புதையல் காக்கும் பாட்டி

எண்பத்திரண்டு வயதான ரங்கநாயகி அம்மாளுக்கு திடீரென்று சமீபத்தில் ஒருநாள் நினைவு தவறிப்போனது. நினைவு தவறிக்கொண்டிருந்த வினாடிகளில் தன்னுடைய பர்ஸ் எங்கே இருக்கிறது; உள்ளே எத்தனை பணம் இருக்கிறது என்கிற இரண்டு விவரங்களையும் – தற்செயலாக அருகில் அப்போதிருந்த தன் மூத்த மகளிடம் சொல்லியபடியே மயங்கி விழுந்தார்.

உடனே மருத்துவமனைக்கு எடுத்துப் போனார்கள். ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துபோனது காரணம் என்று கண்டறியப்பட்டது. ஒரு மணிநேர சிகிச்சையில் ரங்கநாயகியம்மாளுக்கு நினைவு வந்துவிட்டது.

ரங்கநாயகியம்மாள், என் பாட்டி. என் அம்மாவின் அம்மா. முதல் முறையாகத் தமது 82வது வயதில் உடல்நலக்குறைவு என்று மருத்துவமனைக்குப் போகநேர்ந்ததில் சற்றுக் கலவரமாகியிருந்தவரைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு வரலாமே என்று போனேன். அவசர சிகிச்சைப் பிரிவிலேயேதான் இருந்தார். கதவுக்கு வெளியே கொட்டாவி விட்டபடி உறவினர்கள் ஓரிருவர் அமர்ந்திருந்தார்கள். ‘பாட்டி உள்ளதான் இருக்கா. போய்ப்பாரு’ என்று சம்பிரதாயத்துக்குச் சொன்னார்கள்.

என்னைக் கண்டதும் பாட்டி, “எனக்கு ஒண்ணும் இல்லேடா. இந்த விரல்ல போட்டுண்டிருந்த மோதிரத்தைத்தான் காணோம். யாராவது கழட்டி வெச்சிருக்காளா, கீழ விழுந்துடுத்தான்னு தெரியலை” என்று சொன்னாள். நினைவு வந்த கணத்திலிருந்தே அவளுக்கு அந்த ஞாபகமாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது.

“மோதிரம் போனா என்ன பாட்டி? உனக்கு ஒண்ணும் இல்லையே?” என்றேன் சாதாரணமாக.

“எனக்கென்ன? இப்போதைக்குப் போய்ச்சேர உத்தேசமில்லை. ஜாதகப்படியே இன்னும் ஆறு வருஷம் இருக்கு” என்றாள் தீராத தன்னம்பிக்கையுடன்.

பாட்டியின் அந்த நம்பிக்கைதான் அவளை வைத்துக்கொண்டு சம்ரட்சணை செய்கிறவர்களின் ஒரே கவலை என்பது நினைவுக்கு வந்தது.

ரங்கநாயகியம்மாள் ஒரு கேரக்டர். வாழ்வில் அவள் படாத கஷ்டங்கள் என்று எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐந்து பெண்களையும் மூன்று பிள்ளைகளையும் பெற்று, மூன்று பிள்ளைகளாலும் கைவிடப்பட்டவர். முறை வைத்துக்கொண்டு பெண்கள் வீடுகளில்தான் வசித்து வருகிறாள். ஐசிஎஃப்பில் உத்தியோகம் பார்த்த என் தாத்தா, சௌக்கியமாக இருந்த காலத்தில் கூட மனைவியை கவனித்ததாக நினைவில்லை. அவர் ஒரு உல்லாசி. திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் சிநேகிதர். அப்புறம் காஞ்சீபுரத்தில் ஒரு நாகஸ்வர வித்வான் இருந்தார் – பேர் மறந்துவிட்டது – அவர், மதுரை சோமு என்று தாத்தாவுக்கு நிறைய சங்கீத சிநேகிதங்கள் உண்டு. ஊர் ஊராகக் கச்சேரிகளுக்குப் போவது, ஓட்டல்களில் சாப்பிடுவது, பன்னீர்ப்புகையிலை, பட்டணம் பொடி. இவைதான் அவரது உலகங்கள்.

என் சிறு வயதுகளில் தாத்தாவும் பாட்டியும் போட்டுக்கொள்ளும் உலக யுத்தங்கள் நினைவுக்கு வருகின்றன. பாட்டிக்குக் கோபம் வந்தால் சமஸ்கிருத சுலோகங்களால் திட்டத் தொடங்கிவிடுவாள். அதாவது, கோபத்தில் கூட வசவு வந்துவிடக்கூடாது என்று சுலோகம் சொல்லுகிற ஜாதி. பேரீ ம்ருதங்க மத்தள காகள துந்துபி தூரித டண்டகு டமருத என்று, தாத்தா ஐ.சி.எஃப்பில் இணைத்த ரயில்பெட்டிகளை அவள் தன் வாயில் வேகமாக ஓட்டுவாள். பேரக்குழந்தைகளை வரிசையில் உட்கார வைத்து பாதாம் இலையில் ஒன்றரை தோசை அளந்து பரிமாறும்போது “கல்யாணம் ஆனபுதுசுல கூட ஒரு நாளும் என்னை எங்கேயும் அழைச்சுண்டு போனதில்லை மனுஷன். என்னைப் படிக்க வெச்சிருந்தா பீயேஏஏ கூட படிச்சிருப்பேன்” என்று வருத்தப்படுவாள்.  அவளுக்கு தமிழ்,மலையாளம், சமஸ்கிருதம், தெலுங்கு என்று நாலு பாஷை தெரியும். எப்படி, யாரிடம் கற்றுக்கொண்டாள் என்று தெரியாது. நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் மூவாயிரமாவது மனப்பாடமாகத் தெரியும். ஆனால் பள்ளிக்கெல்லாம் போனதாகத் தெரியவில்லை.

நிறைய குழந்தைகள் பெற்றிருக்கிறாள். நிறைய இறந்தும்போயிருக்கின்றன. மிஞ்சிய எட்டில்தான் மூன்று மகன்கள். மூவருமே தாத்தாவின் மறைவுக்குப் பிறகு பாட்டியை ஏலம் போட்டுவிட்டார்கள்.

பாட்டி என்றால் எனக்கு நினைவுக்கு வரும் முதல் விஷயம், அவளது தைலங்கள். காலுக்கு ஒன்று, முதுகுக்கு ஒன்று, தோளுக்கு ஒன்று என்று விதவிதமாக ஏதேதோ ஆயுர்வேதத் தைலங்கள் தடவி எப்போதும் பக்கத்தில் போனால் ஒரு ஆசுபத்திரி வாசனையுடனேயேதான் இருப்பாள். ஒரு கட்டத்துக்கு அப்புறம் மனத்தின் வலிகளெல்லாம் உடம்புக்கு இறங்கிவிடுமோ என்னவோ. வெடுக் வெடுக் என்று பேசுவாள். எல்லா விஷயங்கள் பற்றியும் அவளுக்கொரு அபிப்பிராயம் இருக்கிறது. அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தன் அபிப்பிராயங்களை பகிரங்கமாக முன்வைத்தேதான் தன் மூன்று மருமகள்களின் வெறுப்புக்கு ஆளானாள். அவளது வலிகள்தான் வார்த்தைகளாகின்றன என்று எனக்குப் புரிவது ஏன் பாட்டியின் மகன்களுக்கும் மகன்கள் வழிப் பேரன்களுக்கும் புரிவதில்லை?

ஒருமுறை கேட்டுப்பார்த்தபோது “பொண்ணுவழிப் பேரன்களுக்கு இதெல்லாம் புரியாது” என்று ஒருத்தன் சொல்லிவிட்டான். உண்மையாகக் கூட இருக்கலாம். தாத்தா கொஞ்சம் அனுசரணையாக இருந்திருந்தால் 82 வயதில் பாட்டி இப்படி சீப்படவேண்டியிருந்திருக்காது என்று எப்போதும் தோன்றும் எனக்கு. பத்து பைசா கூட வைக்காமல், கொஞ்சம் கடனை மட்டும் வைத்துவிட்டு அவர் போய்ச் சேர்ந்தார்.

அதன்பின் தான் பாட்டிக்குப் பணத்தின் அவசியம் புரிந்தது. முதலில் தன் இறுதிக் காரியங்களுக்காக என்று தீர்மானித்துத்தான் அவள் பணம் சேர்க்க ஆரம்பித்தாள். மகள்கள் பார்க்க வரும்போது கொடுக்கும் கொஞ்சம் பணம், தாத்தாவின் நூற்றெழுபது ரூபாய் பென்ஷன். இவைதான் பாட்டியின் வருமான வழிகள். பிரமாத செலவுகள் இல்லை. ஒரு வங்கிக்கணக்கு தொடங்கி, பதினைந்து வருடங்களுக்கு மேலாகச் சேமித்து வந்திருக்கிறாள். எப்படியும் இன்றைய தேதிக்குப் பாட்டி பத்தாயிரத்துக்கு சொந்தக்காரி என்று நினைக்கிறேன். என் தம்பிதான் அவளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை பத்திரப்படுத்திக் கொடுத்தது. ஒரு பத்தாயிரத்துக்கு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் வைத்து வங்கி நடவடிக்கைகளைக் கையாளும் ஒரே பிரகிருதி அவளாகத்தான் இருக்கமுடியும். பாட்டிக்கும் இதில் மிகவும் பெருமை. எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என் தம்பியைத்தான் முதலில் விசாரிப்பாள். சாத்துக்குடி பழம் இருந்தால் அவன் கையில்தான் திணிப்பாள். பாட்டியின் நினைப்பில் அவனொரு புதையல் காக்கும் பூதம் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் கேட்டேன்: “பாட்டி, உனக்கு எதுக்குப் பணம்? ஒரு ரவிக்கைத் துணி கூட நீயா வாங்கிக்கறதில்லை. உனக்கு ஏதாவதுன்னா, பார்த்துக்க நாங்க இருக்கோம். ஓட்டல்ல சாப்பிட மாட்டே. சினிமா போகமாட்டே. காசை செலவு பண்ணவே தெரியாத உனக்கு எதுக்குக் காசு?”

பாட்டிக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் தன்னிடம் அந்த சொற்பத் தொகையாவது இருப்பதால்தான் எல்லோரும் ஓரளவேனும் மதிக்கிறார்கள் என்று நினைப்பது புரிந்தது. படாதபாடுபட்டு எண்பது வருடங்கள் வாழ்ந்து தீர்த்தபிறகு இப்படியொரு ஞானம்தான் சாத்தியமா என்று புரியவில்லை.

இன்னொருநாள் இன்னொரு கேள்வியும் கேட்டிருக்கிறேன்: “பாட்டி, நீ ஏன் சாகக்கூடாதுன்னு ஆசைப்படறே?”

இதை என் தம்பிகளும் கூடக் கேட்டிருக்கிறார்கள் என்று அப்புறம் தெரிந்தது. இந்தக் கேள்வியைக் கேட்டாலே அவளுக்குக் கோபம் வந்துவிடுகிறது. “சாகறதும் வாழறதும் நாம தீர்மானிக்கறதா? ஆனா எனக்கு இப்போதைக்கு இல்லை. அவ்ளோதான் போ” என்று சொல்லிவிடுகிறாள்.

அவளுக்கு எதெல்லாம் சந்தோஷம் தரக்கூடும், வாழ்வை ரசிக்கும்படி செய்யக்கூடும் என்று பலநாள் யோசித்திருக்கிறேன். விடை தெரியவில்லை. எப்போதும் சிடுசிடுப்புடன், எப்போதும் சுலோகங்கள் சொல்லிக்கொண்டு, எப்போதும் வலிகள் பற்றிய புராணம் பாடிக்கொண்டு, எப்போதும் எல்லாரையும் விமரிசித்துக்கொண்டு, எப்போதும் தன் பாஸ் புக்கைப் பார்த்துக்கொண்டு, எப்போதும் சாகமாட்டேன் என்று அறிக்கைவிட்டுக்கொண்டு…

“பாட்டி, இந்த தீபாவளிக்கு உனக்கு என்ன வேணும் சொல்லு”

“ஏதோ ஒண்ணு. இஷ்டமிருந்தா வாங்கிக்குடு. இல்லாட்டியும் நஷ்டமில்லை. ஆயிரம் வெச்சிண்டிருந்தாலும் ஒரு சமயத்துல ஒண்ணுதானே கட்டிக்கமுடியும்?”

“பாட்டி, எனக்கு அவார்ட் வந்திருக்கு”

“சந்தோஷம். அதுக்காக பூமிக்கும் ஆகாசத்துக்கும் குதிக்க சொல்றியா?”

“பாட்டி, உனக்குக் கொள்ளுப்பேத்தி பொறந்திருக்கா.”

“கல்யாணம்னு ஆனா குழந்தைன்னு ஒண்ணு பொறக்கறதுல என்ன இருக்கு? நான் பெறாத பிள்ளைகளா.”

“பாட்டி, இன்னிக்கு உனக்குப் பிடிச்ச அரிசி உப்புமா டிபன்”

“ஆமா. எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்ப என்ன அதுக்கு? தொண்டைக்குக் கீழ போனா எல்லாம் ஒண்ணுதான்”

துளியும் ரசனை என்பதே கிடையாதோ என்று சட்டென்று தோன்றிவிடும். அது உண்மையே. ஆனால் பிறவியிலேயே அவள் அப்படித்தான் என்று எனக்குத் தோன்றவில்லை. ஒரு நாள் தவறாமல் கச்சேரிக்குப் போன தாத்தா, ஒருநாளாவது அவளைக் கூட அழைத்துப் போயிருந்தால், எனக்கு விருது வந்த சமயத்தில் அவள் ஒரு வாழ்த்து சொல்லியிருப்பாள். அல்லது ஆசீர்வதித்திருப்பாள்.

பத்தொன்பது பேரக்குழந்தைகளை வரிசையில் உட்காரவைத்து பாதாம் இலையில் ஒன்றரை தோசை அளந்து போட்டவளை அப்போதே உட்காரவைத்து ஒரு மருமகளாவது ஒரு தோசை வார்த்து நீ சாப்பிடு என்று கொடுத்திருந்தால் அரிசி உப்புமா அவளுக்கு அமிர்தமாகத்தான் இருந்திருக்கும். பிறந்தநாள், திருமணநாள் என்று அவளுக்கு ஏதாவது இருக்கிறதா, அந்த தினங்கள் எவை என்று யாராவது ஒருத்தர் தெரிந்து வைத்திருந்து ஏதாவது செய்திருந்தால், சென்ற தீபாவளிக்கு அவள் அரக்குக் கறை போட்ட பச்சை சுங்குடி கேட்டிருக்கக்கூடும். பெற்ற மூன்று மகன்களில் ஒருத்தனாவது அவளை முகம் சுளிக்காமல் கவனித்துக்கொண்டிருப்பின் கொள்ளுப்பேரன்களையும் பேத்திகளையும் பார்க்க அவள் மருத்துவமனைக்கே கூட வந்திருப்பாள்.

வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்மணி அலட்சியப்படுத்தப்பட்டே வந்திருக்கிறாள் என்பது எத்தனை அயோக்கியத்தனமானது? எட்டு வயதில் திருமணம் செய்து கொடுத்துத் தலைமுழுகிய பாட்டியின் பெற்றோர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவளுக்குக் காஞ்சீபுரத்தில் தங்கை ஒருத்தி இருக்கிறாள். இன்றும் கூட. (என் புவியிலோரிடம் நாவலே அந்த சின்னப்பாட்டியின் குடும்பக் கதைதான்.) ஆனால் என் 33 வயதில் ஒருநாள் கூட அக்கா – தங்கை சந்தித்து நான் பார்த்ததில்லை; கேள்விப்பட்டதில்லை. கடிதப் போக்குவரத்து கூடக் கிடையாது. அதெப்படி அவரவர் உலகின் சுற்றுச்சுவர்களை அத்தனை கெட்டிதட்டிப் போக விட்டுவிட முடியும்? தண்ணீர் தெளித்துவிட்ட பெற்றோர், கண்டுகொள்ளாத கணவன், கை கொடுக்காத மகன்கள், கவனிக்க விரும்பாத மருமகள்கள் –

ஏழெட்டு வருஷங்கள் முன்பு என்று நினைக்கிறேன். ஒருநாள் பாட்டி என்னிடம் கேட்டாள் : “பழங்காலத்து சமையல் குறிப்பெல்லாம் எனக்கு நன்னா தெரியும்டா. சொன்னா நீ எழுதிப்பியா? உன் பத்திரிகைல போட்டா அதுக்கெல்லாம் பணம் தருவாளோல்யோ?”

“பத்திரிகை என்ன பணம் தரது பாட்டி? ஒருநாள் எனக்குப் பண்ணிப்போடேன். நான் உனக்குக் கோயிலே கட்டறேன்”

“ஆமா, அதான் குறைச்சல்” என்று எழுந்துபோய்விட்டாள்.

எதிலுமே விருப்பமற்ற பாட்டிக்கு – அவள்வரையில் பயன்பாடே இல்லாத பணத்தின்மீது மட்டும் என்ன விருப்பம் என்று யோசித்தேன். தன் சேமிப்பின்மூலம் அவள் யாரையோ மறைமுகமாகப் பழிவாங்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது.

மருத்துவமனையிலிருந்து அவள் வீடு திரும்புமுன் சும்மா சீண்டிப்பார்க்கும் உத்தேசத்தில் அதையே மீண்டும் கேட்டேன். “ஏன் பாட்டி, அந்தப் பத்தாயிரமோ என்னவோ வெச்சிருக்கியே, அதை என்ன பண்ணப்போறே?”

“என்னவோ பண்றேன்போ. இன்னும் ஆறு வருஷம் இருப்பேன். போகும்போது பார்த்துக்கலாம்.”

நல்லவேளை அவள் இதைச் சொல்லும்போது அவள் பெற்ற மகன்களோ, மருமகள்களோ யாரும் பக்கத்தில் இல்லை! பாட்டியின் பத்தாயிரப் புதையல் குறித்து அவர்கள் யாருக்கும் இன்றுவரை எதுவும் தெரியாது. தெரிந்திருந்தால் ஆஸ்பத்திரி பில்லை நீயே கட்டிவிட்டு வா என்று சொல்லியிருப்பார்களோ என்னவோ.

இரண்டு விஷயங்கள் அன்றைக்கு எனக்கு உறுதியாயின.

1. பாட்டியின் உயிர் இருக்கும் இடம் எது என்பது.

2. பாட்டியின் இறுதிச் செலவு நேரம் வரும்போது அந்தப் பத்தாயிரத்தில் பத்து பைசா கூட இருக்காது என்பது.

நாள் : 7/2/2004 4:41:43 AM

[பி.கு: பாட்டி இப்போது இல்லை. சென்ற வருடம் இறந்துவிட்டார். என் இரண்டாவது கணிப்பு பொய்த்தது. அவரது மறைவுக்குப் பிறகு அந்தப் பத்தாயிரம் அப்படியேதான் இருந்தது. பிறகு யாரோ பகிர்ந்துகொண்டார்கள்.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி