இடி அமினைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் பலபேருக்கு இருப்பதை அவ்வப்போது கவனித்திருக்கிறேன். பெரிய கொடுங்கோலன், கொலைகாரன், காமுகன், சுகபோகத்தின் உச்சத்தில் வாழ்ந்தவன், செய்யாத அராஜகங்கள் இல்லை, திடீரென்று காணாமல் போய்விட்டானாமே, யாரவன்? பல சந்தர்ப்பங்களில் பலபேர் கேட்டிருக்கிறார்கள். உகாண்டா ராணுவப் புரட்சியோ, புரட்சிக்குப் பிந்தைய ஆட்சிக்கால விவரங்களோ, இடி அமின் எவ்வாறு பதவி விலக நேர்ந்தது என்பது பற்றியோ, தப்பியோடிய பிறகு அவர் என்னவானார் என்பதோ யாருக்கும் முக்கியமாயில்லை. அந்தப் பதவிக்கால களேபரங்கள்!
தமிழில் வெகுநாள்கள் முன்னர் இடி அமின் பற்றிய ஒரு புத்தகம் வெளிவந்தது. பிரபு சங்கர் அதை எழுதியிருந்தார். எனக்கு அந்தப் புத்தகத்தையும் தெரியும், பிரபு சங்கரையும் தெரியும். உகாண்டாவிலிருந்து தப்பி வந்த ஒரு சிலர் சொன்ன கதைகளின் தொகுப்பாக அந்நூல் எழுதப்பட்டிருந்தது. உகாண்டா அரசியல் சூழ்நிலையோ, அந்த தேசத்து இனக்குழுச் சிக்கல்களோ, கிறிஸ்தவ மெஜாரிடிகளால், இஸ்லாமியர்களுக்கு அங்கு ஏற்பட்ட நெருக்கடிகளின் விளைவாக உருவான குழப்பங்களோ, இடி அமின் என்கிற சர்வாதிகாரி உருவானதற்குப் பின்புலத்தில் இருந்த அவல அரசியலோ அந்நூலில் இல்லை.
ஒரு தீவிர தெலுங்கு மசாலா திரைப்படம் மாதிரி அடுத்தடுத்த சண்டைக்காட்சிகளும், கற்பழிப்புக் காட்சிகளும் ஜாலி கனவுப் பாடல்களுமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த அந்நூலில் உகாண்டாவில் அமின் காலத்தில் நடைபெற்ற ஒரு சில அட்டூழியங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் முழுமையாக இருந்தன. ஆனால் உகாண்டாவைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளவேண்டுமென்கிற ஆர்வத்தைத் தூண்டிய முதல் மற்றும் இன்றுவரையிலான ஒரே தமிழ் நூல் அதுதான்.
எனவே அமின் பற்றி கிழக்கு ஒரு நூலை வெளியிட முடிவு செய்தபோது, அது வெறும் பரபரப்புச் சம்பவங்களின் தொகுப்பாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது என்பதை முதல் நிபந்தனையாக வைத்துக்கொண்டேன்.
கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் பேசிப்பேசி இப்போது ச.ந. கண்ணன் எழுதி, புத்தகக் கண்காட்சிக்கு வெளிவர இடி அமின் தயாராகி இருக்கிறது.
கண்ணனின் புத்தகத்தில், இடி அமின் என்கிற ஆளுமை எவ்விதமாகக் கட்டமைக்கப்பட்டது என்பது மிகைப்படுத்தப்படாமல் வெளிப்பட்டிருக்கிறது. உகாண்டா ராணுவத்தில் இடி அமின் சேர்ந்ததற்கோ, பரபரவென்று உயர்ந்து தளபதி ஆனதற்கோ தர்க்க ரீதியான சரியான காரணங்களைக் கண்டுபிடிப்பது சிரமம். பலசாலி, முரட்டுக் குணம் கொண்டவர், எதையும் அடித்து காலி பண்ண சளைக்காதவர் என்பது மட்டுமே தகுதியாக இருந்திருக்க முடியுமென்று தோன்றவில்லை. இனக்குழு அரசியல் அங்குதான் வருகிறது. ராணுவத் தளபதி என்பவர் தனது பிரத்தியேக தாதாக்குழுத் தலைவர் போல் இருக்கவேண்டுமென்று ஓர் அதிபர் கருதுவாரேயானால், உடனிருப்போர் அதனை ஆமோதிப்பார்களேயானால், பிரச்னை ராணுவத்திடமோ, தளபதியிடமோ இல்லை.
உகாண்டா அரசியல்வாதிகள் பாடுபட்டு அமினை ஒரு சர்வாதிகாரியாக உருவாக்கியதாகத்தான் சொல்லவேண்டும். அதிகாரம் என்னும் போதையில் அவர்கள் திளைப்பதை அருகே இருந்து பார்த்தபடிக்குச் சேவகம் செய்துகொண்டிருந்த அமினுக்குத் தானும் அதை ருசிக்கவேண்டும் என்று தோன்றியது இதனாலேயே இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. காலக்கட்டம் தோறும் ஊழல் பரிமாண வளர்ச்சி கொள்வது போல அமின் பதவிக்கு வந்தபிறகு முந்தைய சர்வாதிகாரங்களின் நீட்டல் விகாரமாகிப் போனது அது.
அமின் காலத்தில் உகாண்டாவில் பல இந்தியர்கள் தொழில் தொடங்கிச் செழித்துக்கொண்டிருந்தார்கள். [பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்தாம் உகாண்டாவின் தொழில் துறையை ஆண்டுகொண்டிருந்தவர்கள்.] இயற்கை வளங்கள் மிகுந்த உகாண்டாவில், மக்களின் கல்விச் சதவீதம் அதிகமில்லை என்பதால் அவர்கள் வேலை பார்க்கக் கூடியவர்களாக மட்டுமே இருந்தார்கள். அமினின் அடிமனத்தில் இந்த விஷயம் மிகவும் உறுத்தியது. அமினும் படித்தவரில்லை. அந்தத் தாழ்வு மனப்பான்மையே அவரை ஆசியர்களுக்கு – குறிப்பாக, இந்தியர்களுக்கு எதிரான களேபரமான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டியது.
இந்த அராஜகம் அதன் அதிகபட்ச சாத்தியங்களைத் தொட்டபோதும் உகாண்டா மக்கள் அவரைக் கேள்வி கேட்காமல், நமக்காகத்தானே செய்கிறார் என்று உற்சாகப்படுத்தியதுதான் அவர்களது விதியாக அமைந்தது. அமின், தம் சொந்த மக்களே கற்பனை செய்ய முடியாத கொடூர எல்லைகளுக்குச் செல்லத் தொடங்கினார். எண்ணற்ற கொலைகள், கணக்கற்ற மூடிமறைப்புகள். முகமூடிக் கொள்ளைக்காரர்கள் செய்யவேண்டியதையெல்லாம் ஓர் அதிபரே வெளிப்படையாகச் செய்த அசிங்கங்கள் உகாண்டாவில் நடைபெற்றன.
இவற்றோடு ஒப்பிட்டால் இடி அமினின் தனிப்பட்ட காதல் / களியாட்ட நடவடிக்கைகள் அத்தனையொன்றும் பெரிய விஷயங்களல்ல. பொதுவாக அமின் பற்றிப் பேசத் தொடங்கினாலே அவரையொரு காமுகனாக முன்னிறுத்தியே பேசத் தொடங்குவது மக்களின் வழக்கம். கண்ணன் தனது நூலில் அமினின் தனி வாழ்க்கைக்கு ஒரே ஒரு அத்தியாயம்தான் கொடுத்திருக்கிறான். இதன் காரணமும் அர்த்தமும் நூலை முழுதாக வாசிக்கும்போது புரியும்.
அமின் தப்பிப்பிழைத்து சவூதி அரேபியாவுக்குச் சென்று சாகும்வரை சௌக்கியமாகத்தான் இருந்திருக்கிறார். ஒரு வில்லன் நியாயப்படி பெறவேண்டிய எந்தத் தண்டனையும் இறுதிவரை அவருக்குக் கிட்டவில்லை என்பது ஒரு வியப்பு. இது ஓர் இயற்கை மீறலும் கூட. ஆளும்வரை அவரை இனம் காப்பாற்றியது. ஆட்சி போனதும் மதம் காப்பாற்றியது.
ஆனால் அமின்தான் காப்பாற்றப்பட்டாரே தவிர உகாண்டா மக்கள் அல்லர். இன்றுவரை உகாண்டாவில் தொழில் தொடங்க வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாலும் யாரும் போவதில்லை. இதனாலேயே எல்லா வளங்களும் இருந்தாலும் அத்தேசம் உருப்படாமல் போய்க்கொண்டிருக்கிறது.
கண்ணனின் இந்தப் புத்தகம் உகாண்டா அரசியலையும் இனக்குழுக்கள் அதன்மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் சர்வாதிகாரியாக அமின் உருவானதன் பின்னணியையும் அவரது ஆட்சிக்கால அவலங்களையும் வீழ்ச்சியையும் மிகையின்றி விவரிக்கிறது. [புத்தகக் கண்காட்சியில் வெளியாகும்.]
பிரபு சங்கரின் அந்த புத்தகத்தை நானும் படித்திருக்கின்றேன். உண்மைதான் இடி அமீன் குறித்தானன வேறு புத்தகங்கள் எதுவும் கிடைக்க வில்லை. குறிப்பிட்டது போல புத்தகத்தின் பெரும்பான்மையான பக்கங்களில் அமீனின் காம வெறியே முதன்மைப் படுத்தப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பரின் மகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பாதி இடங்களில் அமீனும் பெண்களும் மட்டுமே நிரம்பி இருந்தார்கள்.
கண்ணன் அவர்களின் இந்தபுத்தகம் ஒரு வேளை அந்த குறையைத் தீர்க்கலாம். டெம்ப்ளேட் எழுத்துக்கள் மட்டுமே கொஞ்சம் பிரச்சினை. படித்த பின்பே தெரிய வரும். 🙂
nice introduction to the book….
புத்தகங்களுக்கு மார்க்கெட்டிங் உத்தியில் ஆவலைத் தூண்டும் முறையில் அறிமுக உரை எழுதுவது எப்படி என நீங்கள் ஒரு புத்தகம் எழுதலாம். 🙂
சிறப்பான அறிமுகம். புத்தகத்தினை வாங்கிப்படிக்கும் ஆவலை தூண்டுகிறது. இம்மாதிரி மற்ற முக்கியமான புத்தகங்கள் பற்றியும் எழுதுவீர்களா?
தகவலுக்கு நன்றி பாரா. புத்தக கண்காட்சியில் உங்களை சந்திக்க விருப்பம். எப்போது வந்தால் சந்திக்கலாம்? நான் பெங்களூரில் இருக்கிறேன். வீக் எண்டாக இருந்தால் வசதி 😉
Hearty wishes to S.N.K for this book 🙂
அட்டகாசமான ‘பிட்டு’ புக்காக வரவேண்டிய மேட்டர் 🙂
கண்ணனின் கண்ணியத்தில் ராமகிருஷ்ணவிஜயம் ரேஞ்சுக்கு வந்திருக்குமோ என்று அஞ்சுகிறேன்!