மெட்ராஸ் பேப்பரில் இதனை முதலில் ஒரு கேடகரி தலைப்பாகத்தான் வைத்தேன். எந்த நுட்பமும் எளியோருக்கானதே என்கிற என் நிலைபாட்டிலிருந்து சற்றும் விலகாமல் வெங்கட் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தத் தலைப்பு அவரது கட்டுரைகளின் அடையாளமாகிப் போனது.
மொபைல் போனும் கம்ப்யூட்டரும்தான் சப்ஜெக்ட். இதில் கம்ப்யூட்டரை அறியாத சிலர் இருக்கலாம். ஆனால் மொபைல் இல்லாதவர்கள் யாருமில்லை என்ற நிலை வந்துவிட்டது. வெங்கட் ஓர் உயர் ரகத் (ஆம். ரக.) தொழில்நுட்ப தாதா. இந்த இரு கருவிகள் சம்பந்தமாக அவர் அறியாதது அநேகமாக ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால் அவர் இது மட்டுமல்ல. சார்லஸ் பேபேஜ் காலம் தொடங்கி இன்றைய ஏஐ காலம் வரை நுட்ப உலகில் நிகத்தப்பட்டு வரும் ஒவ்வொரு புதிய சாகசத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு அக்கு வேறு ஆணி வேறாக அலசித் தெளியும் இயல்புடையவர். உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் என்னும் கௌரவப் பதவியில் இருபத்தைந்தாண்டு காலமாக உள்ளவர். மென்பொருள் வல்லுநர்.
அவரைத் தமிழில் எழுத வைக்க வேண்டும் என்று பத்து, பதினைந்தாண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணிக்கொண்டிருந்தேன். மெட்ராஸ் பேப்பர் தொடங்கிய பின்புதான் அது சாத்தியமானது. இயல்பிலேயே தமிழ்க் கணிமை ஆர்வலர் என்பதால் பல்லை உடைக்கும் பல கடினமான பிரயோகங்களுக்கு மிக அழகிய தமிழ்ச் சொற்களை அவரால் எடுத்தாளவும் உருவாக்கவும் முடிந்திருக்கிறது என்பது இந்நூலின் மிக முக்கியமான அம்சம். இந்நூலின் ஒரு சொல் கூட உங்களுக்குப் புரியாமல் போகாது.
கம்ப்யூட்டர் குறித்தும் மொபைல் போன் குறித்தும் ஒன்றுமே தெரியாதவர்கள் அவற்றைக் கையாளும்போது எதிர்கொள்ள நேரிடும் சிக்கல் என்னவானாலும், உடனே கடைக்குத் தூக்கிக்கொண்டு ஓடாமல் அவரவரே பிரச்னையைப் புரிந்துகொண்டு ஆகக் கூடியவரை தமக்குத்தாமே சரி செய்துகொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.
தமிழில் வெங்கடரங்கனுக்கு இது முதல் நூல். அடுத்த வருடம் அவரே நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லாத ஒரு விவகாரம் பிடித்த சப்ஜெக்டில் அவரைக் கொண்டு தள்ள நினைத்திருக்கிறேன்.
பார்ப்போம். எம்பெருமான் சித்தம்.
வெங்கட்டின் ‘நுட்பம்’ சென்னை புத்தகக் காட்சியில் ஜீரோ டிகிரி அரங்கில் கிடைக்கும். இப்போதே படிக்க விரும்பினால் இங்கே வாங்கலாம்.