிர்ச்சி இது எனக்கு.
சில நாள்கள் முன்னதாக யாரோ முழி பெயர்த்து, பிறகு அவர் மொழி பெயர்த்த ஜெஃப்ரி ஆர்ச்சரின் நாவல் ஒன்று அச்சாகி வந்தது. ஆர்ச்சர் வரிசையில் முன்னதாக வந்திருந்த நூலைக் காட்டிலும் இதன் மொழிபெயர்ப்புத் தரம் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. இன்னொருத்தர் பங்கும் அதில் இருந்தபடியால் நான் ஒன்றும் பேசாதிருந்துவிட்டேன்.
இன்றைக்கு நூறு சதவீதம் பத்ரியே மொழிபெயர்த்த ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல் ஒன்று [ஒரு மோதிரம், இரு கொலைகள்] அச்சாகி என் மேசைக்கு வந்தபோது குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். உண்மையில் கவலை கலந்த சந்தோஷமே ஏற்பட்டது. பல்லை உடைக்காத, படு சுத்தமான, ஒழுங்கான மொழிபெயர்ப்பு.
என் சந்தோஷம், பத்ரியின் மொழிபெயர்ப்புத் திறன் குறித்து. அனாயாசமாகச் செய்திருக்கிறார். கவலை, ஆர்தர் கோனன் டாயில் டாக்டர் தொழிலை விட்டுவிட்டு கதையெழுதப் போய்விட்டது மாதிரி, இவர் இருக்கிற வேலையையெல்லாம் விட்டுவிட்டு இன்னொரு ‘தமிழில் சிவன்’ [கோட்டயம் புஷ்பநாத்!] ஆகிவிடாதிருக்கவேண்டுமே என்பது பற்றி.
மொழிபெயர்ப்பே தவறு என்று நான் சொல்லவில்லை. அது ஒரு நல்ல காரியம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மிகக் கடுமையான உழைப்பையும், ஒரு நேரடிப் புத்தகம் கோரும் கவனத்தைவிட நூறு மடங்கு அதிக கவனத்தையும் கோரும் பணி அது. எனக்குத் தெரிந்து தமிழில் ரா.கி. ரங்கராஜன் அளவுக்கு நேர்த்தியாகக் கதைகளையும், நாகூர் ரூமி அளவுக்கு நேர்த்தியாகக் கதையல்லாத நூல்களையும் மொழிபெயர்த்தவர்கள் யாருமில்லை.
இந்தக் கருத்து பலருக்குக் கோபம் தரலாம். என் லாஜிக் எளிமையானது. ஒரு புத்தகம் மொழிபெயர்ப்பா, நேரடியா என்பது வாசகனுக்கு முக்கியமே இல்லை. படிக்கத் தொடங்கியதும் நூலுடன் அவன் ஒன்றிவிட வேண்டும். நகர விடாமல் மொழி படுத்தினால், பிரதி செத்தது என்று பொருள். பிரதியைவிட, வாசிப்பவன் முக்கியம் என்பது என் வழி. வாசிக்க ஆளில்லாது போனால் நூல்களுக்கு அர்த்தமில்லை.
அந்த வகையில் பத்ரியின் இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் கதை படு சுவாரசியமாக, நேரடி நாவல் மாதிரியே ஓடுவதில் எனக்குப் பரம சந்தோஷம்.
ஷெர்லாக் ஹோம்ஸின் பாதிப்பில் தமிழில் நிறையத் துப்பறிவாளர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டுக்குக் கொஞ்சம் முந்தைய வருடங்களில் பிறந்தவரான இந்த பூர்வ துப்பறிவாளர், தன்னைப் படைத்த ஆர்தர் கோனன் டாயிலைவிடப் பிரபலமானதற்கு நியாயமான காரணங்கள் பல உண்டு.
நூறு வருடங்களுக்குப் பிறகு இப்போது வேறு மொழியில் படிக்கும்போதும் இந்தத் துப்பறிவாளரின் சாமர்த்தியங்களை ரசிக்க முடிவது அதில் முதலாவது. கதை சொல்லியின் அறிவியல் மனம், நாத்திக மனப்பான்மை, மருத்துவ அறிவு [ஆர்தர் கோனன் டாயில் ஒரு கண் மருத்துவர்.] அனைத்தும் சேர்ந்து கதாநாயகனுக்கு, அந்தக் காலகட்டத்துக்கு முற்றிலும் புதிய தோற்றம் கொடுத்தது இரண்டாவது. [எண்பதுகளின் ஆடை அலங்கார, சிகை அலங்கார நடைமுறையை இன்றைக்கு நினைவுகூர்ந்து, படம் பிடித்துக் காட்டிய சுப்ரமணியபுரத்தை ரசிக்க முடிந்ததோடு இப்போது இதனைப் படிக்கும் அனுபவத்தை ஒப்பிடத் தோன்றுகிறது.] மூன்றாவதும் முக்கியமானதுமான காரணம், ஷெர்லாக் ஹோம்ஸ் ஒருபோதும் ஜேம்ஸ்பாண்ட் தனமான சாகசங்கள் ஏதும் புரியாமல், முழுக்க முழுக்கத் தனது புத்திக்கூர்மையினாலேயே சிக்கல்களை விடுவிக்கும் லாகவம்.
ஒரு அடிதடி சண்டைக்காட்சி இல்லாமல், கிளுகிளு காதல் காட்சி இல்லாமல் முழுநீளத் துப்பறியும் மசாலா சாத்தியமா? சாத்தியம்தான். நூறு வருடங்களுக்கு முன்னதாகவே சாத்தியமாகியிருக்கிறது!
இந்த ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளை முதலில் ரா.கி. ரங்கராஜனைக் கொண்டுதான் மொழிபெயர்க்க எண்ணியிருந்தேன். பல காரணங்களால் அது தள்ளித் தள்ளிப் போய், முடியாமலேயே போய்விட்டது. வேறு யாராவது செய்து அவசியம் சொதப்பி அருளுவார்கள் என்று தீர்மானமாக நினைத்தேன். அதிர்ஷ்டவசமாக ஆர்தர் கோனன் டாயிலின் ஆன்மா அமைதியுற பத்ரி தன்னாலானதை ஒழுங்காகவே செய்திருக்கிறார்.
தேடிப்பிடித்துக் குறை சொல்ல ஒரே ஒரு விஷயம் உண்டு. கதையின் முதல் மூன்று அத்தியாயங்களைக் கடப்பது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கதை சொல்லும் உத்தியுடன் அத்தனை எளிதில் ஒன்ற முடிவதில்லை. ஷெர்லாக் ஹோம்ஸ், அவரது நண்பர் ஜான் வாட்சன் என்னும் இரண்டு பிரதானக் கதாபாத்திரங்களை எஸ்டாப்ளிஷ் செய்யவே எக்கச்சக்கமான பக்கங்களைச் சாப்பிடுகிறார் டாயில். ஷெர்லாக் ஹோம்ஸ் எழுந்து நின்று பைப்பைப் பற்றவைப்பதற்குக் கூட அவருக்கு ஒரு தனி ஷாட் தேவையாக இருக்கிறது. தவிரவும் அக-புற சித்திரிப்புகளை ஒரு நேர்க்கோட்டில் கொண்டுவர மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
உதா: பனி படர்ந்த, மேகமூட்டமான காலை வேளை. தெரு மண்ணின் வண்ணத்தைப் பிரதிபலிக்குமாறு, வீடுகளின் மேல் பகுதியில் பழுப்பு வண்ணப் போர்வை போர்த்தினாற்போல இருந்தது. என்னுடைய தோழர் மிகவும் நல்ல மனநிலையில் இருந்தார். கிரெமோனா வயலின்கள் பற்றியும், ஸ்டிராடிவேரியஸ் வயலினுக்கும் அமாடி வயலினுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார். நானோ அமைதியாக இருந்தேன்.
ஆனால் இதெல்லாம் முதல் மூன்று அத்தியாயங்களில்தான். கதை சூடு பிடித்தபிறகு எங்குமே நின்று இளைப்பாறத் தோன்றுவதில்லை.
திருப்தியான வாசிப்பு அனுபவம் கொடுத்த நூல் இது.
[NHM இணையத் தளத்தில் இன்னும் இந்தப் புத்தகத்துக்கான பக்கம் உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நாளை அலுவலகம் சென்றபின் அதற்கு ஆவன செய்து பிறகு இங்கே லிங்க் அளிக்கிறேன்.]Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
Sabbash.
Thanks.
I’ve read this book in English.It is right it takes more pages for explaining the characters. Your view on Ra.ki. Ra is right..excellent translator.
Can you pl. change “Laagavam” to “Laavagam”?
சுப்பராமன்: லாகவம் என்பதே சரி. லகு என்கிற பதத்திலிருந்து அது பிறக்கிறது. லாவகம் என்பது பிழையான பிரயோகம்.
ஏற்கனவே பத்ரியிடம் சொன்ன விஷயம் தான் என்றாலும் உங்கள் காதிலும் போட்டு வைக்கிறேன்.
ஷெர்லக் ஹோம்ஸ் கதைகளை ஆங்கிலத் தரத்தில் அச்சிட்டு வெளியிடுகிறீர்கள் என்றாலும் ரேட்டு கொஞ்சம் அதிகம்
200க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட பிரபாகரன் நூலையே 100 ரூபாய்க்கு வாங்கிவிடுகிறோம்.
கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்க சாரே!
வாசித்து விட்டு கூறுகிறேன்
அப்பாடா,
ஒரு வழியாக புத்தகம் வந்தே விட்டது. இந்த புத்தகம் அச்சேறும் நிலையில் இதனைப் பற்றி என்னுடைய காமிக்ஸ் பதிவு ஒன்றில் சுட்டி ஒன்று கொடுத்தேன். (எத்தனை பேர் கிழக்குக்கு போன் செய்தார்களோ, எனக்கு ஏழெட்டு கால்’கள் வந்து விட்டன – புத்தகம் எங்கே என்று?). = http://tamilcomicsulagam.blogspot.com/2009/05/thigil-library-another-great-initiative.html
பத்ரியின் மொழியாக்கத்தில் எனக்கு அவரைப் போலவே ஒரு குண்டு தைரியம் உண்டு.
நீங்கள் வேறு சொல்லி விட்டீர்கள். வேறென்ன வேண்டும்?
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
Nandri PaRa.
விரிவான கருத்துக்கும் அறிமுகத்திற்கும் நன்றி ராகவன்.
வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்து விட்டீர்கள்.
நன்றி.
பத்ரிக்கும் வாழ்த்துகள்.
Waiting for the link to purchase the book
முதல் மூன்று அத்தியாயங்களை கடந்து செல்லும் கடினம் 30 வருடங்களுக்கு முன்பு வந்த அனேக துப்பறியும் கதைகளிலும் உண்டு.
அகாதா க்றிஸ்டி, பெர்ரி மேஸன், ஆர்தர், நம்மூர் சங்கர்லால் தமிழ்வாணன் வரை எல்லோரும் கிட்டத்தட்ட இப்படித்தான்.
ஸிட்னி ஷெல்டன் முதல் ராஜேஷ்குமார் வரை இந்த ஸ்டார்ட்டிங் ட்ரபிள் இல்லை. காரணம் இவர்களின் காரெக்டர் பில்டப் என்பது இல்லாத காரணம் தான் என்று நினைக்கிறேன்.
‘பத்ரியின் மொழியாக்கத்தில் எனக்கு அவரைப் போலவே ஒரு குண்டு தைரியம் உண்டு
is the pun intended or unintended