(கர்ம) வினைத் தொகை

ஒரு வரி. ஒரே ஒருவரிக் கோபம். கோபம் கூட இல்லை அது. விவரிக்க முடியாத ஒரு பெருந்துயரத்தின் மிக மெல்லியக் கசிவு. நேற்று முதல் என்னைச் செயல்படவிடாமல் அடித்துக்கொண்டிருக்கிறது அந்தப் பெரியவரின் சொல்.

அவரை எனக்குக் கடந்த ஓராண்டாகத்தான் தெரியும். அவரைக் குறித்து நான் அறிந்த முதல் தகவல் அவர் ஒரு கடன்காரர் என்பது. இன்றுவரை இதை மட்டுமே விரிவாக, இன்னும் விரிவாக, மேலும் விரிவாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஊரெல்லாம் கடன். வெளியூரிலும் கடன். இத்தனைக்கும் அவருக்கு வாரிசுகள் கிடையாது. மனைவி மட்டும்தான். கண் தெரியாத தங்கையின் குடும்பத்தையும் (தங்கை, தங்கையின் கணவர், ஒரு மகள்) சேர்த்துச் சுமந்துகொண்டிருக்கிறார்.

ஏதோ ஒரு காலத்தில் அவரும் நன்றாக வாழ்ந்திருப்பார். பணி ஓய்வுக்குப் பிறகு இப்படி ஆகிவிட்டது போலிருக்கிறது. பிரதி மாதம் பதினைந்து தேதி தாண்டிவிட்டால் போதும். அவர் வீட்டில் எப்போதும் குரல்கள் ஓங்கியே ஒலிக்கும். ஒவ்வொருவரும் அடுத்தவரைத் திட்டிக்கொள்வார்கள். சண்டை போட்டுக்கொள்வார்கள். சபித்துக்கொள்வார்கள். கோபத்தில் படாரெனக் கதவை அடித்துச் சாத்திக்கொண்டு பெரியவர் வெளியே போய்விடுவார். வீதியில் நின்று ஒரு பீடி குடித்துவிட்டுத் திரும்பினால் அடுத்த அரை மணிக்கு சத்தம் இராது. பிறகு மீண்டும் ஆரம்பிக்கும். இரவு வரை தொடரும்.

அவரது போன் எப்போதும் அடித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு அழைப்பிலும் யாராவது கொடுத்த பணத்தைக் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொருவரிடமும் அவர் ஒரு பொய் சொல்லுவார். நாளை தந்துவிடுவேன். நேற்றே வந்தேன்; நீ இல்லை. அடுத்த வாரம் தலையை அடகு வைத்தாவது கொடுத்துவிடுகிறேன், இப்படியாக.

சொல்லலாம். ஒவ்வொரு கடன்காரரும் இப்படித்தான் என்று. ஆனால் அந்த மனிதருக்கு எழுபது வயது. அவருக்கு ஏதாவது ஒன்றாகிவிட்டால் அவரது மனைவியின் கதியென்னவென்று தெரியாது. அவர்கள் தூக்கிச் சுமக்கும் அந்தத் தங்கை குடும்பம் அடுத்த நாள் அந்த வீட்டில் இருக்குமா தெரியாது. ரொம்பக் கஷ்ட ஜீவனம். பாவம்தான்.

ஆனால் மனிதர் ரொம்ப நல்லவர். இந்த வயதில் சிரமம் பார்க்காமல் நடந்தே எங்கும் போவார். மளிகையோ காய்கறியோ மற்றதோ – எங்கு விலை மலிவோ அங்கு மட்டுமே செல்வார். ஐவர் கொண்ட குடும்பத்துக்குக் கால் கிலோ காய் வாங்கி வருவார். யார் யாரோ பயன்படுத்தாது விட்ட ரேஷன் கார்டுகளைத் தேடிப் போய் வாங்கி சர்க்கரையோ ரவையோ அரிசியோ வாங்கி வருவார். ஓசி பேப்பர் படிப்பார். வீட்டில் ஏசி கிடையாது. வாஷிங் மெஷின் கிடையாது. மிக்சி கிரைண்டர் கிடையாது. எப்போதும் ஏதாவது ஓர் அறையில் மட்டுமே விளக்கு எரியும். இப்படி இருந்தும் எப்படி அறுநூறு எழுநூறு மின்சாரக் கட்டணம் வருகிறது என்று தெரியாமல் கண்டபடி கத்துவார்.

கோபம் ஒன்றுதான் அவரது பொழுதுபோக்கு. நாளெல்லாம் பொழுதைப் போக்குவார்.

நேற்றைக்கு அது நடந்தது. மதியம் ஒரு மணி இருக்கும். அவர் வீட்டுக் கதவு சாத்தியிருந்தது. உள்ளே அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பரிமாறிக்கொண்டிருந்த மனைவியை அவர் திட்டிக்கொண்டிருந்த சத்தம் வெளியே கேட்டது.

‘சனியனே, ஒரு மனுசன் ஆயுசு பூரா மூணு வேளையும் ஊறுகாய தொட்டுக்கிட்டு எப்படி சோறு திம்பான்? வாங்கிட்டு வர்ற காயெலாத்தையும் எங்க கொண்டு கொட்டித் தொலைக்கறே?’

திடுக்கிட்டுவிட்டேன். மூன்று வேளை உணவுக்கும் ஊறுகாய் மட்டுமே சைட் டிஷ். அதுவும் வாழ்நாள் முழுதும். இது எப்படி சாத்தியம்? கோபத்தில் கத்துவதுதான் என்றாலும் அவரது அடி வயிற்று ஓலத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது மனைவி பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அவருக்குப் பழகியிருக்கலாம்.

இரவு என் மனைவியிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லி அவருக்காகக் கொஞ்சம் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த வயதில் இவர் இத்தனை சிரமப்படவேண்டாம்.

‘கால் கிலோ காய் எத்தனை பேருக்குப் போதும்? என்னதான் அறுவது வயசுக்கு மேலன்னாலும் வீட்ல இருக்கறவர் அவரோட மாப்ள. தங்கச்சி புருஷன். அந்தம்மா அவருக்குத்தான் டெய்லி மொதல்ல சாப்பாடு போடுவாங்க. அவர் சாப்ட்டு, அந்த தங்கச்சி சாப்ட்டு, அவங்க பொண்ணு சாப்ட்டு, நாலாவதாத்தான் இவர் சாப்பிட உக்கார்றார். அப்பறம் காய் எங்க மிஞ்சும்?’

இதற்குமேல் எனக்கு பேசத் தோன்றவில்லை. ஐந்தாவதாகச் சாப்பிடும் அவரது மனைவியை எண்ணிக்கொண்டேன். ஆண்டவன் அவருக்கு சாதத்தை மட்டுமேனும் மிச்சம் வைத்திருப்பான். அவசியம்.

Share

1 comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி