சிவசங்கரிக்கு எழுதத் தொடங்கிய இரண்டாம் மாதம், என் வீட்டில் வைத்து முதலாம் சின்னதுரைக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்தான் அப்போது அதற்கு வசனம் எழுதிக்கொண்டிருந்தார். படு பயங்கர உணர்ச்சிமயமான கட்டம். சித்தர், பாலாம்பிகாவுக்கு மந்திரோபதேசம் செய்துகொண்டிருக்கும்போது என்ன பேசுவார் என்று கண்ணை மூடிக்கொண்டு மனத்தில் தோன்றிய வரிகளை உணர்ச்சிமயமாகச் சொல்லிக்கொண்டே வரும்போது இந்த வரி தடுக்கியது.
வாழ்வு அநித்யம்; மரணமே சத்தியம்.
‘பாலாம்பிகா சிறுமியல்லவா? அவளிடம் சித்தர் ஏன் மரணத்தைப் பற்றிப் பேசவேண்டும்?’ என்று சின்னதுரை கேட்டார்.
அது நான் பின்னால் வைத்திருந்த சித்தருக்கான கதைக்கு லீட். அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக்கி இறுதியில் அவரும் இறந்துதான் போவார் என்பதை முதலிலேயே பாலாம்பிகாவுக்குக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரி என்று பதில் சொன்னேன்.
சித்தர் இறந்துவிடுவாரா என்று சின்னதுரை அதிர்ச்சியுடன் கேட்டார். சொல்லிக்கொண்டிருந்த அம்மாதத்துக்கான கதையை நிறுத்திவிட்டு அடுத்த நூறு எபிசோடுக்கு நான் யோசித்து வைத்திருந்த முழு டிராக்கையும் ஒரே மூச்சில் அவரிடம் சொல்லி முடித்தேன்.
சின்னதுரை மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எழுந்து நின்றுவிட்டார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. ரெகுலர் ஆன்மிக மசாலாதான். ரொம்பப் பிரமாதமாகவெல்லாம் நான் எதையும் சொல்லிவிடவில்லை என்பது எனக்கே தெரியும். ஆனாலும் நண்பர் ஏன் கண்கலங்கிவிட்டார்?
‘என்னால் நம்பமுடியவில்லை சார். எனக்குத் தெரிந்து யாருமே இத்தனை எபிசோட்களுக்கு முன்னால் யோசித்துவைப்பதில்லை. இது ஒரு அசுர சாதனை’ என்று சொன்னார்.
நான் புன்னகை செய்தேன். எப்போதும் எல்லோரிடமும் எனது பணியைப் பற்றிச் சொல்லும் அதே உதாரணத்தை அவரிடமும் சொன்னேன். சராசரி மனிதன் மணிக்கு பத்து கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். அவனையே நாய் துரத்தினால் நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடுவான். என்னை எப்போதும் நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது.
அன்றைக்குக் கதை பேசி முடித்துவிட்டுக் கிளம்பும்போது சின்னதுரை ஏதோ சொல்லத் தயங்குவதுபோலத் தெரிந்தது. இழுத்து நிறுத்தி விசாரித்தேன். திரும்பவும் முதல் வரியில்தான் வந்து நின்றார். பாலாம்பிகா சிறுமி. மரணத்தைப் பற்றி அவளிடம் பேசவேண்டியது அவசியம்தானா?
நான் சில வினாடிகள் யோசித்துவிட்டுச் சொன்னேன். ‘சித்தரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் எய்திய ஞானத்துக்கும், மரணத்தை சத்தியமென்று நம்புகிறார். அதையே அவர் போதிக்கவும் செய்கிறார். பாலாம்பிகாவின் வயதும் துடிப்பும், வாழும்போது செய்யும் நற்செயல் மரணத்தைக் காட்டிலும் பெரும் சத்தியமாக உருப்பெறும் என்பதை அவருக்கு சாகும் தருவாயில் தரிசனமாகக் காட்டிக்கொடுக்கும்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.
உண்மையில் சிவசங்கரியை அப்படித்தான் எழுதி முடித்தேன். முடிக்கும்போது சின்னதுரை அதில் இல்லை. வசீகரன் தான் இறுதி எபிசோட்களுக்கு வசனம் எழுதினார். ஆனாலும் அந்த உச்சக்கட்ட காட்சியைச் சொல்லும்போது என்னால் சின்னதுரையை நினைக்காதிருக்க முடியவில்லை.
இன்று சின்னதுரை இறந்துவிட்டார் என்று ஃபேஸ்புக்கில் ஒருவரிக் குறிப்பொன்றைக் கண்டேன். தூக்கிவாரிப் போட்டுவிட்டது. கனவுகளும் லட்சியங்களும் உணவின்முன் உதிர்ந்து ஓய்ந்துவிட்டன என்பதையே ஒவ்வொரு சந்திப்பின்போதும் அவரது கண்கள் எனக்குச் சொல்லும். இருப்பினும் ஏதாவது ஒரு அற்புதம் நிகழும் சாத்தியத்தை வாழ்க்கை எல்லாக் கணங்களிலும் ஒளித்துவைத்தே இருக்கிறது என்றுதான் ஒவ்வொரு முறையும் நான் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.
அவர் அதற்கு பதில் சொன்ன நினைவில்லை. சும்மா சிரித்துவிட்டுப் போய்விடுவார். இப்போது அந்தச் சிரிப்பு மட்டும்தான் என் கண்ணில் நிற்கிறது.
நண்பருக்கு அஞ்சலி.
அஞ்சலி: முதலாம் சின்னதுரை http://t.co/CK2zIycjDK
@GVhere உங்க ட்விட்க்கு பதில் எழுதுன மாதிரியே ஒரு பீலிங் 😉 http://t.co/tWvqt4OSLO
RT @writerpara: அஞ்சலி: முதலாம் சின்னதுரை http://t.co/CK2zIycjDK
” என்னை எப்போதும் நாய் துரத்திக்கொண்டே இருக்கிறது.” http://t.co/ooWNc0WVPk
” கனவுகளும் லட்சியங்களும் உணவின்முன் உதிர்ந்து ஓய்ந்துவிட்டன ”
Great Observation.