அஞ்சலி: ம.வே. சிவகுமார்

 

தாம்பரத்தில் இருந்த சிவகுமார் வீட்டு மாடியில் தனியே ஒரே ஓர் அறை உண்டு. பத்துக்குப் பத்தோ பத்துக்குப் பன்னிரண்டோ. சிறிய அறைதான். அந்த அறையில் இரண்டு புத்தக அலமாரிகளும் ஒற்றைக் கட்டிலொன்றும் கொடகொடவென்று ஓடும் மின்விசிறி ஒன்றும் இருக்கும். அவரது டேபிள் நிறைய எழுதிய தாள்களை மட்டுமே பார்த்த நினைவு. உதிர்ந்த வேப்பம்பழங்கள்போல் குண்டு குண்டான கையெழுத்து அவருக்கு. நாலு வரி எழுதுவார். ஏதாவது தப்பு வந்துவிட்டால் அந்தத் தாளை அப்படியே எடுத்துக் கீழே போட்டுவிட்டு இன்னொரு தாளில் முதலில் இருந்து ஆரம்பிப்பார். அதிலும் பிழையாகிவிட்டால் – ஒரே ஒரு வரியானாலும் தாளைக் கீழே போட்டுவிடுவார். அடுத்ததை எடுப்பார். அறை முழுதும் பேப்பர் பறந்துகொண்டே இருக்கும். எங்கு கைவைத்தாலும் சிகரெட் சாம்பல். ஓயாமல் புகைப்பார். புகைத்தபடியே எழுதுவார். எழுதிக்கொண்டே பேசுவார். அப்போதெல்லாம் அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவேன்.

‘டேய், இந்தத் தொகுப்பு படிச்சிருக்கியா?’

அவர் எடுத்துக் காட்டியது அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும்.

இல்லை என்றேன். ‘படிச்சிரு. எழுதினா இந்தாள மாதிரி எழுதணும். இல்லன்னா செத்துரணும்.’ என்றார்.

சிவகுமாருக்கு அசோகமித்திரன் வழிபடு தெய்வம். ஆனால் கவனமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளாதிருக்க முயற்சி எடுப்பார். ஆதவனைப் பற்றிப் பேசுவார். சுப்ரமணிய ராஜுவைப் பற்றிப் பேசுவார். மாமல்லனைப் பற்றி நிறையவே பேசுவார். ‘நான் ஜெயகாந்தன் ஸ்கூல்ல படிச்சிட்டு அசோகமித்ரன் யூனிவர்சிட்டிக்குப் போனவன். என்கிட்ட பேசுறப்ப ஜாக்கிரதையா பேசணும்’ என்பார்.

இதெல்லாம் நட்பின் தொடக்க காலத்தில். ஒரு கட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் மிக நன்றாக அறிந்துகொண்ட பிறகு என்னிடம் அவருக்கு ரகசியம் என்பது இல்லாது போய்விட்டது. ‘ஒரே ஒரு அவுட்ஸ்டாண்டிங் ஸ்டோரி எழுதிட்டா போதும்டா. அதத்தான் டிரை பண்ணிட்டிருக்கேன். சனியன், நாப்பது கதை எழுதினப்பறமும் அது வரமாட்டேங்குது. மாமல்லன் எழுதிட்டான். ஜெயமோகன் எழுதிட்டான். ராமகிருஷ்ணன் மட்டும் ரிடையர் ஆறவரைக்கும் எழுதமாட்டான். அத நெனச்சா திருப்திப்பட்டுக்க முடியும்? ஆனா இந்தக் கெழவன் எழுதறதெல்லாமே அவுட்ஸ்டாண்டிங்கா இருந்து தொலையுது பாரு. தெய்வானுக்ரஹம்னா இதாண்டா’என்றார் ஒரு நாள்.

அவரது வேடந்தாங்கலின் தரத்தில் நூறில் ஒரு பங்குகூட பாப்கார்ன் கனவுகள் இல்லை என்று சொன்னேன். வெகுநேரம் அமைதியாக யோசித்தபடி அமர்ந்திருந்தார். சட்டென்று கண் கலங்கிவிட்டார். ‘ஆமால்ல? சுய அனுபவம்தான்.. பட் கலையா உருமாறல. கண்டெண்ட் வீக்காயிருச்சி. என்ன ரீசன் தெரியுமா? கொஞ்சம் கமர்ஷியலா இறங்கினா நாலு பேர் எழுதக் கூப்புடுவானோன்னு டிரை பண்ணேன். விடு கழுதை. அடுத்ததுல சரி பண்ணிடுறேன்.’

