இருவர் மற்றும் ஒருவர்

என்னிரு ஐபேட்களையும் என் மனைவியும் மகளும் ஆளுக்கொன்றாக எடுத்துக்கொண்டுவிட்டபடியால் எனக்கென ஒரு படிப்பான் [eReader] வாங்க நினைத்தேன். கிண்டில் வாங்கலாமா என்று நேற்று நண்பர் [FreeTamileBooks.com] ஶ்ரீநிவாசனிடம் கேட்டதன் காரணம் அதன் ஆறு இஞ்ச் பிடிஎஃப், மோபி வடிவம் போன்ற inbuilt சிக்கல்களால்தான்.

ஶ்ரீநிவாசனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி, பதில் வந்தபோதுதான் அவர் இங்கிலாந்தில் இருப்பது தெரிந்தது. அடுத்த பிப்ரவரியில்தான் சென்னை வருவதாக இருக்கிறார். அதனாலென்ன? நீங்கள் ஒரு கிண்டிலைக் கண்ணால் பார்த்து, கையால் தொட்டு, கொஞ்சம் போல் குடைந்து பார்த்துவிட்டு அதன்பிறகு வாங்குவதே சரி என்று சொன்னார்.

சொன்னதோடு விடவில்லை. நேற்றே இங்குள்ள அவரது நண்பர் அன்வரை அழைத்து என்னைத் தொடர்புகொள்ளச் சொல்லியிருக்கிறார். அன்வரும் Freetamilebooks.com உறுப்பினர்களுள் ஒருவர்.

இன்று மாலை வழி விசாரித்துக்கொண்டு அன்வர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரது கையடக்க கிண்டிலுடன். எதற்கு? வெறுமனே நான் பார்ப்பதற்கு. வாங்கலாமா வேண்டாமா என முடிவு செய்வதற்கு.

அன்வர் ராயப்பேட்டையில் இருப்பவர். கிண்டிக்கு வந்து எனக்கு போன் செய்தார். நான் கோடம்பாக்கத்தில் இருந்தாலும் குரோம்பேட்டையில் இருந்தாலும் இரு இடங்களையும் அடைய சரியான மையப்புள்ளி என நினைத்து அங்கு வந்து அழைத்திருக்கிறார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சுட்டெரிக்கும் வெயில் நாளில் எத்தனை தூரப் பயணம்! வாழ்வில் யாருக்காவது எப்போதாவது நான் இப்படி தன்னியல்பாகச் சென்று உதவி செய்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்த்தேன். நினைவில்லை. எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

இத்தனைக்கும் அன்வரை எனக்குத் தெரியாது. பார்த்த ஞாபகம் கூட இல்லை. அவர் ஓரிருமுறை என்னைப் பார்த்திருப்பதாகவும் ஒருமுறை கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் என்னோடு சண்டை போட்டிருப்பதாகவும் சொன்னார். நினைவில்லை. அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேகூட இல்லை. வலிய வந்து உதவ நினைக்கும் இத்தகு மனம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? சொல்லப் போனால் ஶ்ரீநிவாசனையேகூட எனக்குத் தெரியாது. நேரில் சந்தித்ததோ, போனில் பேசியதோ கிடையாது. அவர் GNU ஆள் என்று தெரியும். FTEbooks குழுவில் ஒருவர் என்று தெரியும். நேற்றுத் தான் பேசினேன்.

வாழ்வில் இரண்டாவது முறையாக இப்படியொரு அனுபவம் இன்று. முதலனுபவத்தைத் தந்தவர் ஶ்ரீகாந்த் மீனாட்சி. இதே மாதிரிதான். விண்டோஸைத் தலைமுழுகிவிட்டு Macக்கு மாறலாம் என்று எண்ணத் தொடங்கிய ஆரம்ப நாள்களில் என்னைத் தேடி வந்து தன் மேக்கைக் கொடுத்து குடைந்து பார்க்கச் சொன்னார்.

இன்று நான் மேக்தான் உபயோகிக்கிறேன். ஒவ்வொரு முறை திறக்கும்போதும், இதன் பூரண சுகத்தை அனுபவிக்கும்போதும் ஶ்ரீகாந்தையும் கோகுலையும் எண்ணாதிருப்பதில்லை.

ஆனால் sorry அன்வர்! என்றுமே நான் கிண்டில் உபயோகிக்கமாட்டேன் என்று நினைக்கிறேன். என் சௌகரியத்துக்கு ஐபேட்தான் சரி என்று தீர்மானமாகத் தோன்றுகிறது.

Decided to buy one more iPad. ஆனால் அந்தப் புதிய ஐபேடுக்கு என் பெயரைக் கொடுக்கமாட்டேன். கண்டிப்பாக உங்கள் பெயர்தான்.

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி