மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான். என்னைக் குளிப்பாட்டிக்கொள்வதில்கூட எனக்கு அத்தனை அக்கறை இருந்ததில்லை. பல சமயம் தண்ணீருக்குப் பங்கமில்லாமல் முழு நாளும் சோம்பிக் கிடந்திருக்கிறேன். இதைப்பற்றிய மேலிடத்து விமரிசனங்களை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. ஆனால் மகள் விஷயத்தில் எனக்குச் சுணக்கமிராது.
அவள் மூன்று வயதைத் தொடும் வரைக்கும் என் மனைவிதான் அந்தப் பணியை ஆற்றிவந்தாள். பள்ளிக்கு அனுப்பத் தொடங்கிய நாள் முதல் டெலிகேஷன் ஆஃப் அத்தாரிடி சித்தாந்தத்தின்படி இம்மாபெரும் பொறுப்பை எனக்கு அளித்தாள். ஏராளமான எச்சரிக்கைகள், கட்டளைகளுடன் அளிக்கப்பட்ட இதனை நான் எவ்வாறு நிறைவேற்றுகிறேன் என்பதைக் கண்காணிப்பதை அவள் தன் சொந்த தினசரிக் கடமைகளுள் ஒன்றாக ஆக்கிக்கொண்டதை விழிப்புணர்வுடன் அறிந்தே இருந்தேன். எனவே, வாழ்வில் வேறு எந்த வேலையில் சொதப்பல் முத்திரை பதித்தாலும் இதனைச் சற்றும் பங்கமின்றி நிறைவேற்றியே தீருவது என்று மானசீகத்தில் சூளுரைத்துவிட்டுத்தான் ஆரம்பித்தேன். தவிரவும் அந்த முதல் தினத்திலேயே இந்த ஒப்பந்தப் புள்ளியின் காலவரையறையையும் என் மனைவியாகப்பட்டவள் வகுத்திருந்தாள். ‘அவ செகண்ட் ஸ்டேண்டர்ட் முடிக்கற வரைக்கும்தான் நீங்க குளிப்பாட்டணும். அப்பறம் அவளே குளிச்சிக்கணும்.’
நான்கு வருட ஒப்பந்தம்! இதைக்கூடச் சரியாகச் செய்யமாட்டேனா? வாஸ்தவத்தில் வரிந்துகட்டிக்கொண்டுதான் ஆரம்பித்தேன். அப்பா குளிப்பாட்டினால் அது ஒரு ஆனந்த அனுபவம் என்று என் மகள் நினைக்க வேண்டும். நினைத்தால் போதுமா? நாலு பேருக்குத் தெரியப்படுத்தாவிட்டால்கூட அவ்வப்போது அவள் அம்மாவின் காதுபடவாவது சொல்லவேண்டும் என்று எனக்கான இலக்கைத் தீர்மானித்துக்கொண்டேன். ஏனென்றால், அவள் குழந்தையாக இருக்கும்போது என் மனைவி குளிப்பாட்டுவதைப் பார்த்திருக்கிறேன். கண்டிப்பாகக் குளியலறையில் ஒரு துவந்த யுத்தமே நடக்கும். ‘மூச்! சத்தம் வந்தது…? ஆஹாங்? வாய மூடு.. வாய மூடு சொல்றேன்!’அதுவும் அந்த பாழாய்ப் போன எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும் தினங்கள்!
குளியல் என்பது ஒரு குதூகலமல்லவா? நல்லது. என் குழந்தைக்கு நான் அதைக் காட்டிக்கொடுப்பேன். என்னிடம் குளிக்கும் தினங்களில் அவள் அழமாட்டாள். வெறுங்குளியலானாலும் சரி, எண்ணெய்க் குளியல் அல்லது ஷாம்பு குளியலானாலும் சரி. குளிப்பது சிறப்பல்ல; அப்பாவிடம் குளிப்பது என்பதே சிறப்பு என்று அவள் வாயால் சொல்ல வைப்பேன்.
என் மகளின் தினசரிக் குளியலைத் திருவிழா உற்சாகத்துக்குக் கொண்டு செல்ல நான் கண்டுபிடித்த வழி, கதை சொல்லுவது. எனக்குச் சொல்லப் பிடிக்கும். அவளுக்குக் கேட்கப் பிடிக்கும். தீர்ந்தது விஷயம்.
வரிசையாக வெவ்வேறு புராணங்களிலிருந்து சில கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்து எடுத்துக் கொண்டேன். கதாபாத்திரங்கள் மட்டும்தான். கதையல்ல. பாத்திரங்களை வைத்துக்கொண்டு தினமும் ஒரு புதிய கதையை நானே உற்பத்தி பண்ணிவிடுவது. நிறைய மாயாஜாலக் காட்சிகள் சேர்ப்பேன். யாராவது ஒரு குண்டு கதாபாத்திரம் காமெடியனாக இருக்கும். சாகசம் செய்யும் வீரன் அல்லது வீராங்கனை அவசியம் உண்டு. அவள் அல்லது அவனது நெருங்கிய தோழியாக என் மகளும் ஒரு கதாபாத்திரமாகிவிடுவாள். இதைக்கூடச் செய்யாவிட்டால் அப்புறம் என்ன பெரிய எழுத்தாளன்? என் கதைகளில் கடோத்கஜன் ஒவ்வொரு நாளும் பத்தடி உயரம் வளர்வான். அனுமார் தூக்கிக்கொண்டு பறப்பதற்கு வசதியாக மந்திர மலை பொம்மை மலையாகச் சுருங்கும். பிரளயத்திலிருந்து தப்பிப்பதற்கு நோவா கப்பல் செய்யும்போது, காட்டு மிருகங்கள் எல்லாம் கேம்ப் அடித்து, சுற்றி நின்று பாட்டுப் பாடி, கூட உட்கார்ந்து உதவி செய்யும். திரிசங்குவுக்காக விசுவாமித்திரர் உருவாக்கும் சொர்க்கத்தில் ஸ்விம்மிங் பூல் இருக்கும், ஸ்கேட்டிங் கிரவுண்ட் இருக்கும். ஐஸ் க்ரீம் பார்லர்கூட இருக்கும். உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பப்படும் கும்பகர்ணன், போருக்குப் புறப்படுவதற்கு முன்னால் கேரட் ஆனியன் காய் தொட்டுக்கொண்டு, நூறு அண்டா குழம்பு சாதமும் தயிர் சாதமும் சாப்பிடுவான். போதாக்குறைக்கு நாற்பது குடம் பாயசமும் நாலு குடம் தயிரும்கூடக் குடிப்பான். அதன்பின் ஒரு குளம் தண்ணீரை அப்படியே கபளீகரம் பண்ணிவிட்டு, ‘என்ன விஷயம்?’ என்று கேட்பான்.
யார் என்ன சொன்னால் என்ன? உற்சாகம் மிக்க கதைகளுடன் இணைந்த குளியல் என் மகளுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமைகளில்கூட அவள் அப்பாவிடமே குளிக்கிறேன் என்று சொல்லும்போது, எம்பெருமான் இந்த ஒரு விஷயத்தில் என்னை என் மனைவியிடம் ஜெயிக்கப்பண்ணிவிட்டான் என்கிற ஆனந்தப் பரவசம் எழுவதைத் தவிர்க்க முடிந்ததில்லை.
ஆச்சா? விதியாகப்பட்டது விளையாடத் தொடங்கியது.
ஒரு மங்களகரமான திங்கள்கிழமை காலை அவளுக்குப் பொன்னியின் செல்வன் ஆரம்பித்தேன். என்னுடைய பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் அல்ல; ஆழ்வார்க்கடியான் தான் ஹீரோ. உச்சிக்குடுமியை ஆட்டிக்கொண்டு அவன் ‘திருச்சாத்து சாத்திவிடுவேன்’ என்று குதிக்கும்போது அவன் தொப்பை மட்டுமல்ல; என் மகளும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். ‘சூப்பர்ப்பா! இந்தக் கதை எவ்ளோநாள் சொல்லுவ?’ என்றாள். இதைவிட வேறென்ன வேண்டும்? என் திட்டத்தை மீறி அன்றே அவளுக்கு இரண்டு அத்தியாயங்களைச் சொல்லி முடித்தேன்.
குளியல் காண்டம் முடிந்து வெளியே வந்தபோது பெரிய பழுவேட்டரையர் இடுப்பில் கைவைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தார். கண்ணில் தெரிந்த உக்கிரம் தாங்கக்கூடியதாக இல்லை. தெய்வமே, ஏதோ பெரிய சரித்திரப் பிழை நேர்ந்திருக்கிறது.
‘மணி என்ன தெரியுமா?’
காலம் கடந்த காவியமல்லவா? சொல்லத் தொடங்கியதில் நேரம் போனதே தெரியவில்லை. ‘ஐயோ மணி எட்டு இருவதுப்பா! எட்டரைக்கு ஸ்கூல்ல இருக்கணும்’ என்றாள் மகள்.
பேய் வேகத்தில் யூனிஃபார்ம் மாட்டி, இட்லியைச் செலுத்தி, இழுத்துக்கொண்டு பறந்து சென்று விட்டுவிட்டுத் திரும்பிய பிறகும் எனக்கு மூச்சு வாங்குவது நிற்கவில்லை. ‘குளிக்கும்போது கதை வேண்டாம், சொல்லிட்டேன்!’ என்று எச்சரித்தாள் மனைவி. ஏதோ ஒருநாள் தாமதமாகிவிட்டது. அதற்காக?
இன்னொரு ஏதோ ஒருநாள் வெகு சீக்கிரமே வந்து சேர்ந்தது. அன்று நேரத்தோடுதான் குளிப்பாட்டி முடித்தேன். ஆனாலும் உள்ளிருந்து மனைவியின் குரல் உக்கிரமாக வந்தது. ‘என்ன குளிப்பாட்டியிருக்கிங்க? காதுல சோப்பு அப்படியே இருக்கு!’
அடக்கடவுளே. அன்றைக்கு வந்தியத்தேவன், பழுவேட்டரையரின் பாதாள சிறையில் புகுந்து புறப்பட்ட தினம். கதையின் சுவாரசியத்தில் காதை மறந்துவிட்டிருக்கிறேன்.
மறுநாள் கவனமாக முதலில் காதை மட்டும் தேய்த்துக் கழுவிவிட்டே குளிப்பாட்ட ஆரம்பித்தேன். இன்று ஒன்றும் சொல்ல முடியாது! கதை முடித்து, குளிப்பாட்டி முடித்து, துடைத்து டிரெஸ் செய்து சாப்பிட உட்கார்ந்தபோது மனைவி ஒரு தேர்தல் ஆணையர் மாதிரி வந்து இன்ஸ்பெக்ட் செய்ய ஆரம்பித்தாள். சொல்லி வைத்த மாதிரி அதே காதில் கையை வைத்தவள், திரும்பி முறைத்தாள்.
‘காது சோப்பெல்லாம் அப்பவே கவனமா பார்த்துட்டனே?’
‘கிழிச்சிங்க. காதைத் துடைச்சிங்களா? உங்க பொண்ணு அப்படியே ஊர்ல இருக்கற அழுக்கெல்லாம் தன்னோடதுன்னு எடுத்துட்டு வருவா. இதுல தண்ணிய துடைக்காம வேற அனுப்பிவெச்சா?’
சம்புவரையர் மாளிகை சதிக்கூட்ட தினத்தில் முதுகு தேய்க்க மறந்துவிட்டேன். சூடாமணி விஹாரத்தை சுழற்காற்றும் பேய் மழையும் தாக்கியபோது முகம் தேய்க்கையில் கூந்தலின் முன்முடிகளில் தெரித்த சோப்பைக் கழுவ மறந்துவிட்டேன். குண்டன் ஆழ்வார்க்கடியான், அனிருத்த பிரம்மராயரின் ஒற்றன் தான் என்கிற உண்மை வந்தியத்தேவனுக்குத் தெரியவந்த தினம்தான் அனைத்திலும் உச்சம்.
அன்றைக்கு எண்ணெயும் ஸ்நானப் பொடியும் போட்டுக் குளிப்பாட்ட வேண்டிய விடுமுறை தினம். சுமார் முக்கால் மணிநேரம் குளியலறையில் கதை சுவாரசியமாக ஓடியது. கவனமாகக் குளிப்பாட்டியிருக்கிறேனா என்று ஒருமுறைக்கு நாலுமுறை சரிபார்த்துவிட்டே வெளியே வந்தேன். ‘ஹச்’ என்று ஒரு தும்மல் போட்டாள் குழந்தை. மூக்கை மீண்டுமொருமுறை துடைத்தேன். ‘ட்ரையர் போட்டா சரியாயிடும்’ என்று சொன்னேன். மீண்டும் ‘ஹச்’ என்றாள். பவுடர் போட்டு டிரெஸ் மாட்டுவதற்குள் ஏழெட்டு ஹச். கடவுளே, இந்த ஹச் சத்தம் கிச்சனில் கேட்டிருக்குமா?
அதெப்படி கேட்காமல் இருக்கும்? ‘ஏன் தும்மறா?’ என்ற மணியோசை வந்தது.
‘தும்மல் வருது, தும்மறேன்’ என்றாள் என் மகள். நியாயமான பதில். அதோடு விட்டிருக்கலாம் அல்லவா?
‘உடம்புக்குக் குளிச்சி முடிச்சப்பறம்தானே தலைக்குத் தண்ணி கொட்டி ஷாம்பு போட்டிங்க?’
பகீரென்றது. ஆழ்வார்க்கடியான் சொதப்பிவிட்டான். என்னவோ ஞாபகத்தில் தலையிலிருந்து ஆரம்பித்துவிட்டேன். முக்கால் மணிநேரமும் ஈரத் தலையுடனேயே குழந்தை கதை கேட்டிருக்கிறது. போதாக் குறைக்கு, எப்போதும் கடைசியில் தலைக்குத் தேய்க்கும் நினைவில் மீண்டுமொருமுறை தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டியிருக்கிறேன்.
என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று எம்பெருமான் ஏசுவைப் போல மனத்துக்குள் நான் கசிந்துருகியது எனக்கு மட்டும்தான் தெரியும்.
சமீபத்தில் ஒரு நாலு நாள் வெளியூர் போகும்படியானது. திரும்பி வந்த தினம், வழக்கப்படி மகளைக் குளிப்பாட்டும்போது, ‘நாலு நாளா பாவம் உனக்குக் கதையே இருந்திருக்காது இல்லே?’ என்றேன் அக்கறை ததும்பித் தத்தளிக்க.
‘கதை இல்லதான். ஆனா அம்மா குளிப்பாட்டினாத்தாம்பா குளிச்ச மாதிரியே இருக்கு.’ என்றாள்.
வெளியே யாரோ சிரித்த சத்தம் கேட்டது. விதிதான் விலகி நின்றுச் சிரித்திருக்கிறது.
என்னதான் குட்டிகரணம் போட்டாலும் authority கிடக்காது
ஆஹா… இந்த மாதிரி எனக்கொரு அப்பா கிடைத்திருக்கமாட்டாரா..? என்ற ஏக்கம் வந்துவிட்டது..! சரி, என் மகனுக்கு இதுபோன்ற தப்பனார் இனிமேல் கிடைத்துவிடுவார்.த்ருப்தி. மனம் நிறைந்தது…!!…அருமை..நன்றி.
(மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான்.)
இந்த வரியில் ஏதோ பிழை உள்ளதோ..?
ரொம்ப அருமை சார். உங்க பக்கத்துல நின்னு ஒவ்வொன்னையும் கவனிச்ச மாதிரி ஒரு உணர்வு. இந்த மாதிரி சொந்த அனுபவங்கள நெறைய எழுதுங்க சார். என்னோட மன நிலைய மாத்துனதுக்கு நன்றி சார் .
nice one…as usual PaRa touch,……
enna kodumai sir ithu….
ஆஹா.. நானும் இரசித்து குழந்தைகளும் இரசித்துச் செய்யும் கார்யங்களில் குளிப்பாட்டுவதும் ஒன்று. கதை சொல்லால், முகத்திற்கு சோப்பு போடும்போது கண்ணைத் திறக்காமலிருக்க பாட்டுப் பாடுதல் போன்றவை அமர்க்களமாய் நிகழும்.
உலகிலேயே, என் போல குளிப்பாட்டுபவன் யாரும் இருக்க முடியாது என்ற நினைப்புடன், அக்கா குழந்தையை நண்பர் வீட்டுக்கு ஃப்ரெஷ்ஷாக அழைத்துச் செல்ல, பதினோராவது படித்துக்கொண்டிருந்த வைஷ்ணவி, ‘அண்ணா… நீங்க தான் குளிப்பாட்டினேளா’ என்றாள். மிகுந்த பூரிப்புடன் ஆமோதிக்க, ‘இல்ல, இந்தக் காதுல சோப் அப்படியே இருக்கு; அந்தக் காதுல அழுக்கே போகல’ என்றாள். நொந்து சமச்சீர் நூலாகி….
🙂
இன்னும் இன்னும் படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.அன்றாடம் நடக்கும் ஒரு சிறு விஷயம்தான்.அதையே தங்களின் வார்த்தை சித்துக்களால் நகைச்சுவையாக மிக இயல்பாக எடுத்து சொல்லிய பாங்கு இருக்கிறதே,உங்களுக்கு என்றென்றும் பீபி , சுகர் வராது வராது.
🙂 🙂 🙂
:)))
வெளியே யாரோ சிரித்த சத்தம் கேட்டது 🙂
பிரமாதம்
அருமையான வரிகள். பிரமாதம் பாரா சார்.
“அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று கேட்டால் என் மகள் அம்மாதான் என்கிறாள். “ஏன்?” என்று கேட்டால் “இல்லன்னா அம்மா கொவிச்சுகிறாங்கப்பா” என்கிறாள்… குழந்தைகள் சுவாரசியம் – அதிலும் பெண் குழந்தைகள்…
கடைசி வரி பஞ்ச் (வாங்கின) லைன் சூப்பர் சார் !
//அம்மா குளிப்பாடினா தான் குளிச்சா மாதிரியே இருக்கு…///
பேஷ் பேஷ்
ஆனா கதை சொல்லுதல் என்பது ரொம்ப சிலரிடமே இன்னும் பழக்கத்தில் இருக்கிறது. குளிப்பாட்டும் பொறுப்பு சரிவரலைனா என்ன பேசாம உணவூட்டுதல் தூக்கம் பண்ணுதல் என்று வேறு பொறுப்பை எடுத்துக் கொண்டு விடாம கதை சொல்லுங்க.
நான் என் பையன் பள்ளியிலே கூட போய் கதை சொல்லுவதை கட்டாய வகுப்பாக கோரிக்கை வைத்துள்ளேன்.
Lovely writing style – an enjoyable flow.
What a wonderful world we, the husbands, would be in, if only the species called ‘wives’ don’t exist? But, then, how would anyone get a lovely daughter? Choice between a devil and the heaven.
“அம்மா பிடிக்குமா அப்பா பிடிக்குமா?” என்று கேட்டால் என் மகள் அம்மாதான் என்கிறாள். “ஏன்?” என்று கேட்டால் “இல்லன்னா அம்மா கொவிச்சுகிறாங்கப்பா” என்கிறாள்… குழந்தைகள் சுவாரசியம் – அதிலும் பெண் குழந்தைகள்…// Can we, adults, come up with such a spot answer? My son, when he was a kid, used to reply: ‘Rendu perumdhan’ – who taught the children this diplomatic trait?
//‘கதை இல்லதான். ஆனா அம்மா குளிப்பாட்டினாத்தாம்பா குளிச்ச மாதிரியே இருக்கு.’ என்றாள்//
இந்த பொன்னுங்களே இப்படிதான் சார்.. விடுங்க….
ஆஹா!
//அதெப்படி கேட்காமல் இருக்கும்? ‘ஏன் தும்மறா?’ என்ற மணியோசை வந்தது//
மணியோசையா இடியோசையா?
மகளுக்காவது நீலக்காகம் கதை சொன்னீர்களா?
really touching raaga sir , ur fav dialogue for this, from me is
” கண்கள் பனித்தன” .awesome
என்னதான் குட்டிக் கரணம் அடிச்சாலும் வீட்டில் நீங்க மன்மோகன் சிங்-தான்னு உங்க மகளுக்குத் தெரியும் 🙂
பொன்னியின் செல்வன் சிறுகதை ஆனதோ…?!!
இல்லை குளிப்பாட்டுவது சிறுகதை ஆக்கியதோ….??!!!
அருமை…! அருமை…!! (பாரா)மலேயே அருமை…..!!!
அருமை!!!
விடா முயற்சி விஸ்வரூபா வெற்றி ஆகும்!
ஸ்கூல் போற டென்சனில் ??? பொறுமைத்தான் உங்களுக்கு !!! “பாத் ரூம் முழுவதும் ஒரே தண்ணிர்” என்று மேலிடத்தில் திட்டு வாங்கினதுதான் நியாபகம் வருகிறது.
திரு பாரா அவர்களே மிகவும் அருமை… ஒரு சந்தேகம்!
இதையெல்லாம் படித்துவிட்டு தங்களின் சரிபாதியானவர் “இதை எல்லாமா போய் blog’ல் எழுதுவீர்கள்” என்று திட்டுவது உண்டோ?
cute one…
Ippadi kathai solla ippothu oruvarukkumey porumai iruppathu illai…irunthaalum neenga konjam over..!
பாரா எப்ப கன்வர்ட் ஆனீங்க……
அருமை சார். ஆனா ஒரு விசயம், எப்பவும் உங்களை மட்டப்படுத்திக்கிட்டு, உங்க மனைவியை உயர்த்தி உங்களை ஏதோ ஒண்ணும் தெரியாத அப்பாவி ஆண் போலவே சித்தரிச்சு எழுதறீங்களே அது ஏன் சார்? என்னதான் நகைச்சுவைக்காக நீங்க எழுதினாலும் தொடர்ந்து இது போல படிக்கும் போது என்னவோ போல் இருக்கு. பிரசுரிப்பீர்கள் என்ர நம்பிக்கையுடன், என்.உலகநாதன்
NICE ONE
உங்களை பாத்தா பாவமா இருக்கு. கவலைப்படாதீங்க. சரஸ்வதி சபதம் படத்திலே நாகேஸ் ஒரு வசனம் சொல்லுவாரு. “இந்த கடவுள் இருக்காரே அவருக்கு பொழுது போகலேன்னா சில பேரை கஷ்டத்துக்குள்ளாக்கி ரசிப்பாரு” அது மாதிரி தான். இது மாதிரி சோதனை வற்றது சகஜம் தான். இது அவன் திருவிளையாடல் பொறுத்துக்குங்க. நீங்கள் உங்கள் இல்லத்தரசிகிட்ட புகழ் மாலை வாங்க கூடிய காலம் வரத்தான் போகுது.
ரொம்ப நன்றி சார். இனி உங்களுக்கு பின்னூட்டம் இடமாட்டேன். நன்றி.
நண்பர்களுக்கு: இணையத் தொடர்பில் இருந்து இந்நாள்களில் சற்று விலகி இருப்பதால் உங்கள் கருத்துகள் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
சாரி பாரா சார். உங்களை தப்பா புரிஞ்சுகிட்டேன். இப்பத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு. ரொம்ப நன்றி சார்.
மனிதன் என்பவன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும் என்பது எம்பெருமானின் விருப்பம். என் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த ஒன்று இது தான்: மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவதும், ஊழல் செய்யாத அரசியல்வாதி நம் ஏரியா கவுன்சிலர் / எம்.எல்.ஏ / எம்.பி அமைவதும் ஒன்று.
மகளை குளிப்பாட்டுவதினால் விளையும் ஒரே பயன், நாம் குடும்ப பறவையாய் இருக்கிறோம் என்று நமக்கே உண்டாகும் ஒரு திருப்தி மட்டும் தான்.
migavum arumai Raghavan sir. En kuzhandaigalin mazhalai paruvam ninaivukku vanthathu. Ungal kutti devathaiku en vaazhthukkal.
||மனுஷகுமாரனாக பூமியில் உதித்த நாள் தொட்டு, இன்றுவரை ஒரு சமயமும் அலுத்துக்கொள்ளாமல், நூறு சதம் விருப்பத்துடன் நான் செய்யும் ஒரே செயல், என் மகளைக் குளிப்பாட்டுவதுதான்||
மனுஷ குமாரனாக அவதரிக்கும் போதே உங்கள் மகள் உங்களுடன் வந்து விட்டால் என்பதை அறிய மிகவும் மகிழ்ச்சி !!!
வந்து விட்டாள் என்று திருத்திக் கொள்ளவும்.
nice one…
அருமை… அதுவும் அந்த கடைசி வரிகள்
simply superb sir.