தேங்காய் என்றொரு சிறுகதை எழுதியிருந்தார். ரொம்பப் பிரமாதமான கதை. படித்த வேகத்தில் பஸ் பிடித்து லஸ் கார்னரில் இறங்கி அவரது வங்கிக்குப் போய் கவுண்டரில் கையை நீட்டினேன். ‘கையக் குடுய்யா. எழுத்துன்னா இது. பின்னிட்டிங்க’ என்றேன். உண்மையில் அது வேலை அதிகம் இருக்கும் காலை நேரம். வரிசையில் பத்திருபது பேர் நின்றிருந்தார்கள். காசு மட்டுமே நீளும் கவுண்ட்டர் துவாரத்தில் எதிர்பாரா விதமாகக் கையை நீட்டிக் கையைப் பிடித்துக் குலுக்கியதில் சிவகுமாருக்கு சூழ்நிலை மறந்துபோனது. பரவசமாகி அப்படியே எழுந்து வெளியே வந்தார். வா என்று என்னை அருகிலுள்ள டீக்கடைக்கு அழைத்துப் போய் நிறுத்தி, ‘ஒரே ஒரு டீ எனக்கு மட்டும். இவன் இப்ப டீ குடிக்கமாட்டான்’ என்று சொல்லி தனக்கு மட்டும் டீ கேட்டு வாங்கிக் குடித்தபடி பேசத் தொடங்கினார். ‘நல்லாருந்திச்சில்ல? ப்ரூவ் பண்ணிட்டன்ல? நான் சாகல இல்ல? சிவு சாவமாட்டாண்டா. அவன் சாதிக்கப் பொறந்தவண்டா.. பாப்கார்ன் கனவுகள் பத்தி நீ சொன்னது இத எழுதி முடிக்கற வரைக்கும் அப்படியே மனசுல இருந்தது. தூங்கவிடலடா. சினிமால கான்சண்டிரேட் பண்ண ஆரம்பிச்சதும் கொஞ்சம் சறுக்கிட்டேன். ஆனா ரெண்டுலயும் நான் வாழ்வேண்டா.. பண்ணிக் காட்றேன் பாரு.’

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நினைவுக்கு வந்தவராக, ‘சனியம்புடிச்சவனே.. மார்னிங் டயத்துல வந்து வேலய கெடுத்துட்ட பாரு. கவுண்டர்ல கலவரமாயிருக்கும். நான் போறேன்’ என்று ஓடியே போனார்.

கமலஹாசன் கூப்பிட்டு தேவர் மகனுக்காக அவர் லாங் லீவில் போகவிருப்பதை என்னிடம்தான் முதலில் சொன்னார். எனக்குச் சற்று பயமாக இருந்தது. வேண்டாம் என்று சொன்னால் திட்டுவார். அது அவர் எதிர்பார்த்துக் காத்திருந்த தருணம். தவிரவும் கமல். ஜாக்கிரதை என்று சொல்லி அனுப்பினேன். படப்பிடிப்பில் ஒரு காட்சியில் தேர் எரியவேண்டிய கட்டம். தீயில் சிக்கிய ஒரு நாகஸ்வரம் அவரைப் பதறவைத்திருக்கிறது. அன்று ஷூட்டிங் முடிந்த இரவில் அன்றைய அனுபவத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதவிருப்பதாகச் சொன்னார். ‘என்னய்யா திரும்பவும் சிறுகதை அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சிட்டிங்க? திருந்திட்டிங்களா?’ என்றேன் சிரித்தபடி. சிவகுமார் அன்று சரியாகப் பேசவில்லை. படப்பிடிப்பெல்லாம் முடிந்து, படம் வெளியாகி உதவி இயக்குநராக மட்டும் அவர் பெயர் டைட்டில் கார்டில் வந்த தினத்துக்கு மறுநாள் பேசினார். நிறைய விஷயங்கள் சொன்னார். எதுவும் புதிதல்ல; எதுவும் அதற்குமுன் நடக்காததும் அல்ல. ‘டேய், நான் சொன்னது எதுவும் பொய்யோ மிகையோ இல்லடா. என் எழுத்து சத்தியம்’ என்றார். அவருக்குப் பொய்யெல்லாம் வராது என்று நானறிவேன். ஆறுதல் சொல்லிவிட்டு, இனிமே ஒழுங்கா ஆபீசுக்குப் போங்க என்று சொல்லிச் சென்றேன்.

அதை அவர் அன்று செய்திருக்கலாம். சொந்தப்படம், குத்துவிளக்கேற்ற கமல் அப்படி இப்படியென்று பெரிதாக அகலக்கால் வைத்தார். அந்த பூஜைக்கு வாங்கிய கடன்தான் அவரை வி.ஆர்.எஸ். கொடுக்கவைத்தது. இன்றுவரை அவரது கனவுகளும் லட்சியங்களும் நிறைவேறாதிருந்ததே அவர் உயிரைப் பறித்திருக்கிறது.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி